மக்களின் போராட்டம் மகத்தான வெற்றி!
மக்களே புரட்சியாளர்கள் மீண்டும் ஒரு முறை நிரூபணம்!!
ஆட்சியாளர்களின் ஆணவ தர்பார் அழிந்தது....
மண்காக்கும் போராளி தோழர்.சிவக்குமார் விடுதலை
===================================================

தோழர்.சிவக்குமார் கைதும், பின்பு நடந்தவையும்

===========================================

sivakumar 300சென்னிமலை - பனியம்பள்ளி பஞ்சயத்து தலைவர் சிவக்குமார் அவர்கள் சமூக ஆர்வம் கொண்டவர். தொடர்ந்து மூன்றுமுறை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர்.பெருந்துறை சிப்காட் கோக்கோலா பிரச்சனையில் நேரடியாக போராட்டக்களத்தில் நின்று மக்களை திரட்டியவர். அதேபோல் பெருந்துறை சிப்காட்டில் 7 தெழிலாளர்கள் மீத்தேன் கசிந்து இறந்த பிரச்சனைகளில் முன்நின்று போரட்டங்களை நடத்திவர்.

இதனால் இவர் மீது நேரடி வெறுப்பில் இருந்த அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், தனது எடுபிடியாக உள்ள ADSP குணசேகரனை வைத்து இவர் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துளனர்.

இதற்கு காரணமாக சொல்லப்படும் சம்பவம் இதுதான்: சில நாள்கள் முன்பு பனியம்பள்ளி கிராமத்தில் சென்னிமலை-சரவணா நகர் செல்வராஜ் என்பவன் ஒரு பெண்ணிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயலேவே, பொதுமக்கள் ஆத்திரம் கொண்டு அவனை தட்டிக் கேட்டுள்ளனர். அங்கு சென்ற தோழர்.சிவக்குமார் அவனை சத்தம் போட்டு விட்டு காவல்நிலையத்தில் அவனை ஒப்படைக்க கூறி உள்ளார். உள்ளூர் மக்கள் அவனை சென்னிமலை காவல்நிலையத்தில் ஒப்படைத்து நடந்த விபரங்களை சொல்லி புகார் கொடுத்து வந்துள்ளனர். ஆனால் பெண்ணிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்ற இப்புகாரின் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் காவல்துறையால் எடுக்கப்பட இல்லை.

ஆனால் சென்னிமலை காவல்துறை இவனைப் பயன்படுத்தி சிவக்குமார் மீது அமைச்சரின் தூண்டுதலின் பேரில், அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வகுப்பு தோழரும், தோப்பு வெங்கடாசலம் நிழல் போல் இருந்து அவரின் அடியாள் போல் செயல்பட்டுவரும் ஈரோடு ADSP குணசேகரன் அவர்களின் அழுத்தத்தினால், பனியம்பள்ளி சிவகுமார் மீது கொலை முயற்சி வழக்கு வரும் வகையில் [இதச 307, 506(11)] சென்னிமலை-சரவணா நகர் செல்வராஜை மருத்துவமணையில் சென்று படுக்க சொல்லி புகார் வாங்கியுள்ளனர்.

08-07-2015 ல் அன்று காலை காவல்துறை ஆய்வாளர் வேலுமணி அவர்கள், சென்னிமலை-சரவணா நகர் செல்வராஜ பிரச்சினை பற்றி விசாரிக்க வேண்டும் எனக் கூறி சிவகுமாரை வாருங்கள் என அழைத்து சென்றுள்ளனர். காலை சுமார் 10.00 மணிக்கு சிவகுமாரது மனைவி அலைபேசியில் சிவக்குமாரிடம் தொடர்பு கொள்ள அது அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. சென்னிமலை காவல்நிலையம் வந்து சிவக்குமார் பற்றி விசாரிக்க எங்களுக்கு எதுவும் தெரியாது என அங்கு இருந்த அதிகாரிகள் கூறியுள்ளானர். சிவகுமாரை கைது செய்து எங்கே வைத்துள்ளனர் என்றே அன்று மதியம் வரை காவல்துறையினரால் யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை.

