kolaturmani 350(பள்ளிப்பாளையத்தில் 20.9.2019 அன்று நடந்த திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை.)

இரண்டு செய்திகளை முன் வைத்து தான் இந்த பயணம். ஒன்று எங்களுடைய கல்வி உரிமைகளை பறிக்கிறாய், வேலை வாய்ப்புரிமையை பறிக்கிறாய். வேலை வாய்ப்பு உரிமை என்பது, தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் நமக்கு உரிமை வேண்டும் என்பது தான். அப்படித் தான் 2014இல் நாம் போராட்டத்தை முன்னெடுத்தோம். அன்பு தனசேகர் (தி.வி.க. தலைமைக் குழு உறுப்பினர்) பல்வேறு தகவல்களை திரட்டிக் கொடுத்தார். அதனடிப்படையில், பல்வேறு இயக்கங்களை உடனழைத்துக் கொண்டு சாஸ்திரி பவன் எதிரே ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். தமிழ்நாட்டில் இயங்குகிற மத்திய அரசு அலுவலகங்களில், வெளி மாநிலத்து ஆட்களை பணிக்கு அமர்த்துவதை நிறுத்த வேண்டும் என்பதை கோரிக்கையாக வைத்து அந்த போராட்டத்தை நாம் நடத்தினோம். அதைத் தொடர்ந்து பல்வேறு இயக்கங்கள் இப்போதும் அது போன்ற போராட் டங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் கூட அதனுடன் வேறொன்றை சேர்க்க வேண்டியவர்களாக நாம் மாறியிருக்கிறோம். 

மத்திய அரசுப் பணிகளில் வெளி மாநிலத் தவர்களை நியமிக்காதே என்பது மட்டுமில்லாமல் தமிழ்நாட்டுப் பணிகளில் வெளி மாநிலத்தவர்களை பணியில் அமர்த்தாதே என்ற கோரிக்கையையும் தற்போது நாம் வைக்க வேண்டிய நிலைக்கு தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. புதிய கல்விக் கொள்கை என்பது, பல கல்விக் குழுக்கள், பல கல்வியாளர்களை நியமித்திருக் கிறார்கள். தமிழ்நாட்டில் விடுதலைக்கு முன்னாலிருந்து, ஆங்கிலேயர் காலத்திலிருந்தே கல்விக் குழுக்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. 1835 இல் மெக்காலே கல்வி முறையை கொண்டு வந்தார். இல்லை இல்லை அவர் ஆங்கிலத்தில் கல்வி முறையை கொண்டு வந்தார் என்று சொன்னார்கள். ‘30 ஆண்டுகளுக்குள் ஆங்கிலத்தில் கல்வி பெற்றவர்கள், அதில் உள்ள அறிவியலை மொழி மாற்றம் செய்து விடுவார்கள்’ அதன் பின் தாய் மொழியில் கல்வி நடக்கட்டும் என்று தான் அவர் சொன்னார். 

ஆனால் அப்படி நடக்கவில்லை, ஏனென்றால் முதன்முதலில் கல்வி பெற்றவர்கள், எப்படி சமஸ்கிருதத்தை தன் கைக்குள்ளே வைத்துக் கொண்டு கோவில்களிலும், வீட்டு நிகழ்ச்சிகள் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் முன்னிலை வகிக்கக் கூடிய பார்ப்பனர்கள் தான் முதன் முதலில் கல்வி பயின்றார்கள். அவர்கள் ஆங்கிலக் கல்வியை ஆங்கிலத்திலேயே வைத்துக் கொண்டார்கள். அப்போது தானே கிராமத்துக்காரர்கள் வர மாட்டார்கள். ஆனாலும் ஆங்கிலேயர்கள், 30 ஆண்டுகள் என்று சொன்னார்கள்,  50 ஆண்டுகள் கழித்து கல்வியாளரைக் கொண்டு ஒரு குழுவை அமைத்தார்கள். அதன் பின்பு கூட, டாக்டர் இராதாகிருஷ்ணன் தலைமையிலே ஒரு குழு, சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஏறத்தாழ 30 ஆண்டுகள் துணைவேந்தராக இருந்த இலட்சுமணசாமி முதலியார் கல்விக் குழு, பல்கலைக் கழக மானியக் குழு என்று சொல்வோம். அப்படி மானியக் குழுக்களின் தலைவர்களாக இருந்த கோத்தாரி தலைமையில், யஷ்பால் தலைமையில் கல்விக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதற்கு பின்பு கூட ஆச்சாரியா ராமமூர்த்தி தலைமையில் கூட ஒரு குழுவை அமைத்தார்கள். இவை அனைத்துமே கல்வியாளர்களைக் கொண்ட கல்விக் குழுக்கள். ஒரு சிலர் செயலாளராக இருப்பார்கள். அதில், ஒருங்கிணைப்பதற்கு, அறிக்கை எழுதுவதற்கு போன்ற உதவிகளுக்கு அவர்கள் இருப்பார்கள். இவர்களெல்லாம் யார் என்றால் மக்களுக்கு கல்வி எடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கல்வியாளர்கள். 

