• சிலப்பின் கதை நம்மில் பெரும்பாலானோர் அறிந்ததே.
 • கதைமாந்தரும் நமக்குப் பழக்கமே.
 • கதை கூறும் உண்மையும் உணர்ந்ததே.
 • ஆனால் நாம் உணர்ந்தவிதம் ஒன்றாகவும், அதை மறுவாசிப்பு செய்யும் பொழுது ஏற்படும் உணர்வு வேறாகவும் அமையும்படி செய்தமையே இந்த சிலப்பதிகாரம் மறுவாசிப்புப் பனுவலின் வெற்றி எனலாம்.
 • இதைப் படிக்கும் போது அடைப்புகள் திறக்கும். சில நேரம் அடைப்புகள் வெடிக்கும். சில பொழுது புருவங்கள் உயரும்.
 • இந்நிகழ்வுகள் கண்டிப்பாக நிகழும் என்பது திண்ணம்.
 • இப்பனுவலின் கருத்துக்கள் சிலபோது உங்களுக்குப் பரிட்சயமானதாகக் கூட இருக்கலாம். என்னளவில் வியந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இதை விமர்சிக்க எவ்வகைப்பார்வை சிறந்தது என யோசிக்கும் போது கிட்டியதே வினா- விடை முறை. அதனால் என் விமர்சனத்தினை அம்முறையிலேயே அமைக்க விழைகிறேன்.

சிலம்பில் மறுவாசிப்பு ஏன்?

    natarajan silappadikaramஇக்கேள்விக்கான விடை மிக எளிது. ஏனென்றால் மறுவாசிப்பிற்கான வாயில்கள் நிரம்ப உடையது சிலப்பதிகாரம். தமிழ் நூல்களில் குறளும், இராமாயணமும், சிலம்பும் மறுவாசிப்பிற்கான வெளியை அதிகம் உடையது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக சங்க இலக்கியங்களின் நீட்சி அதிகம் உடைய நூல் சிலப்பதிகாரம் ஆகும். சிலப்பதிகாரம், சங்க இலக்கியம் ஆகிய இரண்டுமே நாடகப்பாங்கு உடையவை. ஆனாலும் சிலம்பு நீண்ட கதையாடலாகவும், வலப்பக்கம் இடப்பக்கம் அதிகம் இல்லாத திட்ட வரையறையோடு கூடியது ஆகும். சிலம்பு வெறும் கதையல்ல; கருத்தமைவும், கனவுகளும் நிறைந்தது. இதன் மொழியும் மொழியின் பனுவலும் காலம் கடந்து உணர வேண்டியவை. பண்பாட்டுத் தளத்திலும், தேசிய நெருக்கடியிலும் செவ்வியல் இலக்கியங்களுக்குப் புதிய விளக்கங்கள் தவிர்க்க முடியாது என்பதாலும் மறுவாசிப்பு அவசியம் ஆகிறது. இவை இப்பனுவலின் ஆசிரியர் கூற்றாக அமைந்தவை. இந்த அடிப்படையில் நாம் நூலின் உள்நுழையுங்கால் நம்முன் எழும் அடுத்த வினா,

இந்த மறுவாசிப்பு எவ்வாறு (எவ்வடிவத்தில்) அமைந்துள்ளது?

        இந்தக் கேள்விக்கான விடைதான் இந்நூலை ஊடாடிக் களம் காணப் பேருதவியாக இருந்தது. சிலப்பதிகாரத்தினை மூன்று வடிவங்களில் மறுவாசிப்பிற்கு நூலாசிரியர் உட்படுத்துகிறார்.

 • இக்காலத்திற்கு ஏற்புடைய மூகாந்திரம்.
 • கலை, இலக்கியத்திற்குப் புதிய கருத்தோட்ட வழிமுறை.
 • மார்க்சிய மற்றும் பின் நவீனத்துவ அடிப்படை.

