punaiyum book 350சிறுகதை ஒரே மூச்சில், ஒரு அமர்வில் படிக்கக் கூடியது; அது ஒரே ஒரு விளைவை அல்லது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பார் எட்கர் ஆலன் போ. அந்தத் தாக்கம் கதை வாசகரிடம் ஒரு மனவெழுச்சியைத் தூண்டக் கூடியதாக உணர்ச்சியைத் தொடுவதாக இருக்கலாம். கதையின் ஒரு பாத்திரம் முன்னிறுத்தப் படுவதால் நிகழலாம். கதைப் பின்னல், கதைக் கரு, கதைத் தளம் கூட - போவின் ஹவுஸ் ஆப் அஷரில் போல - ஒரு விளைவை ஏற்படுத்தலாம். திடீர் திருப்பத்தில் முடிவடையும் ஓ.ஹென்றியின் சிறுகதையில் போல கதை சொல்லும் யுத்தியும் ஒரு காரணமாக அமையலாம்.

சா.தேவதாஸ் அவர்களின் நூல் இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி பல நாட்டுச் சிறுகதைகளின் தொகுப்பு. இரண்டாம் பகுதியான பதிவுகள் பல்வகைக் கட்டுரைகள் அடங்கியது. முதற் பகுதியில் பதினான்கு சிறுகதைகள், அவற்றில் கநாசுவுடைய படைப்பு ஒரு பயணக் கட்டுரை போல இருப்பதால் அதை விட்டுவிடலாம்.

பிறவற்றை வகைப்படுத்திப் பார்ப்பது எளிதில்லை. ஏனென்றால் அவை அல்ஜீரியா முதல் மெக்சிகோ வரை பல நாட்டுப் பின்னணிகளிலிருந்தும், சூழல்களில் இருந்தும் வருபவை. எனினும், அவற்றில் சிறுகதையின் பொதுவான கூறுகள் காணப்படுகின்றனவா என்பதைப் பார்ப்பது பயனளிக்கும்.

முதற் கதை ‘தாக்குதல்’. அல்ஜீரிய நாட்டு ஆஸியா ஜேபார் எழுதியது. அல்ஜீரியாவின் உள் நாட்டுக் கலவரங்களின் பின்னணியில் முஸ்லீம்களே முஸ்லீம் களைப் பழி தீர்த்துக் கொள்ளும் கொடூரத்தில் ஃபிரெஞ்ச் ஆசிரியர் மௌராத் சுடப்பட்டு இறக்கிறார்.

தன் கண் முன்னால் கணவன் கொல்லப்படும் கோரத்திலிருந்து விடுபட முயலும் மனைவி, தன் துன்பத்தையும், தன் கணவரின் தியாகத்தையும் மதிக்காத மாணவர்களின் சொற்களால் வெடித்துச் சிதறிப் போக, அறுவைச் சிகிச்சைக்குப் பின் மெல்லக் குணமாகி வரும் மகனுடன் தொலைதூரம் போகிறாள். மாணவன் ஒருவனின் சொல் அவளைப் புண்படுத்துவதாக, துப்பாக்கியால் சுடப் பட்டதாகத் தோன்றுகிறது அவளுக்கு.

மாணவனின் சொல்லில் ‘சித்தாந்த மோதல்கள், அதன் சந்தேகங்கள், அதன் குறியற்ற தன்மை’ ஆகியவற்றைக் கண்ட அந்தக் கைம்பெண்ணின் மனக் குமுறலின் அவலம் நெஞ்சைத் தொட்டு வேறு அண்மை நிகழ்வுகளை மனத்தில் எழுப்ப வில்லையா?

இதுபோல அவலத்தை விட ஒருவகைப் பயங் கரத்தை உண்டாக்குகின்ற ‘அரசியல்’ கதை ஜோஹிந்தர் பால் எழுதிய பஞ்சாபிச் சிறுகதையான Ôஇறுதிப்பாடம்Õ ‘கொல்லும் ஆசையே கிடையாத அனைவரையும் காக்கின்ற கடவுளைப்’ பின்பற்றுகின்ற சந்தாவும் பந்தாவும் ஒருவரையருவர் மடித்துக் கொள்கின்ற பயங்கரம். சந்தாவின் உருவில் இறந்துபோன தன் மகள் வந்து விட்டாள் என்று மகிழ்ந்திருந்த பாட்டியின் மன நிலை எப்படியிருக்கும்?

