கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

school kids1952-ஆம் ஆண்டு, அன்றைய கிழக்குப் பாகிஸ்தானில் (இன்றைய வங்கதேசம்), “எங்களுக்கு வங்க மொழியே ஆட்சி மொழி; பாகிஸ்தான் திணிக்கும் உருது மொழியை ஆட்சி மொழியாக ஏற்க முடியாது” என்று அறிவித்து, வங்காளிகள் நடத்திய உருதுமொழி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த நான்கு மாணவர்களின் ஈகத்தைப் போற்றும் வகையில், அவர்கள் கொல்லப்பட்ட நாளான பிப்ரவரி 21-ஆம் நாள் உலகத் தாய்மொழி நாளாக அறிவிக்கப்பட்டது.

1971-இல் இறையாண்மையுள்ள தேசமாக மலர்ந்த வங்கதேசம் 1998-இல் முன் வைத்த கோரிக்கையை ஏற்று, உலக அமைப்பாகிய யுனெஸ்கோ 1999-இல் “பிப்ரவரி 21 என்பது உலகத் தாய்மொழி நாள்” என்று அறிவித்தது.

தங்கள் மொழி உரிமையை வலியுறுத்தி உயிர் ஈகம் செய்த நான்கு மாணவர்களுக்காக, அவர்கள் கொல்லப்பட்ட நாளையே உலக அளவில் தாய்மொழி நாளாக அறிவித்து, அதை உலக நாடுகளையும் ஏற்பளிக்கச் செய்ததைவிட சிறந்த நினைவஞ்சலியை எந்த நாடும் செய்துவிட முடியாது. அந்த ஏற்பளிப்பை வங்கதேசம் வெற்றிகரமாகப் பெற்றுக்கொண்டது.

பிப்ரவரி 21 என்பது தமிழக வரலாற்றிலும் முக்கியமானது. 1938-ஆம் ஆண்டு பள்ளிகளில் கட்டாய இந்தியை மதராஸ் (சென்னை) மாகாணத்தின் பிரதமர் இராசகோபாலாச்சாரி தலைமையிலான அரசு புகுத்தியபோது, அதை எதிர்த்து மூன்று ஆண்டுகள் போராட்டங்கள் நடைபெற்றன. இறுதியில் 1940-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் நாளில்தான் மதராஸ் மாகாண ஆளுநர் ஜான் எர்ஸ்கின் அவர்களால் பள்ளிகளில் கட்டாய இந்தி என்பது நீக்கம் செய்யப்பட்டது.

மொழிப்போரில் வங்கமும், தமிழகமும்

தமிழகம் உள்ளிட்ட இந்தியத் துணைக்கண்டம் 1947-இல் விடுதலை பெற்றது. அத்துடன் வங்காளதேசத்தை உள்ளடக்கிய பாகிஸ்தானும் இந்திய விடுதலைக்கு ஒரு நாள் முன்னதாக விடுதலை பெற்றது. “மேற்கு பாகிஸ்தானுக்கும், கிழக்கு பாகிஸ்தானுக்கும் (வங்காள தேசம்) உருது மொழியே ஆட்சிமொழி” என்று பாகிஸ்தானிய அரசு அறிவித்ததையடுத்து கடும் முரண்பாடு தோன்றியது.

உருது மொழித் திணிப்பை எதிர்த்து, கிழக்கு பாகிஸ் தானில் (இன்றைய வங்காளதேசம்) கடும் போராட்டம் நடைபெற்றது. மாணவர்களின் இப் போராட்டத்தில் 1952 பிப்ரவரி 21 அன்று 4 மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதால், உந்துதல் பெற்ற வங்காளிகள், 1971-இல் இந்திய உதவியோடு மேற்கு பாகிஸ்தானில் இருந்து விடுபட்டு வங்காள தேசத்தை உருவாக்கிக் கொண்டனர். 

அதன்பிறகு, யுனெஸ்கோ அமைப்பிடம் முறையிட்டு, பிப்ரவரி 21-ஆம் நாளை உலகத் தாய்மொழி நாளாக அறிவிக்கச் செய்தனர். 

இதில் தமிழகம் கோட்டைவிட்ட வரலாறையும் நினைவில் கொள்ளவேண்டும். மொழிப்போரில் தமிழகத்தைவிட வங்கதேசம் மூத்தது அல்ல. தன் மொழிக்காக தமிழகத்திற்கு இணையாக வங்கதேசம் ஈகம் செய்துவிடவும் இல்லை. தமிழகத்தையும் உள்ளடக்கிய இந்தியத் துணைக்கண்டம் விடுதலை அடைந்தபோது, அதற்கான இந்திய அரசியலமைப்புச் சட்டம் (1946-1950) எழுதப்பட்டது.

பாகிஸ்தான் கிழக்கு பாகிஸ்தானுக்கும் சேர்த்து உருது மட்டுமே ஆட்சி மொழி என்று அறிவித்ததை போல, இந்திதான் இந்தியாவின் ஒரே ஆட்சி மொழி என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் விதித்தது, அதைத் தமிழர்கள் எதிர்த்துப் போராடினார்கள்.

இந்திய விடுதலைக்கு முன், கட்டாய இந்தியை எதிர்த்தும் தமிழகத்தில் 1938 முதல் போராட்டம் நடந்தது. 1939-இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் 1,271 பேர் கைது ஆனார்கள்.(இவர்களில் பெண்கள் 73, குழந்தைகள் 32). கடும் எதிர்ப்பைக் கண்ட சென்னை மாகாணப் பிரதமர் இராஜாஜி 125 பள்ளிகளில் மட்டுமே கட்டாய இந்தி என்றும், அதுவும் 6 முதல் 8- ஆம் வகுப்பு வரை கற்பிக்கப்படும் என்றும், தேர்வில் தேர்ச்சி பெறத் தேவையில்லை என்றும் அறிவித்தார்.

 ஆனால் கட்டாய இந்திக்கு எதிர்ப்பு வலுத்தது. இந்நிலையில் 1939 சனவரி 15 அன்று இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டிருந்த நடராசனும், மார்ச் 13ஆம் நாளில் தாளமுத்துவும் சிறையிலேயே உயிர்நீத்தனர். இவ்வாறாக இந்தி எதிர்ப்புக்கு முதல் களப்பலிகளை 1939 இலேயே தமிழ்ச் சமூகம் அளித்தது.