ஆனால், பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின் சில கல்விக் குழுக்களை அமைத்திருக்கிறார்கள். இப்போது மட்டுமல்ல, Gentleman Politician என்று சொல்வார்களே, அந்த வாஜ்பாயின் காலத்திலேயே ஒரு குழுவை அமைத்தார்கள். வாஜ்பாய் 1999 முதல் 2004 வரை பிரதமராக இருந்தார். அப்போது அமெரிக்காவிற்கு பயணம் சென்றார். அப்போது, இந்தியர்களின் மத்தியில் பேசியபோது அவர் சொன்னார்: “ஏன் நீங்கள் உங்கள் கொள்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். நாங்கள் இப்போது மற்ற கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியில் இருக்கிறோம். எங்களுக்கு முழுப் பெரும்பான்மை கிடைத்தவுடன் நிச்சய மாக நிறைவேற்றுவோம்’ என்றும் சொன்னார். இப்போது பெரும் பான்மை கிடைத்திருக் கிறது. 

அந்த வாஜ்பாயி ஒரு கல்விக் குழுவை அமைத்தார். யாரெல்லாம் அந்தக் குழுவில் இருந்தார்கள் தெரியுமா? முகேஷ் அம்பானியும், குமார்மங்கலம் பிர்லாவும். அதன் பெயரே அம்பானி பிர்லா கமிட்டி. கல்வியைப் பற்றி யார் கருத்து சொல்வதென்றால் இரண்டு பெரு முதலாளிகளிடம் கொடுத்து இங்கு கல்விக் கூடங்களை எப்படி நடத்தலாம் என்று ஆலோசனை கேட்டார்கள். அவர்களும் ஆலோசனை கொடுத்தார்கள்.

முதலில் Vocational Education; கல்வியோடு சேர்த்து வேலைக்கான பயிற்சியும் கொடுக்க வேண்டும். ஆனால் நாம் தனியாக பொறியியல், வேளாண்மை போன்றவற்றை படிக்கிறோம். இவர்கள் கல்வியோடு சேர்த்தே படிக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதன் பின் அனைத்து செய்திகளும் Common National Content ஆக இருக்க வேண்டும். அதாவது நாடு முழுவதும் ஒரே கொள்கையாக இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தார்கள். Market Oriented Education என்றார்கள். சந்தையில் விலை போகிற கல்வியை கொடு என்றார்கள். மக்களுக்கு அறிவான கல்வி வேண்டாம். விலை போகிற கல்வி முறையை பரிந்துரைத்தார்கள். பொதுத் தேர்வு முறையை பரிந்துரைத்தார்கள். இவையெல்லாம் 2001 இல் கொடுத்த அறிக்கை. 

அதன் பின் உலகெங்கும் உள்ள தனியார் பல்கலைக் கழகங்களை இங்கே நிறுவ வேண்டும் என்று பரிந்துரைத்தார்கள். வெளி நாட்டினரின் முதலீடுகள் நேரடியாக இருக்க வேண்டும் என்றார்கள். இவையனைத்தையும் விட முக்கியமான ஒன்றை பரிந்துரைத்தார்கள். எந்த கல்வி நிலையங் களிலும் அரசியல் நடவடிக்கை இருக்கக் கூடாது என்றார்கள். 

தற்போது பாஜக ஆட்சிக்கு வந்த பின், டெல்லி, அய்தரபாத் பல்கலைக் கழகங்களில் உள்ள மாணவர் தலைவர்களை மிகவும் கேவலமாக நடத்துகிறது. அரசியல் என்றால் எந்த அரசியல்? எங்களை ஆளுவது எந்த மாதிரியான கொள்கையாக இருக்க வேண்டும் என்பது தான் அரசியல். எங்களுக்கான உணவு திட்டம், கல்வி முறை, வேளாண்மை உதவி திட்டம் போன்றவைகள் தானே அரசியல். தேர்தலுக்கான ஓட்டு மட்டுமா அரசியல்? ஆனால் அதை பேசக் கூடாது என்று அப்போது சொன்னார்கள். இப்போது பெரும்பான்மை வந்த பின்பு நடைமுறைப் படுத்துகிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம். 

