இளையராஜா மீது கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் பல அவரை ஒட்டுமொத்தமாக பண்புநீக்கம் செய்யும் விதத்தில் எந்தவித சமூக அறிவும் அற்றதாக உள்ளது. நமக்கும் கூட நீண்ட நெடுநாட்களாக அவரின் மீது மிகப்பெரும் கோபம் வெளிக்காட்டப்படாமல் உள்ளேயே பத்திரமாக வைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் அதை வெளிக்காட்டுவதற்கான வார்த்தைகளை எங்கிருந்து எப்படிப் பெறுவது என்ற குழப்பமும் உள்ளது. நமக்கு மிகவும் பிடித்த, நம்மில் கரைந்த ஒருவரை அவர் ஏதாவது தவறு செய்துவிட்டால் நாம் ஒருகணம் திட்டுவதற்கு யோசிப்போம். நம்முடைய பேச்சோ, ஒரு சிறு முக பாவனையோ அவரை நம்மிடம் இருந்து நிரந்தரமாகப் பிரித்துவிட்டால் என்ன செய்வது என்று அச்சப்படுவோம். கூடுமானவரை அன்பாகச் சொல்லி அவரின் குற்றத்தைப் புரிய வைக்க முயற்சிப்போம். ஒரு பிறந்த குழந்தையை கையில் தூக்குவது போல, கண்ணில் விழுந்த தூசியை கண்நோகாமல் எடுப்பது போல, காம நெடி சிறிதுமற்று காதலியை முத்தமிடுவதுபோல மிக மிக கவனமாக அதை செய்ய முயற்சிபோம்.

ilayarajaஉலகில் குற்றங்களுக்கு அப்பாற்பட்ட மனிதர்கள் என்று யாருமே இல்லை. ஆனால் நம்மிடம் இருக்கும் குற்றங்களை அடையாளம் காணுவதும் அதைக் கடந்துவர முயற்சிப்பதும்தான் நம்மைப் பிறரிடம் இருந்து மேன்மையானவர்களாக வைத்துக் கொள்ள உதவுகின்றது. நம்மீதும், நம் நடத்தையின் மீதும் பிறரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும்போது அதில் இருக்கும் நியாயங்களைப் பரிசீலித்து தவறு இருக்கும் பட்சத்தில் சுயவிமர்சனம் செய்து கொள்வது என்பது நம்மைத் தொடர்ந்து நேர்மையாளர்களாகவும், பிறர் மதிக்கும் நபர்களாகவும் வைத்துக் கொள்ள உதவும். ஆனால் இந்தத் தன்மை எல்லோரிடமும் இருப்பதில்லை. சிலர் விதிவிலக்காக இருக்கின்றார்கள், சிலர் விதிவிலக்கு கேட்கின்றார்கள். ஆனால் விதி என்று வரும்போது அது அனைவருக்கும் சமமானதாக இருப்பதுதானே முறை. ஒருவர் திறமையானவர் என்பதற்காக‌வோ, மேன்மையானவர் என்பதற்காக‌வோ, தவிர்க்க முடியாதவர் என்பதற்காக‌வோ தனக்கு விதிவிலக்கு வேண்டும் என்று கேட்பதும், சிலர் கொடுக்கப்பட வேண்டும் என்று நிர்பந்திப்பதும் சனாதன சிந்தனையாகும்.

இளையராஜாவின் இசையைப் பற்றி விமர்சிக்கும் அளவுக்கு நமக்கு இசை ஞானம் எல்லாம் கிடையாது. நமக்கு ஸ,ரி,க,ம,ப,த,நி தெரியாது, சாரிரமும் தெரியாது, தாளகதியும் தெரியாது. ஆனால் இளையராஜாவின் இசையை கண்களை மூடி பல மணி நேரம் கேட்கத் தெரியும். துன்பங்களற்ற பெருவெளியில் ஒரு பறவையைப் போல பறக்கத் தெரியும். அதைச் சிலர் போதையைப் போல் என்கின்றார்கள். ஆனால் அதை எப்படி போதை என்று சொல்ல முடியும்?. இசை என்பது சூக்குமமானது. அதற்கு முற்போக்கு, பிற்போக்கு என்ற எதுவும் கிடையாது. இசையின் மீது போர்த்தப்படும் வார்த்தைகள்தான் அதன் உருவத்தை மாற்றியமைக்கின்றது. தண்ணீர் அது ஊற்றப்படும் பாத்திரத்தின் வடிவத்தைப் பெறுவது போல இசையும் வார்த்தைகளுக்கு ஏற்ப தன் வடிவத்தை மாற்றிக் கொள்கின்றது. வெறும் இசை என்பது தன்னளவில் சுயேட்சையானது, நாம் அப்படித்தான் இளையராஜாவின் இசைக் கோர்வைகளை, தாளகதியை ரசிக்கின்றோம். நீங்கள் பீத்தோவனின் மூன்லைட் சொனட்டாவை (moonlight sonata) கேட்டிருக்கின்றீர்களா?. இசையின் வெற்றி என்பதே சொல்ல முடியாத வார்த்தைகளை ,வெளிக்காட்ட முடியாத உணர்வுகளை வெளிப்படுத்துவதுதான். அதற்கு ஒரு இசைக்கலைஞன் மனவெழுச்சியின் உச்சத்தைத் தொடும் திறன் பெற்றவனாக இருக்க வேண்டும். அதற்கு ஓர் இசைக்கலைஞன் இசைக்கருவிகள் பற்றிய அறிவைத் தாண்டி சமூகத்தின் ஆன்மாவை உள்வாங்கியவனாக, அதைக் கலப்படமற்று வெளிப்படுத்துபவனாக இருக்க வேண்டும். அது இல்லை என்றால் ஓர் இசைக்கலைஞன் வெளிப்படுத்தும் இசை எந்தவித உணர்வும் அற்று வெற்று சத்தங்களாகவும், இரைச்சலாகவுமே இருக்கும்.