அதேபோல, 1948-இல் மும்மொழித் திட்டத்தை எதிர்த்தும் போராட்டம் நடைபெற்றது. இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டம் 01.08.1952-இல் தொடங்கி நடைபெற்றது.

இந்தியை ஏற்க முடியாது என்று தொடர்ந்து போராடி வந்த தமிழர்களின் குரல் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவை ஆட்டி வைத்தது.

“இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழி என்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு 15 ஆண்டுகள் கழித்து, நடைமுறைக்கு வரும்” என்பது அரசியலமைப்புச் சட்ட அவையால் ஏற்கப்பட்டிருந்தது. அதன்படி,1965 சனவரி 26ஆம் தேதி இந்தி அதிகாரபூர்வமான ஒரே ஆட்சி மொழி என்று நடை முறைக்கு வரும் என்ற சூழலில், தமிழகத்தில் மீண்டும் ஒரு பெரும் மொழிப்போர் மூண்டது.

ஜவகர்லால் நேருவின் நடுவண் அரசு இயற்றிய 1963ஆம் ஆண்டின் அலுவல் மொழிகள் சட்டம் - பிரிவு 3, “இந்திய அரசின் அரசமைப்புச் சட்டம் விதித்துள்ளபடி 15 ஆண்டுகள் கெடு முடிந்த பிறகும், இந்தியுடன் சேர்ந்து ஆங்கிலமும் இந்தியாவின் ஆட்சி மொழியாகத் தொடரலாம்” என்று கூறியது. இந்தியோடு ஆங்கிலமும் இணை ஆட்சி மொழியாகத் தொடர்வதற்கான ஓர் உறுதியை 1963 அலுவல் மொழிகள் சட்டம் வழங்கியது.

“Not withstanding the expiration of the period of fifteen years from the commencement of the Constitution, the English language may, as from the appointed day, continue to be used in addition to Hindi.”

ஆனால், இச்சொற்றொடரில் உள்ள ‘may’ (தொடரலாம்) என்பதை ‘shall’ (தொடரும்) என்று மாற்ற வேண்டும் என்று மாநிலங்களவையில் அறிஞர் அண்ணா வாதிட்டார். “இரண்டு சொற்களுக்கும் ஒரே பொருள்தான் என்பதால், சட்ட வரைவில் திருத்தம் தேவை இல்லை” என்று பிரதமர் நேரு வாதிட்டார்.

“இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகும் ஆங்கிலம் ஆட்சி மொழியாக நீடிக்கும்” என்று நேரு வாக்குறுதி அளித்தார். இதனால் திருத்தங்கள் இல்லாமலேயே சட்டம் நிறைவேறியது.

இவ்வாறு ‘தொடரலாம்’ என்ற சொல்லை கைவிடக்கோரி ‘தொடரும்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிஞர் அண்ணாவால் வலியுறுத்தப்பட்ட இந்தக் கோரிக்கை “ஆங்கிலம் தொடரவேண்டும்” என்பதை வலியுறுத்துவதாக இருந்ததே ஒழிய, “தமிழ் நாட்டின் ஆட்சிமொழியும் தொடர்பு மொழியும் தமிழாகவே இருக்க வேண்டும்” என வலியுறுத்துவதாக அமையவில்லை.

1965 ஜனவரி 26-ஆம் நாளைத் துக்க நாளாக அறிஞர் அண்ணா அறிவித்த நிலையில், சென்னை மாகாணத்தின் காங்கிரஸ் முதல்வர் பக்தவச்சலம் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் 25.01.1965 அன்று தொடங்கி, 15.03.1965 வரை 50 நாட்கள் தொடர்ந்தது; 18 நாட்கள் அரசு நிர்வாகமே செயலிழந்தது. இந்திய அரசிய லமைப்புச் சட்டம் 243-ஆம் விதியைத் திருத்தக்கோரி 400 பேருக்கும் மேலாக, 1000 பேர் வரையிலும் இப் போராட்டத்தில், இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டனர்.

இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி “நேருவின் உறுதிமொழி நிறைவேற்றப்படும்” என்று உறுதியளித்தார். இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலம் அலுவல் மொழியாக நீடிக்கும் வகையில் ‘அலுவல் மொழிகள் சட்டப் பிரிவு - 3’ திருத்தப்பட்டது. அந்த ஆண்டு சென்னை மாகாணத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, காங்கிரஸ் தூக்கி எறியப்பட்டது.

1968-ஆட்சி மொழித் திருத்தச் சட்டம், “இந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக இருக்கும்” என்று அறிவித்தது. இதுவே தமிழக மொழிப்போர் வரலாற்றின் சாரம்.

1952-இல், நான்கு மாணவர்களை மட்டுமே பலி கொடுத்த வங்கம் தங்கள் ஈகியர்களின் நினைவாக பிப்ரவரி 21-ஆம் நாளை உலகத் தாய்மொழி நாளாக அறிவிக்கச் செய்ய முடிந்தது. ஆனால், 1939-இல் இருவரையும், 1965-இல் கிட்டத்தட்ட 1000 பேரையும் பலிகொடுத்த தமிழகம் தங்கள் ஈகியர்களை நினைவு கொள்ளும் வகையில், தாய்மொழி நாளாக அறிவிக்கக் கோரத் தவறியது.

தமிழகத் தலைவர்கள் முன்வைத்தது, “ஆங்கிலமும் இந்தியுடன் இணை ஆட்சி மொழியாக இருக்கவேண்டும்” என்பதே! தமிழகத்தால் வங்கத்தைப் போன்று அப்படி ஒரு கோரிக்கையை ஏன் முன்வைக்க முடியவில்லை? மொழிப்போரில் இறங்கிய வங்கதேசம் விடுதலை எனும் இலக்கை உயர்த்திப் பிடித்தது,

1971-இல் சுதந்திர வங்கதேசத்தை உருவாக்கிக் கொண்டது. அதனால்தான் தங்கள் ஈகியரின் இறப்பு நாளை உலகத் தாய்மொழி நாளாக அறிவிக்கச் செய்யமுடிந்தது. ஆனால், இந்தியாவுக்குள் இணங்கி வாழ்வது என்ற கருத்தைத் தங்கள் அரசியல் போக்காக ஏற்றுக் கொண்டிருந்த தமிழகத் தலைமைகள் ஆங்கிலத்தை இணை ஆட்சிமொழியாக ஆக்க மட்டுமே கோரினார்கள்.

