அமெரிக்காவில் தங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டுமென்று கோரி அய்.நா. சபையை அவசரமாக அணுகும் எண்ணம் தங்களுக்கில்லை என்பதை ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் காட்டிவிட்டார்கள். இதை நேர்மையோடு ஒப்புக்கொள்ள வேண்டும். அவர்களிடம் அப்படிப்பட்ட ஓர் எண்ணம் இல்லையென்ற செய்தி எனக்கு முன்பே தெரியும். அமெரிக்கக் கறுப்பனின் போராட்டம், ஒரு சர்வதேசப் போராட்டம் என்று கறுப்பன் உணர்வதற்கு முன்பே என் ஆயுள் முடிந்துவிடுமென்று தோன்றுகிறது. ஏனெனில், "குடியுரிமைகள்' குறித்த தன்னுடைய பிரச்சினை வெறும் உள்நாட்டுப் பிரச்சினைதான் என்று கறுப்பனே கருதுமளவிற்கு, அமெரிக்க வெள்ளையன் அவனை மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறான்.

Molcolm X உண்மையில் கறுப்பர்களும், வெள்ளையர்களும் சகோதரர்களாக இருக்க முடியும் என்ற நுண்ணறிவையும், பரந்துபட்டப் பார்வையையும் எனக்குத் தந்த பழமைவாத இஸ்லாமில் சேர கறுப்பர்கள் அவசரம் காட்டவில்லை என்பதும் எனக்குத் தெரியும். ஒடுக்குமுறை விசயத்தில் கிறித்துவம் கடைப்பிடிக்கும் இரட்டை அளவு கோலால் மீளமுடியாத அளவிற்கு அமெரிக்கக் கறுப்பர்கள் குறிப்பாக வயதானவர்கள் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்...

"முஸ்லிம்கள் என்பதாலோ, கிறித்துவர்கள் என்பதாலோ, புரொட்டஸ்டன்ட் என்பதாலோ பேப்டிஸ்ட் அல்லது மெத்தேடிஸ்ட் என்பதாலோ, ஜனநாயகக் கட்சிக்காரர்கள் அல்லது குடியரசுக் கட்சிக்காரர்கள் என்பதாலோ, மேசன்கள் அல்லது "எல்க்குகள்' என்பதாலோ நாம் கொடுமைகளை அனுபவிக்கவில்லை. "நாம்' என்று இங்கு நான் குறிப்பிடுவது அமெரிக்கக் கறுப்பின மக்களை மட்டுமல்ல, உலகம் முழுவதிலுள்ள கறுப்பின மக்களையும்தான். நம் அனைவருக்குமே குடியுரிமைகள் மட்டுமின்றி, மனித உரிமைகளும், சுயமரியாதையுடன் வாழ்வதற்கான உரிமைகளும்கூட மறுக்கப்படுகின்றன.....''

“யார் யாரோ என்னைப் பற்றிக் கூறிய அவதூறுகளைக் கேட்டு எனக்குச் சலித்துவிட்டது. யார் சொன்னார்கள் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை; நான் உண்மைக்காக நிற்கிறேன். யார் ஆதக்கிறார்கள், எதிர்க்கிறார்கள் என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை; நான் நீதிக்காக நிற்கிறேன். முதலாவதும், முக்கியமானதுமான விசயம் நான் ஒரு மனித உயிர். அந்த வகையில், மொத்த மனிதச் சமூகத்திற்கு யாரெல்லாம், எப்படியெல்லாம் நன்மைகள் செய்தாலும் அதற்கு ஆதரவாக நான் நிற்பேன்'' என்று நண்பர்களுக்குக் கடிதம் எழுதினேன். நீக்ரோக்களுக்கு ஒரு புதிய திசைவழியைக் கற்றுத்தர நான் இப்பொழுது முயற்சிக்கிறேன் என்ற தகவலை, அமெரிக்க வெள்ளையினப் பத்திகைகள் வெளியிட மறுத்தன. 1964 ஆம் ஆண்டில் வெடித்த கலகத்தைத் தொடர்ந்து, புதிய சம்பவங்கள் உருவாகி வந்ததால், "நீக்ரோக்களைத் தூண்டி வந்ததாக' என் மீது தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டது. வானொலி அல்லது தொலைக்காட்சி நிலைய நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்ட நேரங்களில் "நீக்ரோக்களைத் தூண்டிவிட்டதாக' அல்லது "வன்முறையைத் தூண்டியதாக' குற்றம் சாட்டப்பட்டபோது நான் கொதித்துப் போனேன்.

