மதச்சார்பின்மை என்பதற்கு வெப்ஸ்டர் அகராதி தரும் வரையறை – “பொதுக் கல்வியும் குடிமைக் கொள்கை சம்பந்தப்பட்ட இதர விஷயங்களும் மதக்கூறு ஏதுமின்றி நடத்தப்பட வேண்டும் என்கிற கண்ணோட்டம். ” மதம் என்பது தனிமனித நம்பிக்கை எனும் தெளிவான முடிவுக்கு வந்து, குடிமக்களின் பொது விவகாரங்களிலிருந்து அதை விலக்கி வைப்பது என்பதே மதச்சார்பின்மை ஆகும். ஒரு நாட்டிலுள்ள சகல மதங்களுக்கும் அந்த நாட்டின் அரசமைப்பு உள்ளிட்ட பொது விவகாரங்களில் சம அந்தஸ்து தருவதல்ல மதச்சார்பின்மை. அது இந்தக் கோட்பாட்டிற்கு நேர்விரோதமான நடைமுறையாகிப் போகும். ஒரு மதத்திற்குப் பதிலாக பல மதங்களின் தலையீடு பொதுவாழ்வில் இருக்கும் என்பது மதச்சார்பின்மை ஆகாது, அது பல மதச் சார்பு ஆகிப் போகும். “சம அந்தஸ்து” என்பதற்கு வரையறை தரமுடியாமல் பெரும்பான்மை சிறுபான்மை மதங்களுக்கிடையே மோதலை உருவாக்குவதில் கொண்டு போய்விடும்.

       அரசமைப்பு – அரசியல் செயல்பாடு உள்ளிட்ட பொதுவிவகாரங்களில் இருந்து மதங்களை விலக்கி வைப்பது என்பது இயல்பானதாகப் படுகிற போதிலும் இந்தியாவில் அது அண்மைக்காலத்தில் ஏற்கப்பட்ட கருத்தோட்டமே. சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் 1950 ஜனவரியில் ஏற்கப்பட்டது. அதன் முகவுரையில் “சுயாதிபத்திய ஜனநாயகக் குடியரசு” என்று மட்டுமே இருந்தது. “மதச்சார்பற்ற” எனும் சொல் 1975 – 77 அவசரநிலை ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட திருத்தங்களின்போதுதான் சேர்க்கப்பட்டது.

       இந்தத் துணைக்கண்டம் “இந்தியா” என்று ஒரே நாடாக ஆனது பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியில்தான். அதற்கு முன்பு “அங்க – வங்க – கலிங்க ஐம்பத்தாறு தேசங்கள்” எனும் சொலவடைக்கு ஏற்ப பல நாடுகளாக இருந்தது. அதிலே ஒன்றிரண்டு பெரும் சாம்ராஜியங்களாக இருந்தன என்றாலும் அவை முழு இந்தியாவையும் கொண்டிருக்கவில்லை, நீடித்து நிலை பெற்றிருக்கவும் இல்லை. இந்த அரசுகள் தெளிவான மதச்சார்பு அரசுகளாகவும் இருந்தன.

       உதாரணமாகத் தமிழகம். இங்கே பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் முதலில் சமணனாக இருந்தான், சைவர் திருநாவுக்கரசரை தனது மதத்திற்கு மாறுமாறு கட்டாயப் படுத்தினான். பின்னர் சைவத்திற்குத் தாவியவன் “பாடலிபுரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும்கூட இடித்துக் கொணர்ந்து குணபரவீச்சரம் எடுத்தான்” என்கிறது பெரிய புராணம்.

       திருவாரூரில் தண்டியடிகள் காலத்தில் அங்கிருந்த சமணப் பள்ளிகளைத் தகர்த்து சிவன் கோவில் குளத்தை அகலப்படுத்தினான் சோழ மன்னன். இதற்கெல்லாம் உச்சமென மதம் மாற மறுத்த எண்ணாயிரம் சமணர்களைக் கழுவில் ஏற்றினான் மதுரைப்பாண்டியன். இவையும் பெரியபுராணம் தரும் செய்திகளே. பல்லவ-சோழ-பாண்டிய அரசுகள் மதச்சார்பு அரசுகளாகவே இருந்தன.