காலைமுதல் மதியம் வரை சிவகுமாரை காவல்துறையினர் தனது வாகனத்தில் வைத்து ஈரோடு, சித்தோடு, பவானி, சத்தி ரோட்டில் கோபி வரை, காஞ்சிக்கோவில் என பல பகுதியில் சுற்றியுள்ளனர். அவரை இடையில் சந்தித்த பெருந்துறை DSP யிடம் எதற்க்காக என்னை இப்படி செய்கிறீர்கள் எனக் கேக்க எனக்கே எதுவும் தெரியவில்லை. மேல் அதிகாரிகள் சொல்கிறபடி செய்கிறேன் எனக் கூறியுள்ளார்.

சிவக்குமார் பற்றி எவ்வித தகவலும் தெரியாததால் கொத்தித்து போன மக்கள் காவதுறையைக் கண்டித்து 08-07-2015 காலை 11.00 மணி முதல் சென்னிமலை காவல் நிலையம் முன்பு மக்கள் 500 பேருக்கு மேல் குவிந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். அதன் பின்பே அவரை மாலையில் காவல்துறை பெருந்துறை நீதிமன்றத்தில் அஜர் படுத்தி, பின்பு கோபி சிறையில் அடைத்துள்ளனர்.

இவரை உடனடியாக விடுவிக்கக் கோரி சென்னிமலையில் 09-07-2015 அன்று சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள்-ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அன்றே அனைத்து கட்சிகள்-அரசியல் இயக்கங்கள், மக்கள் இயக்கங்கள் சார்பிலும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் வரும் செவ்வாய்14-07-2015 அன்று சென்னிமலையில் கண்டனப் பேரணி- மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

சென்னிமலை-பனியம்பள்ளி ஊராட்சி தலைவர் சிவக்குமாரை விடுதலை செய்யக்கோரி கடந்த ஒரு வார காலத்தில் பல்வேறு அமைப்புகளாலும், அப்பகுதி மக்களாலும் பல்வேறு இயக்கங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. (08-07-2015 முதல் 14-07-2015)

- காவல்நிலையம் முற்றுகை/08-07-2015

- பனியம்பள்ளி ஊராட்சி முழுக்க வீடுகள், பொதுஇடங்களில் கறுப்புக்கொடி ஏற்றுதல்/10-07-2015

- பனியம்பள்ளி ஊராட்சி மக்கள் ரேசன் அட்டை ஒப்படைப்பு/11-07-2015

- பனியம்பள்ளி ஊராட்சியில் உள்ள அதிமுக கட்சியினர் 300 பேர் தங்களது கட்சி உறுப்பினர் அட்டை கிழித்தெறிதல் /12-07-2015

- பனியம்பள்ளி ஊராட்சி மக்கள் சார்பில் போரட்ட அறிவிப்பு சுவரொட்டி

- பனியம்பள்ளி ஊராட்சி மக்கள் ஊர் ஊராக சென்று பிரச்சாரம்

- சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர்கள்–கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு/10-07-2015

- கூடன்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர்.உதயக்குமார், முகிலன், இடிந்தகரை பெண்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற ”அணுதீமையற்ற தமிழகம்’’ பிரச்சார பயணக் குழு, ஈரோட்டில், பனியம்பள்ளி ஊராட்சி தலைவர் சிவக்குமார் கைதை கண்டித்தும், அவரை விடுதலை செய்யக்கோரியும் பிரச்சாரம்- பத்திரிக்கையாளரிடம் பேட்டி /10-07-2015

- புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் கண்டன சுவரொட்டி, பல்லாயிரக்கணக்கான துண்டறிக்கை பிரச்சாரம், ஊர் பிரச்சாரம்...

