உலகம் முழுவதும் மனித இனம் ஒரு நிம்மதியான வாழ்க்கையைத் தேடி ஓடிக்கொண்டே இருக்கின்றது. ஒரு பக்கம் பன்னாட்டு தொழிற்நிறுவனங்களால் நிர்மூலம் ஆக்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டு, வாழ்வாதாரம் சூறையாடப்பட்டு துரத்தப்படும் மக்கள், இன்னொருபுறம் மனித மனம் தனக்குள்ளேயே கட்டமைத்திருக்கும் மதம், இனம், நிறம் போன்ற கருத்தியல் வடிவங்கள் தங்களுக்குள் நடத்திக் கொண்டிருக்கும் முற்றுப் பெறாத போர்களால் துரத்தப்படும் மக்கள். இவைதான் இன்றைய நாகரிக சமூகம் என்று நாம் சொல்லிக்கொள்ளும் நம் காலத்தின் பிரத்தியட்ச உண்மைகளாக உள்ளது. ஜனநாயகம், சமூக ஜனநாயகம், சோசலிச ஜனநாயகம் போன்ற வார்த்தைகள் எந்த வகையிலும் இந்த மக்களின் அவலம் நிறைந்த இடப்பெயர்ச்சிக்கான காரணத்தைத் தீர்த்துவைக்கும் திராணியற்று இன்னும் சொல்லப் போனால் அந்த அவலங்களை பூசி மொழுகும் ஆடம்பர சொற்களாக மட்டுமே இருக்கின்றன.

Burmese Muslims

ஹிட்லரின் பாசிச ஆட்சியில் யூதர்கள் நாடற்றவர்களாக உலகம் முழுவதும் விரட்டப்பட்டார்கள். அதற்கு அடுத்து நம் சம காலத்தில் ஈழத்தமிழர்கள் விரட்டப்பட்டார்கள். ஆனால் எண்ணிக்கை அளவில் பார்த்தோம் என்றால், யூதர்களைவிட ஈழத்தமிழர்களைவிட இன்று உலகம் புராவும் அகதிகளாக வாழ்ந்துவருவதில் முஸ்லிம் மக்களே அதிகம் உள்ளார்கள். நாடு முழுவதும் அகதிகளாக சொந்த நாட்டைவிட்டு வெளியேறும் மக்களில் ஆப்கானிஸ்தான், ஈராக், தென் சூடான், சிரியா, மியான்மர் போன்ற நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்களே அதிக அளவில் உள்ளனர். தங்களுக்குள் பல்வேறு பிரிவுகளாக ஷியா பிரிவு என்றும், சுன்னி பிரிவு என்றும் பிரிந்துகிடக்கும் முஸ்லிம்கள் அதையே தன் சக இஸ்லாமிய சகோதரனையும், சகோதரியையும் கொன்றொழிக்கப் போதுமானதாக நினைக்கின்றார்கள். அப்படி செய்வதைத் தன்னுடைய மத சுதந்திரமாகவும், மதத்தைக் காப்பாற்றும் வழியாகவும் அவர்கள் நினைக்கின்றார்கள். மதம் மனிதனை ஒன்றுபடுத்தும் காரணி என்பதெல்லாம் மிக மோசடியான ஒன்று என்பதைத்தான் தொடர்ந்து இஸ்லாமிய நாடுகளில் அந்த மக்களுக்கு எதிராக நடந்துவரும் வன்முறைகள் காட்டுகின்றன. எந்த ஒரு இஸ்லாமிய நாடும் தன் சக இஸ்லாமிய நாடுகளுக்கு உதவுவதில்லை என்பதும் அப்படியே உதவினாலும் அது அவர்களை அழித்தொழிப்பதற்காகத்தான் என்பதும் ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகள் மீது அமெரிக்கா தொடுத்த போர்களின் போது நாம் பார்த்திருக்கின்றோம். இஸ்லாமிய நாடுகளின் இந்தக் கண்டுகொள்ளாத சுயநலமும், பேராசையும் தான் இன்று இஸ்லாமிய மக்களை நாடற்றவர்களாக, தேசமற்றவர்களாக அலைய வைத்துக் கொண்டிருக்கின்றது. எல்லா வகையான வன்முறைகளையும் அவர்கள் மீது மற்ற நாடுகள் பிரயோகிப்பதற்கு உறுதுணையாக இருக்கின்றது.

