சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு அளித்த மற்றொரு அறிக்கையில், இரு தரப்பிலும் மதவாதிகளால் வெளியிடப்படும் துண்டறிக்கைகள் – இரு சமூகங்களிடையிலும் சந்தேகத்தை அதிகரித்து, அவர்களுக்கிடையிலான இடை வெளியை அகலப்படுத்துவதாகக் குறிப்பிட்டிருந்தது.எனவே உள்துறை, மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாவட்ட நீதிபதிகளுக்கும் சில முக்கிய கட்டளைகளை வழங்கியது. மதவாதப் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபடுபவர்கள் குறிப்பாக, மக்கள் ஒன்று திரளும் இடங்களைக் கண்காணித்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இரு பிரிவினருக்கும் மோதல் வராமல் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், உள்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அசோக் நாராயணன், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் எச்சரிக்கை அறிக்கையை கவனத்தில் கொள்ளவில்லை. துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஈ. ராதாகிருஷ்ணன் 28.8.2002 அன்று அளித்த அறிக்கையில், சிறீகுமாரின் அறிக்கையை அவர் கேள்விக்குட்படுத்தியிருந்தார். இதற்கு 30.8.2002 அன்று சிறீகுமார் பதிலளித்தார். அதில், இந்திய தேர்தல் ஆணையம், சிறப்புப் புலனாய்வுக் குழு மதவாத சூழலை கணித்திருந்தது, ஆணையத்திற்கு கிடைத்த தகவல்களுடன் ஒத்துப் போவதாக, இவ்வாணையம் 16.8.2002 அன்று வெளியிட்டிருந்த ஆணையில் குறிப்பிட்டிருந்ததை சுட்டிக் காட்டியிருந்தார்.
“சிறப்புப் புலனாய்வுக் குழுவின் மதிப்பீடு, உங்கள் துறையைச் சேர்ந்த களப்பணி அலுவலர்களிடமிருந்து மட்டும் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டதா? அல்லது அரசு அதிகாரிகள் மற்றும் அரசு நிர்வாகம் தொடர்புடைய பிற அதிகாரிகளின் தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டிருந்ததா?” என்று அசோக் நாராயணன் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த சிறீகுமார், “நாங்கள் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அதிகாரிகள் மற்றும் அக்குழுவைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் அளித்த தகவல்கள் மற்றும் சட்ட அதிகாரம் கொண்ட காவல் துறை அதிகாரிகள் அளித்த தகவல்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டோம். காவல் துறை சாராத எந்த அதிகாரிகளிடமிருந்தும் நாங்கள் தகவல்களைப் பெறவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.
தேர்தல் ஆணையத்தை திசை திருப்பிய மோடி :
குஜராத்தின் உள்துறை, தேர்தல் ஆணையத்திடம் சட்ட ஒழுங்கு நிலை இயல்பாக இருக்கிறது என தவறான தகவல்களைக் கொடுத்து, சட்டமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்தத் திட்டமிட்டது. ஆனால், சிறப்புப் புலானய்வுக் குழுவின் தலைவர் சிறீகுமார், “அதிகாரப்பூர்வ” அறிக்கைக்கு மாறான அறிக்கையை ஆகஸ்ட் 2002இன் தொடக்கத்திலேயே அளித்து விட்டார். குஜராத் மாநில உள்துறையின் மதிப்பீடு தவறானது என்று தேர்தல் ஆணையம் 16.8.2002 அன்று வெளியிட்ட தன்னுடைய ஆணையில் குறிப்பிட்டிருந்தது. உள்துறை அமைச்சரான மோடிதான் இத்துறையின் தலைவர். தன்னுடைய தனிக்குறிப்பேட்டில், தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்காக சட்டம் ஒழுங்கு சூழ்நிலை தொடர்பாக அரசுக்கு சாதகமான அறிக்கையை அளிக்க வேண்டும் என்று உள்துறை அதிகாரிகளால் நான் நிர்பந்தப்படுத்தப்பட்டேன் என்று சிறீகுமார் குறிப்பிட்டுள்ளார். இதற்கு மாறாக, அவர் தன்னுடைய மனசாட்சிப்படி நடந்து கொண்டார்.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் பொய் சொன்ன மோடி :
மதக் கலவரங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஆரோக்கியமான மறுவாழ்வை ஏற்படுத்திக் கொடுப்போம் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் உறுதியளித்த மோடி அரசு, அதைச் செய்யத் தவறிவிட்டது. இதற்கு மாறாக, கலவரங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் மீது குற்றமிழைத்தவர்களிடம் சமரசமாக சென்றõல்தான் – அவர்களுக்கு மறுவாழ்வு கிட்டும் என்றும், அவர்கள் அப்போதுதான் பாதுகாப்பாக இருக்க முடியும் என்றும் கூறியது.
