(ஹெலனா நோர்பெர்க் எழுதி இயக்கிய ‘எகனாமிக்ஸ் ஆஃப் ஹேப்பினஸ்’ என்ற உலகப்பட விழாக்களில் பல விருதுகளைப் பெற்ற ஆங்கிலப் படத்தின் மொழிபெயர்ப்பை இது. உலகமயம், தாராளமயம், தனியார்மயம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட கதையை மிக நல்லமுறையில் பொருளாதார அறிஞர்களின் நேர்முகப் பேட்டியோடு விவரித்துள்ளார்.)

ஆங்கிலத்தில்: திருமதி. ஹெலனா நோர்பெர்க (திரைப்பட இயக்குநர் - தயாரிப்பாளர் - பொருளாதார ஆய்வாளர்)

தமிழில் : செ.நடேசன்

the economics of happinessநாம் சுற்றுச்சூழல் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இது ஒரு பொருளாதார நெருக்கடியும், மனித உணர்வுகளின் நெருக்கடியும் ஆகும். சுற்றிலும் பாருங்கள்: நாம் எதைப் பார்க்கிறோம்? வர்த்தகம் வழக்கம்போலப் போய்க் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். ஏழு தலைமுறையைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டிய நேரத்தில் நமது அரசுகள் நான்கு ஆண்டுகளைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இந்தப் புவிக்கோளத்தை நிர்வகிப்பது பற்றிய சாதகமான முன்முயற்சிகள் நமக்குத் தேவைப் படுகின்றன.

மகிழ்ச்சியின் பொருளாதாரம்

இந்த உலகம் முழுவதிலும் நம்பிக்கைகளையும், நம்பிக்கையின்மைகளையும் நான் அதிகமாகப் பார்க்கிறேன். தற்போதுள்ள ஏராளமான எண்ணெய் வளங்களோடு ஒப்பிடுகையில் எதிர்காலம் குறைந்த எண்ணெய் வளங்களையே பெறவுள்ளது. – ஹெலனா நோர்பெர்க் ஹோட்ஜ், ஸ்டீவன் கார்லிக் மற்றும் ஜான்பேஜ் தயாரித்த திரைப்படம்

இந்தப் பூமியில் மிக உயரத்தில் உள்ள மக்கள் வாழிடங்களில் ஒன்றாக மேற்கு இமயமலைகளில் உள்ள ‘குட்டி திபெத்’ ஆன ‘லடாக்’ உள்ளது. இது பல நூற்றாண்டுகளாக வெளிஉலகம் அறிந்திராத, தனிமைப்பட்ட, வெகுதொலைவில் உள்ள பகுதி. அண்மைக் காலம் வரை லடாக்கியர்கள் விவசாயம் மற்றும் உள்ளூர் வியாபாரம் மூலம் தங்களைத் தக்க வைத்துக் கொண்டார்கள். இது ஒரு வாழ்க்கைமுறை. உள்ளூர் சூழலுக்கு மிகவும் பொருத்தமானதாக இருந்தது.

பொருளாதார ஆய்வாளரும், எழுத்தாளருமான ஹெலனா நோர்பெர்க் ஹோட்ஜ் லடாக்கை உள்ளிருந்து அறிந்து கொண்டவர். இந்தப் புவிக்கோளம் தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் நெருக்கடிகளுக்கு ‘லடாக்கின் கதை’ ஒரு வெளிச்சத்தைத் தரும் என்று அவர் நம்புகிறார்.