- சென்னிமலை அனைத்துக் கட்சி -அனைத்து அமைப்புகள், இயக்கங்கள் சார்பில் போரட்ட அறிவிப்பு துண்டறிக்கை பிரச்சாரம்...

sivakumar rally 338

13-07-2015 அன்று காவல்துறை 30(2) தடை இருப்பதால் பேரணி-ஆர்ப்பாட்டத்திற்க்கு அனுமதி இல்லை என மறுப்பு தெரிவித்தனர். எனவே பேரணி சென்னிமலைக்கு அருகில் உள்ள 4 கி.மீ தூரத்தில் உள்ள பனியம்பள்ளி ஊராச்சியில் உள்ள தொட்டம்பட்டி மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு வருவது என ஊர்மக்களாலும், போரட்ட முண்ணனியினராலும் முடிவு செய்யப்பட்டது.

14-07-2015 செவ்வாய் அன்று தொட்டம்பட்டி மாரியம்மன் கோவிலில் 3000 மக்கள் திரண்டனர் (2500 மக்கள் + 500 பல்வேறு கட்சியினர்). அதிமுக தவிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளின் மாவட்ட தலைவர்களும், புரட்சிகர இளைஞர் முண்ணனி உட்பட பல்வேறு முற்போக்கு அமைப்பினரும், பல்வேறு மக்கள் நல அமைப்பினரும் இதில் பங்கேற்றனர். சென்னையில் அணுதீமையற்ற பிரச்சார பயணத்தை முடித்துக் கொண்டு, நானும்(முகிலன்) அன்று காலை சென்னிமலை வந்து சேர்ந்து இப்போராட்டத்தில் பங்கேற்றேன்.

வாகன வசதி இல்லாமல் சென்னிமலை நகரில் இருந்து தொட்டம்பட்டி வந்து கலந்து கொள்ள முடியாமல், இதில் உடன் பங்கேற்க்க 3000 க்கும் மேற்பட்ட மக்கள் காத்து கொண்டு இருந்தனர். சென்னிமலையின் அனைத்து வழிகளிலும் பெருந்துறை ஆர்.எஸ் சாலை, ஈங்கூர் சாலை, ஊத்துக்குழி சாலை, அரச்சலூர் சாலை, காங்கயம் சாலை என அனைத்து வழிகளிலும் 500 க்கு மேற்பட்ட காவல்துறையினர் குவித்து வைக்கப்பட்டனர்.

சென்னிமலை நகரில் 1000 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவித்து வைக்கப்பட்டு இருந்தனர். தண்ணீரை பீச்சியடித்து கூட்டத்தை கலைக்கும் வஜ்ரா வாகங்கள் கொண்டுவரப்பட்டு நிறுத்தப்பட்டு இருந்தது. சென்னிமலை வடக்கு ராஜா வீதி, குமரன் சதுக்கம் பகுதிகளில் முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு போலீஸார் அணிவகுத்து நின்றனர்

சென்னிமலையில் காவல்துறையின் அத்துமீறலை எதிர்த்தும், அல்லது நீதிக்கான, உரிமைக்கான போராட்டங்கள் இங்கு நடப்பது இது முதல்முறையல்ல. எண்ணற்ற போராட்டங்கள் நடத்தி பல்வேறு வெற்றிகளை பெற்று அதிகார வர்க்கத்தை பலமுறை மண்டியிட வைத்த இடம் இது.

தமிழகத்தில் பல முன்மாதிரி நிகழ்வை சென்னிமலையில் புரட்சிகர இளைஞர் முண்ணனி அமைப்பும், சென்னிமலை மக்களும் நடத்திக் காட்டி உள்ளனர். பல போராட்டங்களில், புரட்சிகர இளைஞர் முண்ணனி அமைப்பின் வழிகாட்டலில் நான் தலைமை தாங்கி நடத்தியுள்ளேன். போரட்ட அனுபவங்கள் பலவும் நான் கற்றுக் கொண்ட பூமி இது.