ஆதாரங்கள் மூர்க்கத்தனமாக மறைக்கப்பட்டன :
புது தில்லியில் உள்ள மய்ய அரசு, 2002 இனப்படுகொலை தொடர்பாக மாநில அரசுக்கு இணையாக, மத்திய புலனாய்வுக் குழு ஆணையம் ஒன்றை அமைக்க இருப்பதாக அறிவித்தது. அதனால் மோடி அரசு நானாவதி – ஷா ஆணையத்தின் வரையறையை விரிவுபடுத்தியது. அதன்படி, “மதக் கலவரத்தில் அப்போதைய முதல் அமைச்சர் (நரேந்திர மோடி) அல்லது அமைச்சகத்தில் இருந்த வேறு அமைச்சர்கள், காவல் அதிகாரிகள், தனிநபர்கள் அல்லது அமைப்புகள் இதில் பங்கேற்றிருக்கிறார்களா?” என்று விசாரிக்க வேண்டும் என்ற சட்ட விதியை நுழைத்தது.
ஆனால், இது மக்களை ஏமாற்ற சடங்குத்தனமாக செய்யப்பட்ட ஒன்றே என்பது வெளிப்படை. நானாவதி – ஷா ஆணையத்தின் சட்ட விதிகளை மாநில அரசோ, அதன் பிரதிநிதிகளோ மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படவில்லை. இதை விமர்சித்து கேள்வி எழுப்பிய வெகு சிலரில் சிறீகுமார் மற்றும் ராகுல் சர்மா ஆகியோர் அடங்குவர். இதற்கிடையில் இது குறித்து குற்றம் சுமத்தப்பட்ட மூத்த அதிகாரிகள் சிலர் மோடியுடன் இணைந்து, 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலை குறித்த உண்மைகளை மறைத்தனர்.
முக்கிய ஆதாரங்களை மறைத்தவர்கள் :
1. அசோக் நாராயணன், அப்போதைய கூடுதல் தலைமைச் செயலர் உள்துறை 2. பி.கே. மிஷ்ரா, அப்போதைய முதல்வருக்கான முதன்மைச் செயலாளர் 3. கே. சக்கரவர்த்தி, அப்போதைய குஜராத் டி.ஜி.பி. 4. கே. நித்யானந்தம், அப்போதைய உள்துறை செயலாளர் 5. பி.சி. பாண்டே, அப்போதைய அகமதாபாத் சி.பி. 6. கே.ஆர். கவுஷிக், ஏ.டி.ஜி.பி. (குற்றப் பிரிவு) கோத்ரா ரயில் எரிப்பு மீதான ஆய்வுகளை மேற்பார்வையிட்டவர்; இவர் பிறகு மே 2002 இல் அகமதாபாத் சி.பி.யாக நியமிக்கப்பட்டார் 7. ஏ.கே. பார்கவா, அப்போதைய ஏ.டி.ஜி.பி. (நிர்வாகம்) பிறகு குஜராத் டி.ஜி.பி. ஆக்கப்பட்டார். 8. மணிராம், அப்போதைய ஏ.டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) 2002 கலவரங்களின்போது ஒட்டுமொத்த மாநிலத்தின் சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருந்தவர் 9. ஜி.சி. ரெய்கர், அப்போதைய ஏ.டி.ஜி.பி. (உளவு) பிப்ரவரி 27 முதல் ஏப்ரல் 9, 2002 வரை குஜராத் கலவரங்கள் நடைபெற்ற முக்கிய காலகட்டம். முதலமைச்சர் நரேந்திர மோடி நடத்திய ரகசிய கூட்டங்களில் தலைமைச் செயலாளர் அசோக் நாராயணனுடன் இணைந்து பங்கேற்றவர்.