’நான் கடந்த 35 ஆண்டுகளின் பெரும்பகுதியில், நவீன உலகத்திற்கு எதிராக உள்ள லடாக் மக்களின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றைச் செழுமைப்படுத்துவதற்கான வழிவகைகளைக் கண்டறிய அங்குள்ள மக்களோடு தங்கி வேலை செய்துவந்தேன். இந்த ஆண்டுகளில் எனது முதல் தாய்வீட்டைப் போலவே லடாக் எனது இரண்டாம் தாய்வீடாகவே ஆகிவிட்டது. இது ஒரு மாபெரும் ஊக்கமும், உள்ளுயிர்ப்பும் தரும் ஆதாரமாக இருந்தது. நான் சமூக, சுற்றுச்சூழல், தனிப்பட்ட நல்வாழ்வு ஆகியவற்றின் மகிழ்ச்சியின் வேர்களைக் கண்டறிந்தேன். எனது சொந்த மேற்கத்திய கலாச்சாரம், பண்பாடு பற்றிய எனது அடிப்படை நம்பிக்கைகளை ஒரு புதிய வெளிச்சத்தில் மறுபரிசீலனை செய்திட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானேன்.

நான் எங்கேயும், எப்போதும் அனுபவித்திராத ஒரு காந்த ஒளியையும், வாழ்வின் உயிர்நிலையையும் அங்கு அனுபவித்தேன். பொருளியல்ரீதியான வாழ்நிலையும் அங்கு உயர்ந்த தரத்தில் இருந்தது. அவர்கள் வீடுகள் மிகவும் பெரியதாகவும், விசாலமானதாகவும் இருந்தன. ஏராளமான ஓய்வுநேரம் இருந்தது. அங்கு வேலையின்மையே இல்லை! அங்கு இது எப்போதும் இருந்ததில்லை. எவர் ஒருவரும் பசியால் வாடவில்லை!

அவர்கள் நம்மைப் போன்ற நவீனவசதிகளையும், ஆடம்பரங்களையும் பெற்றிருக்கவில்லை என்றாலும், நம்மைவிட மிகவும் செழுமை வாய்ந்த வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தார்கள். அது அளவில்லாத மகிழ்ச்சியையும், செல்வத்தையும் கொண்டது.

1970களின் மத்தியில் லடாக் திடீரென வெளியுலகுக்குள் வீசியெறியப்பட்டது. மானிய உதவி பெற்ற சாலைகளின் வழியாக, மானிய உதவி பெற்ற எரிபொருள்களால் ஓடும் வண்டிகளில் கொண்டு வரப்பட்ட மானிய உதவிபெற்ற விலைமலிவான உணவுகள், பொருள்கள் லடாக்கின் உள்ளூர்ப் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்தன.

அதேநேரத்தில் லடாக்கியர்கள், மேற்கத்தியபாணி நுகர்வுக் கலாச்சாரங்களால் பெரும்பெரும் விளம்பரங்கள் மற்றும் ஊடகக் காட்சிகள் மூலம் தங்கள் பண்பாடும், கலாச்சாரமும் ஒப்பீட்டளவில் பரிதாபத்திற்குரியது எனச் சிந்திக்க வைக்கப்பட்டார்கள். அந்தப் பகுதி முழுவதும் பெருகிவரும் நுகர்வுக் கலாச்சாரத்தால் தாக்கப்பட்டபோது அங்குள்ள மக்கள் தங்களைப் பிற்பட்டவர்களாகவும், கற்காலத்தவர்களாகவும், ஏழைகளாகவும் கருதத் தொடங்கியதை நான் கண்டேன். ஆரம்ப காலங்களில் நான் இந்த அழகான கிராமத்திற்கு வந்து எனது ஆர்வமிகுதியால் அங்குள்ள ஓர் இளைஞனிடம் அங்கே இருக்கும் ஏழ்மையான வீடு ஒன்றைக் காட்டுமாறு கேட்டேன். அவன் ஒரு கணம் யோசித்துவிட்டு, ”எங்களிடம் ஏழ்மையான வீடுகளே இல்லை” என்றான். அதே இளைஞன் 10 ஆண்டுகளுக்குப் பின் அங்கு வந்த சுற்றுலாவாசிகளிடம், “நீங்கள் லடாக்கியர்களுக்கு உதவ வேண்டும். நாங்கள் மிகவும் ஏழைகள்” எனச் சொல்லக் கேட்டேன்.