 ஏன் இந்த முக்கோணப்பார்வையில் சுட்ட வேண்டியுள்ளது என்றால் சிலம்பின் கதை நடுக்கருவாக நின்று விடுகிறது. அதைச் சுற்றிச்சுற்றி இந்த மூன்று பார்வைகளும் வந்து வந்து மீண்டும் கதைக்குள் சென்று திரும்புவதால் இப்பார்வை அவசியமாகிறது. இம்முறையில் பத்துத் தலைப்புகளாகப் பிரித்து மறுவாசிப்பிற்கு உட்படுத்தியுள்ளார் நூலாசிரியர். அதில் நாம் பனுவலின் அரசியல், மக்களும் வர்க்கமும், குற்றமும் தண்டனையும், உடல் மொழி, சமய அரசியல், மீட்டுருவாக்கம், நாடு என்ற கனவு முதலிய தலைப்புகளில் விமர்சனத்தை முன்வைப்பது ஓரளவு நூலை முழுமையாக அறிய உதவும்.

காண்ட அமைப்பு முறையில் வஞ்சிக்காண்டம் தேவையா? அல்லது இளங்கோவின் சிலம்பில் வஞ்சிக் காண்டம் இருந்ததா? (ஒரு வேளை பின்னிணைப்பா?)    

    இந்தக் கேள்வி எழுவதற்கான காரணம் புகார், மதுரைக்காண்டங்களைப் போன்று வஞ்சிக்காண்டத்தில் கதையமைவு, சொல்லாடல் அமையப் பெறவில்லை. மதுரைக்காண்டத்தில் கண்ணகி நீதி கேட்கிறாள். கிடைக்கிறது. மறைகிறாள். இங்கு கதை நிறைவு பெறுகிறது. பின் ஏன் வஞ்சிக்காண்டம்? அதன் தேவை என்ன? உள்ள படியே வஞ்சிக்காண்டம் தான் மிகமிகத் தேவையாக அமைந்தது. தேவை மட்டும் அல்ல அதுதான் மூலம். தமிழ் மரபை மீட்டுருவாக்கம் செய்யவும், தன் கருத்தைக் கட்டமைக்கவும், வைதீக எதிர்வாதங்களாய் முன் வைக்கவும் வஞ்சிக்காண்டம் தேவையாக இருந்தது. வஞ்சிக்காண்டத்தில் ஆழக் கால்  ஊன்றிப் புகாரையும் மதுரையும் அவர் எளிமையாகக் கடக்கிறார்.

      வஞ்சிக்காண்டத்தில் சேரன் தன் மனைவியிடம் கேட்கிறான், “யாருக்குக் கோட்டம் எழுப்புவது? பாண்டிமா தேவிக்கா? கண்ணகிக்கா?” என்று, அதற்கு சேரனின் மனைவி பதில் கூறுகிறாள், “பாண்டிமாதேவியை வானுலகம் போற்றும். “கண்ணகியை நாம் வாழ்த்தலாம்” என்று. இங்கே தெரிகிறது இளங்கோவின் நுண்ணரசியல்.

    ஆம், கண்ணகி-

 • சோழ நாட்டில் இல்லற வாழ்வை இழந்தாள்.
 • பாண்டிய நாட்டில் கணவனை இழந்தாள்.
 • சேர நாடோ கோட்டம் கட்டிக் கொண்டாடியது.

    வஞ்சிக்காண்டத்தின் முதன்மை நோக்கம் இப்போது நமக்குப் புலப்படும். இந்த அரசியல் நிலைப்பாட்டை மேலும் விரித்துப் பார்போமேயானால்,

 • புகார் நகரத்தில் கணிக்கையரும், ஆடல் மகளிரும் பலராக இருந்தனர். காமக் களியாட்டமும், ஊதாரித்தனமும் இருந்தன. மாதவியையே விலை கொடுத்துத் தான் வாங்குகிறான் கோவலன்.
 • மதுரையோ நிர்வாகச் சீர்கேடும், அரசனின் நகையே களவு போகும் வண்ணம் திருட்டும் நிறைந்தது.
 • ஆனால், சேர நாடோ மகிழ்ந்திருந்தது. வடவரைப் போரில் வெற்றி கொள்ளும் வீரம் பெற்றிருந்தது. மக்கள் சோழனையும், பாண்டியனையும் பாராட்டும் பண்புடையவர்களாயிருந்தனர். வைதீகர்களுக்குத் தானம், தருமம் வாரி வழங்கினர்.

