womens freedom 1 350“மதம் என்பது நாட்டிற்கோ ஒரு சமூகத்திற்கோ ஒரு தனி மனிதனுக்கோ எதற்காக இருக்க வேண்டியது? ஒரு தேசத்தையோ சமூகத்தையோ கட்டுப்படுத்தி ஒற்றுமைப் படுத்துவதற்காகவா? பிரித்து வைப்பதற்காகவா? அது ஒரு மனிதனின் மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்டதா? அல்லது ஒரு மனிதனின் மனச்சாட்சியைக் கட்டுப்படுத்தக்கூடியதா? மனிதனுக்காக மதமா? மதத்துக்காக மனிதனா? என்பவைகளைத் தயவு செய்து யோசித்துப் பாருங்கள்”. - குடி அரசு - 11.09.1927

உலகில் இன்று, இனம், மொழி, மதம், ஜாதி, கலாச்சாரம், இருப்பிடம் இவைகளின் மீதான ஆதிக்கத்தை தக்கவைப்பதற்காக ஒருவர் மீது ஒருவர், ஒரு நாட்டின் மீது இன்னொரு நாடு எப்போதும், ஏதோ ஒரு மூலையில் சண்டை நடந்து கொண்டேயிருக்கிறது.

தற்போது உலகமயமாதல் சூழலுக்கேற்ப பொருளாதாரத்தின் மீதும் சண்டை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. உலகத்தின் இயக்கவியலாக மாறிவிட்ட இந்தப் போரில் எப்போதும் முதல் பலி பெண்கள் தான். உள்ளூர்ச் சண்டை முதல் உலகளவில் நடைபெறும் போர்கள் வரை ஆயதங்களைப் பயன்படுத்தி எதிரிகளை அழிப்பதை விட, அடுத்த நாட்டுப் பெண்களின் உடல்கள் மீது நடத்தும் பாலியல் தாக்குதல்கள் தான் அனைவரையும் நிலைகுலையச் செய்கிறது.

இத்தகைய சண்டைகளுக்கு மிகவும் அடிப்படையான காரணிகளில் மதம் ஒரு முக்கியப் பங்குவகிக்கிறது. உலகம்  பரிணாம வளர்ச்சியில் தான் உருவானது என்று டார்வின் போன்ற அறிஞர்களால் நமக்கு அறிவியல் கற்றுத் தரப்பட்டிருக்கிறது.

மதவாதிகளால் மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே, மதமும் தோன்றியது என்ற வாதமும் வைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. முதலில் கிருத்தவம் தோன்றியதாகவும், அதன் பிறகு இஸ்லாம் தோன்றியதாகவும் கிருத்துவ மதவாதிகளும், இல்லை இஸ்லாம் தோன்றிய பின் தான் கிருத்துவ மதம், அதன் பின் மற்ற மதங்கள் தோன்றின என்று இஸ்லாமிய மதவாதிகளாலும் சொல்லப்படுகிறது. எது முதலில் தோன்றின என்ற பிரச்சனை நமக்குத் தேவையில்லை. அன்பையும், ஒழுக்கத்தையும் போதிக்கவே மதங்கள் தோன்றின என்ற சொல்லப்பட்ட கூற்று, பின்னாளில் எப்படி மனிதனை குறிப்பாக நமது பெண்களை அடிமைப் படுத்தியது என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

கிறித்துவத்தில் பாலினப் பாகுபாடு

கிருத்துவ மதம் சொல்லும் ஆதாம் - ஏவாள் கதையில் கூட ஒரு கனியை கடவுளின் கட்டளையை மீறி உண்டதனால் இருவருக்கும் தண்டனை வழங்கப் படுகிறது. அதில் ஆதாமுக்கு மிக சாதாரணத் தண்டனையாக நீ குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு சிரமப்படுவாய் என்றும். ஏவாளுக்கு ஆதாமின் வித்தைப் பெற்று அதனால் கரு உண்டாகி மிகவும் சிரமப்பட்டு குழந்தைகளைப் பெற்றெடுப்பாய் என்று ஒரு தலைப் பட்சமாக தீர்ப்பு வழங்குவார்.

இது கதையாக இருந்தாலும் அன்றே தொடங்கிவிட்டது பெண்களின் மீதான பாரபட்சமும் கொடுமையும். அனைவருக்கும் கல்வி, சமஉரிமை ஆகியன தான் கிருத்துவமதம் வளர மிகவும் உறுதுணையாக இருந்தன. விருப்பட்ட பெண்களுக்கு, கடவுள் ஊழியம் என்ற பெயரில் கன்னியாஸ்திரியாக மாறும் சூழலுள்ளது. இந்தக் கன்னியாஸ்திரிப் பெண்களுக்கு அந்த மத குருமார்களால் பாலியல் கொடுமையும் அரங்கேறி வருகிறது என்பதை நாம் அவ்வப்போது செய்தித் தாள்களில் படிக்கிறோம்.