இன்று லடாக் தனது மரபுசார்ந்த பண்பாடு, கலாச்சாரத்தில் இதுவரை கண்டறியாத பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளது. லடாக்கில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் மிகவும் தெள்ளத் தெளிவானவை என்பதை எனது சொந்தக்கண்களால் நான் பார்த்தேன். காரணமும், விளைவும்? – ஒரு நிமிடம் – “முதலில் நீங்கள் உயிர்நிலை ஆதாரமாக மக்களையும், தக்கவைத்துக் கொள்வதற்கான பண்பாடு, கலாச்சாரத்தையும் பெற்றிருந்தீர்கள். அடுத்து நீங்கள் தண்ணீர், காற்று ஆகியவை மாசுபடக் கண்டீர்கள். உங்களிடம் வேலையின்மை உருவாயிற்று. செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான இடைவெளி பெருகியது. எந்த மக்கள் உணர்வுபூர்வமாக ஒன்றுபட்டு வாழ்ந்தார்களோ அவர்களுக்கிடையே மிகவும் அதிர்ச்சி தரத்தக்க வகையில் பிளவுகளும், விரக்தியும் தோன்றியுள்ளன.”

இந்த மாற்றங்கள் மனிதனின் உள்ளார்ந்த பேராசையாலோ, சில வகை வளர்ச்சிப் போக்குகளாலோ ஏற்பட்டவை அல்ல. இவை மிகவும் திடீரென ஏற்பட்டன. இவை வெளிப்புறப் பொருளாதார அழுத்தங்களால் என்பது மிகவும் தெளிவாக உள்ளது. மேலும் நான், இந்த அழுத்தங்கள் எவ்வாறு உள்ளார்ந்த போட்டிகளால் உருவாகி சமுதாயத்தையும், காலம்காலமாக இயற்கையோடு உள்ள தொடர்புகளையும், லடாக்கியர் பண்பாடு, கலாச்சாரத்தையும் சிதைத்தது என்பதைக் கண்டேன்.

- இதுதான் லடாக் உலகமயமயத்துக்கு அறிமுகமான கதை.

உலகமயமாக்குதல்

1. வணிகமும், வங்கிகளும் உலக அளவில் செயல்படுவதற்காக வர்த்தகம் மற்றும் நிதிநிலை ஒழுங்கைச் சீர்குலைத்தன.
2. பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒற்றை உலகச்சந்தை உருவாக்கப் பட்டது. (இது, அனைத்துலக ஒருங்கிணைப்பு, ஒருவரை ஒருவர் சார்ந்து நிற்றல், உலக சமுதாயம் எனக் குழப்பிக் கொள்ளப்படுகிறது)

உலகமயம் மிகவும் ஆற்றல்வாய்ந்த சக்தியாக லடாக்கைப் போன்ற தொலைதூர மக்களை மட்டுமல்ல: இந்தப் புவிக்கோளத்தில் உள்ள எல்லா சமுதாயங்களையும் பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. பொருளாதார நடவடிக்கைகளை உலகமயமாக்குவது நம்மில் ஒருசிலருக்கு – குறிப்பாக உலக ஏழ்மைப் பிரச்சனைகளுக்கு எதிர்காலத் தீர்வுக்கான நம்பிக்கையாகத் தோன்றுகிறது. ஆனால் மற்றவர்களுக்கோ, நாம் இன்று சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணமாகவும், வளர்ந்துவரும் அச்சுறுத்தலாகவும் இருக்கிறது.

‘மிக விரைவான தகவல் தொடர்பு, எளிதான பயணங்கள் போன்றவற்றின் மூலம் நம் அனைவரையும் நெருங்கி வரச் செய்யும் ஒன்று’ என உலகமயம் பற்றி மக்கள் அடிக்கடி சிந்திக்கிறார்கள். ஆனால் அதன் மையப்புள்ளி ஒரு பொருளாதார நடைமுறையாக உள்ளது. அது வங்கிகளின் விதிகளைத் தளர்த்தி, பெரும் வர்த்தக நிறுவனங்களை உலகப் பரப்பெங்கும் உள்ளூர்ச் சந்தைகளில் நுழையச் செய்கிறது. அதன் நோக்கம் இலாபமே தவிர மக்களல்ல. இது நம் அனைவரையும் ஒன்று சேர்க்காது. மாறாக, நம்மிடையே போட்டிகளையும், பிளவுகளையும் உருவாக்கக் கூடியது.

