தமிழகத்தில் பன்னெடுங்காலமாக இருந்து வரும் முக்கிய இசைக்கருவி பறை. அதன் மற்றொரு பெயர் தப்பு. இது தோல் இசைக்கருவி. எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்று உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் தற்போதும் நாட்டுப்புற இசையில் இந்தக் கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் இந்தக் கருவி இடம்பெற்றுள்ளது (சில நேரம் வேறு வடிவங்களில்).

paraiஇக்கருவியில் மூன்று அடிப்படை பாகங்கள் உள்ளன. வட்டச் சட்டம், மாட்டுத் தோல், சட்டத்தின் உட்புறத்தில் பொருத்தப்படும் உலோகத் தட்டு. 35 செ.மீ. விட்டம் கொண்ட வட்டச்சட்டத்தில் தோல் இழுத்துக் கட்டப்பட்டு ஒட்டப்பட்டிருக்கும். சட்டம் பொதுவாக வேப்பமரத்தில் செய்யப்பட்டிருக்கும். பறையை இசைக்க நீண்ட தட்டையான ஒரு மூங்கில் குச்சி, குட்டையான, பருத்த மற்றொரு குச்சி பயன்படுத்தப்படும். கட்டைவிரல், மற்ற விரல்களுக்கு இடையில் குட்டை குச்சியை பிடித்துக் கொண்டு கீழ்புறத்தில் இருந்து அடிக்க வேண்டும். இடது கையின் கட்டைவிரல், ஆட்காட்டி விரல்களில் நீண்ட குச்சியைப் பிடித்துக் கொண்டு மேல் பகுதியில் இருந்து அடிக்க வேண்டும்.

குச்சிகளால் அடித்து ஒலியெழுப்பி இசைக்கப்படும் கருவி இது. வலது கையில் வைத்திருக்கும் குட்டைக் குச்சியால் பறையின் மத்தியில் அடிப்பது ஒரு வகை அடி. பறையைப் பிடித்துள்ள இடது கையில் வைத்துள்ள நீண்ட குச்சியால் அடிப்பது இரண்டாவது வகை அடி. இரண்டு குச்சிகளாலும் அடுத்தடுத்து அடிப்பது மூன்றாவது வகை அடி. இவைதான் அடிப்படை அடிகள். இவற்றை மாற்றி மாற்றி அடித்து புதிய மெட்டுகள், சொற்கட்டுகள் உருவாக்கப்படுகின்றன.

சொற்கட்டுகள்

உறுமியை பார்த்திருக்கீறீர்களா? மதுரை-திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பார்த்திருக்கக் கூடும். சரி, உறுமி என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா? புரூம் புரூம் புரூம் என்று உறுமுவது போல் இருப்பதால் அந்த இசைக்கருவி உறுமி எனப்படுகிறது.

நம் நாட்டு இசைக்கருவிகள் சொல்கட்டு எனப்படும் மெட்டுக்களை அடிப்படையாகக் கொண்டவை. இந்தச் சொல்கட்டுகள் பல்வேறு வகைகளில் பெற்ற அனுபவம், முன்மாதிரிகளால் உருவானவை.
பறை என்பதற்கே பேசு அல்லது சொல்லு என்றுதான் அர்த்தம். வாய்மொழி மரபை அடிப்படையாகக் கொண்ட நமது பண்பாட்டில், பறையடிப்பது தொடர்பான மெட்டுகள் எழுதி வைக்கப்படவில்லை. பறை இசைப்பவர்களின் கூர்ந்த கவனிப்பு, போலச் செய்தல், பயிற்சி, இசையின் மீதுள்ள ஈர்ப்பு காரணமாக கற்றுக் கொண்டனர்.

ரக்கட்ட ரக்கட்ட ரக்கட்ட
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க
டன்டணக்கு டனக்குனக்கு

இப்படி பல சொற்கட்டுகள் உண்டு. சொற்கட்டுகள் அடிப்படை அடிகளைத்தான் சுட்டுகின்றனவே தவிர மொத்த மெட்டையும் அல்ல. அதேநேரம் ஒரு அடிப்படை சொற்கட்டைக் கொண்டு, இசைப்பவர் தனது கற்பனைக்கு ஏற்ப புதிய இசைக்கோலங்களை உருவாக்கலாம். இசைக்க ஆரம்பிக்கும் முன் பறையடிப்பவர்கள் பறையை தீயில் காட்டுவார்கள். அது தோலில் உள்ள ஈரப்பதத்தை அகற்றி, தோலை இறுகச் செய்யும். தோல் உறுதியாகி, அடிக்கும்போது உச்ச ஸ்தாயியில் நல்ல சப்தம் எழுப்பும்.

பறையோடு இணைக்கப்பட்ட தோலை இடதுப்பக்க கைக்குள் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டும். பிடிக்க எளிதாக இருப்பதால் பறையை கையில் வைத்துக் கொண்டு நிற்கலாம், நடக்கலாம், நடனமும் ஆடலாம். அதிலிருந்துதான் பறையாட்டம் பிறந்தது.

சமூகக் கூறுகள்

சங்க காலம், சோழ, பாண்டிய அரசர்கள் காலத்தில் பறை இசைக்கப்பட்டது தொடர்பான குறிப்புகள் உள்ளன. அரசர்களது அறிவிப்புகளை மக்களுக்கு முரசு அறைந்து அல்லது பறையடித்துச் சொல்வது மரபு. பறை தலித் மக்களின் இசைக்கருவி. இரு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அதை இசைக்கிறார்கள். பறையர்கள் என்று அறியப்படுபவர்களும், ஆந்திராவிலிருந்து நீண்ட காலத்துக்கு முன் குடியேறிய அருந்ததியர்களும் இதை இசைக்கிறார்கள். அருந்ததியர்கள் இதை தப்பு என்றழைக்கிறார்கள்.

கோயில் திருவிழாக்கள், மதச் சடங்குகளின்போது பறை இசைக்கப்படும். இதுதவிர, உயர்த்திக் கொண்ட சாதிகளைச் சேர்ந்தவர்களின் இறுதி ஊர்வலத்தின்போது பறை இசைக்கப்படுகிறது. 'சாவுக்கு பறை அடிப்பது' என்ற இந்த அம்சம் உயர்த்திக் கொண்ட சாதிகள் உருவாக்கியது. இதையே காரணமாகச் சுட்டி, பறையையும், அதை இசைக்கும் சமூகத்தினரையும் உயர்த்திக் கொண்ட சாதிகள் ஒடுக்கி வைத்தன.

சமீப ஆண்டுகளில் தலித் மக்களின் பண்பாட்டு அடையாளமாகவும், சமூக விடுதலையின் அடையாளமாகவும் பறையை முன்னிறுத்தி தலித் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக விழாக்கள், நிகழ்ச்சிகளில் பறை முக்கிய இடம்பெற்று வருகிறது.

Pin It