Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

jayalalitha and sasikala 500

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீது தொடுக்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீதான குற்றத்தை உறுதிப்படுத்தி, இந்த வழக்கில் 2014 செப்டம்பர் 27 ஆம் தேதி ஜான் மைக்கேல் டி குன்ஹா கொடுத்த தீர்ப்பை உறுதிப்படுத்தி இருக்கின்றது உச்சநீதி மன்றத்தின் சந்திரகோஷ், அமிதவராய் அடங்கிய அமர்வு. இதன் மூலம் வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவரை வழக்கில் இருந்து விடுவித்தும், அவருக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத்தை உறுதியும் செய்துள்ளது. மேலும் இன்னும் சாகாமல் உயிரோடு இருக்கும் மற்ற மூன்று பேருக்கும் மைகேல் டி குன்ஹா வழங்கிய நான்கு ஆண்டுகள் சிறை மற்றும் 10 கோடி ரூபாய் அபராதத்தையும் உறுதிப்படுத்தி இருக்கின்றது. இந்தத் தொகை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விற்று வசூலிக்கப்பட உள்ளது. இதன் முலம் குட்டி சிங்கம் சிறைக்கு செல்லப் போகின்றது. பெரிய சிங்கம் செத்துவிட்டதால் அது தப்பித்துக் கொண்டது.

 ஆனால் சூடு சுரணையற்ற பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக ஜென்மங்கள் இந்தத் தீர்ப்பை பட்டாசு வெடித்தும், இனிப்புகள் கொடுத்தும் கொண்டாடி இருக்கின்றார்கள். நீதிமன்றம் எந்த இடத்திலேயும் ஜெயலலிதா குற்றவாளி இல்லை என்று சொல்லவில்லை. அவருக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையைப் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விற்று வசூலிக்க உத்திரவிட்டுள்ளது. பன்னீர்செல்வம் கோஷ்டிகள் சசிகலா, இளவரசி, சுதாகரன் போன்றோரால் தான் ஜெயலலிதா சிக்க வைக்கப்பட்டதாகவும், தற்போது அந்த மூவருக்கும் தண்டனை கொடுக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்றும் கூறுகின்றார்கள். தங்கள் கட்சித் தலைவியை திருடி, கொள்ளைக்காரி, கூட்டுசதியில் ஈடுபட்டவர், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தவர் என நீதிமன்றம் உறுதிப்படுத்தி இருப்பதைப் பற்றி எந்தக் கவலையும் படாமல், அதிகாரப் போட்டியில் ஒருவர் முகத்தில் இன்னொருவர் மலத்தை எடுத்துப் பூசிக்கொள்கின்றார்கள். தீபா கூட நீண்ட நாள் கழித்து நல்ல தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றார். இவர்கள் எல்லோருமே மறைந்த முன்னாள் கொள்ளைக்காரி ஜெயலலிதாவின் வழியை தாங்கள் கடைபிடிப்பதாய் சொல்கின்றார்கள். நீதிமன்றத்தால் கொள்ளைக்காரி என தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவரின் வழியில் சிறப்பாக ஆட்சி செய்யப் போகின்றார்களாம். மானங்கெட்ட ஜென்மங்கள்.

 வழக்கின் தீர்ப்பு உண்மையில் பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் அப்படியான ஒரு தீர்ப்பை வழங்குவதற்கு இந்த நீதி மன்றங்கள் எடுத்துக்கொண்ட காலம் உண்மையில் வெட்கக்கேடானது ஆகும். ஏறக்குறைய 20 ஆண்டுகள் ஆகி இருக்கின்றன. இந்த இருபது ஆண்டுகளில் நான்கு முறை ஜெயலலிதா முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதா தனக்கு உள்ள பார்ப்பன அதிகாரத்தையும், பண பலத்தையும் பயன்படுத்தி நீதிபதிகளையே மிரட்டி பணிய வைத்தார். ஆச்சாரியாவை மிரட்டி அவராகவே வழக்கில் இருந்து ஓடும்படி செய்தார். தத்துவையும், குமாரசாமியையும் அவரால் விலைக்கு வாங்க முடிந்தது. இதன் மூலம் வழக்கின் காரணமாக தனது பதவிக்கு எந்த ஆபத்தும் வராமல் பார்த்துக் கொண்டார். ஜெயலலிதாவை விடுவிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அவசர அவசரமாக கர்நாடக உயர்நீதிமன்றம் வழக்கை விசாரித்து, அவரையும் அவரது கூட்டாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரையும் விடுவித்தது. ஆனால் அதே வழக்கு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டபோது நத்தை வேகத்தில் நகர்ந்தது. கடந்த ஜூன் மாதம் தள்ளி வைக்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு கொடுப்பதற்கே ஆறு மாத காலத்தை நீதிமன்றம் எடுத்துக் கொண்டிருக்கின்றது. ஒரு வேளை ஜெயலலிதா சாகாமல் இன்னும் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் வழக்கின் தீர்ப்பு இப்போது கூட வந்திருக்குமா என்பது சந்தேகம் தான்.