உலகமயம் என்பது 500 ஆண்டுகளுக்குமுன் துவங்கிய ஒரு நடைமுறையின் அதீத விரிவாக்கம் அந்த நேரத்தில் ஐரோப்பியர் உலகத்தின் பெரும்பகுதிகளை ஆக்கிரமித்துக் காலனிகளாக மாற்றினர். அவர்கள் அந்தப் பகுதிகளின் தற்சார்புப் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து அப்பகுதி மக்களை அடிமைப்படுத்தி, சுரங்கங்களிலும், பருத்திக் காடுகளிலும், தேயிலைத் தோட்டங்களிலும் வேலை செய்யக் கட்டாயப்படுத்தினார்கள்.

20 ஆம் நூற்றாண்டின் மத்தியில் காலனியாதிக்கம் அடிமைப்படுத்துவதற்கு மிகவும் தந்திரமான வடிவமாகக் ‘கடன்’ வலையை விரித்தது. நிதிஉதவித் திட்டங்கள் என்று அழைக்கப்பட்ட விலங்குகள் பூட்டப்பட்டும், முடமாக்கும் கடன்கள் மூலமாகவும் ஒரு நாட்டைத் தொடர்ந்து இன்னொரு நாடு என்ற வகையில் வறுமையில் ஆழ்த்தப்பட்டன. காலனிய வியாபாரிகளின் வாரிசுகளான பகாசுரக் கம்பெனிகளும், நிதி நிறுவனங்களும் பணத்தை உறிஞ்சவும், வளங்களைக் கொள்ளையிடவும் குறைந்த கூலிக்கு ஆட்களை அமர்த்தவும் வழிவகுத்தன.

இன்று அந்த நாடுகள் கடந்த பன்னாட்டு வியாபாரிகள் மிகவும் பெரிய அளவில் வளர்ச்சியையும், அதிகாரங்களையும் பெற்று, அரசாங்கங்களைக் கட்டுப்படுத்துகிறார்கள். பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்குகிறார்கள். உலகமெங்கும் மக்களின் பார்வைகளையும் வடிவமைக்கிறார்கள். இன்றும் பொருட்கள் மற்றும் நிதியைத் திணித்து உலக வர்த்தகத்தின் மூலம் மேலும் வளர்ச்சிக்கான உந்துதல்களைப் பெற்று வருகிறார்கள். உலக்நாடுகள் முழுவதுமுள்ள மக்கள் மீதும், இயற்கைச் சுற்றுச்சூழல்கள் மீதும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி வரும் திட்டம் இது

உலகமயம் பற்றிய 8 கசப்பான உண்மைகள்

1. உலகமயம் உங்களை மகிழ்ச்சியற்றவராக ஆக்குகிறது.

உலகமயத்தைப் பற்றிய முழுமையான புரிதலை உங்கள் மூளைக்குள் ஏற்றுவது சிரமமானது. அதைப் புறக்கணிப்பதும், திறமைசாலிகளிடம் விட்டுவிடுவதும் எளிதானது. ஆனால், நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும்- நான் என்ற உணர்விலும்கூட- அது அழுத்தமான விளைவுகளை ஏற்படுத்தி வருவதால் அதை எளிதில் அனுமதித்து விடமுடியாது. அமெரிக்க உளவியல் நிபுணரான டாக்டர் கிரிஸ் ஜான்ஸ்டோன் கூறுகிறார்: “மேற்கு நாடுகளில் பெருமளவு வீழ்ச்சியின் அளவுகள் உயர்ந்து வருவதை நாம் பார்க்கிறோம். சில ஆய்வுகள் இந்த உயர்வைச் சந்தேகிக்கின்றன. மற்ற ஆய்வுகளோ இந்த வீழ்ச்சியின் உயர்வு பத்து மடங்குகள் எனத் தெரிவிக்கின்றன.”

