anna university

தமிழ் நாட்டில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியவுடன் பெற்றோர்களுக்கு ஒரே பரபரப்பு. 'எங்கு சேர்ப்பது?' 'எந்தப் படம் படிப்பது?' என்ற குழப்பத்தில் பலர். வழக்கம் போல் எதாவது ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் எப்படியாவது சேர்ந்து விட்டால் போதும், எப்படியும் ஒரு வேலைக் கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் பலர். இது உண்மையா?

இன்ஜினியரிங் பாடங்களின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்றெல்லாம் சிந்திக்குமளவிற்கு நமது இளைஞர்களுக்கு புரிதல் இருகிறதா என்பது ஒருபுறமிருக்க, கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ஓபாமா இந்தியர்களைப் போல் அமெரிக்கர்களும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பாடங்களைப் படிப்பதில் ஆர்வம் காட்டினால் மட்டுமே அவர்கள் இந்தியர்களை எதிர்கொள்ள முடியும் என்று கூறியுள்ளது நம்மில் பலருக்கு சந்தோசமாக இருந்தாலும் வியப்பளிப்பதாக இருக்காது. ஏனெனில் வணிகவியல், மேலாண்மை, சமூகவியல், அரசியல் அறிவியல், சட்டம், பத்திரிக்கையியல், இலக்கியம், உளவியல் போன்ற பாடங்களையே அமெரிக்க மாணவர்கள் விரும்பிப் படிக்கின்றனர். அது வளர்ந்த நாடு, வேலை வாய்ப்பைப் பற்றி கவலையில்லை என்று நாம் முணுமுணுத்துக் கொண்டாலும், உண்மை என்னவென்றால் நமது குழந்தைகள் அனைவருமே பொறியியல் மற்றும் அது சம்பந்தமான பாடங்களையே படிக்க முனைகிறார்கள். இதற்கு காரணம் அனைவரும் அறிந்ததுதான். வேலை வாய்ப்பு மற்றும் நல்ல சம்பளம். இதனால் பொருளதார முன்னேற்றம், வாழ்க்கைத் தரம் உயர்வு போன்றவைகள் நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கின்றது என்கிற வாதம் ஒரு புறம் இருந்தாலும் இலக்கியம், வரலாறு, சமூகவியல், அரசியல் அறிவியல், மொழியியல் போன்ற பாடங்களைப் படிப்பதற்கு மாணவர்கள் கிடைப்பதே அரிதாகி வருகிறது. அப்படி இவ்வகையான பாடங்களை படிப்பதற்கு முன்வரும் மாணவர்கள் மற்ற எந்த வகையான அறிவியல் அல்லது தொழில்நுட்ப பாடங்கள் கிடைக்காமல், அதாவது அதிக மதிப்பெண்கள் வாங்காதவர்களாகத்தான் இருப்பார்கள்.

இது ஒருபுறமிருக்க அடிப்படை அறிவியல் பாடங்களான இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் போன்றவற்றைப் படிப்பதற்கு கூட மாணவர்கள் கிடைப்பதில்லை. இதன் விளைவு எங்கு நம்மை இட்டுச் செல்லுமென்று சிந்தித்துப் பார்த்தால் புரியும், இது ஒரு நல்ல நிலை இல்லை என்று. இப்படி ஒரு காலத்தை நினைத்துப் பாருங்கள். நமது குழந்தைகளுக்கு நமது வரலாற்றை சொல்லித் தரவும், நமது மொழியை கற்றுத்தரவும் ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். தனது வரலாறே தெரியாத, மொழிப் பற்று இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்காகவா நமது உயர்கல்வி நிறுவனங்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன? இது நம்மைப் போன்ற வளர்ந்து வருகின்ற சமுதயத்திற்கு நல்லதல்ல. நினைத்துப் பாருங்கள் தமிழ் நாட்டில் அனைத்து படித்தவர்களுமே பொறியாளர்கள்தான் என்ற ஒரு நிலைமையை. மற்ற வேலைகளை யார் செய்வார்கள்?

ஒரு சமுதாயம் எல்லா வகையிலும் நல்ல வளர்ச்சியை அடைய வேண்டுமானால் அதில் கலைஞர்கள், தொழில் விற்பன்னர்கள், கவிஞர்கள். அறிவியல் அறிஞர்கள், ஆசிரியர்கள், மொழியியலார்கள் அனைவரும் இருக்க வேண்டும். இவ்வாறு அனைத்து துறைகளிலும் விடயம் தெரிந்த, ஆர்வமுள்ளவர்கள் கிடைக்க வேண்டுமானால் எல்லா பாடங்களும், எல்லா துறைகளையும் ஏற்ற தாழ்வு இல்லாத, ஒரளவிற்கு சமமான நிலையில் வைத்துத்தான் பார்க்க வேண்டும். இதற்கு என்ன வழி என்றால் பள்ளிக் கல்வியில் வரலாறு மற்றும் மொழியியல் பாடங்களில் மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். அடுத்து, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு அதிகமான விருப்ப பாடங்களை (options) ஏற்படுத்தி தருதல். அதுவும் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களோடு வரலாறு, புவியியல், மொழிப்பாடங்கள், சமூகவியல், அரசியல் அறிவியல் போன்ற பாடங்களை எடுத்துப் படிக்கலாம் என்ற ஒரு வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதனால் கலை (Arts) மற்றும் சமூக அறிவியல் (Social Science) பாடங்களைப் படிப்பதற்கு அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் வருவதில்லை என்ற குறையும் நீங்கும். இந்த வசதியை சிபிஎஸ்சி (CBSE) என்கிற மத்திய போர்டு மாணவர்களுக்குத் தருகின்றது.

இதனை செயல்படுத்துவதில் பல சிரமங்கள் இருக்கத்தான் செய்கின்றன. பள்ளிகள் எல்லா விதமான பாடங்களுக்கும் ஆசிரியர்களை நியமிப்பது அவ்வளவு எளிதல்ல. கலை திட்ட மற்றும் பாடத்திட்ட வரைவாளர்களும் (Curriculum & syllabus designers), அவற்றை செயல்படுத்துபவர்களும் (implementers) சிரத்தையுடன் சிந்திக்க வேண்டிய விடயமிது. அறிவியல் பாடங்களைப் படிப்பவர்கள் கட்டாயமாக ஒரு கலையியல் (Arts) சம்பந்தமான பாடங்களைப் படிக்க வேண்டும் என்றும், அதைப்போலவே கலையியல் பாடங்களைப் படிப்பவர்கள் அறிவியல் பாடங்களில் ஒன்றைப் படிக்க வேண்டும் என்ற நிலை வரவேண்டும்.

மற்றொரு முக்கியமான மாற்றம் உயர் கல்வியில் செய்யப்பட வேண்டும். கல்லூரி பட்டப் படிப்புகள் (graduation courses) தற்போது முழு சிறப்பு (specialisation) பிரிவுகளாக உள்ளது. எடுத்துக்காட்டாக, ஒருவர் இளநிலை கலையியல் (Bachelar of Arts) வரலாறு படிக்கிறார் என்றால் வரலாறு மற்றும் அது சம்பந்தமான பாடங்களைத்தான் படிக்க வேண்டும். வேண்டுமென்றால் ஒன்று அல்லது இரண்டு தாள்கள் அதனுடன் (வரலாற்றுடன்) இணைந்த பாடங்களான பொருளாதாரம் அல்லது சமூகவியல் பாடங்கள் துணைப் பாடங்களாக படிக்க வேண்டும். இதனைப் போன்றே அறிவியல் பாடங்களில் வேதியியல் என்றால் அந்தப் பாடத்துடன் ஒன்று அல்லது இரண்டு அதனுடன் இணைந்த பாடங்களான தாவரவியல் போன்ற பாடங்கள் தான் துணைப்பாடங்களாக உள்ளன. இந்த நிலை மாறி இளநிலை (Degree) படிப்புகளில் மூன்று பாடங்களை சிறப்புப் பாடங்களாக படிப்பதற்கான வழிவகை செய்ய வேண்டும். உதாரணமாக வரலாறு, பொருளாதாரம், அரசியல் அறிவியல் ஆகிய மூன்று பாடங்களையும் உள்ளடக்கியதாக பட்டப் படிப்பு இருக்க வேண்டும். இவ்வாறான இளநிலை (Bachelors Degree) பட்டப் படிப்புகள் இளநிலை சமுக அறிவியல் (Bachelor of Social Science) என்றழைக்கப்படுகின்றன.

அதேபோல் அறிவியல் புலத்தில் இயற்பியல், வேதியியல் மற்றும் விலங்கியல் பாடங்களை உள்ளடக்கியதாக இளநிலைப் பட்டப் படிப்புகள் அமைய வேண்டும். இதில் பயன் என்னவென்றால், முதுகலைப் படிப்பை இளநிலை பட்டப் படிப்பில் படிக்கின்ற மூன்று பாடங்களில் ஏதேனும் ஒன்றில் தொடரலாம். இந்த மூன்று பாட பட்டப்படிப்பும் கூட சமூகவியல் (Social Science) பாடங்களைக் காப்பாற்றப் போவதில்லை என்பதுதான் உண்மை. பிறகு என்ன செய்வது?

அறிவியல் (Science) மற்றும் கலையியல் (Arts) என்கிற இரு பாடங்களுக்கு இடையேயான சுவற்றை உடைத்தெரிய வேண்டும். அறிவியல் பாடத்துடன் கலையியல் (Arts and Humanities) பாடங்களை பயில்கின்ற வசதி செய்து தரப்படவேண்டும். இத்தகைய பட்டப் படிப்புகள் மற்ற நாடுகளில் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக இங்கிலாந்து பல்கலைகழகங்களில் வணிக மேலாண்மையுடன் (Business Management) வரலாறு, சமுகவியயல், அரசியல் அறிவியல், அறிவியல் போன்ற பாடங்களைப் படிக்கலாம். இதற்கு பிரிவுத்தன்மை (compartmentalisaton) போக்கை விட்டு பாடங்களுக்கு இடையேயான உறவை (interdisciplinary approach) வளர்க்க வேண்டும். இல்லையெனில், தமிழ் நாட்டில் தமிழ் படித்தவர்களே இல்லாத நிலைமை, சினிமாவிற்கு கூட பாடல் எழுத பாடலாசிரியர்கள் கிடைக்காத ஒரு நிலைமை ஏற்படும் அபாயம் வெகுகாலத்தில் இல்லை. மேலும் அதிசயமாகத்தான் நல்ல தமிழ் பேசுகிறவர்களையும், எழுதுகிறவர்களையும் காணமுடியும். ஒபாமா சொன்னது அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புபற்றிய கவலையால்தான். நாம் எல்லா படித்தவர்களையும் அமெரிக்காவிற்கு அனுப்ப முடியாது என்பதுதானே உண்மை.

- முனைவர் இராமானுஜம் மேகநாதன், உதவிப் பேராசிரியர் - மொழிக் கல்வி, தேசியக் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம், புது தில்லி

Pin It