இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றும், இங்கே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சட்டத்தின் மூலம் தீர்வு கிடைக்கும் என்றும் நாம் சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டுள்ளோம். மாவோயிஸ்ட்டுகளையும், நக்சல்பாரிகளையும் சட்டத்தை மதிக்காத, அதை ஏற்றுக் கொள்ளாத, இந்திய ஜனநாயகத்தைச் சீர்குலைக்க வந்த வன்முறையை விரும்பும் தீவிரவாதிகள் என்றும், இந்திய ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்டவர்களால் நாம் சிந்திக்கக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கின்றோம். எனவே அதன்படி ஒரு சராசரி இந்தியன் தன்னுடைய அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வாக நீதிமன்றத்தையே கடைசியில் நாடுகின்றான். கொலை, கொள்ளை, சொத்துத் தகராறு, வன்முறை, ஊழல் என சமூகத்தில் நிகழும் அனைத்து விதமான சீர்கேடுகளுக்கும் தம்மிடம் மட்டுமே தீர்வு உள்ளதாக அதுவும் மக்களை நம்ப வைத்திருக்கின்றது.

high court chennaiசில ஆண்டுகளுக்கு முன்புவரைகூட இதுதான் நிலைமை என்றிருந்தது. ஆனால் இப்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. உலக மயமாக்கலுக்குப் பிறகு அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும், சமூக வலைதளங்களும் மிக அதிக அளவு வந்த பின்னால் நீதிமன்றத்தின் மீதான மாயை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து இன்று அது இல்லாமலேயே போய்விட்டது. மக்கள் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளைக் கூர்மையாக பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள். “என்னாடா, இந்தக் கேசை போட்டு பதினெட்டுவருசம் இழுத்துக்கிட்டு இருக்கின்றான், நாம கேட்டா ஜாமீன் இல்லை என்கின்றான். ஆன அவன் கேட்டால் உடனே கொடுக்கின்றான். இவன் ஊரையே கொள்ளை அடிச்சி சொத்து சேத்தான்னு ஊருக்கே தெரியும் அவனைப்போயி நேர்மையானவன்னு சொல்லி வெளிய விட்டுட்டாங்கப்பா. காசு இருந்தாதாப்பா இந்தக் காலத்திலே நீதியைக்கூட வாங்கமுடியும்” என்று சாமானிய மக்கள் புலம்ப ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த புலம்பல் எங்கு போய் நிற்கின்றது என்றால் இந்த நீதிமன்றங்கள் உலகமகா அயோக்கியர்களின் புகலிடம் என்ற இடத்தில் போய் நிற்கின்றது. தனக்கான நீதி ஒருபோதும் இங்கு கிடைக்காது. பி.ஆர்.பிக்களும், வைகுண்ட ராஜன்களும், ஆறுமுகசாமிகளும், படிக்காசுகளும், ஏன் நம்ம ஜெயலலிதாக்களும் நீதிபதிகளைத் தங்கள் வீட்டு காவல்நாய்களாக மாற்றி ரொம்ப நாள் ஆகிவிட்டதாக அவர்கள் மனமார நம்பத் தொடங்கிவிட்டார்கள். பெரும்பாலான நீதிபதிகள் நீதி தேவதையையே கூட்டிக் கொடுக்கும் புரோக்கர்களாக மாறிவிட்டதை மக்கள் உணர்ந்துவிட்டார்கள். ஊரே பார்த்துக் கொண்டு இருந்தாலும் வெட்க மானம் போய்விடுமே என்று கலவியில் ஈடுபடும் நாய்கள் கருதுவதில்லை. அதே போல தான் நீதிபதிகளும்… ஊரே பார்த்துக்கொண்டு இருக்கும் முக்கியமான வழக்குகளில் கூட எங்கே தவறான தீர்ப்பு கொடுத்துவிட்டால் நம்மைக் காறித் துப்புவார்களே என்று கவலைப்படாமல் அந்தக் கலவியில் ஈடுபடும் நாய்களை விட வெளிப்படையாகவே பணம் வாங்கிக் கொண்டு தீர்ப்பு கொடுக்கின்றார்கள். நாம் அந்த நாலுகால் நாய்களை மன்னித்துவிடலாம்… அதற்குச் சுய அறிவு என்பது கிடையாது. ஆனால் இது எல்லாம் இருந்தும் தனக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊழல் செய்யும் இந்த இரண்டு கால் உள்ளதுக‌ளை என்ன செய்வது?