ஆக, கோளாறு என்பது ‘இந்தியாவுக்குள் இணங்கி வாழ்வது’ என்ற கருத்தியலில்தான் இருக்கிறது.

தமிழ்ச் சமூகம் ஒன்றை உணர வேண்டும். சொந்த மொழியில் கல்வி கற்க முடியாது; சொந்தத் தாய்மொழியில் படித்தால், சொந்தத் தாய்நாட்டில் வேலை வாய்ப்பு இல்லை; தமிழ்நாட்டில் தமிழிலேயே நிர்வாகத்தை நடத்த முடியாது; தமிழகத்தில் நீதிமன்றங்களில் நீதிமொழியாகத் தமிழை எவ்வளவு மன்றாடினாலும் கொண்டுவர முடியாது; தமிழகக் கோயில்களில் வழிபாட்டு மொழியாகத் தமிழ் இருக்காது - என்றால், தமிழர்கள் ஓர் அடிமைப்பட்ட இனம் என்பதை உணரவேண்டும்.

மொழிப் புறக்கணிப்பு என்பது மொழி - இன அடையாளத்தைச் சிதைத்துவிடும்; தமிழ்ச் சமூகத்தை உதிரிகள் ஆக்கும்; தாயகப் பகுதியிலிருந்து தமிழினம் ஒரு கட்டத்தில் வெளியேற்றப்படும். இச்சூழலில் தமிழர்கள், மொழியை இழந்து, இன அடையாளம் இழந்து, சொந்த மண் இழந்து, அடிமைப்பட்ட ஏதிலிகளாக மாறுவார்கள் என்பதை உணர வேண்டும்.

ஓர் இனத்தின் அடிப்படை உரிமையும், அவ்வினத்தின் மொழி - இன அடையாளத்தைப் பாதுகாக்க சிறந்த வழியும், அதன் தாய் மொழியைக் கல்வி மொழியாகக் கொள்வதும், அதை ஊக்குவிக்க வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதுமே ஆகும்.

தாய்மொழி வழிக் கல்வி என்பது ஒவ்வோர் இனத்திற்கும் அடிப்படை உரிமையாகும். தாய்மொழி வழிக் கல்வி பற்றிய தெளிவு இல்லாமல், எம்மொழிவழிக் கல்வி என்ற தேவையில்லாத வீண் விவாதம் தமிழகத்தில் மட்டுமே நடந்துகொண்டிருக்கிறது.

ஓரினம் தன் மொழியில்தான் கல்வி கற்க முடியும். அதுவே இயற்கையானது. அந்நிய நிறுவனங்களின் எதிர்பார்ப்பு அல்லது அந்நிய எசமானர்களின் தேவைக்கு ஏற்ப, அவர்கள் மொழியில் அல்லது அவர்கள் விரும்பும் மொழியில் கல்வி கற்பது என்பது இயற்கைக்கு முரணானது என்பது மட்டுமின்றி, நாம் ஓர் அடிமை என்பதற்கான அடையாளமும் ஆகும்.

ஆங்கில வழிக் கல்வி என்பது ஒரு சதி

தாய்மொழிவழிக் கல்வி என்பது சிந்தனைகளின் திறவுகோல்; மனத்தின் ஆளுமையை விரிவுபடுத்தும் சிறந்த கருவி. ஆனால், ஆங்கிலமே வாழ்க்கை என்ற சிந்தனை இங்கு விதைக்கப்பட்டிருக்கிறது. ஆதிக்க சக்திகளின் கைக் கருவியாக இன்று ஆங்கிலம் என்பது நிலவுகிறது.

குறிப்பிட்ட உயர்நிலைச் சமூகங்களின் மேலாதிக்கத்தை நிறுவக்கூடிய கைக் கருவியாகவும், வெகுமக்களை ஓரங்கட்டக் கூடிய ஒரு சதியாகவும் ஆங்கிலவழிக் கல்வி என்பது அமைந்திருக்கிறது.

பெரும்பான்மை மக்களுக்கு வாய்ப்புகளை மறுக்கும் வகையில் ஆங்கிலவழிக் கல்வி பயன்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையரை வாய்ப்பு வட்டத்தில் இருந்து வெளியேற்றுவது; அவர்களைத் தகுதியற்றவர்களாக முத்திரை குத்துவது என்பதே இதனுடைய நோக்கம்.

தமிழ்நாட்டில், 1960-கள் வரை தமிழே கல்வி மொழியாக இருந்தது.1970-களில் தொடங்கி, 1980-களில் ஆங்கிலத் தனியார் பள்ளிகள் புற்றீசல்போல எண்ணிக்கையில் அதிகரித்தன. இன்று, ஆங்கில வழிக் கல்வி நிலையங்கள், தெரு ஓரங்களிலும்கூட, எவ்விதக் கட்டமைப்பு வசதியும் இன்றி, வணிக நோக்கத்தோடு நடத்தப்படுகின்றன.

 ஆங்கில அறிவு பெற்றால்தான் வேலைவாய்ப்பு என்ற நிலையைத் தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி, அரசே நிலைநிறுத்துகிறது. ஆங்கில வழியில் கல்வி கற்றால்தான் ஆங்கில மொழிப்புலமை கிடைக்கும் என்ற உளவியலைப் பொதுமக்களும் பெற்றுவிட்டார்கள்.

ஆங்கிலப் புலமை என்பது ஆங்கிலம் புழங்கும் வீடுகளில், அல்லது சமூகத்தில் மட்டுமே சாத்தியம். அத்தகைய வீடுகள் மேல்தட்டு சாதிகளை, ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவையாகவே இருக்கின்றன. ஆங்கிலம் என்பது தங்கள் சமூக வகுப்பின் தகுதிக் குறியீடாக (Class Marker), உயர்குடி நிலையை அடையாளப் படுத்துவதாகக் கருதப்படுகிறது. கல்விப் பாரம்பரியமற்றோர் எனப்படும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

சிறு நகரங்களில் உள்ள ஆங்கில பள்ளிகள் சிறார்களைச் சேர்த்து அவர்களை ஆங்கிலம் அறியாதவர்களாகவும், தமிழும் அறியாதவர்களாகவும் உற்பத்தி செய்துகொண்டிருக்கின்றன. இப்போது ஆங்கிலப் பள்ளிகள் தமிழ் மண்ணில் ஓர் அந்நியக் கூட்டத்தை உருவாக்கி இருக்கிறது. இப்பள்ளிகளில் படித்தவர்கள் சமூக அக்கறை இல்லாதவர்களாகவும், மொழி உணர்வு இல்லாதவர்களாகவும், தாய்மண் பற்று அற்றவர்களாகவும் உருவாக்கப்பட்டுள்ளனர்.

