செப்டம்பர் 27 அன்று கர்நாடகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தால் ஜெயலலிதா ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டதும் அதற்கு எதிர்வினையாகப் பல்வேறு நிகழ்வுகளைத் தமிழ் நாட்டில் கண்டு வருகிறோம். சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய அதிகாரத்தில் உள்ள ஆளும் கட்சியைச் சேர்ந்த அ.தி.மு.க.வினரே சட்டத்திற்கு விரோதமான போராட்டங்கள், பேருந்து எரிப்புகள், கடையடைப்புகள், பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டதையும், கண்ணீரும் கம்பலையுமாக அமைச்சர்கள் பதவியேற்ற நிகழ்ச்சியையும் நாம் பார்த்தோம்.

admk protest

தொடர்ந்து அக்கட்சியினர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்தும், உடனடியாக ஜெயலலிதாவுக்குப் பிணை கோரியும், நீதி வேண்டியும் உண்ணாவிரதப் போராட்டம், கோவில்களில் சிறப்பு பூஜை செய்தல், மண் சோறு சாப்பிடுதல், ஹோமம் வளர்த்தல், மகளிர் அணியினர்-பெண் அமைச்சர்கள், பெண் மேயர்கள் உட்பட- ஒப்பாரி வைத்து மாராடித்துக் கொண்டு அழுதல் எனப் பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் மட்டுமல்லாமல் திரைப்படத்துறையினர், வணிகர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் என அனைவரும் பல்வேறு வடிவங்களில் தமது எதிர்ப்பைத் தெரிவித்து வருவதையும் பார்க்கிறோம்.

இவை அனைத்தும் தண்டிக்கப்பட்ட தங்கள் “தெய்வத்தின்” கடைக்கண் பார்வையைப் பெற்று உரிய நேரத்தில் உரிய வரங்களைப் பெறுவதற்காக அக்கட்சியினர் நடத்தும் நாடகங்கள் என்பதை மக்கள் அறிவர்.

இந்தக் காட்சிகள் அனைத்தையும் அனைத்து முதலாளியப் பத்திரிகைகளும், தொலைக் காட்சிகளும் விசுவாசமாகப் பரப்புரை செய்து வருகின்றன. ‘சிறப்பு நீதிமன்றத்தில்தானே ஜெயலலிதா தண்டிக்கப்பட்டுள்ளார். அவர் மேல் முறையீடு செய்ய இன்னும் உயர் நீதி மன்றமும், உச்ச நீதி மன்றமும் உள்ளன. எனவே அவர் கவலைப்பட வேண்டியதில்லை’ எனச் சில பத்திரிகைகள் அவருக்கு ஆறுதல் கூறுகின்றன. ஊழலில் தண்டிக்கப்பட்ட ஒருவருக்கு ஆதரவாக அக்கட்சியினர் நடத்தும் போராட்டங்களை விரிவாகப் பரப்புரை செய்து வரும் இந்த ஊடகங்கள்தான் மக்களுடைய நியாயமான போராட்டங்களையும், மக்களுக்காகப் போராடி வரும் இயக்கங்களின் போராட்டங்களையும் இருட்டடிப்பு செய்து வருகின்றன, மேலும் அவர்களைப் பற்றி அவதூறுகளையும் பரப்பி வருகின்றன என்பதை நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

தனது முதல் காலகட்ட (1991-1996) ஆட்சியில் ஜெயலலிதா அவருடைய தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்களான சுதாகரன், இளவரசி ஆகியோருடன் சேர்ந்து ஊழல்கள் மூலம் வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்புச் செய்ததற்காக அவருக்கு நான்காண்டுச் சிறைத் தண்டனையும், நூறு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதை எதிர்த்துத்தான் மேலே குறிப்பிடப்பட்ட அத்தனை ஆர்ப்பாட்டங்களும், காட்சிகளும்.