                    இதற்கு மேலும் அரசியல் சார்பினை விளக்கவும் வேண்டுமோ?

ஆளும் வர்க்க அரசியலை ஒட்டிய சமூக அரசியல் எவ்வாறு இருந்தது?     

    மூவேந்தர்களுக்கிடையே வர்க்க அரசியல் வேண்டுமானால் வேறுபாடுகள் இருந்தனவே ஒழிய அவர்களிடையே இருந்த சமூக அரசியலும் அது கட்டமைக்கப்பட்ட சமய அரசியலும் எவ்வித வேறுபாடும் இன்றியே காணப்பட்டது. ஒரு நாட்டை, அரசை, அரசனை அன்றும் இன்றும், என்றும் ஆட்டுவிப்பது சமயமே என்பதில் சிறிதும் விலக்கில்லாமல் மூவேந்தர்களும் இருந்துள்ளனர் என்கிறது சிலம்பு.

    மாடலன் மறையோன் ஒரு அந்தணன். அவன் கண்ணகிக்குக் கோட்டம் எடுப்பது தொடர்பாக அரசனிடமே தர்க்கம் செய்கிறான். ஆனால், அரசனோ அவனை எதிர்க்கவே இல்லை. அவனிடம் சமரசம் மட்டுமே செய்து கொள்கிறான். இவனே புகாரிலும் மதுரையிலும் இடம் பெறுகிறான்.

    கோவலன் பார்ப்பனர்களுக்குத் தானமாக வாரி வழங்குகிறான். ஆக அரசனும் வணிகனும் வைதீக அந்தணனை ஏற்றே நடக்கின்றனர். இந்த அளவில் வைதீக சமயம் சமூக அரசியலை ஆட்டுவித்தது.

இந்த அரசியல் நிலைப்பாட்டினால் நாட்டில் வர்ண வர்க்க முரண்பாடுகள் அதன் அமைப்பு நிலையில் எவ்வாறு இருந்தது?

 • முதலில் சிலம்பு சமணத்தின் நிலைப்பாடுடையது என்பதில் தெளிவு வேண்டும். அதேசமயம் வைதீக சமயத்தை அது எதிர்க்கவும் இல்லை. சிலம்பின் காலகட்டம் அப்படிப்பட்ட தன்மை கொண்டதாகவே இருந்தது.
 • வர்ணமும் வர்க்கமும் வைதீக மதத்தின் வருகைக்குப் பின் எந்தப் பிரிவும் இன்றி ஒட்டி உறவாடவே செய்தது.
 • சிலம்பின் காலகட்டம் மூன்று முதன்மை வர்ணத்தையே முன்மொழிந்தது. அவை, அந்தணர், அரசர், வணிகர். நான்காம் நிலையான சூத்திரர் பற்றிப் பேசவே இல்லை. பின் பஞ்சமர் நிலை சொல்லவே வேண்டாம்.
 • ஒரு சின்ன சமாசாரமாக இளங்கோ மதுரைக் காண்டத்தில் பலதரப்பட்ட மக்களைக் காட்சி மட்டுமே படுத்துகிறார்.
 • இதில் முக்கிய சமூகப் பிரிவுகளில் ஒருவர்களான வேளாளர்கள் “வீழ்குடி உழவர்” என்றே குறிப்பிடுகின்றனர். ஆனால் வணிகன் “பெருங்குடி வணிகன்” என்றழைக்கப்படுகின்றனர்.

