கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டை பெற்று விட்ட பிறகும், பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சமூகத்தினரை நோக்கி ‘கோட்டா ஜாதி’ என்று இழிவுபடுத்தும் போக்கை இன்னும் பார்ப்பனர்கள் விட்டுவிடவில்லை. இச்சூழலில் ‘மெரிட்’ குறித்து ராகுல் காந்தி அளித்திருக்கும் மிக எளிமையான விளக்கம் சமூகநீதியின்பால் அவர் கொண்டிருக்கும் அக்கறையை வெளிகாட்டுவதாய் உள்ளது. இடஒதுக்கீடு ஏன் அவசியம்? ஜாதி வாரி கணக்கெடுப்பு ஏன் அவசியம்? கல்வி உரிமைகள் - மாநில உரிமைகள் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும்? என்றெல்லாம் தமிழ்நாட்டின் பார்வையில், குறிப்பாகத் திராவிட இயக்கத்தின் பார்வையில் மிகத் தெளிவாக, ஆழமான கருத்துக்களை கடந்த காலங்களில் தெரிவித்திருக்கும் ராகுல் காந்தி, இப்போது ‘மெரிட்’ குறித்து அளித்திருக்கும் விளக்கம் அவர் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்வதாக உள்ளது.

இதுதொடர்பாக ராகுல் காந்தி சமீபத்தில் பேசியிருக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அதில் அவரிடம் எழுப்பப்பட்ட கேள்வியும், அதற்கு அளித்த பதிலும்...rahul gandhi 347கேள்வி: மெரிட் என்றால் என்ன ?

பதில் : உண்மையில் நடந்த கதை ஒன்றை உங்களுக்குச் சொல்கிறேன். இந்தியாவில் IIT க்களை போன்ற அமெரிக்காவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்வு SAT என்று அழைக்கப்படுகிறது. முதன்முதலாக SAT தேர்வுகள் அமல்படுத்தப்பட்ட போது ஒரு விநோதம் நடந்தது. வெள்ளை அமெரிக்க மாணவர்கள் மட்டுமே அதில் முதன்மை மதிப்பெண் பெற்றார்கள். கருப்பின அமெரிக்க மாணவர்களால் நல்ல மதிப்பெண்கள் பெற முடியவில்லை. ஸ்பானிஷ் மொழி பேசும் லத்தீன் அமெரிக்க மாணவர்களாலும் அதிக மதிப்பெண் பெற முடியவில்லை.

இதுபற்றி கல்வியாளர்கள் சொன்னார்கள். ஆப்பிரிக்க கருப்பின மாணவர்களுக்கும் லத்தீன் அமெரிக்க மாணவர்களுக்கும் மெரிட் சாமர்த்தியம் இல்லை என்று சொன்னார்கள். இவர்களால் கடினமான பாடங்களைப் புரிந்து கொள்ளவே முடியாது என்று சொன்னார்கள். இந்த வகை கருத்தாக்கம் பல ஆண்டுகளாக இருந்தது. அதன் பின் ஓர் அறிவார்ந்த பேராசிரியர் திடீரென வந்தார். நான் ஒரு சோதனை செய்து பார்க்கிறேன் என்றார் அவர். ஆப்பிரிக்க கருப்பின மாணவர்கள் தேர்வு எழுதிய ஒரு கேள்வித்தாளை அவர் கேட்டு வாங்கினார். வெள்ளை அமெரிக்க மாணவர்கள் அதற்கு விடை எழுதுமாறு பணித்தார்.

என்ன நடந்தது தெரியுமா? வெள்ளை அமெரிக்க மாணவர்கள் அனைவரும் தோல்வியடைந்து விட்டனர். இதிலிருந்து தெரிவது என்ன? தேர்வு முறையை யார் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்களோ அவர்கள்தான் மெரிட்டை முடிவு செய்கிறார்கள். உதாரணமாக உங்கள் அப்பா ஒரு விவசாயி. என்னுடைய அப்பா ஓர் அதிகாரி என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் வினாத்தாளை உருவாக்கினால் நான் தோல்வியடைந்து விடுவேன். நான் வினாத்தாளை உருவாக்கினால் நீங்கள் நிச்சயம் தோல்வியடைந்து விடுவீர்கள். யார் மெரிட் உள்ளவர் என்பது இங்கே அதிகாரத்தில் உள்ளவர்களால் தீர்மானிக்கப்பட்டு வந்துள்ளது.

நமது நாட்டில் IIT தேர்வுக்கான வினாத்தாளை வடிவமைப்பவர்கள் அனைவரும் உயர்த்தப்பட்ட ஜாதியினர். அதனால் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அனைவரும் தோல்வியடைகின்றனர். இப்போது ஒரு மாற்றம் செய்து பார்ப்போம். IIT தேர்வுக்கான வினாத்தாளை தாழ்த்தப்பட்ட ஜாதியினர் வடிவமைக்கட்டும். ஆம். இதை நாம் நிச்சயமாக முயற்சி செய்து பார்ப்போம். சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்று நான் பேசுவதே இந்த சமூக நீதிக்காகத்தான்.