அனாதை இல்லஙகள் நடத்திவரும் மத குருமார்கள் ஒரு சிலர் அங்கிருக்கும் குழந்தைகள் மீது பாலியல் வன்முறையைப் புகுத்துகிறார்கள். சமீபத்தில் ஒரு பாதிரியார் பெண்கள் ஜீன்ஸ் போன்ற உடைகளை அணிந்தால், கை காலைக் கட்டிக் கடலில் தூக்கி எறியவேண்டும் என்று கூறினார். ஒரு பாதிரியாரால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப் பட்ட கன்னியாஸ்திரி ஒருவருக்கு கேரளா-மலபார் சர்ச் ரூ 12 லட்சம் நட்ட ஈடாக வழங்கியுள்ளது.

இஸ்லாமியத்தில் பாலினப்பாகுபாடு

இஸ்லாம் மதத்தில் பெண்களின் நிலை படுமோசமாகத் தான் உள்ளது. பெண்கள் பர்தா போடுவது, வாரிசுக்காக வயதில் மூத்த ஆண்கள், சிறுவயதுப் பெண்களைத் மணமுடிப்பது, பெண்களைப் பள்ளிவாசலில் அனுமதிக்க மறுப்பது, அஜ்ரத் பணியில் பெண்களை சேர்க்காமல் இருப்பது, மனைவியைப் பார்க்காமலேயே “தலாக்” என்ற வார்த்தையப் பயன்படுத்தி விவாகரத்து செய்து அதன் மூலம் பல மணம் புரிவது, பெண்களைப் பிள்ளை பெறும் இயந்திரங்களாகவே பாவிப்பது போன்ற கொடுமைகள் இன்றும் நடந்துவருகிறது.

பெண்கள் வெளியே செல்லும்போது தங்கள் உடம்பை முழுவதும் மறைக்கும் விதமாக பர்தா போன்ற ஆடை அணியவேண்டும். அந்நிய ஆடவர் முன்னால் செல்லக்கூடாது. தொழுவதற்காக பள்ளிவாசல் செல்லக்கூடாது. எந்த இறுதிச் சடங்குக்கும் செல்லக்கூடாது. Prophet Mohamed- (Bukhari Hadis 1st vol-Book4-no149). 

கர்நாடகத்தின் சிமோகாவில் உள்ள சாகர தாலுக்காவைச் சேர்ந்த 22 வயது சுஹானா சையத் ஜீ டிவியில் நடைபெற்று வரும் நிகழ்ச்சி ஒன்றில் கன்னடப் படமான கஜாவில் வரும் “ஸிரீகரனே, சீனிவாசனே” என்ற பக்திப் பாடலைப் பாடி தன் குரலால் அனைவரையும் அசத்தினார். இதனை எதிர்த்து ‘மங்களூர் முஸ்லீம்’ என்கிற முகநூல் பக்கத்தில் ‘பிற மதத்து ஆண்களுக்கு மத்தியில் பாடல் பாடி பாராட்டுப் பெறுவது பெருமையல்ல’ என்றும் ‘இஸ்லாமிய மதத்துக்கே களங்கம் ஏற்படுத்திவிட்டீர்கள்’ என்றும் கண்டனம் தெரிவித்து பல பதிவுகள் வந்தன. இதன் எதிரொலியாக அந்தப் பெண் பாடிய பாடல் யூடுயூப்பிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது.

உலகில் உள்ள முக்கியமான இரண்டுமதங்களும் பெண்களை எவ்வாறு நடத்துகின்றன என்று பார்த்தோம். வேறு எந்த மதத்திலும் பெண்கள் சிறப்பாக நடத்தப்படவில்லையா? என்றால் ஒரே ஒரு மதத்தைச் சொல்லாம். அது பவுத்தம் மட்டுமே. அதில் மட்டும் தான் பெண்களின் நிலை மிகவும் சிறப்பாக இருந்தது. பெண்கள் மிகவும் படித்தவர்களாகவும், குடும்பத் தலைவர்களாகவும்., மடங்களை நிர்வகிப்பவர்களாகவும், பல்கலைக் கழகங்களில் பணிபுரிபவர்களாகவும் இருந்தார்கள். ஏனென்றால் பவுத்தம் மதமாக எப்போதும் இருந்ததில்லை, அது ஒரு அறநெறியாகத் தான் இருந்தது. பின்னால் வந்த பார்ப்பனீயம் தான் அதை உள்வாங்கி மதம் என்று மாற்றியது.

