திருமணத்தின் போது அக்னி குண்டத்தை 7 முறை சுற்றி வராததால், தங்களின் திருமணம் செல்லாது என அறிவிக்கக் கோரி தம்பதி ஒன்று தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சர்ச்சையைக் கிளப்பியது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், இந்து திருமண முறைப்படி 7 முறை அக்னி குண்டத்தை சுற்றி வர வேண்டியது அவசியம், அப்படி சுற்றி வராத திருமணங்கள் பதிவு செய்யப்பட்டாலும் செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பால் சுயமரியாதைத் திருமணங்கள் செல்லுபடியாகுமா? ஆகாதா என்ற விவாதங்கள் வலுத்தன. இந்நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு இதுதொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் விவரித்து கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால், தமிழ்நாட்டில் மட்டுமே பின்பற்றப்படுகின்ற சுயமரியாதைத் திருமணங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அவர் விளக்கியிருக்கிறார். அதில் இருந்து சுருக்கமானப் பகுதியைக் காணலாம்.

self respect marriage1952 பொதுத் தேர்தலுக்குப் பிறகு, புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கம் புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய இந்துக்களுக்கான திருமண வாரிசு மற்றும் தத்தெடுப்பு தொடர்பான சட்டத்தை நிறைவேற்றும் பணியையும் மேற்கொண்டது. இம்முறை, நான்கு சட்டங்களாக தயார் செய்யப்பட்டன. பாராளுமன்றத்தில் புதிதாக இணைக்கப்பட்ட உறுப்பினர்கள் இந்து திருமணச் சட்டம் , 1955 உட்பட நான்கு சட்டங்களை நிறைவேற்றினர். சட்டத்தின் 7வது பிரிவின்படி, திருமணத்தின் இன்றியமையாத தேவை தம்பதிகள் அக்னி குண்டத்தைச் சுற்றி வர வேண்டும். இந்தத் தேவையின் விளைவாக திருமணம் பின்னர் பதிவு செய்யப்பட்டாலும், சாஸ்திரத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாததால், அது செல்லுபடியாகாததாகக் கருதப்படாது. அதைத் தொடர்ந்து, நீதிமன்றங்களில் வழக்குகள், சடங்குகள் இல்லாத பல திருமணங்கள் செல்லாது என்று கண்டறியப்பட்டன. இதைப் போக்க, தமிழ்நாடு மாற்று அணுகுமுறையை வகுத்தது.

1967-இல் காங்கிரசை தோற்கடித்து திமுக வெற்றி பெற்றபோது, முதல்வரான அறிஞர் அண்ணா, இந்து திருமணச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தார். புதிய பிரிவு 7A இன் கீழ், சுயமரியாதைத் திருமண முறைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கொடுத்தார். தாலி கட்டினாலோ அல்லது மோதிரம் மாற்றிக் கொண்டாலோ அல்லது மாலை மாற்றிக் கொண்டாலோ போதுமானது. அந்தத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும் என்பதே சுயமரியாதைத் திருமணம். மற்ற எந்த சடங்கு, சம்பிரதாயங்களையும் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. இந்த சுயமரியாதைத் திருமண முறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு 2001ஆம் ஆண்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் சுயமரியாதைத் திருமணங்களின் எண்ணிக்கை பெருகியது. சில ஆர்வமுள்ள வழக்கறிஞர்கள் தங்கள் அலுவலகங்களில் இத்தகைய திருமணங்களை நடத்தத் தொடங்கினர். 2014 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வந்த புகாரில், வடசென்னையில் 50% திருமணங்கள் வழக்கறிஞர் அலுவலகங்களில் நடைபெறுவதாகக் குற்றம் சாட்டபபட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், திருமணம் செய்து வைப்பது வழக்கறிஞர்களின் வேலை இல்லை என்று தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்து தவறானது என தெளிவுபடுத்தியது உச்சநீதிமன்றம். சட்டப்பிரிவு 7ஏ-இன் வரம்பைக் குறைக்க நீதிமன்றம் எந்த நிபந்தனையும் விதிக்க முடியாது, அப்படிச் செய்தால் அது அரசியலமைப்பின் 21-வது பிரிவை மீறுவதாகவும் என்று கூறியது. அதேபோல, சுதந்திரமான தேர்வைப் பயன்படுத்துவதற்கான தனிநபர்களின் உரிமை வாழ்வுரிமையின் உள்ளார்ந்த பகுதியாகும் என்று 2023-லும் உச்சநீதிமன்றம் கூறியது. மேற்குறிப்பிட்ட தீர்ப்புகளின் அடிப்படையில், தமிழ்நாடு தனித்து நிற்கிறது. எனவே உச்ச நீதிமன்றம் தற்போது பிறப்பித்துள்ள உத்தரவால் சுயமரியாதைத் திருமணங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. 7 முறை அக்னி குண்டத்தைச் சுற்றிவர வேண்டிய அவசியமும் இல்லை.

Pin It