       டில்லியில் உருவான சுல்தான்கள்- முகலாயர்கள் அரசுகளும் மதச்சார்பு அரசுகளாகவே இருந்தன. முஸ்லீம் அல்லாதவர்களுக்கு “ஜிஸ்யா” எனும் தலைவரி விதிக்கப்பட்டது. அக்பர்தான் “இபாதத்கானா” எனும் அரங்கு ஏற்படுத்தி சர்வசமய விவாதம் நடத்தினான், அதுவும், “தீன் இலா`ஹி” எனும் புதிய அரசு மதம் உருவாவதில் போய் முடிந்தது.

       ஆங்கிலேயர் ஆட்சியில்தான் நாடாளுமன்ற அரசியல் எனும் நவீன முறை இந்தியாவுக்கு அறிமுகமானது. ஆட்சியாளர்களை மக்கள் தேர்ந்தெடுப்பது என்றாலே பல மதத்தவரும், மத நம்பிக்கை இல்லாதவரும் அரசியல்-அரசுநிர்வாகம் எனும் பொது விவகாரத்தில் ஒன்றுபட்டு இயங்குவது என்பது பொருளாகும். அங்கே மதச்சார்பின்மைதான் அரசின் - அரசியலின் அடிப்படைக் குணமாக இருக்க முடியும். இல்லையெனில் குழப்பமே மிஞ்சும். எனினும் ஆங்கிலேயர் ஆட்சி அப்படியொரு திட்டவட்டமான மதச்சார்பற்ற அரசை இந்தியாவுக்கு வழங்கவில்லை. அது இரண்டுங்கெட்டானாக இருந்தது. சட்டப்படியான அப்படியொரு மதச்சார்பற்ற அரசு இங்கே வந்தது என்பது அவசரநிலை ஆட்சி காலத்தில்தான். அந்த சர்வாதிகார ஆட்சி காலத்தில்தான் இப்படியொரு ஜனநாயகச் சட்ட மாறுதல் எனும் வினோதம் நடந்தது.

       அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தில் “மதச்சார்பற்ற அரசு” எனும் சொல்லாட்சி இடம் பெற்றுவிட்டது. ஆனால் நடைமுறையில் என்ன? இந்திய அரசு மதச்சார்பற்றதாகத்தான் உள்ளதா? இந்திய அரசியல் வாழ்வு அப்படித்தான் உள்ளதா?

       சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திரபிரசாத்தும் உள்துறை அமைச்சர் வல்லபாய் படேலும் சோமநாதர் ஆலயத்தை அரசு செலவில் அமைக்கும் வேலையில் தீவிரமாக இறங்கினார்கள். நேருகூட பெரும் எதிர்ப்பு காட்டவில்லை, காந்திஜிதான் எதிர்த்தார். ஆலயம் எழுப்ப வேண்டும் என்றால் இந்துக்கள் தங்கள் சொந்தப் பணத்தில் எழுப்ப வேண்டுமே தவிர அரசுப் பணத்தில் அல்ல என்றார். ஒரு தனிமனிதர் தன்னளவில் மத நம்பிக்கையாளராக இருப்பதற்கும், ஆட்சியாளர் என்ற முறையில் மதச்சார் பற்றவராக இருப்பதற்கும் இடையில் இருக்க வேண்டிய கண்டிப்பான வித்தியாசத்தைச் சுட்டிக்காட்டினார். ஒர் ஆழ்ந்த மதநம்பிக்கையாளரான காந்திஜியிடமிருந்து வந்த எதிர்ப்பு மிகுந்த அர்த்தபாவமுடையது. இதற்கெல்லாம் சேர்த்துத்தான் அவரது உயிரைப் பலி கொண்டது இந்து மதவெறி.