“சேரிகளில் காலம் காலமாக இருந்துவரும் வேலையில்லாத் திண்டாட்டம், மோசமான வீடுகள், குறைவான கல்வி போன்ற பிரச்சினைகளிலிருந்து உருவான சமூகவியல் ரீதியான வெடிகுண்டை வெடிக்கச் செய்ய யாருடைய தூண்டுதலும் தேவை இல்லை. அபாயகரமான இந்தக் கிரிமினல் சூழ்நிலை, நீண்ட காலமாக நிலவி வருகிறது. யாரும் இதற்கு நெருப்பு வைக்க வேண்டிய அவசியமில்லை; தானே நெருப்புப் பற்றிக்கொள்ளும், தன்னுள்ளிருந்து தானே தன்னியல்பாக எரியும்.

"அமெரிக்காவிலேயே மிகக் கோபக்கார நீக்ரோ' என்று என்னை அழைத்தார்கள். அந்தக் குற்றச்சாட்டை நான் மறுக்கவில்லை. எனக்கு என்ன தோன்றியதோ அதைத்தான் நான் பேசினேன். கோபத்தின் மீது எனக்கு நம்பிக்கையுண்டு. கோபப்படுவதற்கு ஒரு காலம் இருக்கிறதென்று பைபிள் சொல்கிறது. "வன்முறையின் ஆசியன், வன்றையைத் தூண்டுபவன்' என்றெல்லாம் அவர்கள் என்னை அழைத்தார்கள். அவர்களை நேருக்கு நேராகப் பார்த்துச் சொன்னேன் : இது பொய், நான் வன்முறை மீது வெறிகொண்டு அலைபவனல்லன்; நீதிக்காக நிற்பவன். நீக்ரோக்களால் வெள்ளையர்கள் தாக்கப்படும் போது - அதைத் தடுத்து நிறுத்தக் காவல் துறையால் இயலவில்லை அல்லது அது தயங்குகிறது என்ற ஒரு நிலையில், தேவைப்பட்டால் வெள்ளையர்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தியாவது, நீக்ரோக்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற கருத்துக் கொண்டவன் நான். வெள்ளையர்களின் தாக்குதல்களிலிருந்து நீக்ரோக்களைக் காப்பாற்றச் சட்டம் தவறும் பட்சத்தில் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தேவைப்பட்டால் நீக்ரோக்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்துக் கொண்டவன் நான்.''

"நீக்ரோக்கள் ஆயுதமேந்த வேண்டுமென்று மால்கம் எக்ஸ் பிரச்சாரம் செய்கிறார்.'' அதில் என்ன தவறு இருக்கிறது? எது தவறு என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். வெள்ளையனுக்கு எதிராக உடல் ரீதியான தற்காப்பைப் பற்றிப் பேசிவரும் கறுப்பன் நான். நீக்ரோக்களை வெள்ளையன் கொடுமைப்படுத்தலாம், எரிக்கலாம், குண்டு வீசலாம், உதைக்கலாம்; இவையெல்லாம் நியாயமானவை. "பொறுமையோடு இருங்கள்''..... "பழக்கத்தை விட முடியாதல்லவா''..... “நிலைமை சீராகிவிடும்''..... போதும் நிறுத்துங்கள்.

கொடுமைக்குள்ளாகிவரும் ஒருவர், தன்னைத் தற்காத்துக் கொள்ள எந்தவொரு முயற்சியும் எடுக்காமல், தொடர்ந்து அந்தக் கொடுமையை ஏற்றுக் கொண்டு வந்தால் அது குற்றம் என்ற கருத்துக் கொண்டவன் நான். "கிறித்துவ' தத்துவத்திற்கு இப்படித்தான் விளக்கம் தரப்படுகிறது என்றால் இதைத் தான் காந்தியம் போதிக்கிறது என்றால் அவற்றைக் கிரிமினல் தத்துவங்கள் என்றே நான் அழைப்பேன்.