தடையை உடைத்த பேரணி/14-07-2015

காவல்துறையினர் இன்று மறியல் செய்ய வருபவர்களை கைது செய்து வைக்க 3 திருமண மண்டபம் ரெடி செய்தும், உணவும் ஏற்பாடு செய்திருந்தனர். அவர்களுக்கு உணவு வழங்கவும் போலீஸார் ஏற்பாடு செய்துள்ளனர். இருந்தும் இந்த பேரணி- ஆர்ப்பாட்டம் நடக்காமல் தடுக்க பல்வேறு முன்னணி கட்சி தலைவர்களிடம் தொடர்ந்து பேசி வந்தனர் காவல்துரையினர். ADSP குணசேகரன் பல்வேறு கட்சியினரிடமும் பேரணி நடக்காமல் இருக்க பேச்சு நடத்தி பார்த்தார். ஆனால் அரசியல்கட்சி தலைவர்கள் சொல்வதை மக்கள் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

காலை 11.00 மணிக்கு சென்னிமலை- தொட்டம்பட்டியில் இருந்து காவல்துறையின் அத்துமீறலைக் கண்டித்தும், தமிழக அரசைக் கண்டித்தும், அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்தைக் கண்டித்தும், மக்கள் விண்ணதிரும் முழக்கங்கள் போட்டுக் கொண்டு பேரணியாக புறப்பட்டனர்.

தொட்டம்பட்டியில் இருந்து கைது செய்தாலும் பரவாயில்லை என ஊர்வலமாக இரண்டு கிலோமீட்டர் தூரம் பள்ளக்காட்டுபுதூர் வரை பேரணியாக வந்தனர்.

sivakumar rally 337

பேரணியில் பொதுமக்களுடன் தி.மு.க. மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி, தமிழ்நாடு சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்.முகிலன், ம.தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் கந்தசாமி, தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் இமயம் சிவக்குமார், காங்கிரஸ் மாவட்ட தலைவர் காந்தி, முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி, மக்கள் ராஜன், புரட்சிகர இளைஞர் முன்னணி செல்வராஜ்,பாரதி, த.மா.க., மாவட்ட தலைவர் சண்முகம், கொங்கு நாடு மக்கள் கட்சி மாநில பொருளார் கே.கே.சி. பாலு., தற்சார்பு விவசாயிகள் சங்க பொன்னையன், திராவிடர் விடுதலைக் கழகம் செல்லப்பன், மக்கள் சிவில் உரிமை கழக மாநில துணைத்தலைவர் கண.குறிஞ்சி, சிபிஅய் பொன்னுசாமி, சிபிஎம் ரவி, பா.ம.க., பழனிசாமி, மற்றும் பல்வேறு கட்சி மாவட்ட பொறுப்பாளர்களும், ஒன்றிய பொருப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

சென்னிமலை–ஊத்துக்குளி ரோட்டில் பள்ளக்காட்டுப்புதூர் என்ற இடத்தில் பேரணியை, ஈரோடு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மேற்பார்வையில் அங்கு குவிக்கப்பட்டு இருந்த நூற்றுக்கணக்கான போலீசார் பேரணியை செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் பேரணியாக வந்தவர்கள் அனைவரும் கொதிக்கும் வெய்யிலில் ரோட்டில் உட்கார்ந்தோம். இதனால் சென்னிமலை–ஊத்துக்குளி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஈரோடு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு(ADSP) குணசேகரன், பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் பொதுமக்களுடனும், அனைத்து கட்சி தலைவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இந்த பேச்சுவார்த்தையில் அனைத்து கட்சிகள் சார்பில் சு.முத்துசாமி பேசினார். ஊராட்சி தலைவர் சிவகுமாரை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், இதச307 பிரிவை நீக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். அதற்கு ADSP குணசேகரன் சிவகுமாரை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், இதச307 பிரிவை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் போது இப்பிரிவு நீக்கப்படும் என்றார். உடனடியாக வழக்கறிஞர். சேகர் இதச307 பிரிவு இருந்தால் நீதிமன்றத்தில் பிணை கிடைக்காது என்றார்.