       1949 டிசம்பர் 22 – 23 நள்ளிரவில் அயோத்தியின் பாபர் மசூதியில் ராமர் சிலை கள்ளத்தனமாக வைக்கப்பட்டது. இதற்கு உதவி செய்தவர் அங்கே மாவட்ட கலெக்டராக இருந்த கே. கே. நாயர். இந்த அடாவடித்தனத்தை எதிர்க்க முன்வரவில்லை காங்கிரஸ் ஆட்சி. முஸ்லிம் மதத்தவர் வழிபடும் இடத்தில் - விக்கிரக ஆராதனையை ஏற்காதவர்கள் இடத்தில் - ராம விக்கிரகத்தைக் கொண்டு போய் வைத்தார்கள். இது சட்டம் ஒழுங்கு மீறல். ஒருவருக்குச் சொந்தமான இடத்தில் இன்னொருவர் அத்துமீறிப் புகுவது. அந்த விக்கிரகம் அங்கிருந்து அப்போதே அகற்றபட்டிருந்தால் எவ்வளவோ பிரச்சனைகள், உயிர்வாதைகள், படுகொலைகள் தவிர்க்கப்பட்டிருக்கும். அரசோ இந்துமதச் சார்புத்தன்மையோடு நடந்து கொண்டது. இப்போது பிரதான எதிர்க்கட்சியாக வளர்ந்து நிற்கிற பி.ஜே.பியோ அன்று ஜன சங்கமாக இருந்தபோது அந்த கே. கே. நாயரை எம். எல். ஏவாக, எம். பியாக ஆக்கி அழகு பார்த்தது.

       இப்போது வந்திருக்கிற அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு 450 ஆண்டுகளாக முஸ்லிம்களுக்கு இருந்த அனுபோக பாத்தியதை உரிமையைக் கூடக் கணக்கில் கொள்ளாமல் மசூதிக்குள் ராமர் சிலை வைக்கப்பட்ட இடம் இந்துக்களுக்கே சொந்தம் என்று அநியாயத் தீர்ப்பு தந்துள்ளது. அதை அரசியல் கட்சிகள் வரவேற்ற விதம் அதனினும் அநியாயமானது. அரசமைப்பில், பிரதான எதிர்க்கட்சியில், நீதிமன்ற அமைப்பில், பல அரசியல் கட்சிகளில் மதச்சார்புச் சிந்தனை, குறிப்பாக இந்துத்துவா சிந்தனை எப்படி ஊடுருவிக் கிடக்கிறது என்பதற்கு இது கச்சிதமான உதாரணம். கம்யூனிஸ்டுக் கட்சிகள் மற்றும் முலாயம் கட்சி இந்தத் தீர்ப்பை எதிர்த்து நிற்கின்றன என்பது சற்றே நிம்மதி தரும் விஷயம்.

       இந்திய அரசு மதச்சார்பற்ற அரசு என்று சட்டப்புத்தகத்தில் இருந்தாலும் அது பெரும்பான்மை மதமாகிய இந்து மதச்சார்பு அரசாகவே உள்ளது என்பதற்கு அதன் வேறு பல செயல்பாடுகளும் எடுத்துக்காட்டுகளாக உள்ளன. அரசு நிகழ்ச்சிகள் பலவும், குறிப்பாகத் திறப்பு விழாக்கள் பலவும் இந்து சாஸ்திர, அதாவது பிராமணிய முறைப்படியே நடைபெறுகின்றன. பல மதத்த- வரும் அல்லது மத நம்பிக்கையற்றவரும் கொடுத்த வரிப்பணத்தில் அரசுத் திட்டங்கள் உருவாக்கப்பட்;டவை என்கிற உணர்வே இல்லை. அரசு அலுவலகங்களில் இந்து சாமி படங்கள் இருக்கின்றன. கல்லூரி – பல்கலைக்கழகங்களில் சரஸ்வதி பூiஜை நடத்தப்படுகிறது. ஒரு நூலகத்திற்குப் பொறுப்பாளராக ஒரு முஸ்லிம் இருந்தால் அவர் பாடு திண்டாட்டம்தான். அவர் ஏற்காத விக்கிரக ஆராதனை அவர் கண் முன்னாலேயே நடைபெறும். இதனினும் கொடுமை இது தவறு என்கிற உணர்வே அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களிடத்தில் இல்லாதது. அதிகாரிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.