இந்த வார்த்தைகளே வர்க்க வர்ண அரசியல் பேசுமே.

             இந்த இடத்தில்தான் நாம் நுட்பமாக வரலாற்றுப் பின்னணியைப் பார்க்க வேண்டியுள்ளது. சிலம்பின் காலம் களப்பிரர்களின் இறுதி, பல்லவர்களின் தொடக்கக் காலகட்டம் ஆகும். இச்சமயங்களில் பூர்வாங்க தமிழ்க்குடிகளின் உழவுத் தொழில் செய்தவர்கள் பிழைப்பு நோக்கி உழவில் இருந்து வணிகம் செய்யத் தொடங்குகின்றனர். வணிகத்தின் மூலம் மிகப்பெரும் பொருள் ஈட்டுகின்றனர். களப்பிரர்களால் வஞ்சிக்கப்பட்டதால் அவர்கள் தழுவிய வைதீக சமயத்திலிருந்து மாறி சமணம் தழுவுகின்றனர் வணிகர்கள். அக்காலகட்டத்தில் வணிகர்கள் அரசனுக்கு இணையான செல்வம் படைத்தவர்களாகக் கூட இருந்தனர். அதன் பொருட்டே அந்தணன், அரசன், வணிகன் என்ற அடுக்கு ஏற்பட்டது.

          வைதீக அந்தணனுக்கு சமண வணிகனின் வளர்ச்சி பிடிக்கவில்லை. எனவே, அரசனோடு இணைந்து வேளாளனை உயர்த்துகிறான். இந்நிலையின் காரணமாகத்தான் தொடக்ககாலப் பல்லவ மன்னர்களுக்கு அதைத் தொடர்ந்த பக்தி இலக்கிய காலமும் வைதீக  சமயமான வைணவ, சைவ சமயத்தை மிக வேகமாக வளர்த்தெடுக்க முற்பட்டது. பக்தி இலக்கியங்களில் உழவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. எனவே, இயல்பாகவே வேளாண் வைதீகத்தை உயர்த்திப் பிடிக்கிறான். அச்சமயத்தில் சமூக அழுக்கு அந்தணன், அரசன், வேளாளன் என மாற்றம் அடைகிறது. சமணமும், வணிகனும் கேள்விக்குள்ளாக்கப் படுகின்றனர். இக்காலகட்டமே சிலம்பின் காலகட்டம். எனவேதான்  மன்னனான பாண்டியனும், வணிக மரபின் கண்ணகியும் நேருக்கு நேர் மோதுகின்றனர். அரசனுக்கும் வணிகனுக்குமான போர்ச்சூழல் ஏற்படுகிறது. யார் வெற்றி பெற்றார்? யார் தோல்வியடைந்தார்? என்பதல்ல முக்கியம். போர் நடந்தது என்பதே முக்கியம். அதுதான் சிலம்பு. இதுதான் அதன் குறுக்குவெட்டுப் பார்வை. இதுதான் பின் நவீனத்துவம்.

         இங்கே உருவான சமூகத்தின் புதிய அடுக்குதான் மார்க்சியப் பார்வையில் அனுகப்படுகிறது. ஆம், அது தனிச்சொத்துரிமை, வேலைப்பங்கீடு, உற்பத்தித்திறன் என மார்க்சியப் பார்வையில் நூல் ஆசிரியரால் முன்மொழியப்படுகிறது. தமிழ்ச் சமூகத்தின் குடும்ப அமைப்புமுறையில் புதிய கருத்தோட்டத்தை இது உட்புகுத்துகிறது.

        இவ்வளவு பெரிய அரசியல் சமூகக் கொந்தளிப்பும் மாற்றமும் நிகழ்ந்து கொண்டிருந்தாலும் அந்தணர் வாழ்வு சிறந்தே இருந்தது. அவர்களின் நிலையினை சிலம்பில் வரும் பார்ப்பன கதைமாந்தர்கள் வழி நாம் எளிதில் உணர நூலாசிரியர் நமக்கு உதவுகிறார். அவர்கள் மூன்று நிலைகளில் இடம்பெறுகின்றனர்.

