“ஒரு நாட்டின் அரசமைப்புச் சட்டம் எவ்வளவுதான் நல்லதாக இருந்த போதிலும் அதை நடைமுறைப்படுத்துவோர் தீயவர்களாக அமைந்து விட்டால் அரசமைப்புச் சட்டமும் கேடானதாகி விடும் என்பது உறுதி.” - மேதை அம்பேத்கர் (25.11.1949 அன்று அரசமைப்புச் சட்ட யாப்பு அவையில் ஆற்றிய அரிய நிறைவுரையில் ஒரு சொற்றொடர்).

இராகுல் காந்திக்கு அளித்துள்ள தண்டனையும் தகுதி இழப்பும் எந்தவகையில் சரி - சரியில்லை என்பது இப்போது இந்தியா முழுவதும் உள்ள சனநாயக ஆர்வலர்களால் விவாதிக்கப்பட்டு வருகிறது. அதுபற்றிய ஒரு சுருக்கமான பார்வையை இங்குக் காண்போம்.

கருநாடக மாநிலம், கோலார் என்ற இடத்தில் 13.4.2019 அன்று, தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் இராகுல்காந்தி உரையாற்றுகையில், “எல்லாத் திருடர்களின் பெயர்களும் மோடி... மோடி... மோடி... என்று இருக்கின்றதே? அது எப்படி? நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி” எனப் பேசிவிட்டார் என்று குசராத்து மாநிலத்தைச் சேர்ந்த பா.ச.க. தலைவரான புர்னேஷ் மோடி என்பவர், அவருடைய பெயரில் அவரது குடும்பப் பெயரான ‘மோடி’ இருப்பதால், மோடி என்ற குடும்பப் பெயருள்ள அனைவரையும்-13 கோடி பேரையும் இராகுல் காந்தி அவமதித்து விட்டதாக 2019இல் சூரத் நகரில் உள்ள தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ‘குற்றவியல் அவமதிப்பு’ வழக்குத் தொடுத்தார்.rahul gandhi 362இந்த வழக்கை விசாரணை செய்த சூரத் தலைமை குற்றவியல் நடுவர் 23.3.2023 அன்று கேரள மாநிலம், வயநாடு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினரான இராகுல் காந்தி குற்றவாளி என 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளார்.

இந்தத் தீர்ப்பினைக் கொண்டு 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 8(3)இன்படி இராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவி இழப்புடன் சிறைத் தண்டனைக்குப் பின் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடும் தகுதியும் இழந்தவராவார்.

சூரத் தலைமை குற்றவியல் நடுவர் எச்.எச்.வர்மா 23.3.2023 அன்று தீர்ப்பளித்த மறுநாள், 24.3.2023 அன்றே நாடாளுமன்ற மக்கள் அவைத் தலைமைச் செயலாளர் இராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் என்ற தகுதியை இழந்ததாக அறிவித்து விட்டார்.

இந்தத் தீர்ப்பு மற்றும் அதனையொட்டிய நடவடிக்கைகள் பல வினாக்களை எழுப்பியுள்ளன. தகுதி இழப்பை அறிவிக்கும் அதிகாரம் மக்களவைத் தலைமைச் செயலாளருக்கு உள்ளதா?

எந்தக் காரணத்தினால் மக்களவை உறுப்பினர் தகுதி இழப்புக்கு உள்ளா வதாயினும் அதனை அறிவிக்க மக்களவைத் தலைமைச் செயலாளருக்கு எந்த ஒரு சட்டத்திலும் அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கவில்லை. அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 103இன்படி மக்களவை உறுப்பினர் தகுதி இழப்பை அறிவிக்கும் உரிமை குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உள்ளது. நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சிச் சங்கம் எதிர் ஒன்றிய அரசு (2009) வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இதனை உறுதி செய்துள்ளது. (27.03.2013, தி இந்து ஆங்கில நாளேட்டில் மக்களவை முன்னாள் தலைமைச் செயலாளர் பி.டி.டி. ஆச்சாரியின் கட்டுரை).

சூரத் தலைமைக் குற்றவியல் நடுவர் தீர்ப்புரைத்த 24 மணிநேரத்திற்குள் மக்களவைத் தலைமைச் செயலாளர், இராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் தகுதியை இழந்து விட்டதாக அறிவித்து விட்டார்.

நீதிமன்றத்தின் சான்றிட்டத் தீர்ப்பாணை மக்களவை தலைமைச் செயலாளருக்குக் கிடைத்திருக்குமா என்பதே அய்யமாக உள்ளது. குடியரசுத் தலைவருக்குள்ள அதிகாரத்தை மக்களவைத் தலைமைச் செயலாளர் கையகப்படுத்திக் கொண்டது எப்படி? ஏன் இந்த மிகு விரைவுச் செயல்? என்ற வினாக்கள் எழுகின்றன அல்லவா?

அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டங்களில் எதையும் மிகைப்படுத்திப் பேசுதல் நடைமுறையில் உள்ளது தானே? இதற்காக ஒரு தலைவரைத் தண்டிப்பதே நகைப்புக்கு உரியது! அதிலும் மிக அதிக அளவான 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்படுகிறது என்றால் அது மேலும் நகைப்புக்கு உரியதல்லவா?

இந்த ‘குற்றவியல் அவமதிப்புச் சட்டம்’ தொடரத் தான் வேண்டுமா? என்பதே ஒரு வினா. வட அமெரிக்கா, பிரிட்டன், இலங்கை போன்ற நாடுகளில் இச்சட்டம் கைவிடப்பட்டு விட்டன.

இந்த வழக்கு விசாரணைப் போக்கில் எழும் சில வினாக்கள் :

1.           2019-இல் தொடரப்பட்ட வழக்கை வழக்குத் தொடுத்த சூரத் மேற்குத் தொகுதி பா.ச.க. சட்டமன்ற உறுப்பினர் புர்னேஷ் மோடியே விசாரணையை ஓராண்டு நிறுத்தக் கோரி நிறுத்தப்பட்டதும் அந்த நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் போய் வேறொருவர் வந்ததும் 4 ஆண்டுகளாக தூங்கிய வழக்கு திடீரென மிக வேகமாக ஒரே மாதத்தில் விசாரணை நடத்தித் தீர்ப்பளித்துள்ளமை அசாதாரணமானது எனவும் வியப்பளிப்பதாகவும் சட்ட வல்லுநர்கள் கருதக் காரணம் என்ன? இந்தத் தீர்ப்பு சட்டத்தின் முன் நிற்காது என்பது வெளிப்படை என்று கருதப்படுவது எதனால்?

2.           மோடி என்பது ஒரு குறிப்பிட்ட சாதி என்பதற்கு சரியான சான்றுகள் இல்லை என்று கூறப்படு வதுடன் மோடி என்போர் எல்லாம் திருடர்கள் என்றும் இராகுல் காந்தி கூறவில்லை. வழக்குரை ஞர்கள் எல்லாம் திருடர்கள் என்று ஒருவர் கூறினால், அதற்காக ஒரு வழக்குரைஞர் அவமதிப்பு வழக்குத் தொடர முடியுமா? என்றும் வினவப்படுகிறது.

3.           ஓர் அரசியல்வாதி தேர்தல் நேரத்தில் வாக்கு கேட்பதற்காக பேசிய பேச்சுக்கு மிக அதிக அளவான சிறைத் தண்டனைக் காலம் பொருத்தமானதா என்றும் அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே உச்ச அளவான தண்டனை வழங்கப்படுவதே வழமை என்றும் கூறப்படுகிறதே? இந்தத் தீர்ப்பு இயல்புக்கு மாறானது என்றும் கூறப்படுகிறதே?

4.            மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி மக்களவை உறுப்பினர் பதவி இழப்பை அறிவிக்கும் குடியரசுத் தலைவரின் அதிகாரத்தை மக்களவைத் தலைமைச் செயலாளர் பயன்படுத்தியது ஏன்? என்ற வினாவும் எழுப்பப்படுகிறது.

நீதிபதிகளும் மனிதர்கள்தான்; தவறு செய்வது இயல்பே என இந்த வழக்கிலும் கூறினால் அது ஏற்புடையதா?

நீதித் துறையில் குமாரசாமிகள் எண்ணிக்கைப் பெருகுவதும் ஆளுக்கு ஏற்ப தீர்ப்பும் என்றால் நாடு என்னாவது?

அதானி குழுமம் செய்து வந்துள்ள பங்குச் சந்தை மோசடிகள் பற்றி அமெரிக்காவின் இன்டன்பர்க் அறிக்கை வெடித்துக் கிளப்பிய அதிர்ச்சித் தகவல்கள் அடிப்படையில் அதானிக்கும் நரேந்திர மோடிக்கும் உள்ள உறவுப் பற்றி இராகுல் காந்தி தொடர்ந்து வினா எழுப்பி வலியுறுத்துவதால் அவரது குரலை ஒடுக்கும் பழிவாங்கல் செயலே இந்தப் பதவி இழப்பு என்ற கருத்தும் நிலவுகிறது.

மட்டமான கண்ணோட்டமுள்ள அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் எதிரியை வீழ்த்த சட்டத்தை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தும் உத்தி தடுக்கப்பட வேண்டாமா?

ஒரு சாய்வான வஞ்சக - வல்லதிகார நடைமுறை வழமை ஆக்கப்படுவது ஏற்கத்தக்கதா? என்ற வினாக்களுக்கு எல்லாம் விடை, பாசிசத்தின் கொடுவடிவத்தில் இதுவும் ஒன்று என்பதே! பாசிச பா.ச.க. அதிகாரத்தில் இருந்து அகற்றப்படுவதே ஓரளவு மக்கள் நாயகத்தை மீட்கும் வழியாகும்.

- வாலாசா வல்லவன்

Pin It