       இதுவெல்லாம் சிறுபான்மை மதத்தவர் உள்ளத்தில் தாங்கள் இரண்டாந்தரக் குடிமக்கள் எனும் எண்ணத்தை உருவாக்குகிறது, அல்லது அரசு அலுவலகங்களில் இந்து மத விழாக்கள் கொண்டாடப்படுவது போலத் தங்கள் விழாக்களும் கொண்டாடப்பட வேண்டும் எனும் கோரிக்கையைக் கிளப்புகிறது. ஆனால் சிறுபான்மையினர் என்கிற காரணத்தாலேயே அது சாத்தியமில்லாமல் போகிறது. “சகல மதங்களிடமும் அரசு சமத்துவம்” என்பது காரிய சாத்தியமில்லாதது என்பதை இது தெளிவாக உணர்த்துகிறது. ஒரே வழி அரசு நிறுவனங்களிலிருந்து சகல மதங்களையும் ஒதுக்கி வைப்பதுதான். அரசு ஊழியர்கள் அவரவர் வீட்டில் தத்தம் மத அனுஃ;டானங்களைச் செய்ய வேண்டுமே தவிர அவர்கள் பணிபுரியும் இடங்களில் அல்ல.

       பொதுவாழ்வை மதத்திலிருந்து பிரித்து வைக்காமல் இரண்டையும் போட்டுக் கலக்கிற வேலை ஒரு புறம் நடக்கிறது என்றால், மறுபுறம் மதத்தைத் தனிவாழ்வாக நடத்துவதில் இடையூறுகள் செய்யப்படுகின்றன. ஒரு மதச்சார்பற்ற அரசுக்கு இரண்டு கடமைகள் உண்டு. ஒன்று, அது தன்னளவில் எந்தவொரு மதத்தையும் சார்ந்திருக்கக் கூடாது, எந்தவொரு மதக் கூறையும் தனது செயல்பாட்டில் கலக்கக் கூடாது. இரண்டு, தனது குடிமக்களுக்கு அவரவர் விரும்பும் மதத்தைப் பின்பற்ற, பரப்ப உரிமை தரவேண்டும். அந்த உரிமையைப் பாதுகாத்து நிற்க வேண்டும். அதுபோல எந்தவொரு மதத்தைப் பின்பற்றாமலிருக்கிற உரிமையையும் காத்து நிற்க வேண்டும்.

       நமது அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 25 (1) மிகத் தெளிவாகக் கூறுகிறது: “பொது ஒழுங்கு, ஒழுக்கம், சுகாதாரம் மற்றும் இந்தப் பிரிவின் இதர சரத்துக்களுக்கு உட்பட்டு அனைவருக்கும் சமமான மனசாட்சி சுதந்திரமும், சுதந்திரமாக மதத்தைப் போதிக்கிற, பின்பற்றுகிற, பரப்புகிற உரிமையும் உண்டு. ” இது அடிப்படை உரிமைகளில் ஒன்றாகத் தரப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் இந்த உரிமை சிறுபான்மை மதத்தவருக்கு இருக்கிறதா என்பது கேள்விக்குறியாகி வருகிறது.