பேராசிரியர் ஜூலியட்ஸ்கார்–அமெரிக்கா (Overworked American எனற நூலின் ஆசிரியர்): "சராசரி வீடுகளின் மீதான அழுத்தங்கள் ஏராளமாக அதிகரித்து வருகின்றன. பலருக்கும் அதிகப்படியான பயணங்கள், வீட்டில் அதிக நேரம் வேலை, எந்த வேளையிலும் அதிகப்படியான நேரத்தை எடுத்துக் கொள்வது என அவர்களின் வேலைகள் மிகவும் அதிகமானவற்றை நிர்ப்பந்திக்கின்றன. செய்பொருள்களின் வெற்றியின் சில அளவுகளும், சில பார்வைகளின் அளவுகளும் நம்மோடு இணைந்துள்ள சில நாகரிகப் போக்குகளும் மிகவும் பொதுமைப்படுத்தப்பட்ட சித்திரங்களாகின்றன. ஆனால் நாம் அந்த அளவில் இல்லை”

மேரி ஜயனே ரஸ்ட்- (உளவியல் பயிற்சியாளர்-அமெரிக்கா): "மிகப்பெரிய, இன்னும் சிறந்தவைகளைப் பெற வேண்டும் என்ற உறுதியான அழுத்தம் மக்கள்மீது திணிக்கப் படுகிறது. அதன் முடிவில் ஏற்படும் பயன் என்ன? அது நமக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறதா? பொருளியல் விருதுகள் எப்போதும் மகிழ்ச்சியைப்போல இருந்ததில்லை."

பில்மிக்கிபென் –(‘Deep Economy’ நூல் ஆசிரியர் அமெரிக்கா): "இரண்டாம் உல்கப் போரின் முடிவுக்குப்பின் ஒவ்வொரு ஆண்டும் பெரிய கருத்துக்கணிப்பு நிறுவனங்கள அமெரிகர்களிடம், ‘நீங்கள் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?’ என்று கேட்கின்றன. ஏராளமான அமெரிக்கர்கள், ’ 1956ல் நாங்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தோம். . அது மிகவும் உற்சாகமானது. ஏனெனில் அந்த 50 ஆண்டுகளில் நாங்கள் அளவிட முடியாத அளவில் பணக்காரர்கள் ஆனோம். நாங்கள் மூன்று மடங்கு பொருள்களைப் பெற்றிருந்தோம். அதன்பின், மெல்ல மெல்ல, ஆனால், உறுதியாக வீழ்ச்சி துவங்கிவிட்டது அந்தச் செல்வச்செழிப்பு சமுதாயத்தைச் சுரண்ட வழிவகுத்ததால் அது தொடர்ந்து பயணிக்கவில்லை”

டாக்டர். வந்தனா சிவா-(MONOCULTURES OF MIND – நூல் ஆசிரியர், இந்தியா): "மகிழ்ச்சியாக, ஆழ்ந்த மகிழ்ச்சியாக ஆழ்ந்த பாதுகாப்புள்ள மக்களாக உள்ளவர்கள் தங்களது வாழ்க்கையில் மற்ற யாராவது ஒருவரைச் சார்ந்திருப்பதுதான் காரணம் என்று அறிந்து வைத்திருக்கிறார்கள். இந்த உலகில் தாங்கள் தனியாக இல்லை என்பதை அறிந்து வைத்திருக்கிறார்கள். தனியாக உள்ளவர்கள் தங்கள் வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சியாக இருந்ததில்லை. உலகமயம் மிகவும் தனிமையான ஒரு உலகத்தை உருவாக்கி வருகிறது."