இப்படி முஸ்லிம்கள் என்றாலே கேட்பதற்கு ஆளற்ற மக்கள் என்ற பிம்பம்தான் இன்று அவர்களை பெரும்பான்மையான நாடுகளில் இரண்டாம் தரக் குடிமக்களாகவும், இன்னும் குடியுரிமை மறுக்கப்பட்டவர்களாகவும் வாழ நிர்பந்தப்படுத்திக் கொண்டு இருக்கின்றது. இந்தியாவில் ஏறக்குறைய 10 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்ந்தாலும், அவர்களின் நிலையான சமூக, பொருளாதர நிலை என்பதும், ஒரு நிம்மதியான அச்சமற்ற வாழ்க்கை என்பதும் இன்னும் கனவாகவே உள்ளது. எந்தச் சூழ்நிலையிலும் இந்துமத அடிப்படைவாதிகளால் அவர்கள் தாக்கப்படலாம் என்ற அச்சம் இருந்து கொண்டே இருக்கின்றது. இதே நிலைதான் இன்று மியான்மரிலும் பெரிய அளவில் தலைதூக்கி இருக்கின்றது.

மியான்மரில் பெரும்பான்மையாக தேரவாத பெளத்தத்தைப் பின்பற்றும் புத்தமதத்தினர் இருக்கின்றனர். ரோஹிங்கியா முஸ்லிம்கள் மொத்த மக்கள் தொகையில் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் அதாவது 5 சதவீதம் பேர் உள்ளனர். மியான்மரில் உள்ள பல்வேறு இன சிறுபான்மையினக் குழுக்களை தங்கள் நாட்டு குடிமக்களாக உரிமை அளித்து ஏற்றுக் கொண்ட அரசு ரோஹிங்கியா முஸ்லிம்களை மட்டும் இன்னும் அந்த நாட்டின் சட்டப்பூர்வ குடிமக்களாக அங்கீகரிக்க மறுக்கின்றது. இதற்கு அரசு சொல்லும் காரணம் அவர்கள் வங்கதேசத்தில் இருந்து பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் வந்து குடியேறியவர்கள் என்பது. ஆனால் வரலாற்று ஆய்வாளர்கள் ரோஹிங்கியா முஸ்லிம்கள் ராக்கைன் மாநிலத்தின் பூர்வ குடிகள் என்று சொல்கின்றார்கள். இன்னும் சில ஆய்வாளர்கள் வங்கதேச விடுதலைப் போருக்குப் பின்னால் அவர்கள் ராக்கைனில் குடியேறியதாகவும் சொல்கின்றார்கள்.

இது போன்ற பிரச்சினை பல்வேறு நாடுகளில் காணப்படுகின்றது. குறிப்பாக இந்தியாவில் இருந்து இலங்கையில் குடியேறிய தமிழ் மக்களை சிங்களவர்கள் கள்ளத்தோணி என்று சொல்லி அந்த நாட்டின் சிங்களவர் வளர்ச்சிக்கு மிகப்பெரிய எதிரியாக சித்தரித்து, ஒட்டுமொத்த தமிழ்மக்களுக்குமான இன அழிப்பு நடவடிக்கையில் அதைக் கொண்டுபோய் நிறுத்தினார்கள். இன்று அதேதான் மியான்மரில் நடந்து கொண்டிருக்கின்றது. 2012 மியான்மரில் நடந்த மிகப்பெரிய கலவரத்தில் லட்சக்கணக்கான இஸ்லாமிய மக்கள் அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறினார்கள். வங்கதேசத்தில் மட்டும் 4 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். 25 ஆண்டுகாலம் ராணுவ ஆட்சியின் பிடியில் இருந்த மியான்மரில் 2015 ஆம் ஆண்டுதான் தேர்தல் நடைபெற்று, மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசு பதவியேற்றது. இந்தத் தேர்தலில் அமைதிக்கான நோபல் பரிசை வென்ற ஆங் சாங் சூகியின் கட்சியே வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. எப்படி எல்லா அமைதி உபதேசகர்களின் மற்றொரு பக்கம் மிக கொடூரமாக உள்ளதோ, அதே போலத்தான் ஆங் சாங் சூகியின் அமைதி உபதேசமும் அமைந்ததை அந்த நாட்டு ரோஹிங்கியா முஸ்லிம்கள் விரைவில் தெரிந்துகொண்டார்கள். ஆங்சாங் சூகியின் அமைதி உபதேசம் என்பது ஜார்ஜ் புஷ்சின் உபதேசம் போன்றோ, இல்லை ஒபாமாவின் உபதேசம் போன்றதுதானே ஒழிய, அதில் இருந்து தனித்தல்ல என்பதை இன்று உலகம் நன்கு உணர்ந்து கொண்டிருக்கின்றது.