என்னுடைய ஒவ்வோர் உரையிலும் வெள்ளையர்கள் விசயத்தில் என்னுடைய புதிய நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த நான் முயற்சி செய்தேன். "நேர்மையான, நல்ல வெள்ளையர்களுக்கு எதிராக நான் பேசமாட்டேன். இம்மாதிரி சிலபேர் இருக்கிறார்கள் என்பதை நான் அறிந்து கொண்டேன். அனைத்து வெள்ளையர்களும் இனவெறியர்கள் அல்லர் என்பதையும் நான் அறிந்து கொண்டேன். வெள்ளை இனவெறியர்களுக்கு எதிராகவே நான் பேசி வருகிறேன். நான் போராடி வருவதும் அவர்களை எதிர்த்துத்தான். அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது, இந்த இனவெறியர்களுக்கு எதிராகப் போராடும் உரிமை கறுப்பர்களுக்கு உண்டு என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டவன் நான்''...

Molcolm X "அமெரிக்கக் கறுப்பனின் பிரச்சினைக்கானத் தீர்வைத் தொடர்ந்து தள்ளிப்போடுவது, வன்முறையைத் தவிர்ப்பது என்பதுதான் அகிம்சையின் பொருளென்றால், நான் வன்முறையையே ஆதரிக்கிறேன். தீர்வைத் தள்ளிப்போடுவதுதான் அகிம்சையின் பொருளென்றால், அகிம்சை எனக்கெதற்கு? என்னைப் பொறுத்தவரை, தீர்வைத் தள்ளிப் போடுவது என்பது தீர்வே காணாமல் இருப்பதாகும்.'' இதையே வேறுவிதமாகச் சொல்கிறேன். இந்த நாட்டில் தன்னுடைய உரிமைகளைப் பெற்றுக்கொள்ள, கறுப்பன் வன்முறையைத்தான் கையிலெடுக்க வேண்டுமென்றால், நான் வன்முறையையே ஆதரிக்கிறேன். படுமோசமான இனப்பாகுபாட்டிற்குள்ளாக்கப்பட்ட போதெல்லாம் அயர்லாந்துக்காரர்களும், போலந்துக்காரர்களும், யூதர்களும் வன்முறையைத்தான் தேர்வு செய்தார்கள் என்பது உங்களுக்கும் தெரிந்ததுதான்! வன்முறையின் விளைவுகள், அதனால் யார் பாதிக்கப்படுகிறார்கள் என்பது முக்கியமல்ல. மேற்சொன்ன சூழல்களில் அவர்களைப் போலவே நானும் வன்முறையையே தேர்வு செய்வேன்.

கறுப்பன் மீது வெள்ளையன் தொடுத்து வரும் கொடுமை குறித்து யாராவது பேசினால் அதுவும் குறிப்பாகக் கறுப்பன் பேசினால் அதை வெள்ளையினச் சமூகம் வெறுக்கிறது. "புரட்சிக்காரன்' என்று அடிக்கடி நான் அழைக்கப்படுவதற்கு என்ன காரணம் என்பதை நான் எப்போதுமே புரிந்து வைத்துள்ளேன். நான் ஏதோ குற்றம் புரிந்தவன் என்ற தொனி அதில் ஒலிக்கிறது. உண்மையான புரட்சியில் ஈடுபட வேண்டிய தேவை அமெரிக்கக் கறுப்பனுக்கிருக்கிறது...

ஆகவே, அமெரிக்காவில் "புரட்சியில்' ஈடுபட்டிருந்த நீக்ரோவைப் பற்றிப் பேசினால் அதற்கு என்ன பொருள்? ஆமாம்! அவன் ஒரு சமூக அமைப்பைக் கண்டிக்கிறான். ஆனால், அந்தச் சமூக அமைப்பைத் தூக்கியெறிய, அதை நிர்மூலமாக்க அவன் முயல்வதில்லை. தற்போது நிலவி வரும் அமைப்பில் தன்னையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் கறுப்பன் "கலகம்' செய்வது இதற்காகத்தான். இந்த நாட்டில் கறுப்பர்களுக்கெனத் தனி மாநிலங்கள் கோரிப் போராடுவதே உண்மையான நீக்ரோ கலகமாகும். எலிஜா கமதுக்கு நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே பல்வேறு கறுப்பர் குழுக்களும், கறுப்பர்களும் முன்வைத்து வரும் கோரிக்கை இது.