நீதிபதிகளின் ஊழலை இன்று வழக்கறிஞர்களே அம்பலப்படுத்தத் துவங்கிவிட்டார்கள். சாந்திபூசன், மார்கண்டேய கட்ஜூ போன்றவர்கள் வெளிப்படையாகவே அதுவும் நீதிபதிகளின் பெயரைச் சொல்லியே ஊழல் குற்றச்சாட்டை முன்வைக்கின்றார்கள். உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் 8 பேர் ஊழல் பேர்வழிகள் என்று சாந்திபூசன் குற்றம் சாட்டுகின்றார். தத்து ஒரு ஊழல்பேர்வழி என்று மார்க்கண்டேய கட்ஜூ குற்றம் சாட்டுகின்றார். மேலும் இந்த கட்டமைப்பிற்குள் எந்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது என்றும் கட்ஜூ சொல்கின்றார்.

நீங்கள் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்ட போது வந்த அன்றைய நாளேடுகளைப் பார்த்தீர்கள் என்றால் தெரியும் ஒட்டுமொத்த அரசியல்வாதிகளும் நீதித்துறையின் மீதான நம்பிக்கையே போய்விட்டதாக கூறியிருப்பார்கள். இது சாதாரண விடயமில்லை. அரசியல்வாதிகளை விட பெரும் கொள்ளைக் கூட்டமாக நீதிபதிகள் மாறிவிட்டதையே இது காட்டுகின்றது. பல ஆண்டுகளாக அரசியல்வாதிகள் கொள்ளை அடித்ததை அவர்கள் மாட்டிக்கொண்டால் ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் ஊருவிக்கொண்டு விடும் கெட்டபயல்களாக அவர்கள் மாறிவிட்டார்கள்.

ஹெல்மெட் பிரச்சினையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்திய மதுரை வழக்கறிஞர் சங்கத்தலைவர் தர்மராஜ் மற்றும் செயலாளர் ராமசாமி ஆகியோர் மீது நீதிமன்றம் தானாகவே முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை 30/09/2015 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன் மற்றும் சி.டி. செல்வம் முன் விசாரணைக்கு வந்தது. இந்திய நீதிமன்ற வரலாற்றில் இந்த வழக்கு விசாரணை முதன்முதலாக நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டது.

பிரச்சினை என்னவென்றால் எவ்வளவோ கொடூரமான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் சந்தித்து இருக்கின்றது. அப்போது எல்லாம் இதைச் செய்யாமல் இப்போது அதுவும் கோர்ட்டு அறைக்குள் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மற்றும் அவர்களது வக்கீல்கள் ஆகியோரைத் தவிர மற்றவர்கள் உள்ளே வர அனுமதியை மறுத்து நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான போலீசை பாதுகாப்புக்கு நிறுத்தி ஒரு கொடிய தீவிரவாதியை விசாரிப்பதுபோல விசாரிக்க வேண்டிய அவசியமென்ன? அப்படி என்ன அவர்கள் செய்துவிட்டார்கள்? இதற்கு காரணம் ஹெல்மெட் பிரச்சினை அல்ல. உண்மையான காரணம் மதுரை வழக்கறிஞர்களும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களும் இணைந்து நடத்திய ஊழல் நீதிபதிகளுக்கு எதிரான போராட்டமே காரணம் ஆகும்.