       யாருடைய நினைவாக இந்தச் சொற்பொழிவு ஆற்றப்படுகிறதோ அந்த கிரஹாம் ஸ்டேன்ஸ் தனது இரு சின்னஞ்சிறு புதல்வர்களுடன் உயிரோடு கொளுத்தப்பட்டார். இந்தப் படுபாதகத்தைச் செய்த இந்துமத வெறியன் தாராசிங்கிற்கு மரண தண்டனை தர உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இந்தப் படுகொலை “அபூர்வத்திலும் அபூர்வமல்ல” என்று சப்பைக்கட்டு கட்டியது மட்டுமல்லாது, “கிறிஸ்தவ மதப் பிரச்சாரம் செய்ததற்கு புத்தி புகட்டவே இந்தக் கொலை செய்யப்பட்டது” என்று சொல்லி அதை நியாயப்படுத்துவது போலத் தீர்ப்புத் தந்தது. மனித உரிமையாளர்கள் மற்றும் முற்போக்கு அறிவு ஜீவிகளின் கடும் எதிர்ப்புக்குப் பிறகே உச்சநீதிமன்றம் அத்தகைய சில வாசகங்களை வாபஸ் பெற்றது. இதன் அர்த்தம் தெளிவானது. இந்து மதத்தை மட்டுமல்ல, இந்துத்துவா எனும் இந்து மதவெறிக் கோட்பாட்டைப் பிரச்சாரம் செய்யவும் இங்கே உரிமை உண்டு. ஆனால், கிறிஸ்துவப் பிரச்சாரம் செய்வது அவ்வளவு எளிதல்ல. அப்படித்தான் இந்த நாட்டின் அரசாங்கம் மட்டுமல்ல நீதிமன்றம் உள்ளிட்ட அரசமைப்பு முழுமையும் செயல்படுகிறது.

       அரசியலமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள மதச்சார்பின்மையி -லிருந்து இந்திய அரசு விலகிச் செல்கிற அபாயம் இன்று அதிகரித்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியாக நாடாளுமன்றத்திலும் வெளியிலும் எழுந்துள்ள பி.ஜே.பி. தனது லட்சியமாக “இந்து ராஷ்டிரம்” என்பதைக் கொண்டுள்ளது. அது இந்து சமயச் சார்பு அரசாகும், சமயச்சார்பற்ற அரசு என்பதற்கு நேர் எதிரானதாகும். அதன்படி முஸ்லிம்கள்,  கிறிஸ்தவர்கள் போன்ற மதச்சிறுபான்மையினர் இந்த நாட்டில் அடங்கி ஒடுங்கி இரண்டாந்தரக் குடிமக்களாக நடக்க வேண்டும். இது இந்தியாவின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கு மிகப்பெரும் கேட்டை விளைவிப்பது, இங்கே ரத்தக் களரியை உருவாக்குவது என்பது பட்டப்பகல் வெளிச்சம் போன்ற உண்மை.

       அப்படியும் பி.ஜே.பியும் அதன் சித்தாந்தக் காவலனாகிய ஆர். எஸ். எஸ். சும் இதை ஏன் வற்புறுத்துகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் பிற மத வெறுப்பு மட்டுமல்ல, இந்து மதத்தின் அஸ்திவாரமாக அவர்கள் கருதுகிற பிராமணிய சமூகக் கட்டமைப்பை இந்த நவீன காலத்திலும் காக்கத் துடிக்கிற துடிப்பு. சாதியம் மற்றும் ஆணாதிக்கம் பிராமணியத்தின் இரண்டு முக்கிய கூறுகள். இவற்றுக்கு எதிராக சமூகநீதி சக்திகள் இன்று எழுகின்றன. பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு, தாழ்த்தப்பட்டோருக்கு இட ஓதுக்கீட்டோடு இதர உரிமைகள், தீண்டாமை ஒழிப்பு, மதச் சிறுபான்மையாருக்கு இடஒதுக்கீடு, மாதர்களுக்கு சட்டமன்றம் - நாடாளுமன்றத்தில் 33மூ இடஒதுக்கீடு, ஆண்களுக்குச் சமமாகப் பெண்களுக்கு சகல துறைகளிலும் சமவாய்ப்பு என்று பல வடிவங்களில் இது எழுகிறது. இதிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப இந்து மத வெறியைக் கிளப்பி விடுகின்றன இந்துத்துவா அமைப்புகள். பிற்படுத்தப்பட்டோருக்கான மண்டல் குழு பரிந்துரைகளை எதிர்த்தே எல். கே. அத்வானி அயோத்தியை நோக்கி ரதயாத்திரை துவக்கினார் என்பதை மறந்துவிடக் கூடாது. பாபர் மசூதி இடிபடக் காரணமானவர் உள்துறை அமைச்சராக பதவி வகிக்க முடிந்த அரசியல் சூழல் இங்கே திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்பதை மறந்துவிடக் கூடாது. ஊடகங்கள் உள்ளிட்ட அதற்கான கருத்தியல் சாதனங்களும், அவற்றால் உருவாக்கப்படும் குடிமைச் சமூகமும் இங்கே உள்ளது என்பதையும் மறந்துவிடக்கூடாது.