இப்படி, தாய் மண்ணிலிருந்தும், தாய் மொழியிலிருந்தும் மக்களை அந்நியப்படுத்தும் கல்வி என்பது மிகவும் அபாயகரமானது. அது ஓர் இனத்தை விரைவில் அழித்துவிடும். எதிரிகளுக்குக் கையாளாகி சொந்த இன அழிப்புக்கு மாற்றானுக்குத் துணை நிற்கச் செய்யும்.

தமிழ்மொழி வழிக் கல்வி முயற்சிகள்

கல்விமொழிச் சிக்கலின் பரிமாணத்தை உணர்ந்து, ஐந்தாம் வகுப்பு வரையிலாவது தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்தி, கடந்தகாலத்தில் தமிழ் அறிஞர்கள் 25.04.1999 அன்று, சென்னை வள்ளுவர்கோட்டத்தில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கினர்.

19.11.1999 அன்று தமிழக அரசு, “ஐந்தாம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வி நடைமுறைப்படுத்தப்படும்” என்ற அரசாணையை வெளியிட்டது. ஆனால், மெட்ரிகுலேஷன் முதலாளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகித் தங்களுக்குச் சாதகமான ஒரு தீர்ப்பையும் பெற்றார்கள்.

24.04.2000 அன்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, “தமிழ் பயிற்று மொழியும் இல்லை; ஒரு பாடம் மொழியும் இல்லை” என்ற நிலை ஏற்பட்டது. இதன்பிறகு தமிழக அரசின் ‘கற்பித்தல் சட்டம் - 2006’ இயற்றப்பட்டது.

தமிழகத்தில் தமிழ் ஒரு பாடமாக கூட இல்லாத நிலை ஏற்பட்டிருந்தபோது, கர்நாடகம், மராட்டியம் ஆகியவை பத்தாம் வகுப்பு வரை அவர்களுடைய மொழிகளைத் தங்கள் மாநிலங்களில் பள்ளிகளில் கட்டாயமாகப் படித்தாக வேண்டும் என்று சட்டம் செய்தன.

அதையொட்டி, தமிழகத்திலும் “தமிழ் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படும்” என்றும், “ஆண்டுக்கு ஒரு வகுப்பு வீதம், 2007 இல் முதல் வகுப்பு தொடங்கி, படிப்படியாக 2017- இல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படும்” என்று தமிழக அரசு சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து கன்னியாகுமரி மாவட்ட மலையாளிகள் சமாஜம் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தது.

உயர்நீதிமன்றம் “தமிழ் நாடு அரசின் சட்டம் செல்லுபடியாகும்” என்று தீர்ப் பளித்தது. இவ்வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்ட போது, உச்சநீதிமன்றமும் “இச்சட்டம் செல்லும்” என்று தீர்ப்பு வழங்கியது. ஆகவே, தமிழ்நாட்டின் பள்ளிகளில் தமிழ் ஒரு பாடமாகத் தொடர்கிறது.

தமிழக மக்கள் தமிழ்வழிக் கல்வியை எதிர்க்கும் உளநிலையைப் பெற்றுவிட்டார்கள். இதற்குக் காரணம், வேலைவாய்ப்பில் தமிழுக்கு முன்னுரிமை வழங்கப்படாததுதான். தமிழில் படித்தால் வேலை கிடைக்காது என்று மக்கள் தீர்மானமாக நம்புகிறார்கள். தமிழில் படிப்பது தற்கொலைக்குச் சமம் என்று கருதுகிறார்கள்.

தமிழில் படிப்பதன் மூலமாக தமிழின அடையாளம் நிலைநிறுத்தப்படும் என்பதால், அதை இந்திய ஒன்றிய அரசுகள் ஆதரிக்கவில்லை .தமிழில் படித்தால் வேலைவாய்ப்புகள் கிடைப்பது கடினம் என்பதால் மக்களும் அதை ஏற்கவில்லை. இந்நிலையில்தான் தமிழுணர்வாளர்கள் மட்டும் தமிழ் மொழி வழிக் கல்வி பற்றிப் பேசிக்கொண்டிருக் கிறார்கள்.

‘ஒரே நாடு, ஒரே மொழி’ இந்துத்துவ அரசின் இலக்கு நோக்கியப் பயணம்!

இந்திய நடுவண் அரசு எப்போதுமே இந்தியை அதி காரத்திலும், சமற்கிருதத்தைப் பண்பாட்டுத் தளத்திலும் உயர்நிலையில் வைப்பதில் மிகக் கவனமாகத் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் வழிநடத்தப்படும் பாரதிய ஜனதா கட்சியின் அரசு கூடுதல் முனைப்புக் காட்டி வருகிறது.

ஓர் இந்து ராஜ்யத்தை விரைவில் படைத்துவிட வேண்டும் என்பது அதனுடைய நோக்கம். ‘ஒரே நாடு, ஒரே மொழி’ என்ற நிலைபாட்டுடன், இந்தி படித்தால்தான் இனி வேலைவாய்ப்பு என்ற உள நிலையை மக்களிடையே நிலைநிறுத்தி வருகிறது.

அஞ்சல் துறை அக்கவுண்டன்ட் தேர்வு - 2021

இந்தியாவில் 1,54,000 அஞ்சல் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களுக்கான அலுவலர்கள் தேர்வு 2021 பிப்ரவரி 14ஆம் நாள் நடத்தப்படும் என்று ஆங்கிலத்திலும், இந்தியிலும் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியானது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்குக் கடிதங்கள் எழுதப்பட்டபோது, அவர் ‘தமிழிலும் தேர்வு நடத்தப்படும்’ என்றார். 2020-இலும், இதே பிரச்சனை எழுந்தது. அப்போது ‘போஸ்ட் மாஸ்டர்’ எனப்படும் அஞ்சல் நிலையத் தலைமை அதிகாரிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டு, அத்தேர்வில் தமிழ் உள்ளிட்ட மொழிகள் புறக்கணிக்கப்பட்டமையால், அது நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு, தேர்வுமுடிவுகள் நீதிமன்றத்தால் ரத்துச் செய்யப்பட்டன.