இப்படி அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டு, தான் பிறந்து வாழ்ந்த மண்ணில் வாழவே முடியாது என்ற சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட பின்னர்தான் 2016 வாக்கில் ரோஹிங்கியா முஸ்லிம்களில் இருந்து எழுச்சி பெற்ற சிலர் சேர்ந்து தங்களது விடுதலைக்கான படை ஒன்றை கட்டியமைக்கின்றார்கள் (Arakan rohingya salvation army).அந்தப் படைதான் அவ்வப்போது தன் இன மக்களுக்கு எதிராக செயல்படும் மியான்மர் ராணுவத்தின் மீதும், போலீசார் மீதும் தாக்குதல்கள் நடத்தி வந்தது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 25 அன்று ஏ.ஆர்.எஸ்.ஏ வினர் தாங்கள் பெரும்பான்மையாக உள்ள ராக்கைன் மாநிலத்தில் 30க்கும் மேற்பட்ட போலீஸ் சோதனைச் சாவடிகள் மீது வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் 12 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ராணுவம் திட்டமிட்டு ரோஹிங்கியா முஸ்லிம்களை அழித்தொழிக்கும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை 100க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக ரோஹிங்கியா முஸ்லிம்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் the European rohingya council என்ற அமைப்பு மியான்மரில் 2000 முதல் 3000 பேர்வரை கொல்லப்பட்டுள்ளதாக புதிய தகவலை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

பெளத்த இனவெறி பிடித்த பிடித்த ராணுவம் அங்கு ரோஹிங்கியா முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்குத் தீவைப்பதையும், பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்குவதையும் குழந்தைகள், முதியவர்கள் என்ற பாரபட்சம் ஏதுமின்றி முர்க்கத்தனமாக இன அழிப்புப் போரை நடத்திக் கொண்டு இருக்கின்றது. ஆனால் இதுவரை எந்த நாடுகளும் இதைப் பெரிய அளவில் கண்டித்ததாகத் தெரியவில்லை. எப்படி ஈழத்தில் உலக நாடுகள் அனைத்தும் மெளனமாக வேடிக்கை பார்க்க, மிகப் பெரிய இன அழிப்புப் போர் நடத்தி முடிக்கப்பட்டதோ இப்போது அதே போல அதே பெளத்த இனவாதத்தால் இன்னொரு இனப் படுகொலை நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. இஸ்லாமிய நாடுகள் அனைத்துமே கள்ளத்தனமான மெளனத்தைக் கடைபிடித்து வருகின்றன. அவர்களுக்குத் தங்களுடைய நாட்டின் அமைதியும், பொருளாதார ஸ்திரத்தன்மையும் மட்டுமே கண்ணுக்குத் தெரிகின்றதே ஒழிய தன்னுடைய சகோதரன் , சகோதரிகள் கொல்லப்படுவதைப் பற்றி எந்தக் கவலையும் அக்கறையும் துளியும் கிடையாது.

மதத்தை வைத்து தங்களது அதிகார பீடங்களை கட்டமைத்திருக்கும் மதவாதிகள் அதை எப்போதுமே ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்ய மட்டுமே பயன்படுத்துவார்கள் என்பதையும் சாமானிய எளிய மனிதர்கள் கொல்லப்படுவதை அவர்கள் கடவுளின் பெயரால் நியாயப்படுத்தத் தயங்காதவர்கள் என்பதையும் தான் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பு போர் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

- செ.கார்கி

Pin It