அதிகாரிகளை அச்சுறுத்திய மோடி :
ஆணையத்தின் முன்பு உண்மையை சொல்லாதீர்கள் என மோடி, தனது அதிகாரத்தையும் பதவியையும் தவறாகப் பயன்படுத்தி, அதிகாரிகளை அச்சுறுத்தினார். நானாவதி – ஷா ஆணையத்திடம் முக்கிய ஆதாரங்களை மறைத்து, சாட்சியம் அளிப்பதையும் தவிர்க்கச் சொன்னார். ஏ.டி.ஜி.பி. சிறீகுமார் இது குறித்து அளித்துள்ள சாட்சியத்தில், அவர் ஆணையத்தின் முன்பு ஆதாரங்களை மறைக்க வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டதை விரிவான புகார் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
“அச்சத்தால் ஆளப்படுகின்றனர்”
போலி மோதல் கொலைகள் (‘என்கவுன்ட்டர்' கொலைகள்) மற்றும் சிறுபான்மையினர் மீதான இனப்படுகொலைகள், குஜராத்தில் 2002 இல் தொடங்கியது. அரசு அதிகாரிகளுடன் நான் பங்கேற்ற கூட்டங்களில் நடைபெற்ற உரையாடல்களை, அப்படியே ஒரு பதிவேட்டில் பதிவு செய்துள்ளேன். மத அமைதியை சீர்குலைக்கும் முஸ்லிம் தீவிரவாதிகளை சுட்டுக் கொல்லலாம் என்று அரசு கட்டளையிட்டது. நான், “இது எப்படி சாத்தியமாகும்? என்கவுன்டர் என்பது முன்பே திட்டமிடப்பட்ட ஒரு கொலை. அதற்கு வேறு வார்த்தைகள் இல்லை” என்றேன்.
நமது சட்ட அமைப்பு முறையில் எந்த பலவீனமும் இல்லை. பிரச்சினை, தங்களுடைய சொந்த நலன்களுக்காக சட்டத்தை வளைப்பவர்களிடம்தான் இருக்கிறது. ஏ.டி.ஜி.பி. (உளவுப் பிரிவு) என்ற முறையில் ஒவ்வொரு போலி மோதல் குறித்தும், காவல் மரணம் குறித்தும் புலனாய்வு செய்ய வேண்டும் என்று அரசு கட்டளையிட்டு இருக்கிறது. எனவே நான் ஏ.டி.ஜி.பி.யாக இருந்தவரை, போலி மோதல்கள் நடைபெற்றபோது அவை குறித்து நேர்மையாக அறிக்கை அளித்தேன்.