அமைச்சர் ரவிசங்கர் அப்போதும் ‘தேர்வுகள் தமிழிலும் நடக்கும்’ என்றார். ஆனால், அதன் பிறகும் தமிழில் நடத்தப்படவில்லை.இனி வேலை வாய்ப்புப் பெறுவது என்பது இந்தி படித்தால் மட்டுமே சாத்தியம் என்ற நிலையை நடைமுறையில் நடுவண் அரசு உருவாக்கி வருகிறது.

தொல்லியல் பட்டயப்படிப்புத் தேர்வில் தமிழ் புறக்கணிப்பு

2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், தொல்லியல் துறை பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியானது.அதிலும் தமிழ்மொழி திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டது.

இதுகுறித்து பிரதமர் மோடிக்குத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி கடிதம் எழுதினார்.அக் கடிதத்தில், “பட்டயப்படிப்பு வகுப்பில் சேருவதற்கான கல்வித்தகுதியில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. இந்தியாவிலுள்ள 48,000 கல்வெட்டுகளில் 28,000 கல்வெட்டுக்கள் தமிழிலேயே உள்ளன. ஆகவே தமிழில் பட்டம் பெற்றோரும் தகுதியுடையோராகச் சேர்க்கப்பட வேண்டும்” என்று கடிதம் எழுதினார்.

தமிழில்தான் கல்வெட்டுகள் அதிகம் உள்ளன என்பதும், இந்திய வரலாற்றில் 2000 ஆண்டுக் காலமாக எழுத்தறிவு பெற்ற மக்களாக விளங்கி வருபவர்கள் தமிழர்களே என்பதும், இந்திய நடுவண் அரசுக்கு நன்கு தெரியும்.

 இருந்தாலும், தொல்லியல் துறையில் தமிழ் படித்தவர்களை அனுமதிக்க இந்திய அரசு விரும்பவில்லை. வரலாற்றை இந்துத்துவத் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைக்கவேண்டும் என்ற நோக்கில் இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. தொல்லியல் துறையையும், வரலாற்றுத் துறையையும் இந்துத்துவ அறிவாளிகளால் நிரப்ப வேண்டும் என்ற முனைப்போடு செயல்படக்கூடிய இந்திய பாசக அரசு, தொல்லியல் பட்டப் படிப்புத் தகுதியில் தமிழைத் திட்டமிட்டே புறக்கணித்தது.

தொலைக்காட்சியில் சமற்கிருதச் செய்தித் திணிப்பு

இந்திய அரசியலமைப்புச் சட்டம் எட்டாவது அட்ட வணையில் ‘மொழிகள்’ என்ற தலைப்பில் 22 மொழிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றை, சாதாரணமாக அனைவரும் கருதுவதுபோல, ‘தேசிய மொழிகள்’ என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிடவில்லை.

இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் மொழிகளில், சமற்கிருதத்துக்கும், இந்திக்கும் கொடுக்கக்கூடிய அதி உயர்நிலையைப் பிற மொழிகளுக்கு இந்திய அரசு தரவில்லை.

பட்டியலில் உள்ள மொழிகள் சமமாக நடத்தப்படவில்லை. இந்தியர் என்றால் சமற்கிருதம் அறிந்திருந்தாலும், அறியாவிட்டாலும், சமற்கிருதச் செய்தியைக் கேட்டுத்தான் ஆக வேண்டும் என்ற நிலையை மேற்கொண்டு, இந்திய நடுவண் அரசு சமற்கிருதத்தைத் திணிக்கிறது.

தமிழ் அறிந்தவர்கள் மட்டுமே பார்க்கும் பொதிகைத் தொலைக்காட்சியில் சமற்கிருதத்தில் செய்தி அறிக்கை கட்டாயமாக வழங்கப்படுகிறது. “டெல்லி தூர்தர்ஷனில் சமற்கிருதச் செய்தி வெளியாகும் அதேநேரத்திலோ, அல்லது அதற்கு அரைமணி நேரத்திற்குள்ளோ, சமற்கிருதச் செய்தியை ஏனைய மொழித் தொலைக்காட்சிகள் வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டிருக்கிறது.

அதன்படி, சமற்கிருதச் செய்தி காலை 7:15 முதல் 7:30 வரை அறிவிக்கப்படுகிறது. இந்திய மக்கள் 137 கோடிப் பேருள், இந்தியாவில் சமற்கிருதம் பேசுவோர், அரசு கணக்கின்படி, 15,000 பேர் மட்டுமே என்ற நிலை இருக்கும்போது, இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களும் கேட்குமாறு சமற்கிருதச் செய்தி அறிக்கையை ஒளிபரப்ப வேண்டிய தேவை என்ன? ஆட்சியாளர்களுக்கு இருக்கக்கூடிய இந்து மதவாத இலக்குக்கு ஏற்ப, சமற்கிருத - இந்தி மொழித் திணிப்பைச் செய்து வருகிறார்கள் என்பதுதான் உண்மை.

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தியில் பதில்

மத்திய ரிசர்வ் படை குரூப்-பி, குரூப்-சி பிரிவுகளில் 780 பணியிடங்களுக்கு, 20.12.2020 அன்று எழுத்துத்தேர்வு நடைபெறும் என்ற நியமன அறிவிப்பு வெளியானது.

அந்த அறிவிப்பின்படி, வடஇந்தியாவில் 5, தென்னிந்தியாவில் 2, மேற்கே 1, கிழக்கே 1 என 9 தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது.

தமிழகத்திலும், புதுச்சேரியிலும் தேர்வு மையங்கள் இல்லை என்ற காரணத்தால், தேர்வு மையங்கள் தமிழகத்தில் அல்லது புதுச்சேரியில் அமைக்கப்படவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துக் கடிதம் எழுதப்பட்டது.

இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய் இந்தியில் பதில் கடிதம் அனுப்பினார். உள்துறை அமைச்சகத்திற்கு இது குறித்து எழுதப்பட்ட கடிதத்திற்குப் பதிலே வரவில்லை. இதனால் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 2020 நவம்பர் 27-இல் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

நடுவணரசின் போக்கு அரசியல் சட்டத்துக்கு எதிரானது

நடுவணரசின் போக்கு இந்திய அரசியல் சட்டத்திற்கு, இந்திய அரசியல் சட்டப் பிரிவு 19 (1) (அ) வழங்கியிருக்கும் உரிமைகளுக்கு முரணானது. 1963-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அலுவல் மொழிச் சட்டம் - பிரிவு 3-இல், “இந்தியை ஏற்காத மாநிலங்களுக்கு ஆங்கிலமே அலுவல் மொழி” என்று தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய அரசு அதைப் புறக்கணிக்கிறது. துணைப்பிரிவுகள் 1-4, “இந்தியை ஏற்காத மாநிலங்களுக்கு, இந்தி ஆட்சி மொழி என்பது பொருந்தாது” என்றும், “அம் மாநிலச் சட்டமன்றங்கள் இந்தியை ஏற்றுத் தீர்மானம் இயற்றி, நாடாளுமன்ற இரு அவைகளும் அத் தீர்மானத்தை ஏற்கும் வரை, இந்தி பேசாத மாநிலங்களில் நிர்வாக விடயங்களில் இந்தி பயன்படுத்தப்படாது” என்றும் உறுதி கூறியுள்ளது.

ஆகவே, இந்திய அரசியல் சட்டமும், அலுவல் மொழி குறித்த சட்டமும் (1963) தெளிவாக வரையறுத்திருந்தும், அவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு, இந்தி பேசாத மாநிலங்களின் உரிமைகளை நசுக்குவதில் இந்திய நடுவணரசு முனைப்பாக இருக்கிறது.

பேரிடர் எச்சரிக்கைகூடத் தமிழில் தர மறுப்பு

நடுவணரசு ‘நிவர்’ புயல் எச்சரிக்கைகள் வெளியிட்ட போதும் (26 நவம்பர் 2020), அவை தமிழில் வெளியிடப்படவில்லை.அந்தந்த மக்களுடைய மொழிகளில் எச்சரிக்கைகள் வெளியிடப்படும்போதுதான், அந்த மக்கள் இயற்கைப் பேரிடர்களை சந்திக்கக்கூடிய நட வடிக்கைகளில் வினரந்து ஈடுபடமுடியும். மிக ஆபத்தான காலகட்டத்திலும்கூட நடுவணரசு இந்தி வெறிகொண்டு அலைகிறது; தமிழில் எச்சரிக்கை செய்யத் தவறியது.

தமிழ்நாட்டில் தமிழ் இல்லாப் பள்ளிக்கூடங்கள்

தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் 49 உள்ளன. இவற்றில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இப் பள்ளிகளில் தமிழ் ஒரு பாடமாகக்கூட இல்லை. இவற்றில் தமிழாசியர்களே கிடையாது. இந்தி மற்றும் சமற்கிருதத்தில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு பெற்று மேல் வகுப்புகளுக்குப் போகமுடியும்.

இப் பள்ளிகளில் பயிற்றுமொழி இந்தியும், ஆங்கிலமும் மட்டுமே. இப் பள்ளிகளில் படித்தால்தான் உயர் அரசுப் பணிகளில் வாய்ப்புக் கிடைக்கும் என்ற நிலையும் நிலவுகிறது. இப்பள்ளிகள் மாநில அரசுகளைக் கேலி செய்யும் சின்னங்களாகவே விளங்குகின்றன.

தாய்மொழிக் கல்வியில் அரசே கோளாறு செய்கிறது

தமிழ்நாட்டில் ஏழு வகைக் கல்வி முறைகள் உள்ளன. அரசுப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், ஓரியண்டல் பள்ளிகள், ஆங்கிலோ-தமிழகப் பள்ளிகள், நவோதயா பள்ளிகள், கேந்திர வித்யாலயா பள்ளிகள் என்று ஏழு வகையான கல்வி முறைகள் பின்பற்றப்படுகின்றன. இது கல்வி முறையில் ஒரு வகையான ஏற்றத்தாழ்வு நிலையையும், மாணவர்களுக்கு மாறுபட்ட கல்வி வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது.

சென்னை மாகாணத்தை ஆங்கிலேயர்கள் ஆண்டபோது தமிழில் படிக்க வாய்ப்பு இருந்தது. இந்திய விடுதலைக்குப் பிறகு, சென்னை மாகாணத்தைக் காங்கிரசு கட்சி ஆண்டபோதும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியே இருந்தது.

ஆனால், அதன் பிறகு ஆண்ட அரசுகள் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, தமிழ்மொழி வழி வகுப்புகளை மூடிவருகின்றன. ஆங்கில வழிப் பிரிவுகள் என்பவை 2010 முதல் தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளிலேயே தொடங்கப்பட்டுவிட்டன. 2013-14 ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் 172 அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்புத் தமிழ்ப் பிரிவே இல்லை. மேலும், 21 நடுநிலைப் பள்ளிகளில் தமிழ்ப் பிரிவே இல்லை என்ற நிலை ஏற்பட்டது. இதேநிலை தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் நிலவுகிறது. தமிழ் மக்கள் விரும்பினாலும் கூடத் தமிழ்வழி வகுப்புகளில் சேரமுடியாத நிலை, குறிப்பாக சென்னையில், நிலவுகிறது.

தமிழ்வழியில் படித்தோருக்குமுன்னுரிமை அளிக்கத் தவறிய தமிழ்நாடு அரசு

தமிழ் வழியில் கல்வி கற்றோருக்குத் தமிழ்நாட்டில் வேலை அளிக்காவிட்டால் வேறு எங்கு வேலை கிடைக்கும்? இதுகுறித்து ஓர் ஒழுங்கற்ற முயற்சியைத் தமிழக அரசு கடந்த காலத்தில் செய்தது.

2010 சூன் 23 முதல் 27 வரை தமிழ்நாடு அரசு செம்மொழி மாநாட்டை நடத்தியது. அதில் 27ஆவது தீர்மானம் “தமிழ்வழிக்கல்வி பெற்றோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்” என்று கூறியது. அரசு வேலை வாய்ப்பில் 20ரூ முன்னுரிமை ஒதுக்கீடு என்று நிர்ணயித்து, 2010 செப்டம்பர் 7ஆம் தேதி தமிழ்நாடு அரசு ஓர் அவசரச் சட்டத்தை நிறைவேற்றியது.

அதன்படி “அரசு வேலைவாய்ப்பில் 20ரூ தமிழ்வழியில் கல்வி பயின்றோர்க்கு ஒதுக்கப்படும்” என்று அறிவித்தது; சென்னை உயர்நீதிமன்றத்தில் நகலெடுக்கும் பொறியை இயக்கும் வேலையும் அளித்துத் தொடங்கி வைத்தது. இந்த அவசரச் சட்டத்தின் மூலம் தமிழில் படித்தோருக்கு கீழ்நிலைப் பணிகளை மட்டுமே வழங்க முடிந்தது.