“உண்மையான அமெரிக்கனான சிவப்பிந்தியனின் பழங்குடி இனத்தைத் தாழ்வான இனமென்று என்றைக்கு முடிவெடுத்தோமோ, அன்றைக்கு ஓர் இனப் படுகொலையில் பிறந்ததுதான் இந்த நாடு. நமது நாட்டின் கடற்கரைகளைப் பெரும் எண்ணிக்கையிலான நீக்ரோக்கள் எட்டுவதற்கு முன்பே இனவெறுப்பு என்ற வடு காலனியச் சமூகத்தை அலங்கோலப்படுத்தி விட்டது. பதினாறாம் நூற்றாண்டிலிருந்தே இன மேலாதிக்கத்திற்காக நடத்தப்பட்ட போர்களில் ரத்தம் பாய்ந்தோடியது. சுதேசி மக்களைப் பூண்டோடு துடைத்தெறிவதை, ஒரு தேசியக் கொள்கை சம்பந்தப்பட்ட பிரச்சினையாகக் கருதி அதைச் செய்ய முயற்சித்த ஒரேயொரு நாடு, அநேகமாக நம்முடைய நாடாகத்தான் இருக்கும். அதுமட்டுமல்ல, இந்த அவல அனுபவத்தை உன்னதமான அறப் போராகவும் உயர்த்தி விட்டோம்.

உண்மையில் இன்றும்கூட, இந்த அவமானகரமான அத்தியாயத்தைப் புறக்கணிக்கவோ, இதற்காக வருத்தப்படவோ நாம் தயாராக இல்லை. நமது இலக்கியம், நமது திரைப்படங்கள், நமது நாடகங்கள், நமது நாட்டார் இலக்கியங்கள் அனைத்தும் இதனை மேன்மைப்படுத்தி வருகின்றன. பண்டையக் கலாச்சாரம் கொண்ட செவ்விந்திய மக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டு, வறுமை நிறைந்த சர்வேசன் பகுதிகளில் மந்தைகள் போல அவர்கள் அடைத்து வைக்கப்பட்டதற்குக் காரணமாயிருந்த வன்முறைக்கு மரியாதை தரும்படி, இன்றும்கூட நமது குழந்தைகளுக்குக் கற்றுத் தந்து வருகிறோம்.''

கிறித்துவத்தின் மிகத் தொடக்கக் காலத்திற்கே சென்று பார்க்கலாம். கிறித்துவத்தின் தோற்றம் அதாவது இன்றைய மொழியில் கத்தோலிக்க மதம் மற்றும் அதன் படிநிலைகள் ஆகிய அனைத்தும் கிறித்துவத் திருச்சபையால் "பாலைவனத் தந்தையர்கள்' என்று அழைக்கப்பட்டவர்கள் மத்தியில் ஆப்பிக்காவில் கருக் கொண்டதாகும். வெள்ளையர்களின் அய்ரோப்பாவிற்குள் கிறித்துவத் திருச்சபை நுழைந்தபோது, அதை இனவெறி தொற்றிக் கொண்டது. ஆக்கிரமிப்பு, கொலை, சுரண்டல், கொள்ளை, பாலியல் வல்லுறவு, சித்திரவதை ஆகியவற்றோடும், வெள்ளை மேலாதிக்கப் போதனையோடும் சிலுவை என்ற பதாகையைச் சுமந்தபடி ஆப்பிரிக்காவிற்குள் கிறித்துவம் திரும்பியது. அப்பட்டமான உடல் வலிமையைக் கொண்டு, உலகத் தலைவன் என்ற பதவியில் தன்னைத்தானே வெள்ளையன் நியமித்துக் கொண்டது இப்படித்தான்.