 • காதல் தூதுவர்கள்
 • அரசன், வணிகரிடம் பொன்னும் பொருளும் பெறுபவர்கள்
 • வைதீக சமய சொல்லாடலொடு சமய நெறி பரப்புகின்றனர்.

பார்ப்பனர்கள் நெறியாக சிலம்பில் கூறப்படுவது:

 • அவர்கள் உழைப்பும் உற்பத்தியும் செய்யாது ஓய்வு வர்க்கமாக இருந்தனர்.
 • மறை ஓதுதல், அதனைப் பரப்புதல், தகவலை அறிந்திருத்தல், பாதுகாப்புத் தேடல், பிறவர்க்கத்தினரிடமிருந்து செல்வமும் பொருளும் பெறுதல், சமயப் பெருங்கதையாடல், வைதீகச் சடங்குகள் செய்பவர்களாக இருந்தனர்.
 • இவர்கள் எப்பொழுதும் சமூகத்தில் தனி சலுகைகளைப் பெறுபவர்களாகவே இருந்து வந்தனர். சிலம்பில் பல இடங்களில் வரும்  குற்றமும் அதற்கான தண்டனைகளில் இருந்தும் இதனை உணர முடிகிறது.

    எவ்வகையான குற்றங்கள் நிகழ்ந்தன? அதற்கான தண்டனையாக எவை வழங்கப்பட்டன? என்பதே அதனைப் பறைசாற்றுகிறது.

பார்ப்பனர்களுக்குப் பொதுவாக தண்டணை வழங்கப்படவே இல்லை. மாறாகத் தவறு செய்தாலும் மன்னிக்கப்பட்டனர். இதற்கு உதாரணமாக பொற்கைப் பாண்டியனின் ஒற்றை நிகழ்வே போதும். அரசியல் கருத்துக்களை இந்த அளவில் நிறுத்தி விட்டு இனி சிலம்பில் பயன்படுத்தப்பட்ட உடல்மொழிகளைப் பற்றிக் காண்போம்.

    உடல் என்பது வெறும் சதைப் பிண்டம் அல்ல. மனிதனின் இருப்பையும், இயக்கத்தையும், எதிர்வினையையும் ஆளுமைத் திறனையும் உடல் மொழியே வெளிப்படுத்திக் காட்டுகிறது. உலகின் அனைத்து உயிரினங்களின் எண்ணம் பேசும் மொழி செயல்வடிவம் வேறுபட்டாலும் அவை உடலின்வழி வெளிப்படுத்தும் உணர்ச்சியின் மொழி ஒன்றானதாகவே அமைகிறது. நாகரிகம் பெற்றான் மனிதன், விலங்கினின்றும் வேறுபட்டான் மனிதன் என்ற பொழுதிலும் அவனது உடல் மொழியின் வெளிப்பாடு ஆதி மனிதனில் இருந்து வேறுபடவே இல்லை என்பதற்கு சிலம்பு ஒரு உதாரணம். இது ஆழ் மனதில் படிந்து கிடக்கும் ஆதிமனிதனின் படிம வெளிப்பாட்டை விளக்குகிறது.