வாஜ்பாயி மட்டும் தான் பணக்காரர்களை வைத்து ஒரு குழுவை அமைத்தார் என்று நினைக்க வேண்டாம். மோடி ஆட்சிக்கு வந்த பின்பு, போன ஆட்சிக் காலத்தில் ஒரு குழுவை அமைத்தார். டி.எஸ்.ஆர் சுப்ரமணியம் குழு. அவர் மத்திய அரசில் செயலாளராக இருந்தவர். அதில் இருந்த அனைவரும் அதிகாரிகள் தான். ஒருவர் மட்டும் கல்வியாளர் இருந்தார். ரஜ்புத் என்ற ஒருவர். பாரதிய ஜனதா கட்சியில், ஆர்.எஸ்.எஸ்.யைச் சார்ந்த கல்வியாளர்.  குஜராத், ராஜஸ்தான் கல்வி புத்தகங்களைப் பற்றி நிறைய விமர்சனங்கள் 2018இல் நடைபெற்றது. ஆள் இழுக்காத வாகனங்கள் இருந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. புராண காலத்தில் புஷ்ப விமானம் இருந்தது என்றெல்லாம் பேசிக் கொண்டிருக் கிறார்கள்.  அந்த கல்வியாளர் தான் அந்த அறிக்கையைக் கொடுத்தார்கள். இப்போது ஒரு கல்விக் குழுவை அமைத்தார்கள். இஸ்ரோவின் முன்னாள் தலைவரைக் கொண்டு கல்விக் குழுவை அமைத்தார்கள். ஆங்கிலேயர் காலத்திலிருந்தே அமைத்த கல்விக் குழுக்கள் கல்வியாளர்களைக் கொண்டு அமைக்கப்பட்டன. இப்போது, வாஜ்பாயி காலமாகட்டும், மோடி காலமாகட்டும் அதிகாரிகளைக் கொண்டே கல்விக் குழுக்களை அமைப்பதின் மர்மம் என்ன? ஏனென்றால் அதிகாரிகள் தான் அரசு சொல்வதை அறிக்கையாக கொடுப்பார்கள். 

இந்த அறிக்கையில் கூட, ஆயிரக்கணக்கான பேரிடம் கருத்து கேட்டோம் என்றுதான் ஆரம்பிக்கிறார்கள். அதில் கல்வி தொடர்பாக கேட்கப்பட்ட அமைப்புகளை குறிப்பிடுகிறார்கள். அவை, அகில் பாரதிய வித்யாந்தி பரிஷித் (ABVP) ஆர்.எஸ்.எஸ் அமைப்பினுடைய மாணவர் அமைப்பு. இது இரண்டாவதாக வருகிறது.  பாரத் சிக்சான் மண்டல். அடுத்து பாரதிய சிக்ஷா சோத் சனாக் சன்ஸ்தான் இந்த மூன்று அமைப்புகளின் கல்வி யாளர்களிடம் தான் கருத்து கேட்டிருக்கிறார்கள். மற்றவர்களெல்லாம் பல்கலைக்கழகங்களில் இருப்பவர்களிடம் 217 நபர்களிடமும் கருத்து கேட்டதாக பட்டியல் வைத்திருக்கிறார்கள். அதில் ஒருவர் மட்டும்தான் கருப்பர்; சூத்திரர். வேலூர் வி.அய்.டி. வேந்தர் விஸ்வநாதனை பார்த்திருக் கிறார்கள். மற்றவர்களின், பெயர்களுக்குப் பின்னால் உள்ள ஜாதிப் பட்டத்தைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். கருத்துகூட நம்மவர்களிடம் கேட்கப்படவில்லை.