நீதியைப் பெறுவதற்கு 20 ஆண்டுகள் போராட வேண்டி இருக்கின்றது என்பது இந்திய ஜனநாயம் எந்த அளவிற்கு சாதியத்தின் பிடியிலும், அதிகார வர்க்க பணபலத்தின் பிடியிலும் மூழ்கியிருக்கின்றது என்பதைத்தான் காட்டுகின்றது. இந்தத் தீர்ப்பால் எந்த ஒரு பெரிய மாறுதலும் தமிழக அரசியலில் ஏற்பட்டுவிடப் போவதில்லை என்பதுதான் உண்மை. அதிமுக என்ற மிகப்பெரிய திருட்டுக் கும்பலில் மூன்று பேர் குறைந்திருக்கின்றார்கள் அவ்வளவுதான். இன்னும் பல நூறு திருடர்கள் கட்சி முழுவதும் நிரம்பி வழிகின்றார்கள். சசிகலா என்ற கொள்ளைக்காரியின் இடத்தில் எடப்பாடி பழனிச்சாமி என்ற கொள்ளைக்காரன் இடம்பிடிக்கப் போகின்றார். சசிகலாவிற்கு எந்த வகையிலும் குறைவில்லாதவர் எடப்பாடி பழனிச்சாமி. டிஎஸ்பி விஷ்ணுபிரியா கொலை வழக்கு தொடங்கி, சேலம் கூட்டுறவு வங்கியில் நடந்த முறையற்ற பண பரிவர்த்தனை உட்பட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்தான் இவர்.

edappadi palanisamy and governor vidyasagar rao

தமிழக மக்களுக்கு இப்போது உள்ள ஒரே வாய்ப்பு எந்தத் திருடனை ஏற்றுக்கொள்வது என்பதுதான். அது ஓ.பன்னீர்செல்வமா, இல்லை எடப்பாடி பழனிசாமியா என்பதுதான் பிரச்சினை. கொலைகாரனில் சாதாரணமாக கொலைசெய்யும் கொலைகாரன், கொடூரமாக கொலை செய்யும் கொலைகாரன் இந்த இரண்டு கொலைகாரர்களில் எந்த கொலைகாரனின் கையில் சாக வேண்டும் என்பதை தமிழக மக்கள் இப்போது முடிவு செய்தாக வேண்டும். மாற்று அரசியல் பற்றி எந்தவித முடிவுக்கும் வரத் திராணியற்ற இந்த மக்கள் இப்போது முட்டுச் சந்தில் மாட்டிக்கொண்டு இருக்கின்றார்கள்.

மாற்று அரசியலை முன்வைப்பதாய் சொல்லி அரசியல் களத்திற்கு வந்த அனைவரும் பெரிய கட்சிகளுக்கு வால்பிடித்தே தங்களது மாற்று அரசியலை வெளிப்படுத்திக் கொண்டார்கள். இப்போது என்ன பிரச்சினை என்றால், இந்த வழக்கின் தீர்ப்பு அதிமுக திருட்டுக்கும்பலுக்கு எற்படுத்தி இருக்கும் தாக்கத்தைவிட தமிழகத்தில் ‘மாற்று அரசியல்’ என்ற வார்த்தையை பேசுவதற்காக மட்டுமே வைத்திருக்கும் பல பேரிடம் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதுதான். நிச்சயமாக தா.பாண்டியன் தொடங்கி, முத்தரசன், ராமகிருஷ்ணன், திருமா போன்றோர் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி இருப்பார்கள் என்று நாம் உறுதியாக நம்பலாம். இருந்தாலும் முன்பு சசிகலாவை ஆதரித்த அதே வாயால் இப்போது நீதி வென்றுவிட்டதாகவும், ஊழல்வாதிகளுக்கு எதிரான வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என்றும் பேட்டி கொடுக்கின்றார்கள். கேட்டால் நாங்கள் எல்லாம் மாற்று அரசியல் பற்றி பேசுபவர்கள் அப்படித்தான் நடந்து கொள்வோம் என்று சொன்னாலும் சொல்வார்கள்.

கி.வீரமணி போன்றவர்கள் வருங்காலங்களில் எடப்பாடி பழனிசாமி போன்றோரின் முகத்தில் பெரியாரைப் பார்க்கும் அவலமும் இனி நடக்கலாம். அவருக்கு வயதாக வயதாக பொறுக்கிகள், புறம்போக்குகள், ஊழல்வாதிகள், சாதிவெறியர்கள் என்று யாரைப் பார்த்தாலும் பெரியாரைப் பார்ப்பது போன்ற தோற்ற மயக்கத்துக்கு ஆட்பட்டு வருகின்றார். அவர் ஒரு வழக்கறிஞர் என்பதாலும், பெரியாரின் கொள்கைகளில் ஆழ்ந்த புலமை உள்ளதாலும், சசிகலாவை ஆரம்பம் முதலே மனசுவிட்டுப் பாராட்டி வந்ததாலும் இந்தத் தீர்ப்பை பற்றி அவர் வாய் திறந்து சொல்வதைக் கேட்க நாம் காத்துக் கொண்டிருக்கின்றோம்.

 ஏறக்குறைய எட்டு நாட்களாக தமிழ்நாட்டு மக்களை துன்புறுத்தி வந்த குடுமிப்பிடி சண்டை தற்போது ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றது. ஊடகங்களின் அக்கப்போரும் இனி ஒரு முடிவுக்கு வந்துவிடும். வழக்கம் போல தமிழ்நாட்டு மக்கள் தங்களுடைய ஆற்றாமையை எண்ணி புலம்புவதைத் தவிர வேறு எதையும் செய்யமுடியாமல் தவிக்கப் போகின்றார்கள். சசிகலா போன்ற கொள்ளைக்காரிகளை வேண்டாம் என்று கழுவிக் கழுவி ஊற்றிய மக்கள் எடப்பாடி பழனிசாமி என்ற கொள்ளைக்காரனை என்ன செய்யப் போகின்றார்கள் என்று தெரியவில்லை.

எதுவும் நடக்கலாம். நாம் பொறுத்திருந்து பார்ப்போம். பன்னீரா? எடப்பாடி பழனிசாமியா? இல்லை ஆட்சியே கலையப் போகின்றதா? எது நடந்தாலும் நாம் நம்மை மாற்றிக் கொள்ளப் போவது கிடையாது. திரும்ப வேறு தேர்தலே வந்தாலும் அப்போதும் நம் கண்ணுக்கு சின்னங்கள் மட்டும் தான் தெரியும். நிற்பவனின் தராதரம் என்ன, சித்தாந்தம் என்ன என்று எதையும் நாம் எப்போதும் பார்க்கப் போவது கிடையாது. அதெல்லாம் பார்த்தால் ஓட்டுக்குப் பணம் வாங்க முடியுமா?இல்லை தேர்தல் திருவிழா முடியும் வரை குவாட்டரும், கோழி பிரியாணியும் கிடைக்குமா? அதனால இந்தக் கொள்கை, கோட்பாடு என்பதெல்லாம் நமக்குத் தேவையில்லை பாஸ் என்று சொல்லி கடந்துதான் போகப் போகின்றோம்.

- செ.கார்கி

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 nagasundaram.p 2017-02-15 09:59
நடப்பு விசயங்கள் எதுவாக இருந்தாலும் நோ்மையுடனும் தடாலடியாக சொல்லும் துணிச்சல் செ.காா்த்திக் சாா் உங்களுக்கு மட்டுமே உண்டு. தங்களது ஒவ்வொரு கட்டுரைகளையும் மிகுந்த எதிா்பாா்ப்போடு படிக்க காத்திருப்பவா்க ளில் நானும் ஒருவன்.
Report to administrator
0 #2 வே. பாண்டி.. 2017-02-15 17:08
"இன்னும் சாகாமல் உயிரோடு இருக்கும்" - -- ஹா ஹா ஹா ஹா

வே. பாண்டி/தூத்துக் குடி
Report to administrator
0 #3 nvs 2017-02-15 21:56
மக்கள் எல்லாரும் அறிவு கெட்ட கூமுட்டைகள் என சொல்லும் மாமேதையே மாற்று அரசியல் பற்றி மக்களிடம் தாங்கள் ஆற்றிய அளப்பெரும் பணிகள் பற்றியும் கட்டுரை போட்டால் எங்களைப் போன்ற ஞானசூனியங்களுக் கு மிகவும் உதவியாக இருக்கும்
Report to administrator
0 #4 PARTHIBAN P 2017-02-16 08:44
சிறந்த ஆய்வுக் கட்டுரை

இதுபோன்ற எதார்த்தங்களைப் பதிவிடுவதன் மூலமே மக்களை சிந்திக்க வைக்க முடியும் மேலும் தோழர் அதை வெகு அழகாக செய்திருக்கிறார ் !!
Report to administrator

Add comment


Security code
Refresh