மத்திய அரசுப்பணிகள், மாநில அரசுப்பணிகள், தனியார் நிறுவனங்களின் வேலைகள் என்று ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது, மாநில அரசுப் பணிகள் என்பவை மிகக் குறைவானவையே. அவற்றையும் கூட முழுமையாகத் தமிழ்வழியில் பயின்றோருக்கு ஒதுக்க தமிழ்நாடு அரசு முன்வரவில்லை .மாநில அரசின் குறைவான வேலைவாய்ப்பிலும்கூட, 20ரூ மட்டுமே தமிழ்நாடு அரசு ஒதுக்கியது. தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கு முன்னுரிமை என்பது நடைமுறையில் நிறைவேற்றப்படவில்லை.

2018-ஆம் ஆண்டு, சட்டக் கல்லூரியில் தமிழ்வழிப் படித்தோருக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டது. அரசு சட்டக் கல்லூரிகளில் 186 உதவிப் பேராசிரியர் இடங்களுக்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. இதில் தமிழ்வழிப் படித்தோருக்கு 20ரூ முன்னுரிமை அளிக்கப்படவில்லை. காரணம், பேராசிரியர்கள் பணிக்கு விண்ணப்பித்தோர் முதுநிலைப் பட்டப்படிப்பைத் தமிழில் பெறவில்லை என்ற காரணத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் காட்டியது.

ஆனால், குறிப்பிட்ட பாடங்களில் முதுநிலைப் பட்டப் படிப்பு தமிழில் இல்லை என்பதே உண்மை. இத்தகைய சூழ்நிலையில் இளநிலை பட்டப் படிப்பு வரை தமிழ்வழியில் கற்றோருக்கு வாய்ப்புகள் அளிக்கவேண்டும். ஆனால், வாய்ப்புகள் அடியோடு மறுக்கப்படுகின்றன. இதேநிலை பொறியியல் கல்லூரிகளுக்கும் ஏற்பட்டது.

பொறியியல் கல்லூரிகளில் 187 உதவிப் பேராசிரியர் இடங்களுக்காக தேர்வு செய்யப்பட்டது. அதில் 38 இடங்கள் தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், முதுநிலை பொறியியல் கல்வி தமிழில் இல்லை என்பதைக் காரணமாகக் கொண்டு, முன்னுரிமை என்பது எவருக்கும் அளிக்கப்படவில்லை. தமிழக அரசின் அரசாணை ஒரு தெளிவில்லாததாக வரைவு செய்யப்பட்டிருப்பதே இக் குழப்பங்களுக்குக் காரணம் ஆகும்.

பட்டப்படிப்பு வரை தமிழில் படித்தவர்களுக்கு அப் பணியிடங்களை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வாய்ப்புகளை மறுக்கும் நோக்கிலேயே ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்பட்டிருக்கிறது.

நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகத் தமிழ்மொழி அனுமதிக்கப்படவில்லை

பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், உயர்நீதிமன்றங்களில், அம்மாநில மொழியான இந்தி வழக்காடு மொழியாக ஏற்கப்பட்டுள்ளது.

இம் மாநிலங்களைப் பொறுத்தவரை, இந்தி என்பது வட்டார மொழி. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஏற்கவேண்டும் என்று 1996-இலும், 2006-இலும், சட்டமன்றத் தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளன.

ஜெயலலிதா அம்மையார் தமிழக முதல்வராக இருந்த காலத்திலும் அதற்கான முயற்சிகள் செய்யப்பட்டன. ஆனால் 2012-இல், “தமிழை சென்னை உயர் நீதி மன்றத்தின் வழக்காடு மொழியாக ஏற்க முடியாது” என்று நடுவண் அமைச்சர் பி.பி.சவுத்ரி மறுப்பு தெரிவித்துவிட்டார்.

“உச்சநீதிமன்ற அனைத்து நீதிபதிகள் அமர்வு இசைவு அளிக்கமுடியாது என்று அறிவித்துவிட்டது” என்று காரணம் கூறினார். தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக ஏற்க மறுப்பது என்பது இந்திய அரசியல் சட்டத்திற்கும், ஆட்சிமொழிச் சட்டத்துக்கும் (1963) எதிரானது.

அரசியல் சட்டம் 348(2), “குடியரசுத் தலைவரின் அனுமதி பெற்று, ஓர் ஆளுநர் அம் மாநிலத்தின் ஆட்சி மொழி அல்லது இந்தியை நீதிமன்ற மொழியாக ஏற்கலாம்” என்று குறிப்பிடுகிறது. அதுபோன்றே, ஆட்சிமொழிச் சட்டம் (1963) - பிரிவு-7, “ஆங்கில மொழியுடன் மாநிலத்தின் அதிகாரபூர்வ மொழி அல்லது இந்தி மொழி மாநில நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாகப் பயன்படுத்த ஆளுநர் அங்கீகாரம் வழங்கலாம்” என்று கூறுகிறது.

2006 திசம்பர் 6-ஆம் நாள், தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய சட்டமன்றத் தீர்மானம், ஆளுநர் ஒப்புதலோடு குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அன்றைய குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம் சட்டத்தை உடனடியாக ஏற்கும் வகையில், தமிழ்நாடு முதல்வர் ஆளுநரிடம் சட்டமன்றத் தீர்மானத்தை நேரிலும் அளித்திருந்தார். ஆனால், “முறைப்படி அந்தத் தீர்மானம் அனுப்பி வைக்கப்பட வேண்டும்” என்ற விதிமுறைப்படி, மத்திய அரசின் சட்டம் மற்றும் நிதி அமைச்சகத்துக்கும் தமிழக அரசு அனுப்பி வைத்தது.

ஆனால், அத் தீர்மானத்தை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கே மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் அனுப்பவில்லை. “உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஒரு வட்டார மொழியை உயர்நீதிமன்ற மொழியாக அறிமுகப்படுத்துவது இப்போது உகந்ததாக இருக்காது” என்று கூறிவிட்டதாக அமைச்சகம் பதில் கூறிப் பிரச்சனையை முடித்துக் கொண்டது.