2. உலகமயம் பாதுகாப்பின்மையை உருவாக்குகிறது

கூட்டு நிறுவனங்கள்தான் (கார்ப்ரேஷன்) நமது குழந்தைகளை வளர்க்கின்றன. நமது குழந்தைகளின் உணவுத்தேர்வுகளை அவையே செய்கின்றன. நமது குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு வகைமைகளை அவையே தீர்மானிக்கின்றன. அவர்கள் எதை வாங்கவேண்டும்? அல்லது அவர்கள் எதைக் கருத்தில் கொள்ளவேண்டும்? என்பதைத் தேர்வு செய்கின்றன. நமது குழந்தைகளுக்கானவைகளை மேலும் மேலும் விற்பனை செய்பவை கார்பரேஷன்களே!

மனித ஆசை மிக எளிதில் சுரண்டலுக்குள்ளாகிறது. சுரண்டும் பேராசைக்காரர்களின் வழிமுறைகளோ மிகவும் கொடுமையான ஒப்பீடுகளையும், போட்டிகளையும் கொண்டவைகளாக உள்ளன.

பேராசிரியர். சாம்தோங்ரின் போச்சே:(திபெத் தலைமறைவு அரசின் பிரதமர்:) "மக்கள் தங்கள் அடையாளங்களைக் குழந்தைப் பருவத்திலிருந்தே இழந்து வருகிறார்கள்"

டாக்டர் மொஹாய் பெகோ (தென் ஆப்பிரிக்கா): "நமது குழந்தைகள் இனிமேலும் தங்கள் மொழியைப் பேச விரும்புவதில்லை. அவர்கள் தங்கள் சொந்தக் கலாச்சாரங்களைத் தங்களோடு இணைத்துக் கொள்ள விரும்புவதில்லை. டிசைனர் ஜீன்ஸ் அணிவது அவர்களுக்கு இதமாக இருக்கிறது. மெக்டொனால்டை ருசிப்பதில் விருப்பமாக இருக்கிறார்கள்."

எலியானோ எஸ்பிளிகோ (பெரு): "நமது குழந்தைகள் பள்ளிகளீல் நமது சொந்தப் பண்பாட்டை நிராகரிக்கக் கற்றுக் கொள்கிறார்கள். ஏனெனில், அவர்களுடைய ஆசிரியர்கள் ‘நீங்கள் பெருக்கலைக் கற்றுக்கொள்ளாவிட்டால். பன்றி மேய்க்கத்தான் லாயக்கு. நீங்கள் பெருக்கலைக் கற்காவிட்டால் உங்கள் தந்தையைப்போல் பண்ணைக்குத்தான் செல்ல வேண்டும்' என்று விவசாய வேலைகளைச் செய்வதை ஒரு மோசமான செயல் என்றும் குற்றம் என்றும் ஆசிரியர்களால் கற்பிக்கப்படுகிறார்கள்.

இளைஞர்கள் தாங்கள் மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் என்று விரும்பு கிறார்கள். அதை அவர்கள் பெற விரும்புகிறார்கள் . தங்களையொத்த வயதினரிடையே மரியாதையைப் பெறவேண்டுமானால், அவர்கள் நவீன காலணிகளை அணியவேண்டும்: நவீனமான பொருள்கள், நாகரிகமான ஆடைகள் வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். எனவே நுகர்வுக் கலாச்சாரத்தின் பாதையில் செல்கிறார்கள். அது ஒருவரோடொருவரைப் பிரித்துவைத்துப் பொறாமை கொள்ளவும் வைக்கிறது. உண்மையில் அவர்கள் எதிர்பார்க்கும் ஆழமான அன்பையும், அன்பால் ஏற்படும் உறவையும் அறியமுடியாத அளவுக்கு ஆகிறார்கள்.

நவீன நுகர்விய மற்றும் முதலாளித்துவத்திற்கு முந்தைய காலகட்டத்தில் மக்களின் அடையாளங்கள் பெரும்பாலும் அவர்களது சமூகங்களாலும், அண்டை அயலாராலும் உருவாக்கப்பட்டன."