 • முதலில் கோவலனுடன் ஏசுவை ஒப்பிட்டு அரசியல் பேசுகிறார் நூலாசிரியர். குற்றம் சாட்டப்பட்ட ஏசு கொல்லப்படுகிறார். பின் உயிர்தெழுகிறார். அதில் நுண்ணரசியல் அல்லது மீட்டுருவாக்கம் கட்டமைக்கப்படுகிறது என்றால் அது அப்படியே கோவலனுக்கும் பொருந்தும் அல்லவா? இங்கு ஒன்று போய் இன்னொன்றாக மாறுகின்றனர் இருவரும். அது அழிவை மறுத்தல். மறுத்து புத்துயிர் பெறல். தன்னை நிலை நிறுத்தல். அரசனா? வணிகனா? போட்டியின் அரசியல் சூட்சுமம் இது. இதற்குள் தமிழ்ச் சமூகப் பண்பாட்டு மீட்பும் அடங்கியுள்ளது. கண்ணகிக்குக் கோட்டம் எடுப்பது. இது வெறும் கோட்டம் அல்ல, “நடுகல்’ வழிபாட்டை மீட்டுருவாக்கம் செய்வது. வைதீகத்தை மறுத்து தமிழ் மரபை வேர் ஊன்றச் செய்வது. இளங்கோவின் சாமர்த்திய அரசியல் இது என்கிறார் நூலாசிரியர்.

    அடுத்து கண்ணகிவழி உடல்மொழியில் பேசுகிறார் இளங்கோவடிகள். முலையறுத்தல். இந்தச் செயல் அதிகார வர்க்கத்தை எதிர்த்துக் காட்டும் உடல் மொழியாகும். கையறுநிலையின் வெளிப்பாடு. வெறுப்பின் உச்சம். பாலியல் நிற்கதியின் அமைவு. கண்ணகி அப்படித்தான் கொங்கைகளைப் பயன்படுத்தினாள். இது போன்ற நிகழ்வுகளைத் தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் காணலாம்.

  ஆண்டாள் தன் காதல் தீயினைக் கண்ணன் உணரத் தன் முலையை அறுத்து அவன்மேல் எறிவேன் என்றாளே...

 • கண்ணகி தன் காதல் கணவனை இழந்ததன் ஒப்பல்லவா இது.
 • புனிதவதி தன் அழகை சிதைத்துக் கொண்டதும் பாலியல் நிராகரிப்புதான்.
 • சங்க இலக்கிய வீரத்தாய் தன்மகன் புறமுதுகிட்டால் முலையை அறுப்பேன் என்றது வீரத்தின் வடிகால் அல்லவா? (பக்-117 வாசிக்கவும்)
 • சிலம்பு உடைத்தலே பாலியல் கையறு நிலையின் வீரக்தி தானே! (பக் -121 வாசிக்கவும்)
 • கொங்கைகள் என்பது வெறும் பாலியல் அடையாளம் மட்டுமன்று. அது தாய்மையின் அடையாளம். அதை அறுப்பதென்பது இயற்கை அடையாளத்தையும்  தாய்மையின்  அடையாளத்தையும்  சிதைப்பதாகும்.

இதையெல்லாம் உடல்மொழியில் மாந்தர்கள் வெளிப்படுத்தினாலும், சிலம்பில் நீக்கமற கலந்திருக்கும் சமயமும் அது மன்னனிடமும், சமூகத்திலும் கொண்ட தாக்கமே ஒரு நாட்டை முழுமையாக வடிவமைக்கிறது. களப்பிரர்க்கும் பல்லவர்களுக்கும் இடைப்பட்ட சமண வைதீகச் சமயங்களின் ஊடாட்டம் சமூக வர்க்கங்களில் எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை சிலம்பின் வழி நாம் இந்நூலில் நன்கு உணர முடிகிறது.

இந்த ஊடாட்டத்திற்குள் இளங்கோவடிகளின் இறுதி நிலைப்பாடு என்னவாக இருந்தது?

