1980களின் இறுதிப்பகுதியில் இளையராஜா ஒரு வாரப்பத்திரிகையில் Johann Sebastian Bach பற்றி ஒரு சிறிய தொடரை எழுதினார். அதைப் படிப்பவர் எவருக்கும் அவருக்கு சங்கீத மும்மூர்த்திகளிடம் எவ்வளவு பிரேமையும், பக்தியும் மதிப்பும் உண்டோ அதற்கு இணையாக J.S. Bachம் ஒரு மஹானுபாவராக இராகதேவனாக அவரால் போற்றப்படுவது தெரியவரும். பின்னால் அக்கட்டுரைகளின் தொகுதி ஒரு சிறிய நூலாகவும் வெளிவந்ததுண்டு.
என் புலம்பெயர்வாழ்வின் ஆரம்பத்தில் அரசுதரும் உதவிப்பணத்தில் வாழ்ந்துகொண்டிருந்தகாலை ஒருநாள் பெர்லினில் Kiperts என்னும் பாரிய புத்தகக்கடையினுள் மேய்ந்துகொண்டிருந்தபோது அங்கே இசைநூல்களின் பகுதியில் J.S.Bach பற்றிய ஒரு அருமையான நூல் இருப்பதைக் கண்டேன். அட்டையில் அவரது ஓவியம் உள்ளே J.S. Bachன் பிறந்த மனை, அவர் படித்த பள்ளிக்கூடம், பயின்ற இசைக்கல்லூரி, பணிபுரிந்த Leipzig St.Thomas தேவாலயம், 300 கிமீட்டர்கள் கால்நடையாக நடந்து சென்று இசைநிகழ்ச்சி பார்த்த ஹம்பேர்க்கின் ஓபரா கலைக்கூடம் எனப் பல அரிய படங்களுடன் வழுவழுப்பான உயர்ந்த தாளில் செம்பதிப்பாக அந்நூல் பதிக்கப்பட்டிருந்தது. உடனே எனக்கு இந்நூலை இளையராஜா பார்க்க நேர்ந்தால் எவ்வளவு சந்தோஷப்படுவார் என்றுதான் தோன்றியது. விலையப் புரட்டிப் பார்த்தேன் 50 D.Marks என்றிருந்தது. அதை அனுப்புவதற்கும் இன்னொரு 50 D.Marks தேவைப்படும் என்பது தெரிந்ததுதான். அது இங்கே ஒரு மாதத்தை ஓட்டுவதற்குத் தேவையான தொகை. எனினும் அதை வாங்கி அவருக்கு விமான அஞ்சலில் அனுப்பிவைத்தேன். "பெற்றுக்கொண்டேன் நன்றி” என்று இரண்டு வார்த்தைகள் எழுதுவாரென்பது என் நியாயமான எதிர்பார்ப்பு. நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள் எல்லாம் ஆயின. பதில் இன்றுவரை இல்லை.
சில ஆண்டுகளின் பின் முனைவர் வா.மு. சேதுராமன் தலைமையில் இயங்கும் பன்னாட்டுத்தமிழ் மன்றம் பெர்லினில் நடத்திய ஒரு மகாநாட்டுக்காக வந்திருந்த கவிஞர் இரவிபாரதி என்னுடன் சிலநாட்கள் தங்கினார். இவர் பாலுமகேந்திராவின் ‘மறுபடியும்’ படத்தில் ரோஹிணி பாடி ஆடும் ”ஆசை அதிகம் வைச்சு மனதை அடக்கி வைக்கலாமா என் மாமா” என்கிற பாடலை எழுதியவர். (எம்.கே.தியாகராஜா பாகவதரின் சகோதரரின் மகனாகிய இவர் திரு. மூப்பனாரின் காரியதரிசியாகவும் சிலகாலம் பணியாற்றியவர்) மூச்சுக்கு மூச்சு நம்மிடம் இளையராஜாவின் கொடியை உயர்த்திப் பிடித்தபடிக்கு இருந்தார். இளையராஜா மீது சற்றுகோபமாக இருந்த நான் அவரிடம் இளையராஜாவுக்கு Johann Sebastian Bachன் நூல் அனுப்பிவைத்த கதையைச் சொன்னேன். “அட நீங்க ஒண்ணு“ என்றுவிட்டுத் தன் கதையைச் சொனார் இரவிபாரதி:
“ஒரு நாள் இளையராஜாவிடமிருந்து வீட்டில் வந்து சந்திக்கும்படி போன் வந்தது என்றார்கள். ஏதோ இன்னொரு பாட்டு எழுதுற சான்ஸாக்குமென்று ஸ்கூட்டரை விரட்டிக்கொண்டு உடனே சென்றேன். விஷயம் என்னவென்றால் அவர்கள் வீட்டில் திருட்டுப்போயிருந்தது. அவர்கள் வீட்டின் உதவியாள் ஒருவர் (அவரும் திருச்சியைச் சேர்ந்தவர்) ஒரு இலக்ஷம் ரூபாய் பணத்தை (சரியான தொகையை இங்கே நான் தவிர்த்துள்ளேன்.) உருவிக்கொண்டு ஓடிவிட்டார். நாங்கள் பொலீஸுக்குப்போக விரும்பவில்லை. உங்கள் ஊர்க்காரர்தானே, நீங்கள், ஆளைப்பார்த்துப் பேசி, பணத்தை எப்படியாவது மீட்டுத்தந்துவிடுங்கள்’ என்றனர் அவரும் மனைவியுமாக.
திருடிச்சென்றவனிடம் பணத்தை மீட்பதாவது! எனக்குச் சற்றும் நம்பிகையில்லை. எனினும் ஒருதரம் முயன்றுதான் பார்ப்போமேயென்று தாமதமின்றி உடனே ஒரு வாடகைக்காரை வைத்துக்கொண்டு இன்னொரு நண்பனையும் கூட்டிக்கொண்டு திருச்சிக்குப் புறப்பட்டேன். அவனது வீட்டை ஒருவாறு கண்டுபிடித்து எமது வண்டியை தூரத்தில் நிறுத்திவைத்துவிட்டு கால்நடையாக அவனுடைய வீட்டுக்குப் போனோம். அவனோ வீட்டில் சமர்த்தாகச் சம்மணமிட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். என்னை அவனுக்கு முன்பே தெரியுமாதலால் எம்மைக் கண்டவுடன் ஆளுக்குச்சிறிது பதட்டம் உண்டானது தெரிந்தது. அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்தோம். என்னுடன் கூடவந்த நண்பரும் ஒரு காவல்துறை அதிகாரியைப் போலவே பார்வைக்கு வாட்டசாட்டமாக இருப்பார். சாப்பாடானதும் நாங்கள் அவனைத் தனியே அழைத்துப்போய் நைஸாக கதையைக் கொடுத்தோம். ’இளையராஜா சாருக்கு இன்னிக்கு உலகத்தில இருக்கிற செல்வாக்கு உனக்கு தெரியாததல்ல, உன்னை என்ன வேணுமானாலும் அவர் பண்ணலாம். இருந்தும் அவர் நல்ல மனுஷன். உன்னை உதைக்க வைப்பதையோ, ஆறேழு வருஷங்கள் உள்ள தள்ளிக் களி திங்க வைக்கிறதையோ அவர் விரும்பல. அவர் கேஸ் கோர்ட்னு எதுக்கும் போகமாட்டார். உன்னை மன்னிச்சுடுவார். பணத்தைக் கொடுத்திடுபா’ என்றோம். அவனுக்கு கண்கள் கலங்கியேவிட்டன. ’ஏதோ சபலத்துல செஞ்சுப்புட்டேன்…………. சார். கண்டவர் கண்ணிலும் படும்படிக்கு அவங்க பணத்தை அப்பிடிக் கேர்லெஸா போட்டுவைக்கலாமா’ என்று ஏதோ அவர்கள்தான் தவறு செய்தவர்கள் மாதிரிப் பேசினான். வீட்டுக்குள் போய் ஒரு ப்ரௌண் தாள் பையிலிருந்து பணத்தைக் கொண்டுவந்து தந்தவன் ‘ ஒரு முன்னூறு ரூபா எடுத்துப்புட்டேங்க ரயில் செலவுக்கு’ என்றான். பணத்தை மீட்டுவந்து கொடுத்தோமே மனுஷனுக்கு 'நன்றி’ என்றொரு வார்த்தைதான் சொல்லத் தெரியலை. எமது வண்டிச்செலவையோ பெட்ரோல் செலவையாவது கொடுக்கணும்னு தோணிச்சா. இன்றுவரை இன்னொரு படத்துக்கு ஒரு குத்துப்பாட்டு எழுதவாவது கூப்பிட்டிருப்பாரா?” என்று இப்படியாக முடித்தார்.
ஒருமுறை ஏ.ஆர்.ரகுமான் பிரபலமாகி வந்து கொண்டிருந்த நேரம் நட்புரீதியிலான ஒரு உரையாடலின்போது ஒர் நிருபர் கேட்டாராம் ”ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களில் எது உங்களுக்குப் பிடித்திருக்கிறது? இளையராஜா அக் கேள்வியே காதில் விழாதாதிருக்கவும் அவர் திருப்பி மீண்டும் வேறுமாதிரி “கொஞ்சம் சரிசெய்தால் கேட்குபடி இருக்கும் என்று ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களில் எதையாவது நீங்கள் நினைத்ததுண்டா?" என்று கேட்கவும் "நான் ருசியான முழுச் சாப்பாடு போடுகிறவன் கண்ணா…… எங்கிட்ட பொப்கார்ன் பற்றிய பேச்செல்லாம் எதற்கு?” என்றாராம். இதை முழுவதாக நம்பலாம். காரணம் அவர் இந்த ’பொப்கார்ன் ’என்கிற வார்த்தைப் பிரயோகத்தை சிங்கப்பூரிலும் ஒரு மேடையில் செய்திருக்கிறார். ஞானியாகவே இருந்தாலும் இன்னொருவருடைய திறமையை ஒப்புக் கொள்வதில் தயக்கம். தன்னை ஒரு தலித்தென்று ஒப்புக் கொள்வதில் தயக்கம்.
இளையராஜா என்னதான் தன்னை ஒரு சித்தனாக மெஞ்ஞானியாக கற்பித்துக் கொண்டாலும் சனாதன வழிபாட்டுமுறைகள், ஆச்சார பூஜா புனஸ்காரங்களன்ன அவரது நடவடிக்கைகள் அவர் இன்னும் social-morals , Sociology சார்ந்த விஷயங்களில் பாஸாகவில்லை என்பதைத்தான் காட்டுகின்றன. இல்லாவிடில் “ராஜா கையை வைத்தால் அது ராங்காப் போனதில்லை“ போன்ற எம்.ஜி.ஆர் பாணிப் பிரதிக்னைகளை எல்லாம் பண்ணியிருக்க முடியாது.
இசையும் ஒரு சமையல் முயற்சிபோலத்தான், நல்ல சமையல்காரர் என்பதற்காக அவர் சமையல் எப்போதும் அசத்தலாக அமைந்துவிடுமென்று இல்லை. எதிர்பார்க்கவும் முடியாது. மதுராந்தகத்தில் ஒரு பாட்டி யாழ்ப்பாணத்துப்பாணியில் அருமையான பாலப்பம் சுடுவாரென்று சொன்னார்கள். நாலு நண்பர்கள் சேர்ந்து ஐம்பது கி.மீ தூரத்துக்கு வாடகைக்கார் வைத்துக்கொண்டு போனோம். அன்று அவர் சுட்ட அப்பங்களின் சுவையோ மிகச் சாதாரணமாகவே இருந்தது.
நாட்டுப்புற இசையை அரங்கறியச் செய்த இம்மாமேதை திருவாசகம் சிம்பொனியைக்கூட அவர் ஒருவிதமாகச்செய்ய நினைத்து அதுவேறொரு விதமாக வந்துவிட்டதுபோலத்தான் படுகிறது. திருவாசகத்தின் உயிரே அதன் உருக்கந்தான். ஆனால் இத்தனை வாத்தியங்களையும் கலைஞர்களையும் வைத்துக் கொண்டு சிம்பொனியாக இசைத்ததில் அச்சாகித்தியத்தின் உருக்கமும் நெகிழ்வும் ரசமும் காணாமல் போய்விட்டன. இசை தனியாக நிற்கிறது. பரவாயில்லை ஆனாலும் அவர் இன்னும் ஒரு “நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மாவுக்காக” எமக்குத் தேவையானவராகவே இருக்கிறார். பத்மபூஷன் அன்ன லோகாயத விருதுகளை விடவும் உலக மக்கள் மனதில் தீராது ரீங்கரித்துக் கொண்டிருக்கும் எத்தனையோ வர்ணமெட்டுக்களை உற்பத்தி செய்ததனால் அவர்தம் மனதிலும் வாழ்ந்து நினைக்கப்படுபவர் என்பதுதான் அவருக்குப்பெருமை.
மானுட விழுமியங்களில் மறுக்கள் மாறுபாடுகள் உள்ள ராஜா எப்படியாவது இருந்து விட்டுப் போகட்டும் சகித்துக் கொள்வோம். ஆனால் இசைஞானமும், வர்ணக் கற்பனைகளும், படைப்பூக்கமுமுள்ள இளையராஜா என்கிற ஜீனியஸ் எங்களுக்கு என்றுந்தேவையானவர், அவரைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது எமது கடமையும்.
- கருணாகரமூர்த்தி, பெர்லின்