டாக்டர் கிளைவ் ஹேமில்டன் (The Growth Fetish நூல் ஆசிரியர்-ஆஸ்திரேலியா): "இன்றைய நாட்களில் இந்தஅமைப்புக்கள் எல்லாம் வீழ்ந்துவிட்டன. விழுந்துவிட்ட இந்த இடைவெளிகள் சந்தைகளால் நிரப்பப்பட்டுவிட்டன. அவர்கள் சொல்கிறார்கள், ’நீங்கள் யாரென்று உங்களுக்குத் தெரியவில்லை என்பதால் கவலைப்படாதீர்கள். நாங்கள் உங்களுக்கு வடிவமைக்கப்பட்ட ஒரு அடையாளத்தைத் தருகிறோம். எங்களது தயாரிப்பில் உள்ள பொருள்களை வாங்குவதன் மூலம் 'தான்' என்ற அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள முடியும்: இந்த உலகில் உங்களை முன் நிறுத்திக் கொள்ள முடியும்.

உலகமெங்கும் காட்சிப்படுத்தபடும் தவறான மாதிரிகள் ஆப்பிரிக்க, தென்அமெரிக்க அல்லது ஆசிய மக்களிடமிருந்து மிகவும் வேறுபட்டுக் காணப்படுகின்றன. அவர்கள் மக்களின் பெரும்பான்மையை நாகரிகமாக்குகிறார்களாம்! அதுமட்டுமா? ‘பெண்களைப் போல் நீண்ட, கூரிய, நீலநிறக் கண்களொடு அழகாக இருந்தாலும் நீங்கள் ஒருபோதும் அழகாகவே தோன்றமாட்டீர்கள். ’ என்று சொல்வதால் உலகெங்கும் நீலநீற ‘காண்டாக்ட் லென்ஸ்’களின் விற்பனை அமோகமாகி வருகிறது! தங்கள் தோலையும், முடியையும் மென்மைப்படுத்த அதிகமான மக்கள் ரசாயனப் பொருள்களைப் பயன்படுத்துகிறார்கள்."

ரிச்சர்ட் ஹெயின்பர்க் (The Oil Depletion Protocol நூலின் ஆசிரியர் அமெரிக்கா): "அமெரிக்கர்கள் மட்டுமல்ல: வளரும் நாடுகள் என்று சொல்லப்படும் சீனா, இந்தியா, தென்கொரியா மற்றும் பிறநாடுகளில் அமெரிக்க முறையிலான வாழ்வைப் பெற்றிட வேண்டும் என்ற விருப்பத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்கர்கள் மிகவும் கவனத்தை ஈர்க்கிறார்கள். நான் அவர்களைப் பாராட்டுகிறேன். அவர்கள் சீனமக்களைவிட ஒவ்வொரு வகையிலும் வித்தியாசப்பட்டிருக்கிறார்கள் அவர்கள் ருசிகரமானவர்கள்: நாகரிகமானவர்கள்."

3. உலகமயம் இயற்கை வளங்களை வீணாக்குகிறது.

நுகர்வுக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறது. இந்த ஒட்டுமொத்தப் புவிக்கோளத்தின் சுற்றுச்சூழல் கட்டமைப்பை அச்சுறுத்துகிறது. மக்கள்தொகை அழுத்தத்தாலும், நம் ஒவ்வொருவருவரையும் மேலும்மேலும் நுகரவைப்பதாலும் நமது இயற்கை வளங்களை ஏற்கனவே ஒரு முறிவு நிலைக்கு இழுத்து வந்துவிட்டது.

பாலாஜிசங்கர் (குமரப்பா பவுண்டேஷன்- இந்தியா): "சந்தைப்படுத்துதல், வணிகச் சரக்குகளை விளம்பரப்படுத்துதல் மற்றும் மூளைச்சலவை செய்தல் ஆகிய கொடூரத் தாக்குதல்களைத் தொடுத்துவருகிறது. எனவே நாம் மிக அதிகமான நுகர்வு அழுத்தத்தில் இருக்கிறோம். ஆனால் நாம் அமெரிக்கர்களைப்போல நான்கு மடங்கு அதிக மக்கள் தொகையைக் கொண்டவர்கள். எனவே இந்த உலகில் உள்ள எல்லா இயற்கை வளங்களையும் இந்தியாவில் உள்ள நாமே நுகர்ந்துவிடக்கூடும்.