இளையராஜவின் இசை நம்மை ஆற்றுப்படுத்துவதற்கும், ஆழமான மன உணர்வுகளில் சஞ்சரிக்க வைப்பதற்கும் காரணம் இந்த மண்ணின், மக்களின் உணர்வுகளை பிசிறு தட்டாமல் அப்படியே பிரதிபலிப்பதுதான். அது அவருக்கு இயல்பாகவே கைவந்திருக்கின்றது. இளையராஜா பண்ணைபுரத்தில் இருந்து வெறும் ஆர்மோனியப் பெட்டியோடு மட்டும் சென்னைக்கு வரவில்லை; அந்தப் பண்ணைபுரத்து மக்களின் நாட்டுப்புற இசையையும், பாவலர் வரதராஜனோடு ஆயிரக்கணக்கான கச்சேரிகளில் சாமானிய உழைக்கும் மக்கள் மத்தியில் கம்யூனிச மேடைகளில் வாசித்து அவர் பெற்ற அனுபவ பொக்கிசத்தையும் எடுத்துக் கொண்டுதான் சென்னைக்கு வந்தார். வறுமையும் வலிகளும் கற்றுத்தரும் படிப்பினைகளைவிட இந்த உலகத்தில் மிகச் சிறந்த படிப்பினை எதுவும் கிடையாது.

இளையராஜாவை விமர்சனம் செய்வதற்கு முன்னால், அவரின் கடந்த கால வாழ்நிலையை கணக்கில் எடுத்துக் கொண்டுதான் நாம் விமர்சனம் செய்ய வேண்டி இருக்கின்றது. இளையராஜா ஒரு ஆன்மீகவாதி, பார்ப்பனியத்தைக் கொண்டாடுகின்றார் என்பதெல்லாம் அவர் மீது விமர்சனம் வைக்கப் போதுமானதல்ல. நம்மைச் சுற்றி இருக்கும் நூறுபேரில் தொன்னுற்று ஒன்பது பேர் பார்ப்பனியத்தை ஏற்றுக் கொண்டவர்கள்தான். அது அவர்களின் தனிப்பட்ட உலக அறிவு, புத்தக அறிவு சார்ந்தது. ஏன் வாழ்நிலையைக் கூட சார்ந்ததுதான். மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ, பெரியார், அம்பேத்கர் போன்றவர்களை உள்வாங்கிய பரந்துபட்ட உலகப் பார்வையோ, பிரச்சினைகளை அக்குவேறு ஆணிவேறாக விமர்சிக்கும் சமூகம் சார்ந்த பார்வைவோ இளையராஜாவிட‌ம் கிடையாது. அவர் தன்னளவில் இந்த மண்ணில் மக்களின் இசையை திறம்பட வெளிப்படுத்துபவராக இருக்கின்றார். அதைத் தாண்டி நாம் எதையும் அவரிடம் எதிர்பார்க்கத் தேவையில்லை.

இளையராஜாவின் இசை எவ்வளவு மேன்மையானதோ, அதற்கு நேர் எதிரானது அவரின் சமூகம் பற்றிய அறிவு. ஒருவன் ஆன்மீகவாதியாக இருப்பதாலேயே அவன் மோசமானவன், மனித விழுமியங்கள் அற்றவன் என்ற முடிவுக்கு வருவது பெரும் அபத்தமாகும். இளையராஜா ஆன்மீகவாதியாய் இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும், அது அவரின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. அதில் தலையிட யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. தான் உண்மை என்று நம்பும் பிற்போக்குக் கருத்துக்களை பரப்புரை செய்வதற்குக்கூட அவருக்கு உரிமையுள்ளது. “ஏசு உண்மையில் உயிர்த்தெழவில்லை, உண்மையில் உயிர்தெழுந்தது ரமண மகரிஷி தான்” என்று இளையராஜா சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும். இதனால் எல்லாம் நாம் இளையராஜாவின் இசை பிற்போக்கானது என்ற முடிவுக்கு வந்துவிட வேண்டிய அவசியமில்லை. அவர் இசைத்துறையில் பல முற்போக்கான காரியங்களை செய்திருக்கின்றார் என்பதும், பல மரபுகளை உடைத்திருக்கின்றார் என்பதும், இந்திப் பாடல்களுக்கு அடிமையாக இருந்த தமிழக இசை விரும்பிகளை நாட்டுப்புற இசையை நோக்கி, தமிழிசையை நோக்கித் திசை திருப்பியவர் என்பதும் இளையராஜாவை கொண்டாடப் போதுமானதாகாதா?

இளையராஜா தன்னுடைய சக இசைக்கலைஞர்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?. இன்று இசை அமைக்கும் பல இசை அமைப்பாளர்கள் உண்மையில் இசை என்ற போர்வையில் வெறும் சப்தத்தையும், இரைச்சலையும் மட்டுமே உண்டு பண்ணுகின்றார்கள் என்பதும், ஒரு கீழ்த்தரமான கலை உணர்ச்சிக்கு மக்களை ஆட்படுத்துகின்றார்கள் என்பதும் உண்மையில்லையா?. எந்தவித படைப்பூக்கமும் அற்ற, தக்கையான தரம்தாழ்ந்த வெற்று சத்தங்களை இசை என்ற போர்வையில் வெளியிட்டு இன்றைய இளைஞர்களை சீரழிக்கும் கும்பல்களுக்கு எதிரான அவரின் விமர்சனத்தில் நியாயம் நிச்சயமாக உள்ளது.

அவர் கடுமையாகப் பேசுகின்றார், தன்னைப் பற்றிய மிகை மதிப்பீடுகளை வைத்திருக்கின்றார், தன்னைத் தவிர பிற இசை அமைப்பாளர்களை அவர் மதிப்பதில்லை, அனைவரும் அவரின் காலில் விழ வேண்டும் என எதிர்பார்க்கின்றார் என பல விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்படுகின்றன. இது எல்லாம் சாதாரண மனித இயல்புகள்தானே ஒழிய ஒரு கொடுங்குற்றத்திற்கு உரிய செயல்களல்ல என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். தன்னளவில் முழுமை பெற்ற மனிதர்கள் என்று இங்கு யாருமே இல்லை. நாம் முன்பே சொன்னது போல நம்மிடம் இருக்கும் சில குறைபாடுகள் நம்மைப் பற்றிய மதிப்பீடுகளை சிதைக்கும் தன்மை வாய்ந்ததாக இருந்தால் அதை நேர்மையாக சுயவிமர்சனம் செய்து கொண்டு வருங்காலங்களில் அப்படியான தவறுகள் நேராமல் பார்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். ஆனால் இதை வைத்துக்கொண்டு ஒருவரை பண்புநீக்கம் செய்ய முயற்சிப்பது தேவையற்றதாகும்.

இன்று இளையராஜாவை ஆதரிப்பவர்களில் பெரியாரிஸ்ட்கள், கம்யூனிஸ்ட்கள் என அனைவருமே உள்ளார்கள். அவர்களுக்கு நன்றாகவே தெரியும், இளையராஜாவின் பார்ப்பன சார்பும், அவரின் பிற்போக்குத்தனமும். ஆனாலும் அவரை பகைமுரண் என்ற இடத்தில் வைத்துப் பார்க்காமல், நட்பு முரண் என்ற இடத்தில் வைத்தே அனைவரும் அணுகுகின்றார்கள். அதற்குக் காரணம் அவரின் இசை மட்டுமல்ல, இளையராஜாவின் சாதியை அடிப்படையாக வைத்து பார்ப்பன சக்திகள் அவரை திட்டமிட்டு இருட்டடிப்பு செய்ய முயல்வதும், அவதூறு பரப்புவதும், அவருக்குக் கிடைத்திருக்க வேண்டிய அங்கீகாரத்தைத் தடுப்பதும்தான் காரணமாகும். இளையராஜா என்னதான் தன்னை பார்ப்பன மயப்படுத்திக் கொண்டிருந்தாலும் பார்ப்பன சக்திகள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. உலகின் மிகச்சிறந்த இசைமேதையாக இளையராஜாவை ஒப்புக்கொள்ள எப்படி ஒரு பார்ப்பன மனம் விரும்பும்.

யார் ஏற்றுக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் உலகின் மிகச்சிறந்த இசைமேதையாக அவர் ஏற்கெனவே அங்கீகரிக்க‌ப்பட்டுவிட்டார். வெற்று ஒலிகளை எழுப்பும் குப்பைகளுக்கு விருது கொடுப்பதால் மட்டுமே அது உயரிய இசையாக ஒருக்காலும் மாறிவிடாது. வியாபாரத்துக்காக அவர் தன்னுடைய இசையில் பல சமரசங்களை செய்து கொண்டு இருக்கின்றார். அதுசில குறிப்பிடத்தக்க சமூக விளைவுகளையும் ஏற்படுத்தி இருக்கின்றது என்பதையும் நாம் மறுக்க முடியாது. ஆனால் அவர் செய்யும் சிறு தவறுகளைக் கூட மிகைப்படுத்தி அவரின் இசைமேதைமையை கீழ்ப்படுத்தப் பார்க்கும் பார்ப்பன, பார்ப்பன அடிவருடி சக்திகளுக்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும். அதுதான் நாம் அவருக்கு செய்யும் உண்மையான மரியாதை.

- செ.கார்கி

Pin It