நான் ADSP குணசேகரன் அவர்களிடம் இந்த வழக்கு முழுக்க முழுக்க உங்களால் போடப்பட்ட பொய்வழக்கு என்று வழக்கு பதிவு செய்த உங்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும். எனவே பொய்வழக்கின் பிரிவை நீக்குவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை உள்ளது. கடந்த மாதம் திருப்பூர் மாவட்டம் அவினாசி-புதுப்பாளையத்தில் பிரபாகரன் என்பவரை காவல்துறை (506(ii), வெடிகுண்டு வீசியதாகவும்) பொய் வழக்கில் கைது செய்து, சிறையில் அடைத்தனர். ஒரே நாளில் எங்களைப் போன்ற சமூக ஆர்வலர்களின், மக்களின் போராட்டத்தால் இப்பிரிவுகள் அம்மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளால் நீக்கப்பட்டு, அரசு சொந்த பிணையில் தோழர்.பிரபாகரன் அவர்களை விடுவித்தனர். எனவே நீங்கள் இதச307, 506(ii) பிரிவை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் போதுதான் இப்பிரிவு நீக்கப்படும் என இல்லாமல், திருப்பூர் முன்மாதிரியை வைத்து நீங்கள் போட்ட இப்பொய்வழக்கில் பதிந்த இப்பிரிவை மாற்றுங்கள் என்றேன். ம.தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் கந்தசாமி அவர்களும் இதை வலியுறுத்தி பேசினார். ADSP குணசேகரன் அவர்கள் பொறியில் சிக்கிய எலி போல் மாட்டிக் கொண்டார்.

உடனே ADSP குணசேகரன் அவர்கள், நான் காவல்துறை கண்காணிப்பாளரிடம் பேசிவிட்டு வருகிறேன் என கூறி சென்றார். திரும்பி வந்தவர் காவல்துறை கண்காணிப்பாளர் நீங்கள் சொன்னபடி செய்து விடலாம் என்கிறார். கூட்டத்தை கலையுங்கள் என்றார். நான் ADSP குணசேகரன் அவர்களிடம் உறுதிமொழி கொடுக்கும் காவல்துறை கண்காணிப்பாளரை இங்கு போரட்டக் களத்திற்க்கு வர சொல்லுங்கள், வந்து அவர் சொல்லட்டும், உங்களை எந்த வகையிலும் நாங்கள் நம்ப முடியாது என்றேன். அவர் பெருந்துறையில் இருக்கிறார், நீங்கள் அங்கு வாருங்கள் பேசிக் கொள்ளலாம், கூட்டத்தை கலையுங்கள், மக்கள் வெய்யிலில் உள்ளார்கள் என்றார் ADSP குணசேகரன்.

நான் ADSP குணசேகரன் அவர்களிடம் 'உங்கள் பற்று எங்களை புல்லரிக்க செய்கிறது. உங்களால்தான் இந்த போரட்டமும், வெய்யிலும். எங்களுக்கு வெய்யில் பழகிப் போனதுதான், முதலில் சிவக்குமார் அவர்களின் விடுதலைக்கு நம்பிக்கையான உத்திரவாதம் கொடுங்கள், உங்கள் காவல்துறை கண்காணிப்பாளரை இங்கு வர சொல்லுங்கள். சென்னிமலையில் 15 முறைக்கு மேல் காவல்துறை கண்காணிப்பாளர் வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வரலாறு உண்டு' என்றேன்.

பின்பு ADSP குணசேகரன் காவல்துறை கண்காணிப்பாளரிடம் பேசிவிட்டு அவர் இங்கு வருகிறார், ஒரு 15 பேர் மட்டும் பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்றார். உடனே சு.முத்துசாமி, பொன்னையன் ஆகியோர் அப்படியெல்லாம் முடியாது. அனைத்து அமைப்பின் பொறுப்பாளர்கள், சிவகுமார் குடும்பத்தினர், வழக்கறிஞர்கள், ஊர்மக்கள் பிரதிநிதிகள் வருவார்கள் என்றனர். சரி வாருங்கள் என ஒரு 35 பேரை அழைத்து சென்றனர்.

போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தை
==============================

அனைவரையும் சென்னிமலையில் உள்ள சென்டெக்ஸ் நெசவாளர் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு காவல்துறை கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி அவகள்டன் பேச்சுவார்த்தை நடத்தது. அவரிடம் நான் அவினாசி-புதுப்பாளையத்தில் பிரபாகரன் என்பவரை காவல்துறை (506(ii), வெடிகுண்டு வீசியதாகவும்) பொய் வழக்கில் கைது செய்து, சிறையில் அடைத்தனர். ஒரே நாளில்எங்களைப் போன்ற சமூக ஆர்வலர்களின், மக்களின் போராட்டத்தால் இப்பிரிவுகள் அம்மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளால் நீக்கப்பட்டு, அரசு சொந்த பிணையில் தோழர்.பிரபாகரன் அவர்களை விடுவித்தனர். அதற்கான ஆதாரங்களாக பல பத்திரிக்கை செய்தியை அவரிடம் காட்டினேன். எனவே நீங்கள் இதச307, 506(ii) பிரிவை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் போதுதான் இப்பிரிவு நீக்கப்படும் என இல்லாமல், திருப்பூர் முன்மாதிரியை வைத்து நீங்கள் போட்ட இப்பொய்வழக்கில் பதிந்த இப்பிரிவை உடனே மாற்றுங்கள் என்றேன்.

இதில் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.முத்துசாமி, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த நான் (முகிலன்) ம.தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் கந்தசாமி, தற்சார்பு விவசாயிகள் சங்கம் கி.வே.பொன்னையன் மற்றும் காங்கிரஸ், த.மா.கா., தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு(மார்க்சிஸ்ட்), பா.ம.க., கொ.ம.தே.க., விடுதலை சிறுத்தைகள், ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகளும், சிவக்குமார் குடும்பத்தினரும், வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர்.

அங்கு இருந்த அனைவரும் ஊராட்சி தலைவர் சிவகுமாரை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், 307 பிரிவை நீக்க வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்தோம். அதற்கு இது குறித்து பரிசீலனை செய்து கட்டாயம் நல்ல முடிவை எடுக்கிறேன், என்னை நம்புங்கள் என போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி உறுதியளித்தார்.

sivakumar rally 339

இறுதியாக சு,முத்துசாமி போலீஸ் சூப்பிரண்டு அவர்களிடம் நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் அரசியல் கட்சிகள் யாரையும் சென்னிமலை மக்கள் ஊருக்குள் விட மாட்டார்கள். இப்போராட்டம் மக்கள் நடத்தும் போராட்டம்; நாங்கள் இதில் பங்கு கொண்டவர்கள் மட்டுமே. நாங்கள் திரட்டி மக்கள் வரவில்லை. மக்களுடன் நாங்கள் இணைந்து நின்று கொண்டு உள்ளோம்.எனவே வாக்குறுதியை நீங்கள் நிறைவேற்றாவிட்டால் ஒவ்வொரு கட்சியும் தனது அமைப்பின் சார்பில் ஆயிரக்கணக்கானோரை திரட்டி போராட்டம் நடத்தினால் தான் மக்கள் நம்புவார்கள் எனக் கூறி எங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி விடாதீர்கள் என தெரிவித்தார். போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி சிவகுமார் விடுதலைக்கு மீண்டும் உறுதியளித்தார்.

அதை அனைவரும் ஏற்றுக் கொண்டதால் 2 மணி நேரம் சாலை மறியலில் இருந்த 3000 பேரிடம் பேச்சுவார்த்தையில் நடந்த நிகழ்வுகளைப் பேசியவுடன், மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தூண்டுதலின் பேரில் கோகோ கோலா ஆலைக்கு எதிராக போராடிய பனியம்பள்ளி ஊராட்சி தலைவர்தோழர்.சிவக்குமார் மீது போடப்பட்ட பொய்வழக்கு 15-07-2015 அன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை ஆலோசனை பேரில் அரசுத்துறை வழக்கறிஞர் (பிபி ).கிருட்டிணசாமி அவர்கள் சரவணா நகர் செல்வராஜ் கொடுத்த இந்த புகாரில் கொலை முயற்சி வழக்கு -307 இதறகு பொருந்தாது என கூறினார்.