2004இல் செம்மொழி என்ற தகுதி வழங்கப்பட்ட தமிழ் மொழிக்கு, “நீதிமன்ற வழக்காடு மொழியாகப் பயன்படுத்தக் கூடிய தகுதி இல்லை” என்று நடுவண் அரசு கூறி விட்டது. அப்பட்டமாகத் தமிழ்மொழியை அது புறக்கணிக் கிறது. தமிழர்களை இரண்டாம் நிலைக் குடிமக்களாகக் கருதுகிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

அரசியல் சட்டமே உரிமைகளை அளித்தாலும் கூட, அதை நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய நடுவண் அரசுக்கு விருப்பமில்லை. இதே நிலைதான் ஒவ்வொரு தளத்திலும், தமிழுக்கும், தமிழர்களுக்கும் நடைமுறையாக இருந்து கொண்டிருக்கிறது.

வங்கத்தால் முடிந்தது, தமிழகத்தால் முடியவில்லை! ஏன்?

1952-இல், நான்கு மாணவர்களைப் பறிகொடுத்த வங்கம் தன் இறையாண்மையுள்ள தேசத்தை 1971-இல் நிறுவிக் கொண்டதோடு, உலக அளவில் தம் மொழிப்போர் ஈகியர்களுக்கான ஓர் அங்கீகாரத்தை பெறும் வகையில், அவர்கள் இறந்த நாளை உலகத் தாய்மொழி நாளாக அறிவிக்க கோரி அதை வெற்றிகரமாகப் பெற்றுக் கொண்டது.

ஆனால், 1939 முதல் 1968-வரை நீண்ட இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி, ஆயிரம் பேருக்கு மேல் உயிர்களை ஈகம் செய்த தமிழ்நாடு இறையாண்மை அரசியலை நோக்கி நகரவும் இல்லை; தமிழ் மொழியை தமிழகத்தின் ஒரே ஆட்சி மொழியாக ஆக்கிக் கொள் ளவும் இல்லை; உலக அளவில் தமிழக ஈகியர்க்கு ஓர் அங்கீகாரத்தைப் பெறவுமில்லை.

இந்தியை நுழையவிடாமல் தடுக்கிறோம் என்ற பெயரில், ஆங்கிலம் முழுமையாக ஏற்கப்பட்டது; தமிழகத்தின் கதவு அகலமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்தி என்ற எசமான மொழிக்கு இணையாக, ஆங்கிலம் என்ற அந்நிய மொழியைப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொண்டால் அதுவே போதும் என்று, பெரிய விலை கொடுத்து, ஒரு சிறிய சலுகையைப் பெற்றுக் கொண்ட தோடு மனநிறைவு எய்தி, இந்தியத்துக்கு இணங்கி, அடக்க ஒடுக்கமாக, பம்மிப் பதுங்கி அரசியல் வாழ்வு நடத்திக் கொண்டிருக்கிறது தமிழினம்.

கூடுதல் அபாயம் சூழ்ந்து கொண்டிருக்கிறது!

இப்போது 1938-ஐ விடவும், 1965-ஐ விடவும், தமிழ் மொழி மிகப்பெரும் அபாயக் கட்டத்தில் சிக்கி இருக்கிறது.

இனிவரும் காலத்தில் தமிழர்களின் மொழி உரிமை எஞ்சி வாழுமா என்ற கேள்வி எழுகிறது.

இந்தியாவின் ஒரே ஆட்சி மொழி இந்தி என்றும், இந்தியர்களின் புனித மொழி, பண்பாட்டு மொழி, தேசிய அடையாளம் சமற்கிருதம் மட்டுமே என்றும் கூவிக் கொண்டிருக்கிற, இந்து ராஷ்டிரத்தைப் படைப்பதை தம் வரலாற்று இலக்காகக் கொண்டிருக்கக்கூடிய இந்துத்துவ மத வெறி அரசு, எதிர்கால இந்து ராஷ்டிர இந்தியாவை வடிவமைப்பதற்கான கல்விக்கொள்கையை உருவாக்கி உள்ளது.

புதிய தேசியக் கல்விக் கொள்கை என்பதை உருவாக்க அமைக்கப்பட்ட கஸ்தூரிரங்கன் குழுவின் அறிக்கை, “நடுநிலைப் பள்ளி வரை இந்தி, ஆங்கிலம், தொடர்புடைய மாநிலத்தின் மொழி ஆகியவற்றை உள்ளடக்கிய மும்மொழிகளையும் கொண்ட பாடத்திட்டம் கட்டாயமாக்கப்பட வேண்டும்” என்று இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறைக்குப் பரிந்துரை செய்தது.

இப்போதைக்கு மாநில அரசுகள் இதை மறுத்துத் தங்கள் நிலைபாட்டைக் கூறியிருந்தாலும், மாநில அரசுகளை வழிக்குக் கொண்டுவரும் பாசிச வழிமுறைகளை இந்திய அரசு அறிந்தே வைத்திருக்கிறது.

தமிழர்கள் வரலாற்றிலிருந்து பாடம் கற்க வேண்டும்

தன்னுடைய மொழியில் படிக்கவும், அம் மொழியில் படித்தால் வேலைவாய்ப்பை உத்தரவாதப்படுத்தவும், வீட்டிலும், நாட்டிலும், உயர்நீதிமன்றத்திலும், வழிபாட்டுத் தளங்களிலும், பயன்படு மொழியாகத் தமிழை தங்களால் ஆக்கவும் முடியாது என்றால், அது ஓர் அடிமைப்பட்ட இனத்திற்கான அடையாளம்; தாங்கள் ஓர் அடிமைப்பட்ட இனம் என்ற உண்மையைத் தமிழர்கள் கடந்தகால வரலாற்றிலிருந்து உணர வேண்டும்.

தமிழர்கள் தாங்கள் விடுதலை பெற்ற மக்கள் என்ற கற்பனை வாழ்விலிருந்து முதலில் மீளவேண்டும்.

மொழி, இன உரிமைகளை மறுக்கும் இந்தியத்தின் கீழ் தங்கள் நிலை எவ்வளவு பரிதாபகரமான நிலையில் உள்ளது என்பதை, எவ்வித வெட்க உணர்வும் கொள்ளாமல், அடுத்த தலைமுறைக்கு உணர்த்த வேண்டும். ஏனெனில், நம் போராட்டங்களைத் தொடர வேண்டியவர்களாக அவர்கள் தான் இருக்கிறார்கள்.

தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடம் வங்கத்திடம் இருக்கிறது!

- பேராசிரியர் த. செயராமன்

தலைமை ஒருங்கிணைப்பாளர், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு