தொடக்கநிலைக் கல்வியில் அரசுப்பள்ளிகளை செலவில்லாத தரமான கல்வியை வழங்க முடியும் என்ற கருத்தாக்கத்தை மையமாகக் கொண்டு கல்வி என்கிற குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கல்வி என்பது வியாபாரமாகி விட்ட நிலையில் சாதாரண மாணவர்கள் கூட தனது பிள்ளைகளை சி.பி.எஸ்.சி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் படிக்க வைக்க வேண்டும் எனத் துடிக்கும் இன்றைய சூழல்தான் கல்வி வணிகமயமாக்கத்தின் தொடக்கப்புள்ளி.

பெற்றோரின் ஆசை, எதிர்பார்ப்பு போன்றவைதான் கல்வி எனும் சந்தையில் பேரம் பேசும் ஒன்றாக மாறிப் போய்விட்டன. அதோடு "காசு உள்ளவருக்குக் கல்வி" என்ற புதுமொழியை பலரும் உணராது தொடக்கத்தில் எப்படியாவது பணம் தயார் செய்துவிடலாம் என்று அசாதாரண நம்பிக்கையில் கடன் வாங்கி சி.பி.எஸ்.சி மெட்ரிக் பள்ளிகளில் சேர்த்து விட்டு நாளடைவில், பணம் கட்ட முடியாமல் பெற்றோர்கள் அல்லல்படும் பாட்டை அந்தச் சிறு குழந்தைகள் ஒன்றும் அறியாமல் இல்லை. அவர்களின் நாட்குறிப்பு கையேட்டில் தான் ஆசிரியர்கள், அம்மாணவர்களின் பெற்றோர் கட்டப்பட வேண்டிய கல்வி தொகையை விரைவில் கட்டி முடிக்க பக்கம் பக்கமாக எழுதிதானே விடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அந்தக் குழந்தைகளிடம் சொல்லியும் விட்டுவிடுகிறார்கள். அப்படியிருக்க குழந்தைகளிடமிருந்து தனது பெற்றோர் தான் படிக்கும் கல்விக்கான தொகையை இன்னும் கட்டவில்லை என்பதை மறைப்பதற்கு வாய்ப்பு இல்லவே இல்லையே? இப்படிப்பட்ட சூழலை அடிக்கடி எதிர்கொள்ளும் குழந்தைகள் படிப்பில் எப்படிக் கவனம் செலுத்தும் என்ற கேள்விதான் எழுகிறது?

வேடிக்கை என்னவென்றால் எந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள் எல்லாம் சரியாக கல்விக் கட்டணத்தை கட்ட முடிவதில்லையோ? அவர்களின் பிள்ளைகள் எல்லாம் வகுப்பில் முதலாவதாக அல்லது நன்றாகப் படிக்கும் பிள்ளைகளாகவே இருக்கிறார்கள்.

இது கட்டணங்களை தயவு தாட்சணியமின்றி வசூலிக்கும் பள்ளிகளில் சொல்லப்படும் வழக்கமானதாககூட இருக்கலாம். இத்தகைய குழந்தைகளின் பெற்றோரும் கடன் வாங்கியாவது சரியான நேரத்தில் பணத்தை கட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதுவே ஒரு கட்டத்தில் அவர்களின் சக்தியை மீறியதாக மாறிவிடும் போது அவர்கள் முட்டுச் சந்தில் முட்டிக்கொண்டு தவிப்பது போன்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அவற்றிலிருந்து மீள முடியாத சூழலில் சிக்கிக் கொள்கிறார்கள்.

அதேநேரத்தில் நடுத்தர குடும்பங்களைச் சார்ந்த பெரும்பாலானவர்களின் எண்ணம் என்னவாக இருக்கிறது. நான் சி.பி.எஸ்.சி, மெட்ரிக் பள்ளிகளில் படிக்கவில்லை என்னை என் பெற்றோர்கள் படிக்கவைக்க முடியவில்லை. ஆனால் எப்பாடுபட்டாவது என் பிள்ளைகளை நான் சி.பி.எஸ்.சி, மெட்ரிக் பள்ளிகளில் படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்பதே பெரும் கனவாகிப் போகிறது. ஒரு கட்டத்தைத் தாண்டி அவர்களின் கனவு பலிக்காது என்பதை பல்வேறு நெருக்கடிகள் வாயிலாக அனுபவபட்டவுடன் சிலருக்கு புத்தி வந்து அரசுப் பள்ளிகளை நாடுகிறார்கள். இன்னும் சிலர் எப்பாடுபட்டாவது படிக்க வைப்பேன் என்று கடனாளியாக ஆகிக் கொண்டிருக்கிறார்கள். அரசுப் பள்ளியோ? தனியார் பள்ளியோ? பள்ளிகளில் ஒன்னுமில்லை. நம் மனங்களிலேயே பெரும் இடைவெளி இருக்கிறது.

அரசுப் பள்ளிக்கும், தனியார் பள்ளிகளுக்கும் ஒப்பீட்டளவில் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிற அளவுக்கு நாம் நம்மை மனதளவில் மட்டும் தயார் செய்து கொண்டால் போதாது. அவை தனியார் பணம் பறிக்கும் பள்ளிகளுக்கு ஒருபோதும் உதவாது. மாறாக அவர்கள் அவ்வப்போது நிர்ணயிக்கிற கல்வி கட்டணங்களை காலதாமதம் இல்லாமல் கட்டுவதற்கான பணத் தேவையையும் தயாரிப்பு செய்து கொண்டு நம் பிள்ளைகளை படிக்க வைப்பதில் தவறு ஏதுமில்லை.

சி.பி.எஸ்.சி, மெட்ரிக் பள்ளிகளில் பிள்ளைகளை படிக்க வைக்க ஆசைப்படுகிற அளவுக்கு அதற்குத் தேவையான பணத் தகுதியை உருவாக்கிக் கொள்ளவில்லை நடுத்தரக் குடும்பங்கள் என்ற உண்மையை நன்றாகப் பதிவு செய்திருக்கிறது கல்வி குறும்படம்.

இதுபோன்ற பள்ளிகளில் கல்வி கட்டணங்களை தாண்டி அங்கு நடைபெறக்கூடிய ஒவ்வொரு நிகழ்விற்கும் ஏதேனும் ஒரு வகையில் பணம் வசூலிக்கும் நடவடிக்கையில் இறங்கத்தான் செய்கிறார்கள். எடுத்துக்காட்டாக, கல்வி என்ற இக்குறும்படத்தில் "புளு டே" என்று கொண்டாட, மறுநாள் நீல நிற உடை உடுத்திக்கொண்டு அனைத்து மாணவர்களும் வர வேண்டும். அதோடு அவர்கள் உடுத்துகிற உடை மட்டுமில்லாமல், காலில் மாட்டும் செருப்பு வரை அனைத்தும் ஒரே நிறத்தில் இருக்க வேண்டும் எனச் சொல்லி விடுகிறார்கள். அதன் பின்னால் ஒளிந்திருக்கும் பண நெருக்கடி அவர்களுக்குப் பிரச்சனையில்லை.

"புளு"நிறம் குறித்து சொல்லிக்கொடுக்க அத்தனை பேரும் உடையிலிருந்து, உண்ணும் உணவு வரை அனைத்தும் அதே நிறத்தில் இருக்க வேண்டும் எனக் குழந்தைகளிடம் சொல்லிவிட்டு கட்டாயப்படுத்துவது ஒரு பக்கம் இருப்பினும், ஒருவேளை தன்னுடைய பிள்ளைக்கு உரிய நிறத்தில் உடைகள் உள்பட எடுத்துக் கொடுக்காவிட்டால் தனித்து விடப்பட்டு விடுவார்களோ? என்ற அச்ச உணர்வுதான் பெரும்பாலான நேரங்களில் வெளிப்பட்டு எப்பாடுபட்டாவது எடுத்துக் கொடுப்பது என்ற நெருக்கடிக்குள் பெற்றோர்கள் தள்ளப்படுகிறார்கள். இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது, நம்முடைய பிள்ளைகள் ஒரு நிறத்தை தெரிந்து கொள்ள நாம் இரண்டாயிரம் ரூபாய் வரை செலவழிக்க வேண்டும் என்பதே!

செலவில்லாமல் நிறங்களை சொல்லிக் கொடுக்க என்ன வழி இருக்கிறது என்று யோசித்தோமானால் நிறைய வழி கிடைக்கும். ஆனால் அது குறித்தெல்லாம் அவர்கள் யோசிக்க மாட்டார்கள். அப்படி செய்வதும் அவர்களுக்குப் பிடிக்காது. பெற்றோர்களை எப்போதுமே பணம் புரட்டுவதில் கவனம் செலுத்திக் கொண்டே இருக்க வைத்தால் அவர்கள் இதுபோன்ற கேள்விகளை கேட்க தோன்றாது என நினைப்பார்களோ என்னமோ? ஏதாவது ஒன்றைச் சொல்லி பணம் புரட்டுவதையே தொழிலாக செய்யும் சூழலுக்கு சிலர் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதும் எதார்த்தமானதுதான்.

எனக்குத் தெரிந்த ஒரு பள்ளியில் "பிங் டே", "எல்லோ டே" எல்லாம் கொண்டாடினார்கள். அது நிறங்கள் குறித்து அவ்வாரம் அறிந்துகொள்ளவும், அந்த நிறத்தில் என்னென்ன பொருள்கள், உணவு வகைகள் இருக்கின்றன. அவற்றை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பது குறித்தெல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்கள். அப்பள்ளி ஆசிரியர்களோடு நான் பேசியதில் வாரம் ஒரு நிறத்தை மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுக்க, அவர்களை முதல் நாளே அந்நிறத்தில் உடை அணிந்து கொண்டு வரச் சொல்கிறார்கள். ஒருவேளை அந்நிறத்தில் உடைகள் ஏதும் இல்லை என்றால் பரவாயில்லை. ஏதேனும் ஒரு உடையில் வரலாம் என்பதே அவர்களின் அறிவுறுத்தல்கள். இவ்விடத்தில், மாணவர்களின் பெற்றோர்களுக்கு எக்காரணம் கொண்டும் அதேநிறத்தில் புதிய உடை எடுக்க வேண்டும் என்ற நெருக்கடி கிடையாது. அணிந்து வராத குழந்தைகள் தனிமைப்படுத்த படவும் மாட்டார்கள் . இது ஒரு நல்ல அணுகுமுறை தான்.

கற்றுக் கொடுக்கும் விஷயங்கள் மாணவர்களுக்குப் போய்ச் சேர வேண்டும். மற்றபடி ஒரேமாதிரியாக மாணவர்களை கல்விச் சாலைகளில் உருவாக்குகிறோம் என்ற சொல்லாடலில் மாணவர்களின் இயல்புத் தன்மை என்பது என்னவானது என்ற கேள்வியும் புதையுண்டு இருக்கிறது. அதை நாம்தான் தோண்டி எடுக்க வேண்டும். அப்போதுதான் கல்வி என்பது பணத்தைக் கொட்டி வாங்குவது அல்ல. அது திறந்த மனதோடு உள்வாங்கிக் கொள்வது என்ற வாசகத்தை நினைவூட்டும் விதமாக கல்வி குறும்படத்தில் ஒரு காட்சியில் இடம்பெறும் துப்புரவு பணியாளரின் மகள் ஆங்கிலத்தில் அரசு பள்ளியில் படித்துக்கொண்டு பொளந்து கட்டுவதுதான். கற்றுக் கொள்ளும் மனநிலையில் இருப்பவர்கள் எந்த இடமானாலும் கற்றுக்கொள்வார்கள். அதற்கு அவர்களுக்குத் தரமான ஆசிரியர்கள் கிடைத்தாலே போதுமானது. மிகைப்படுத்தப்பட்ட எந்தவொரு விசயமும் துளியும் உதவாது என்பதையும் இயக்குனர் மிகப்பொருத்தமாக சுட்டிக் காட்டியிருக்கிறார்.

இக்குறும்படத்தின் இறுதிக்காட்சியில் சி.பி.எஸ்.இ பள்ளியில் படித்த பிள்ளையை அங்கு படிப்பதற்கு பணம் கட்ட முடியாத சூழலில், அரசுப் பள்ளியில் சேர்த்ததும் பெரும் நிம்மதி பெற்றோரின் மனதில் பார்க்க முடிகிறது. பணத் தேவைக்காக தவறான முடிவுகளையும் கைவிட்டு மகிழ்ச்சியாகவும் செல்கிறார்கள். சி.பி.எஸ்.இ பள்ளியில் தனது பிள்ளை படிக்கும்போது இல்லாத மகிழ்ச்சி, அரசு பள்ளியில் சேர்த்து விட்ட பின்னர் வந்துவிடுகிறது. அப்போது இருந்த நெருக்கடி, இயலாமை, தன்மீதான இனம்புரியாத வெறுப்பு ஏதும் இப்போது இல்லை.

தன் பிள்ளையின் படிக்கும் இடத்தை மாற்றியதும் குடும்பத்தில் அத்தனை மகிழ்ச்சி குடி கொள்கிறது என்றால் அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் சரியானதுதானே? இவற்றையெல்லாம் பார்க்கும் போது பெற்றோரின் மனநிலை முதலில் மாற வேண்டும். அரசு பள்ளிகள் வீண், அங்கு சரியாக சொல்லிக் கொடுக்கமாட்டார்கள் என்கிற பெரும்பாலனோரின் மனநிலையை இன்று திரும்பும் பக்கம் எல்லாம் தனியார் பள்ளிகள் முளைக்க காரணமாகி விட்டன.

இதன் காரணமாக அரசு பள்ளிகளில் படிப்படியாக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து இன்று சில பள்ளிகள் மூடுவிழா கண்டு கொண்டிருக்கின்றன. அதுபோக போதிய ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் அல்லல்படும் நிலையும் உருவாகி இருக்கிறது. அதேநேரத்தில் கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் அரசு பள்ளிகளின் நிலை கொஞ்சம் மாற்றம் கண்டு மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. அதற்குக் காரணம் தொடர்ச்சியான ஊரடங்கு, அதன் விளைவாக வேலையில்லா சூழல், சொற்ப வருமானம், குடும்பத் தேவைகளுக்கே போதாமை இவைகள் தான் தனியார் பள்ளி மோகத்தில் படையெடுத்த பெரும் கூட்டம் இன்று அரசுப் பள்ளிகளை நோக்கி மீண்டு வர வைத்திருக்கின்றன. இதுவும் நல்லதொரு மாற்றம்தான். இனிமேலாவது அரசு பள்ளிகளின் தரம் உயர நாம் இப்போதுள்ள மனநிலையை இறுகப் பிடித்துக் கொள்வதே சரியானதாக இருக்கும்.

மு.தமிழ்ச்செல்வன்

Pin It