ஆன்மீக ரீதியாக அவன் வெறுமையானவன். தலைமைத்துவத்தைத் தீர்மானிப்பதற்கான உண்மையான அளவுகோல் ஆன்மநேயம் என்பதை மனிதகுல வரலாறு, ஒவ்வொரு சகாப்தத்தின்போதும் மெய்ப்பித்துக் காட்டியுள்ளது. ஆன்மநேயம் மக்களை ஈர்க்கிறது; அதிகாரமோ மக்களைக் கட்டாயப்படுத்துகிறது. ஆன்மநேயம் அன்பைத் தோற்றுவிக்கிறது; அதிகாரமோ அச்சத்தைத் தோற்றுவிக்கிறது.

அரசாங்கச் சட்டங்களின் மூலம் சகோதரத்துவத்தைக் கட்டாயப்படுத்திவிட முடியாது என்று சொல்லும் இனவெறியர்களின் கருத்தோடு நூற்றுக்கு நூறு விழுக்காடு நான் ஒத்துப் போகிறேன். உண்மையான மதத்தை மதத்தின் சாரத்தை அரசாங்கங்கள் பின்பற்றுவதுதான் இன்று உண்மையான உலகத் தீர்வாகும். இனப்பிரச்சினையால் பிளவுண்டிருக்கும் அமெரிக்காவில், இஸ்லாம் மதம் குறிப்பாக அமெரிக்கக் கறுப்பர்களுக்கு அவசர அவசியமாய் இருக்கிறது. தான் மிக மிகத் தீவிரமான கிறித்துவனாக இருந்து வருவது குறித்தும், அது தன்னை எங்கே அழைத்து வந்திருக்கிறது என்பது குறித்தும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய அவசியத்தில் கறுப்பன் இருக்கிறான். உண்மையில் சொல்லப்போனால், வெள்ளையனின் கைகளில், வெள்ளையனின் வியாக்கியானத்தில் இந்த உலகைக் கிறித்துவம் எங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறது?

உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்குகொண்ட வெள்ளையர் அல்லாத மக்களை அது கலகப் பாதையில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. மூன்றில் இரண்டு பங்கு உலக மக்கள், மூன்றிலொரு பங்கான சிறுபான்மை வெள்ளையர்களை "வெளியேறு!'' என்று சொல்லி வருகிறார்கள். வெள்ளையன் வெளியேறுகிறான். அவன் வெளியேறியவுடன் தங்களுடைய உண்மையான மதத்தை நோக்கி வெள்ளைய ஆக்கிரமிப்பாளனால் புறச்சமயம் (Pagon) என்று முத்திரையிடப்பட்ட மதத்தை நோக்கி அவசரம், அவசரமாகத் திரும்புவதை நாம் பார்க்கிறோம். ஆயிரம் ஆண்டுகளாக வெள்ளையனின் கிறித்துவத்தை எதிர்த்து நிற்கக் கூடிய எதிர்த்துச் சண்டையிடக் கூடிய வலிமை கொண்ட ஒரே ஒரு மதம் இஸ்லாம் மட்டும்தான். இஸ்லாம் மதத்தால் மட்டுமே வெள்ளைக் கிறித்துவத்தை நெருங்கவிடாமல் பார்த்துக் கொள்ள முடியும். இஸ்லாமையும், மற்ற சுதேசி மதங்களையும் நோக்கி ஆப்பிரிக்கர்கள் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்து, பவுத்த, முஸ்லிம் மதங்களுக்கு ஆசிய மக்கள் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

Molcolm X ஒரு காலத்தில் கிழக்கில் கிறித்துவர்கள் சிலுவைப் போர் நடத்தியதுபோல, தற்போது மேற்கில் இஸ்லாமியர்களும் சிலுவைப் போர் நடத்தி வருகிறார்கள். கிழக்கு நாடுகள் அதாவது ஆசியா கிறித்துவத்திற்குக் கதவைத் தாழிட்டுக் கொண்ட ஒரு நிலையில், ஆப்பிக்கா படுவேகமாக இஸ்லாமிற்கு மாறிக் கொண்டிருக்கும் ஒரு நிலையில் அய்ரோப்பா படுவேகமாகக் கிறித்துவத்திலிருந்து விலகிக் கொண்டிருக்கும் ஒரு நிலையில், உலகம் முழுவதிலும் வெள்ளையினத்திற்கு முட்டுத் தந்து வரும் அமெரிக்காதான் கிறித்துவம் வலிவோடு எஞ்சியிருக்கும் பகுதியாக இருக்கிறது என்பது, இன்று பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மையாகும்.