 • சிலம்பில் சமயப் பூசலைக் காட்ட தவறவே இல்லை இளங்கோவடிகள். மாடலமறையோனுக்கு அவன் கூறும் வைதீகக் கோட்பாட்டினை எதிர்த்து சமணக் கோட்பாட்டை கவுந்தியடிகள் மூலம் கூறிக்கொண்டே இருக்கிறார் (பக்-135 வாசிக்கவும்)
 • பௌத்தமும் சமணமும் சேர நாட்டில் பரவியிருக்கவில்லை.  அதனாலேயே அங்கே பக்தி இயக்கம் தேவைப்படவில்லை. எனவே, வைதீகத்திற்கு மாற்றாக இளங்கோவடிகள் ஒன்றைத் தேடுகிறார். அதற்கு எதிர்நிலை சமணம் என்றாலும் தமிழ்ச் சமூகத்தின் ஆதிநிலையை மீட்க விரும்புகிறார்.
 • எனவேதான் அவர் வைதீகத்திற்கு எதிரான பெண்ணை முன்னிலைப்படுத்தி தெய்வமாக்குகிறார். வைதீகம், பெண் பாவயோனியில் பிறந்தவள் என்று ஒதுக்குகிறது.
 • அதிலும் அவள் விதவை. இது வைதீகத்திற்கு எதிரான பெரும்புரட்சி.
 • சமணம் உருவ வழிபாட்டை ஏற்கவில்லை. எனினும், நடுகல் வழிபாடான தமிழர் பண்பாட்டை மீட்டுருவாக்கம் செய்கிறார். இது தாய் தெய்வ வழிபாடு ஆகும்.
 • கன்ணகி வழிபாடு சேர நாட்டிற்குப் புகழ் தரும் என்ற படிமத்தினை இளங்கோ உருவாக்குகிறார். அதனையும் எளிய மக்கள் வாயிலாகவே செய்கிறார் (குறவர்கள்).
 • மேலும், புறநானூற்றின் மரபை சிறு புரட்சியோடு முன்வைக்கிறார் என்கிறார் நூலாசிரியர். “நடுகல்” வழிபாடு என்பது ஆண்களுக்கானது. ஆனால் இங்கே பெண்ணுக்கு எடுக்கப்படுகிறது.  தமிழ்ப்பண்பாட்டின் மீட்டுருவாக்கமே சிலம்பு என்பது இதன் மூலம் நிறுவப்படுகிறது.

அப்படியென்றால் மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட நாட்டின் கட்டமைப்பு எப்படி அமைய வேண்டும்?

       களப்பிரர்க்குப்பின் முந்தைய நம் தமிழ்நாடு உருவாக்கப்பட வேண்டியது அவசியம் என்பதே இளங்கோவின் நிலைப்பாடு. சமயம் ஒரு நாட்டை பிரிப்பதற்கும், அமைப்பதற்கும் ஆற்றல் வடிவம் பெற்றது ஆகும். அவ்வகையில் ஆரியரின் வருகை தமிழரிடம் இருவகை எண்ணத்தினை ஏற்படுத்தியிருந்தது.

 • நம்மைத் துரத்தி நம் இடத்தை அபகரித்த ஆரியர்மேல் தீராப் பகையை வெறுப்பை உண்டு பண்ணியது.
 • மாறாக வெற்றி பெற்ற ஆரியர் மீதான ஈடுபாடு, பரிந்து அடிமை எண்ணம் உண்டானது (வெள்ளையர்கள்)

முன்னதற்கு வடவரை எதிர்த்து கல் எடுத்ததையும், பின்னதற்கு வைதீகத்தை முழுமையாக எதிர்க்காமல், வைதீகத்திற்கு மாறாகக் கோட்டம் எழுப்பியபோது, வைதீக முறைப்படி வேள்வி நடத்த சம்மதித்ததையும் கூறலாம்.

எது எவ்வாறாகிலும் காலப்போக்கில் நீரோட்டத்துடனேயே இணைப்போக்காக இலக்கியம் படைத்து, இழந்த தமிழ்நாட்டை, சங்காலத் தமிழ்நாட்டை மீட்டுருவாக்கம் செய்வதே இளங்கோவடிகளின் நோக்கமாக இருந்தது என்பதை நிறுவுவதில் நூலாசிரியர் தி.சு.நடராசன் உறுதியாக உள்ளார்.

- இ.கலைக்கோவன்

Pin It