       இதன் பொருள் நாம் நம்பிக்கையின்மையில் விழவேண்டும் என்பதல்ல. மதச்சார்பற்ற சக்திகளும் இன்று வீறுகொண்டு நிற்கின்றன. பி.ஜே.பியின் நிலைபாடு ஆளும் காங்கிரசை மதச்சார்பு பக்கம் தள்ளுகிறது என்றால், கம்யூனிஸ்டுகள் - இடதுசாரிகள் மற்றும் மனித உரிமையாளர்களின் நிலைபாடு அதை மதச்சார்பின்மையைப் பேச வைக்கிறது. உதாரணம் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் “காவி பயங்கரவாதம்” பற்றிப் பேசியது. அதில் அவர் உறுதியாக இல்லாமல் போனாலும் பயங்கரவாதம் எந்தவொரு மதத்திலும் - அது சிறுபான்மையோ, பெரும்பான்மையோ - எழலாம் என்கிற உண்மையை அகில இந்திய அளவில் விவாதிக்க வைத்தது. மலேகான், சம்ஜாதா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி, அஜ்மீர் ஆகியவற்றில் நடந்த கொடூர வெடிகுண்டுச் சம்பவங்களின் பின்னால் சங் பரிவாரம் இருந்தது என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகி வருகிறது.

       மதச்சார்பின்மை எனும் அரசியல் மாண்பு சகல நாடுகளுக்கும் தேவையானது என்றால், பல மதத்தவரைக் கொண்ட இந்தியாவிற்கு அது அவசியத்திலும் அவசியமானது. மதச்சார்பும், மதவெறியும் கொண்ட நிலப்பிரபுத்துவ அரசியலினால் நம் நாடு எத்தனையோ துன்பங்களை அனுபவித்து விட்டது. இன்றைய உலகமய அரசியலில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனின் ஆதிக்கத்தை எதிர்த்து நிற்க வேண்டும் என்றால் சகல மக்களின் முன்னேற்றத்தை உள்ளடக்கிய ஒரு மெய்யான பொருளாதார வளர்ச்சியை நாம் கண்டாக வேண்டும். அதற்கு மதக் கலவரங்கள் இல்லாத, ஒற்றுமை மிகுந்த சமூகம் என்பது ஒரு முன்தேவையாகும். அதைச் சாதிக்க அரசிலும் பொதுவாழ்விலும் மதச்சார்பின்மையைச் சொல்லளவிலும் செயலளவிலும் உருவாக்குவதே ஒரே வழி. எத்தனை இடையூறுகள் வந்தாலும் இந்த இலக்கை நோக்கிய இந்தியப் பயணம் நிற்காது. பிரச்சனைக்குத் தீர்வு இதுதான் எனும்போது அதை அடையாமல் இந்தியச் சமூகம் ஓயாது. அந்தப் பயணத்தை வேகப்படுத்த மதச்சார்பற்ற சக்திகள் எல்லாம் ஒன்றுபடட்டும், சகலவிதமான மதவெறிச் சக்திகளை எதிர்த்துத் தளராமல் போராடட்டும்.

(மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில்; சோக்கோ டிரஸ்ட் நிறுவிய கிரஹாம் ஸ்டேன்ஸ் அறக்கட்டளைச் சொற்பொழிவு)