நல்லது. இதுதான் உண்மை நிலையென்றால், இன்று அமெரிக்காவில் "கிறித்துவத்தின்' பெயரில் பின்பற்றப்பட்டு வருவதுதான் உலகுக்குத் தர உலகக் கிறித்துவத்திடம் எஞ்சியுள்ள ஒரேயொரு சிறந்த அம்சம் என்பது உண்மையென்றால், கிறித்துவத்தின் முடிவு மிக அண்மையில் இருக்கிறது என்பதற்கு, இதைவிட மிகச் சிறந்த ஆதாரம் அறிவுள்ள மனிதனுக்குத் தேவைப்படாது...

கிறித்துவத் திருச்சபையின் இந்தத் தோல்விக்குத் தனிப்பெரும் காரணம் எது தெரியுமா? இனவெறியை அது எதிர்க்கத் தவறியதுதான். "எதை விதைக்கிறீர்களோ, அதைத்தான் அறுவடை செய்வீர்கள்' என்ற பழைய கதைதான் இது. கிறித்துவத் திருச்சபை இனவெறியை விதைத்தது; இப்பொழுது அதே இனவெறியை அது அறுவடை செய்கிறது...

அமெரிக்கக் கறுப்பனுக்காக நான் ஏற்படுத்த விரும்பிய கறுப்பினத் தேசியவாத அமைப்பை உருவாக்குவதற்காக, எல்லா வகையான தொல்லைகளையும் தொடர்ந்து சம்பாதித்து வந்தேன். போட்டிகள் நிறைந்த அமெரிக்கச் சமூகத்தில், முதலில் கறுப்பர்களிடையே ஒற்றுமை ஏற்படாமல் எப்படி வெள்ளையர் கறுப்பர் ஒற்றுமை ஏற்பட முடியும்?

மண்டியிட்டுக் கிடந்த நிலையிலிருந்து நிமிர்ந்து எழவும், தங்களுடைய சொந்தக் காலில் நிற்கவும், தங்கள் மீதான களங்கங்களைத் துடைத்தெறியவும், சுதந்திரமாக வாழவும் இன்று கறுப்பின மக்களுக்குச் சுயமரியாதையும் ஊக்கம் நம்பிக்கையும் தேவைப்படுகின்றன. இவற்றை ஊட்டக்கூடிய திறன் கறுப்பினத் தேசியவாத அரசியல் பொருளாதார சமூகத் தத்துவங்களுக்குதான் இருக்கிறது...

நான் விரும்பிய அந்த அமைப்பை அதாவது வெள்ளையர்களுக்கும், கறுப்பர்களுக்குமிடையே உண்மையான சகோதர உணர்வு நிலவக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்க உதவுவதையே தன்னுடைய இறுதி லட்சியமாகக் கொண்ட அனைத்துக் கறுப்பர்களையும் உள்ளடக்கிய ஓர் அமைப்பைக் கட்டுவதில் எனக்கு ஒரு தடை இருந்தது. "கறுப்பு முஸ்லிம்' என்ற புகழ்பெற்ற, என்னுடைய முந்தைய பிம்பம்தான் அந்தத் தடை. படிப்படியாக அந்தப் பிம்பத்தைச் சீராக்க முயற்சி செய்தேன். ஒரு முக்கியக் கட்டத்தை கடக்க, பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக நீக்ரோக்கள் மத்தியில் ஒரு புதிய மரியாதையைப் பெற முயற்சி செய்தேன். முன்பு என்னிடமிருந்த கோபம் எந்தவிதத்திலும் இப்போது குறைந்துவிடவில்லை; கோபம் மனிதநேயத்தைக் குருடாக்கிவிடும் என்ற புரிதலைப் புனித உலகில் நான் கண்ட உண்மையான சகோதரத்துவம் எனக்குத் தந்திருந்தது.

நூல் : மால்கம் எக்ஸ்
என் வாழ்க்கை
வெளியீடு : விடியல் பதிப்பகம்
11, பெரியார் நகர்
மசக்காளிபாளையம்
கோவை - 641015
பக்கங்கள் : 736
விலை : ரு. 300

Pin It