இந்து மதத்தின் அடிப்படையே அடிமைத்தனம்

அடிமைத்தனத்திற்கென்றே ஒரு மதமிருக்கிறதென்றால் அது இந்துமதம் தான். பார்ப்பனர்கள் தாங்கள் பிழைப்பதற்கு வேதகாலத்திலிருந்து சடங்குகள், சம்பிராதயங்கள், மூடப்பழக்க வழக்கங்கள் போன்றவற்றை ஏற்படுத்தி மக்களை அறியாமை இருட்டில் தள்ளும் கொடுமைகளைச் செய்து வருகின்றனர்.

இந்து மதத்தில் ஒரு ஆண் தன்னுடைய பிறப்பிலிருந்து இறப்புவரை அவருடைய குல தெய்வத்தையே வழிபடுகிறார்கள். ஆனால் பெண் ஒரு வீட்டில் மகளாக இருக்கும்போது தன் தந்தையின் குலதெய்வத்தையும், மணமுடித்த பிறகு தன் கணவன் குடும்பத்தாரின் குலதெய்வத்தையும் வழிபட வற்புறுத்தப் படுகிறார். இந்தச் சடங்குகளின் மூலம் ஒரு ஆண் தன் சாதிப் பழக்க வழக்கங்களைப் பெண் மீது திணித்து சாதி மற்றும் மத மூடப்பழக்கங்களையும் கூடுதலாக ஆணாதிக்கச்சிந்தனையும் வளர்க்கிறார்கள்.

கூட்டுக்குடும்பங்கள் அழிய வேண்டும்

இந்து மதம் கூட்டு குடும்ப அமைப்பு முறையைக் காலம் தோறும் கட்டாயப்படுத்திக் கொண்டே வருகிறது. அப்போது தான் வீட்டில் மூத்தவர் பின்பற்றிய மூடப்பழக்கங்களையும், சடங்குகளையும் தொடர்ந்து கொண்டு செல்ல முடியும். அந்த வீட்டிற்குப் புதிதாக வரும் பெண்களுக்கு இது தான் இந்து மதம் என்று சொல்லாமல், இது தான் எங்கள் குடும்ப வழக்கம் என்று அந்த வீட்டுப் பெண்களாலேயே சொல்லப்படுகிறது. தான் கடைப்பிடித்த அடிமைத்தனம் வாழையடி, வாழையாக கைமாற்றப் பட்டுக்கொண்டே இருக்கிறது.

தனிக் குடும்ப அமைப்புகளில் பெண்கள் தங்கள் கருத்தை சொல்வதற்குச் சிறிதளவேனும் உரிமை உள்ளது. தனிக் குடும்பம் வேண்டும் என்று சொல்லும் பெண்களை இந்தச் சமூகம் எப்போதும் ஒரு விரோதியாகவே சித்தரிக்கிறது. ஆனால் காலப்போக்கில் நகரமயமாதல் மற்றும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக கூட்டுக் குடும்ப அமைப்பு குறைந்து கொண்டே வருகிறது. தனிக்குடும்ப முறை பெண்கள் குறைந்த பட்சம் தங்களின் சுயவிருப்பு, வெறுப்புகளை வெளிப்படுத்துவதற்கு ஒரு வடிகாலாக அமைகிறது.

இந்து மதத்திணிப்புகளான  பெண்கள் அணியும், தாலி, குங்குமம், மெட்டி, மஞ்சள், போன்றவை கூட்டுக் குடும்ப முறையில் கட்டாயமாக்கப்பட்டு பெண்களை நிரந்த அடிமைகளாகவும், மதச் சடங்குகளை விட்டு எப்போதும் விலகாமல் வைத்திருக்கிறது. மாதவிடாய் சமயங்களில் பெண்களை வீட்டின் பின்பக்கம் எந்த விதமான வேலையையும் செய்யவிடாமல் தனிமைப்படுத்திவிடுவார்கள். வீட்டிலே இப்படி என்றால் கோயில்களில் அனுமதி என்பதே இல்லை. மேலும் கோயில் திருவிழாக்களுக்காக பெண்கள் இயல்பாக வரவேண்டிய ’மாதவிடாய்’ சுழற்சி முறையை விழா முடியும் வரை தள்ளிப் போட மாத்திரை எடுத்துகொள்கிறார்கள். மணமாகாத பெண்கள் இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் பிற்காலத்தில் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகிறார்கள்.

womens freedom 450ஒவ்வொரு வீட்டிலும் ஒரு காட்டுமிரண்டி

இதே போல் கோயில்களில் மணமுடிக்கும் பெண்களும் மண நாளன்று ‘மாதவிடாய்’ வந்துவிடக் கூடாது என்பதற்காக மாத்திரைகளை எடுத்து தள்ளிப்போடுகிறார்கள். ஒரு வீட்டில் தந்தையோ,  சகோதரனோ அல்லது மகனோ சாமிக்கு மாலை என்ற பெயரில் அணிந்து கொண்டு காட்டு மிராண்டியாய் திரியும் போது, வீட்டில் உள்ள பெண்களுக்கு ‘மாதவிடாய்’ ஏற்பட்டால் அந்த அம்மாவோ, மகளோ அல்லது சகோதரியோ இந்த காட்டுமிராண்டிகளின் முகத்தில் முழிக்கக்கூடாது என்றும் சமைக்கவும் கூடாது என்று சொல்லி அவரை வேறு யாராவது உறவினர் வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள்.

இந்த உலகில் அனைத்து உயிரினங்களும், ஏன் மேலே சொன்ன காட்டுமிராண்டிகளும் தோன்றுவதற்குக் காரணமாக இருப்பதுதான் பெண்களின் இந்த ‘மாதவிடாய்’.  வேறு எந்த மதத்திலும் இந்தக் கொடுமை இல்லை. இந்துமதத்தில் மட்டும்தான் பெண்களின் வாழ்க்கையில் இயல்பாகவும், அறிவியல் ரீதியில் சரியான ஒன்றை ‘தீட்டு’ என்று சொல்லிப் பெண்களைக் கொச்சைப் படுத்துகிறார்கள். பெண்களைப் பூசாரியாக எந்தக் கோயிலிலும் அனுமதிப்பதில்லை.  இன்னும் ஒரு சில கோயில்களில் (சபரிமலை) ‘மாதவிடாய்’ ஏற்படும் பெண்களை ‘மாதவிடாய் ஏற்படாத காலங்களில் கூட ‘பக்தையாகக் கூட அனுமதிப்பதில்லை.

பார்ப்பனக் கூட்டம் தன் இனம் வளர்வதற்காக இல்லாத ஒரு மதத்தை ஏற்படுத்தி, உலகில் எந்த மதத்திலும் இல்லாத அளவுக்கு மதச் சடங்குகளையும் அதன் மூலம் அடிமைத் தனத்தையும், குறிப்பாக பெண் அடிமைத்தனத்தையும் ஏற்படுத்தி அதை நாமே பின்பற்றுமாறு செய்துள்ளது. இது தான் பார்ப்பன உக்தி.

மதங்கள் உலகில் அன்பையும், ஒழுக்கத்தையும் போதிக்கவே தோன்றின என்று சொல்லப் படுகிறது. ஆனால் மதங்கள் இந்த வேலைகளை விட மூட நம்பிக்கையும், அடிமைத்தனத்தையும் தான் அதிகம் வளர்க்கின்றன. மதம் எப்போதும் தத்துவங்களாக மட்டும் தான் இருக்க வேண்டும். தத்துவங்களாக இல்லாமல் இருக்கும் போது தான் ‘எது பெரியது’ என்ற குழப்பம் ஏற்பட்டு நாட்டில் மதச் சண்டைகளும் அதனால் பல்லாயிரக்கணக்கான உயிர்களும் பலியாக நேருகிறது.

மதத்தின் பெயரால் பல நூறு ஆண்டுகளாக நடக்கும் சிலுவைப் போரைப் பற்றி நமக்கு நன்றாகத் தெரியும். ஒரே மதத்தில் உள்ள சன்னி, ஸியா பிரிவு முஸ்லீம்கள் ஈராக்கில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு பல ஆயிரம்பேர்கள் இறந்ததையும் நாம் மறந்துவிட முடியாது. இலங்கையில் பவுத்தம் ‘நெறியாக’ இல்லாமல் மதவெறியாக மாறியதால் பல இலட்சம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப் பட்டார்கள். இங்கும் இந்து மதத்தின் பெயரால் எண்ணற்ற மக்கள் கொல்லப்பட்டதற்கு நாம் எல்லோரும்  தான் நிகழ்கால சாட்சியங்கள்.

ஒவ்வொரு சிற்றூரிலும் ஒரு சுடர் உண்டு - அவர் ஆசிரியர், சுடரை அணைப்பவர் உண்டு - அவர் மத குரு. - விக்டர் ஹூகோ

மதம் என்கிற விசயங்களும் நமக்குப் பெரிய ஆபத்தாகவே இருக்கிறது. மதம் என்பதை ஒழுக்கத்திற்கான கொள்கைகள் என்பதாகவே எண்ணாமல் சில சடங்குகள் என்பதாகவே கற்பிக்கப்பட்டிருக்கிறது. 18.09.1927 குடிஅரசு, தோழர் பெரியார்

Pin It