இந்த கல்வி அறிக்கை எப்போது கொடுக்கப்பட்டது? 2018 டிசம்பர் 15இல் அப்போதிருந்த கல்வியமைச்சரிடம் கஸ்தூரி ரங்கன் கொடுக்கிறார். எப்போது வெளியிட்டார்கள்? 2019 மே மாதம் வெளியிட்டுவிட்டு, ஜூன் மாதத்திற்குள் அதன் மீதான மக்கள் கருத்தை சொல்ல வேண்டும் என்கிறார்கள். இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டே மொழிகளில் மட்டும் வெளியிட்டு கருத்து கேட்டார்கள். தேர்தல் முடியும் வரை காத்திருந்து தான் வெளியிட்டார்கள். அப்படி இந்த அறிக்கையில் உள்ள செய்திகள் தான் என்ன? அந்த அறிக்கையின் முன்னுரையில் எந்த நோக்கத்திற்காக இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது என்று எழுதுகிறார். அதில் அவர் கூறுகிறார், ‘சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து எல்லோருக்கும் கல்வி சமமான கல்வி இதைப் பற்றித் தான் நாம் பேசிக்கொண்டிருந்தோமே தவிர, தரமான கல்வியைப் பற்றி எப்போதாவது பேசி இருக் கிறோமா?’ என்று அவர் ஒரு கேள்வியை முன் வைக்கிறார். அதற்கு மேலும் கூறுகிறார், ‘பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்கள் என்றுகூட எழுதவில்லை, ஆனால் ஒரு சில கூட்டத்துக்கு கல்வி கொடுக்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறீர்கள், தனி மனிதத் திறமையை வளர்க்க என்றாவது எண்ணியிருக்கிறீர்களா?’ என்று அறிக்கையில் எழுதியிருக்கிறார். இதை கூறுகிறவர் கல்விக் கொள்கையில் என்ன கொடுத்திருப்பார்? 

பறிபோகும் வேலை வாய்ப்புகள்

நாம் வேலை வாய்ப்பைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். வேலை வாய்ப்பில் என்ன செய்திருக்கிறார்கள். நிறைய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் வந்த செய்தி,  ‘மதுரையில் நடந்த இரயில்வே  தேர்வில், 572 ஆட்களை தேர்வு செய்துள்ளனர். உயர் பதவிகளுக்கு இல்லை, இரயில் தண்டவாளங்களை சரி செய்யும் பணிகள். இந்த பணிகளுக்குக் கூட 572 பேரில் 11 நபர்கள் தான் தமிழ்நாட்டுக்காரர்கள். உடலுழைப்பை செய்யக்கூடிய இந்த வேலையில், இதற்கு கல்வி பெற்று வர வேண்டிய தேவை இல்லை. இதே போல், இதே பணிக்கு திருச்சியில் 272 பேரை எடுத்துள்ளனர். 16 பேர் மட்டும் தான் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள். இதற்கு முன்னால் எல்லாம் மத்திய அரசு தேர்வாணையம் ‘சி’, ‘டி’ பிரிவுகளுக்கு உள்ளூர்க்காரர்களை மட்டும் தான் எடுத்தது. அந்தந்த மாநிலத்தவர்களுக்கு வேலை கொடுப்பதுதான் பழக்கம் விதியே அப்படித்தான் இருந்தது. ஆனால் இப்போது எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டு வருகிறார்கள். 

வங்கித் தேர்வில் கூட மாநில மொழியில் புரிதல் இருக்க வேண்டும் என்பதை மாற்றி இப்போது ஆங்கிலத்தில் எழுதும்படி மாற்றி விட்டார்கள். ஆங்கிலத்தில் தேர்வெழுது என்றால் யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்று பொருள். மாநில மொழிகளை விடுத்து ஆங்கிலத்தில் எழுத சொன்னார்கள். அஞ்சல்துறைக்கு ஆட்களை எடுத்தார்கள். சென்னையில் ஒரு நிகழ்வு  நடந்தது. ஒருவர் பதிவஞ்சல் அனுப்ப சொல்கிறார் தமிழில் எழுதி கொடுக்கிறார். அஞ்சல் அலுவலர் சொல்கிறார், எனக்கு தமிழ் தெரியாது, ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதிக் கொடு என்கிறார். எங்கே இருந்து கொண்டு சொல்கிறார், தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள அஞ்சல் துறை அதிகாரி சொல்கிறார். அஞ்சல் துறையில் இருப்பவருக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டாமா? மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும் என்பதால் தான் 100 விழுக்காடு மதிப்பெண்களில் 25 விழுக்காடு மதிப்பெண் மாநில மொழியில் எழுத வேண்டும். அப்படி தமிழிலும் எழுத வைத்தார்கள். அதில், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான் தமிழில் 25 மதிப்பெண்ணிற்கு 24 மதிப்பெண் வாங்கினார்கள். தமிழ்நாட்டை சார்ந்தவர்கள் 18 மதிப்பெண்ணிற்கு மேல் யாரும் வாங்கவில்லை. நல் வாய்ப்பாக தமிழ்நாட்டு தபால் துறை போஸ்ட் மாஸ்டர் ஜெனரலே இதைப் பார்த்து சந்தேகமாக இருக்கிறது என்று தேர்வை இரத்து செய்து விட்டார். இப்படி பித்தலாட்டத்தனமாக அகில இந்திய தேர்வுகள் நடைபெறுகின்றன. 

(தொடரும்)

Pin It