வழக்கறிஞர்களே தங்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவதைச் சகிக்கமுடியாத ஊழல் நீதிபதிகள் அவர்களை அச்சுறுத்திப் பணியவைக்க நடத்தும் திட்டமிட்ட நாடகமே இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு. கோபத்தில் இருக்கும் வழக்கறிஞர்கள் எங்கே நீதிமன்றத்தில் புகுந்து தங்களை அடித்துவிடுவார்களோ என்ற பயமே அந்த ஊழல் நீதிபதிகளை அவ்வாறு யோசிக்க வைத்துள்ளது.

நம்ம சி.டி செல்வம் மற்றும் தமிழ்வாணனைப் பற்றி சென்னை நீதிபதிகள் வட்டாரத்தில் விசாரித்தால் கழுவிக் கழுவி ஊற்றுகின்றார்கள். அவ்வளவு தொழில் சுத்தம். டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்து இந்தியாவில் வைத்து விசாரணை செய்ய வேண்டும் என்று வழக்கு தொடுத்தபோது திருவாளர் டக்ள்ஸ் தேவானந்தா இலங்கையில் இருந்தே வீடியோ கான்பெரன்ஸ் மூலம் விசாரணைக்கு ஆஜரானால் போதும் என்று சலுகை கொடுக்க, இலங்கை வரையும் கையை நீட்டிய நல்ல மனிதர் தான் சி(கே)டி.செல்வம். நம்ம தமிழ்வாணன் அய்யாவைப் பற்றி சொல்லவே வேண்டாம். சென்னை உயர் நீதிமன்றத்தில் கிழவிகளுக்குக்கூட பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையைத் தமிழ்வாணன் ஏற்படுத்திவிட்டதாக புலம்புகின்றார்கள் சமூக ஆர்வலர்கள். உங்களுக்கு எல்லாம் டாக்டர் பிரகாசைத் தெரியுமா? அட ஆமாங்க, நிறைய பெண்களைக் கடத்திக் கொண்டுபோய் அவர்களை வைத்து நீலப்படம் எடுத்து அவர்களது வாழ்க்கையே நாசம் செய்தானே அந்த அயோக்கியன் தான். அவனை யார் விடுதலை செய்தார்கள் தெரியுமா? நம்ம தமிழ்வாணனும், சிடி.செல்வமும் தான். ஏற்கெனவே தமிழ்வாணன் மீது பாலியல் புகார் இருப்பதாக சொல்கின்றார்கள். இதையும் அதையும் சேர்த்துப் பார்த்தால் ஒரு உண்மையை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். தெரிந்தால் அதை யாரிடமும் சொல்லிவிடாதீர்கள். சொன்னால் உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பாயலாம்.

அதனால் சகலமானவர்களுக்கும் சொல்லுவது என்னவென்றால் நீதிமன்றங்கள் என்பது நீதியைப் புதைக்கும் சுடுகாடாக மாறிவிட்டது என்பதைத்தான். இந்த அரசு கட்டமைப்பே தோற்றுப்போய் நாறிக்கொண்டு இருக்கின்றது. இங்கே சட்டத்தின் ஆட்சி நடைபெறுகின்றது என்று இன்னுமும் நீங்கள் நினைத்துக்கொண்டு இருந்தால் உங்களை விட அறிவிலி வேறு யாறும் இருக்க மாட்டார்கள். எப்படி புதிதாக கட்டப்பெற்ற சட்டமன்றத்தை மாற்றி அதை மருத்துவமனையாக ஆக்கினார்களோ அதே போல யாருக்கும் பயன்படாமல் இருக்கும் இந்திய நீதிமன்றங்களைப் பொதுக்கழிப்பிடங்களாக மாற்றி மக்கள் நிம்மதியாக மலம் கழிக்கவாவது உதவலாம்.

- செ.கார்கி

Pin It