தொகுப்பிலுள்ள சில சிறுகதைகளில் பாத்திரப் படைப்பு முன் நிற்கிறது. மீன்பிடிப்பில் 24 ஆண்டு அனுபவம் வாய்ந்த 43 வயதே ஆன லி காய்போவின் சீனக் கதை ‘மீன் பிடித்தல்’ அவன் திருடர்களின் அரசன், கில்லாடியான மீனவன். திருடனாயிருப்பதில் தவறென்ன என்று தனது திருட்டுத் தொழிலுக்கு நியாயம் கற்பிப் பவன் மீன்களுடன் போராடி வெற்றி பெற்றவன். கடைசியில்  தான் திருடிய மீனால் கடலில் மூழ்கிப் போகிறான். லி காய்போ, ஹெமிங்வேயின் ‘கிழவனும் கடலும்’ கதையில் வரும் சந்தியாகோவை நினைவு படுத்தினாலும் இருவரும் எவ்வளவு எதிர் எதிரான வர்கள்!

கதை மாந்தரை முன் வைக்கும் இன்னொரு கதை எலிசபெத் பிஷப் எழுதிய ‘கிராமத்தில்’. இந்த நீண்ட கதையில் ஒரு சிறுமிதான் கதைத் தலைவி. அவள் வாயிலாகச் சொல்லப்படுகின்ற அனுபவங்களில் அவளுடைய பாட்டி, அத்தைமார், ‘கிளாங், கிளாங்’ என்று  தனது பட்டறையில் அடிக்கும் நேட், செல்வி குர்லே, நெல்லி என்ற பசு, பல் போன செவிட்டு நாய் ஜேக் என்று ஒரு குறுநாவலுக்குரிய மாந்தர் வந்து போகிறார்கள். ஆனால் முன்னால் நிற்பது அந்தக் கிராமம் தான். அந்த அமைதியும், ‘கிளாங், கிளாங்’ சப்தமும், மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லப்படும் நெல்லியும், உடை தயாரித்தல் முதல் வைக்கோல் படப்பில் பற்றிய தீயை அணைக்கும் பணி வரையில் நடமாடும் நோவாஸ்காட் கிராமம் இன்று எங்கே போயிருக்கும்?. ‘வெறிச் சொல்’ என்ற சிறுகதை பிளவு ஆளுமையான முகமது சுல்தானைக் காட்டுகிறது.

கதைப் பின்னல்கள் முன்புலமாக இருக்கும் கதைகளும் உள்ளன. அமெரிக்க யூத நாவலாசிரியர் பெர்னார்ட் மலமூடின் ‘ரெம்ப்ராண்டின் தொப்பி’ சிற்பி ரூபினுக்கும், கலை வரலாற்றாளர் அர்கினுக்கும் ஒரு தொப்பியின் காரணமாக ஏற்படும் முரண்பாடும், அதன் விளைவாக ஏற்படும் சிக்கலும், தான் என்ற எண்ணம் மறைந்து, மன்னிப்புக் கேட்கும் மனமாற்றம் ஏற்படும் போது அந்தச் சிக்கல் அவிழ்ப்பதும் ஆகியவற்றைச் சொல்கிறது. இக்கதையின் உட்கருவும் முக்கியத்துவம் பெறுகிறது என்றும் சொல்லலாம்.

பீட்டர் அகராய்ட் எழுதிய கிறிஸ்துமஸ் சிறு கதையான ‘மேஜைப் பேச்சு’ ஆவிகளின் கதை. கதை முடிவில் எதிர்பாராத திருப்பத்தைத் தரும் முயற்சி. ஏற்கனவே இதுபோன்ற கதைகள் படித்திருப்பதால் புதுமை இல்லை. முடிக்கப்படாத விளையாட்டான இறப்பினை மையமாகக் கொண்டது சுனில் கங்கோ பாத்யாய எழுதிய ‘ஒரு தேவதை அஞ்சுகிறது’ என்ற சிறுகதை. இதில் தேவதையின் வேண்டுகோளுக்குக் கீழ்ப்படிந்தவன் தேவதையைக் காணாமல் திகைத்து நின்று ‘இப்போது எனக்கு நேரும்’ என்று கேட்பது மரணம் தன்னை விட்டு ஏன் போனது என்ற அங்கலாய்ப்பா?