உலகமயம் உருவாக்கிய நுகர்வுக் கலாச்சாரம் நகர்மயத்தை வளர்க்கிறது. மிக அழுத்தமான நகர்ப்புறவாழ்வு இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதைக் குறைப்பது போல முதல் பார்வையில் தோன்றுகிறது. ஆனால் இதை நகர்ப்புற எல்லைப் பகுதிகளோடு ஒப்பிடும்போது மட்டுமே உண்மை. ஆனால் தனிமைப்பட்ட நகர்ப்புற வாழ்வுமுறைகளோடு நேர்மையாக ஒப்பிடும்போது நகர்மயமாதல்தான் வளங்களை மிக வீரியமாக, அழுத்தத்தோடு பயன்படுத்துகிறது என்பதை உணரலாம். இது உலகின் தென்பகுதியில் மிகத்தெளிவாக உள்ளது."

டாக்டர். வந்தனா சிவா: "ஒரு மனிதன் நகரத்துக்குள் சென்ற விநாடியிலேயே எரிசக்திப் பயன்பாடு உயர்கிறது. தண்ணீர்ப் பயன்பாடு உயர்கிறது. ஒரு நகரத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் ஒரு கிராமத்தின் உயர்தரமான வாழ்க்கைக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைவிட மிகவும் அதிகமானது. இலட்சக்கணக்கான கிராமப்புற மக்கள் நகரங்களுக்குள் இழுக்கப்படும்போது அவர்களுக்காக அவர்களே பயிரிட்ட உணவுப்பொருள்கள் இப்போது ரசாயன உரங்களைப் பயன்படுத்திப் பிரமாண்டமான பண்ணைகளில் தயாரிக்கப்படுகின்றன. இந்த எல்லாவகை உணவுப் பொருள்களும் பெரிய பெரிய வாகனங்களில் இதற்காகவே கட்டப்பட்ட சாலைகள் வழியே நகரங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. குடிநீர் வழங்குவதற்கு அணைகளும், மனிதனால் உருவாக்கப்பட்ட நீர்நிலைகளும் தேவை. எரிபொருள் தயாரிப்போ மையப்படுத்தப்பட்ட மிகப்பெரிய மின்நிலையங்கள் மூலம். நிலக்கரி, உரேனியச் சுரங்கங்கள், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் மின்கடத்தி வழித்தடங்களும் தேவைப்படுகின்றன.

இதேவேளையில், ஏராளமான கழிவுகள், எண்ணற்ற டன்கள் கணக்கில் மதிப்புமிக்க மக்கிய உரங்கள் நகருக்கு வெளியே கொண்டு செல்லப்படவும், சுத்திகரிக்கப்படவும், புதைக்கப்படவும், கடலில் கொட்டப்படவும் வேண்டியுள்ளன. இதன் விளைவாகக் கடைசியில் நகர்ப்புறங்களில் வாழ்வதற்காக – தங்களுடைய நிலம்சார்ந்த உறவினர்களைவிட – குறிப்பிடத்தக்க வகையில் புதுப்பிக்கப்பட முடியாத வளங்களைப் பயன்படுத்துகிறார்கள். இந்தச் சங்கிலித் தொடரில் முடிவை நாம் அடையும்போது அங்கு எதுவும் இருக்கப் போவதிலை. இந்த உலகம் முழுவதையும் தொழில்மயமாக்க நாம் முயற்சித்தால் அதன் முடிவு உலக வறுமை, உலகப் பஞ்சம் என முடியும். சுற்றுச்சூழல் அமைப்பு சீர்குலைந்து மனித இனத்தின் முடிவை நாம் காண்போம்."

(தொடரும்)

Pin It