செப்டம்பர் 2002 இல் மோடியின் பொதுக்கூட்ட உரை மீதான என் அறிக்கைதான் இறுதியானது. அது, முற்றிலும் மதவெறி கொண்ட ஓர் உரையாகும். நான் அதனை ஒரு வரி விடாமல் பதிவு செய்தேன். எனவே, செப்டம்பர் 17 அன்று நான் வேறு பணிக்கு மாற்றப்பட்டேன். அக்டோபர் 2002 இலிருந்து போலி மோதல்கள் தொடர்ந்தன. ஒவ்வொரு போலி மோதல் கொலையின் போதும் சொன்ன கதையையே மீண்டும் மீண்டும் சொன்னார்கள் : “போலிசாரால் கொல்லப்பட்டவர்கள் மோடியைக் கொல்ல வந்தவர்கள்.” இது உண்மை எனில், குஜராத் போலிஸ் கையேட்டில் உள்ள விதி 217 (III) ஏன் பின்பற்றப்படவில்லை? ஒவ்வொரு காவல் மரணத்தின் போதும் மாவட்ட நீதிபதி மேற்பார்வையில், உயர் மட்ட விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இவ்விதி வலியுறுத்துகிறது. அனைத்து வழக்குகளிலும் இவ்விதி மீறப்பட்டிருக்கிறது. ஆனால், இஷ்ரத் ஜெகான் வழக்கில் எஸ்.பி. தமங், தலைமை பெருநகர நீதிபதியின் வழிகாட்டுதலின்படி தன் கடமையை செய்துள்ளார். சிலர் குறிப்பிடுவது போல, அவர் எந்தத் தவறும் செய்யவில்லை.
போலி மோதல் நடைபெற்ற காலகட்டத்தைப் பாருங்கள். அது அக்டோபர் 2002இல் நான் மாற்றப்பட்டதிலிருந்து ஏப்ரல் 2007 வரை – வன்சாரா கைது செய்யப்படும் வரை நடைபெற்றிருக்கிறது. அதற்குப் பிறகு மோடி உயிருக்கு எந்த ஆபத்தும் வரவில்லை போலும்! அதனால் எந்த போலி மோதலும் நடைபெறவில்லை. ஆனால் அந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் 20 போலி மோதல்களில், முஸ்லிம்கள் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர். இதுபோன்ற பெரும்பாலான கொலைகளில் எந்த ஆதாரங்களும் கண்டெடுக்கப்படவில்லை.
நீங்கள் யாரையாவது சந்தேகத்தின் அடிப்படையில் கொன்றால், அதன் பிறகு அவர்களைப் பற்றி மேலதிகமான தகவல்களை சேகரிக்க வேண்டியது உங்கள் கடமை. அந்த நபர் பற்றி அதிகமான தகவல்களைத் திரட்ட வேண்டும் என்று சட்டம் உறுதிபடச் சொல்கிறது. ஆனால் இவை எதையுமே காவல் துறையினர் செய்வதில்லை. ஏனெனில், இவை முழுக்க முழுக்க அரசியல் நலன்களுக்காகவே செய்யப்படுகின்றன.
மோடி மீதான அச்சம் குஜராத்தில் மிக அதிகளவில் இருக்கிறது. நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தாமலேயே அவரால் குஜராத்தில் ஒரு நெருக்கடி நிலை போன்ற தோற்றத்தை உருவாக்க முடிந்திருக்கிறது. மக்கள் அச்சத்தால் ஆளப்படுகிறார்கள். உண்மை என்னவெனில், இந்திய அரசமைப்புச் சட்டத்தை மோடி மீறியிருக்கிறார். ‘லஷ்கர்–இ–தொய்பா' ஆதரவாளர்களாக இருந்தாலும் அவர்களை போலிஸ் சுட்டுத் தள்ளிவிட முடியாது. அதற்கான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பழி பாவங்களுக்கு அஞ்சாத காவல் துறையினருக்கு எல்லையற்ற அதிகாரத்தைக் கொடுப்பது, தற்கொலைக்கு சமமானது.”
– ஆர்.பி. சிறீகுமார், ஏ.டி.ஜி.பி. (உளவுப் பிரிவு) ஓய்வு, குஜராத் 2002 கலவரத்தின்போது பணியாற்றிய இவர், ‘பிரண்ட்லைன்' (9.10.2009) இதழுக்கு அளித்துள்ள பேட்டியில்