கதைக் கருவே முன் நிற்கும் கதைகளில் ஒன்றான ஃபிரெஞ்சுக் கதை ‘வணக்கத்திற்குரிய தந்தை கவுச்சரின் காயகல்பம்.’ இவ்வுலகச் செல்வத்திற்காக (அது நல்ல காரியத்திற்காக இருந்தாலும்) ஆன்மாவை விற்கலாமா என்ற கேள்வியை எழுப்புகிறது. டாக்டர் ஃபாஸ்டஸ் அவல முடிவை அடைகிறார். தந்தை கவுச்சர் தப்பித்து வெளியே வருகிறார். ஆனால் மற்றவர்கள்...!

முப்பத்தொன்பது வயது வரை தனக்காக வாழாமல் தனது குடும்பத்துக்காக வாழ்ந்து கன்னியாகவே மரணத்தைத் தழுவியபோது தனது தம்பியாகத் தான் நேசித்த இயேசுவே வந்து கையைப் பிடித்த போது அமைதி அடைகிற பெண்ணின் கதை ‘அன்னம்மா டீச்சர் ஒரு நினைவுக் குறிப்பு.’ அன்பைத் தவிர வேறொன்றையும் தர இயலாத ஏழைச் சகோதரன் குத்து வெட்டுக்களால் கதறி இறந்து போனார். அன்பையும் தன்னிடமுள்ள அனைத்தையும் தந்துவிட்டாள் அன்னம்மாள்.

பிரேசில் நாட்டுச் சிறுகதையான ‘போர்கஸின் செயலர்’ கண்பார்வை இல்லாத ஒரு பெண் எழுத் தாளரின் கதை. படைப்பாளியையும் படைப்பையும் பற்றிய கதையாகவே இதனை எடுத்துக் கொள்ள வேண்டும். கதைக்குக் கருக் கொடுக்கும் படைப்பாளியும் எழுத்துக் கொடுக்கும் செயலரும் ஒருவராகவே தோன்றுகின்றனர். ஒரு படைப்பாளியின் கதைக் கருவிற்கு உருக் கொடுத்தது மெருகேற்றுவது இங்கே அவருடைய செயலர். எழுத்தாளரை முழுமையாக ஆட்கொண்டிருக்கும் அந்தச் செயலர் யார்? எழுத்தாளரேதான்.

மெக்சிகோ நாட்டுக் கதையான ‘இரகசியத் திருமணம்’ திருமண, பால் உறவுகளின் விகாரங்களைக் காட்டுகிறது. தன் காதலன் லியோவிடம் லாவண்யா தன் கணவன் கிறிஸ்டோபலினுடைய போலியான சிரிப்பையும், அவனோடு ஏற்பட்டிருக்கும் விட முடியாத உறவையும் விளக்குகிறாள். உரையாடலாக விரியும் கதையில் ‘தொடர்ந்து ஆட்டத்தை மாற்றிக் கொண்டிரு’ என்று லியோ சொல்வது தான் கதைக் கரு.

இங்கிலாந்துச் சிறுகதையான ‘மக்தலேனா: சில மனப் பதிவுகள்’ வித்தியாசமானது. இயேசுவின் தாய் மேரியும், புனித யோவானின் தாய் மேரியும், மக்தலீன் மேரியும், பணிப் பெண் பாத்திமாவும் படகில் பயணித்து கடற்கரையை அடைகின்றனர். தாய்மை அடையாத மக்தலேனா மட்டும் தனித்துப் புறப் படுகிறாள். தன் பாவங்களுக்காக நோன்பிருக்கிறாள். இதுதான் கதை. ஆனால் ஓவியங்களில் மக்தலேனா படிமங்களை எடுத்துக் கொண்டு நமது கதைத் தலைவியின் துறவு வாழ்க்கையை வேறு படிமங்களாகக் காட்டும் ஏஞ்சலா கார்டர் மனிதர் வரலாற்று நாயகர் களைக் காண்பதிலுள்ள வேறுபாடுகளைக் காண்பிக் கிறார். டான் பிரவுனுடைய கண்களில் டாவின்சியின் ஓவியம் ஏற்படுத்தும் எதிர்மறைத் தாக்கத்தையும் இங்கு நினைவுகொள்ள வேண்டியிருக்கிறது.