தோழர்.சிவக்குமாருக்காக மக்கள் வழக்கறிஞர் இரா.மா.பழனிசாமி அவர்கள் "இந்த வழக்கு எப்படி கோகோ கோலா ஆலை பிரசசினையில் பொய்யாகப் போடப்பட்டது எனவும், பல்வேறு சிப்காட் ஆலையை எதிர்த்த சிவக்குமாரது செயல்பாடு அரசு-அதிகாரிகள் -அரசியல்வாதிகள் ஆகியோருக்கு நெருக்கடி ஏற்படுத்தியது" என பல ஆதாரங்களை காட்டி வாதாடினார். இவருக்கு துணையாக வழக்கறிஞர்.து. குணசேகர் அவர்கள் இருந்து செயல்பட்டார்.

இதனால் ஈரோடு முதன்மை மாவட்ட நீதிபதி பி.இளங்கோ அவர்கள் தோழர். சிவகுமாரை விடுதலை செய்ய உத்தரவிட்டரர்.

இன்று 16-07-2015 மாலை 4.30 க்கு கோபி சிறையில் இருந்து விடுதலை ஆனார் தோழர்.சிவக்குமார்...

அவருக்கு தொட்டம்பட்டியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற வரவேற்ப்பு நிகழ்ச்சி மாலை 06.00 மணி முதல் 08.00 மணி வரை நடந்தது. மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தால் கிடைத்த மாபெரும் வெற்றி இது. சுமார் 2000 மக்கள் தொடர்ந்து ஒரு வார காலம் முழு நேரமாக போராட்டத்தில் ஈடுபட்ட வரலாறு இது. மக்களுக்காக உண்மையாக நின்று ஒருவர் செயல்பட்டால் மக்கள் அவர்களுக்காக கட்டாயம் இருப்பார்கள் என்ற வரலாறு இங்கு நிருபிக்கப்பட்டு உள்ளது.

தோழர் மாவோ குறிப்பிடுவது போல "மக்கள் புரட்சிக்காரர்கள்.மக்கள், மக்கள் மட்டுமே வரலாறு படைப்பவர்கள்" என்பது மீண்டும் ஒரு முறை உண்மையாகியுள்ளது..

தோழர்.சிவக்குமார் மீதான அரசின், காவல்துறையின் அடக்குமுறையை எதிர்த்து போராடிய மக்களுக்கும், அனைத்து இயக்கங்கள், அரசியல் கட்சிகள், துணை நின்ற ஊடகங்கள், பத்திரிக்கையாளர்கள், முகநூல் நண்பர்கள், மக்கள் நலன் கொண்டு குரல் கொடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தமிழக அரசே...

* பொய் வழக்கு பதிவு செய்த தூண்டிய மக்கள் விரோதி அமைச்சர் தோப்பு. வெங்கடாசலத்தை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கு!

* அமைச்சர்க்கு அடியாளாக இருந்து பொய் வழக்கு பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள், குறிப்பாக ADSP குணசேகரன் மீது நடவடிக்கை எடு!

* மண் காக்கும் போராளிகள் மீது தொடரும் அரசு -அரசியல்வாதிகள்- மாபியாக்கள் அடக்குமுறைக்கு ஒன்றுபட்டு நின்று முடிவு கட்டுவோம்!

* தாய்மண்ணை பாதுகாப்போம்....

அடக்குமுறைகளை தகர்த்தெறிவோம்...
தாய்மண்ணை பாதுகாப்போம்...
அமைச்சரின் அட்டூழியத்திற்கு முடிவு கட்டுவோம்...

- முகிலன்

Pin It