இரண்டாம் பகுதியான பதிவுகளில் எட்டுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

முதல் கட்டுரை இப்சனின் நோராவாகவும் பல திரைப்படங்களில் நாயகியாகவும் நடித்த லிவ் உல்மன் எழுதிய ‘சேஞ்சிங்’ என்ற சுய சரிதை நூலின் ஒரு அத்தியாயத்தின் தமிழாக்கம். ‘முகமூடிகள்’ என்ற இந்த அத்தியாயம் உல்மானின் மனிதத்தை வெளிக்காட்டு கிறது; அவருடைய எளிய அனுபவங்கள்; மென்மையாகக் கூறப்படுகின்றன.

எலியட் வெய்ன்பெர்கரின் ‘காகிதப் புலிகள்’ புலிகள் வரலாற்றிலும் இலக்கியத்திலும் காணப்படும் பதிவுகளைச் சுவையாகத் தருகிறது. வோட்ஸ்வொர்த் முதல் பிளேக் வரை ரட்யார்ட் கிப்ளிங் முதல் எமிலி டிக்கின்சன் வரை பல இலக்கியவாதிகளின் பதிவுகளை வாசிக்கிறோம். சீனாவின் யின்-யாங் தத்துவத்திலும், கூடப் புலி வருகிறது. சீரங்கப்பட்ட திப்பு சுல்தான் என்ற புலியின் வரலாறும் இடம் பெறுகிறது. எண்பதுகளில் புலிகளின் எண்ணிக்கை உலக அளவில் பட்டியலிடப்படுகிறது.

1991 முதல் 1995 வரையில் நடைபெற்ற க்ரோஷிய போரின் கோரத்தை அனுபவித்த சிறுமி ஸ்லடாவின் நாட்குறிப்பின் சிநேகம் இன்னொரு ஆனி ஃபிராங்க் நாட் குறிப்பு. ஃபிரேயா ஸ்டார்க்கின் பயண விபரம் ‘பயணத்தின் எதிரொலி’ என்ற நேர்காணலும் பதிவுகளும் தத்துவார்த்தச் சிந்தனைகள். - மிரோஸ்லாவ் ஹோலுப் என்ற செக் நாட்டுக் கவிஞர் தனது இந்தியப் பயணத்தை விவரிக்கிறார். இஸாபெல் ஆலண்டன் எழுதிய நாவலின் விமர்சனமும் பின்னுரையும் சுவையாகத் தரப்பட்டிருக்கின்றன. ரிட்விக் கட்டக் என்ற இந்தியத் திரைப்படப் படைப்பாளரின் குறிப்புகளும், ஜார்ஜ் ஸ்டைனரின் மொழியின் படியும் ஃபாஸிசத் தடங்கள் என்று மொழியியற் கட்டுரையும் இத் தொகுதியில் இடம் பெறுகின்றன.

உலகின் பல நாட்டுச் சிறுகதைகளை மிக அருமையாக மொழியாக்கம் செய்திருக்கிறார் நண்பர் சா.தேவதாஸ். அந்தந்தக் கதையின் பின்புலத்திற்கும் கதைத் தளத்திற்கும் ஏற்றவாறு அவருடைய நடை விளையாடுகிறது. பதிவுகள் தொகுப்பிலும் அவருடைய மொழியாக்கத் திறன் முன்னிற்கிறது.

கவிதையை மொழியாக்கம் செய்வது கடினம் என்று திரு.தேவதாஸ் ஒரு நேர்முகத்தில் குறிப்பிட்டிருப்பதாக நினைவு. ஆனால் எமிலி டிக்கின்சனின் கவிதையை என்ன அருமையாக மொழிபெயர்த்திருக்கிறார்! ‘மக்தலேனாவின் மனப் பதிவுகள்’ கவிதை இல்லாமல் வேறு என்ன?

இரண்டு பகுதிகளையும் தனித்தனி நூலாகப் பதிப்பித்திருக்கலாம். ‘அல்லது’க்குப் பதிலாக (அ) என்று அடைப்புக் குறிகளுக்குள் தரப்பட்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். பிழைகள் திருத்திச் சரிபார்ப்பதில் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

புனைவும் பிரக்ஞையும்
தமிழில்: சா.தேவதாஸ்
வெளியீடு: பன்முகம்
விலை: ரூ. 300/

Pin It