இத்தனைக்கும் ஜெயலலிதா சட்டத்திற்குப் புறம்பாகத் தண்டிக்கப்படவில்லை. அ.தி.மு.க. போன்ற கட்சிகள் எல்லாம் சேர்ந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய இந்த நாட்டுச் சட்டத்தின் அடிப்படையில்தான் அவர் தண்டிக்கப்பட்டுள்ளார். அதுவும் வழக்கு தொடரப்பட்டு பதினெட்டு ஆண்டுகள் கழித்து, ஜெயலலிதாவும் அவருடைய கூட்டாளிகளும் போட்டு வந்த அனைத்து முட்டுக்கட்டைகளையும் மெதுவாகத் தாண்டி, ஊர்ந்து ஊர்ந்து வந்து இறுதியாகத் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். அப்படியிருக்கும்போது ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தண்டனைக்கு இத்தகைய எதிர்ப்பை ஏன் அக்கட்சியினர் காட்டி வருகின்றனர்? சட்டம் என்பது மற்றவர்களைத் தண்டிப்பதற்குத்தான், தனது தலைவர் தப்பே செய்திருந்தாலும் கூட அவரைத் தண்டிக்கக் கூடாது என அவர்கள் கருதுவதுதான். இவ்வாறுதான் ஒவ்வொரு கட்சியினரும் இன்று கருதுகின்றனர்.

அதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஊழல் என்பது இயல்பான ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு மனப்பாங்கு சமூகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஊழலை ஒரு குற்றமாக மக்கள் கருத முடியாத அளவுக்கு அது எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. ஆட்சி அதிகாரத்தைச் சுவைத்த அனைத்து அரசியல்வாதிகளும் ஊழல்கள் மூலம் கோடி கோடியாகச் சொத்துக்களைக் குவித்து வருவதை மக்கள் தொடர்ந்து கவனித்து வருகின்றனர். இதில் யோக்கியர்கள் என்று சொல்வதற்கு யாருமில்லை. இதற்கு விதிவிலக்காகச் சில கம்யூனிஸ்டுகள் வேண்டுமானால் இருக்கலாம். ஜெயலலிதாவை விடப் பெரும் மலை முழுங்கி மகாதேவன்கள் இங்கு தண்டிக்கப்படாமல் இருக்கும்போது ஜெயலலிதாவை மட்டும் தண்டிப்பது என்ன நியாயம் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எளிதாக எடுபட்டு விடுகிறது.

அடுத்து, ஊழலில் ஈடுபட்டுள்ள அனைவரும் தண்டிக்கப்படாத நிலையில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டதற்குக் காரணம் சுப்பிரமணியன் சுவாமியும், தி.மு.க.வும் அவர் மீது போட்ட வழக்குதான் காரணம் எனப் பரப்புரை செய்யப்பட்டு, கட்சி அணியினரின் கோபத்தை அவர்களுக்கு எதிராகத் திருப்ப முடிகிறது. அவர்களைப் பொறுத்த வரையிலும் ஜெயலலிதா செய்தது தவறல்ல, அவர் காட்டிக் கொடுக்கப்பட்டதுதான் தவறு. ஏனென்றால் அணிகள் இங்கு அவ்வாறுதான் பயிற்றுவிக்கப்படுகின்றனர். ஊழல் என்பதே, அதை யார் செய்தாலும், தவறானது என்ற எண்ணத்தை உருவாக்குவதில்லை. மற்ற கட்சியினர் ஊழல் செய்யும்போது தன் கட்சியினர் ஊழல் செய்வதில் தவறு என்ன இருக்கிறது? இதை மற்ற கட்சியினர் எதிர்த்து வழக்குப் போடுவதில் என்ன தார்மீக நியாயம் இருக்கிறது? இவ்வாறு ஒவ்வொரு கட்சியும் தனது அணியினரைப் பயிற்றுவித்து வரும்போது ஊழல் என்பது இங்கு இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்படும் மனப்பாங்கு உருவாக்கப்பட்டு விடுகிறது. சமூகமே ஊழல் மயமாக்கப்படுகிறது. அதனால் ஊழலுக்கு எதிராகக் கோபம் எழுவதற்குப் பதிலாக மாற்றுக் கட்சிகள் எதிரிகளாக்கப்பட்டுக் கோபம் திசை திருப்பி விடப்படுகிறது.

‘ஜெயலலிதா தண்டிக்கப்பட்டதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை, சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது, சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமம்’ என்று கூறி இந்த நாட்டில் சட்டப்படி நியாயமான ஆட்சிதான் நடைபெற்று வருவதாகப் பலர் பசப்பி வருகின்றனர். அப்படி அவர்களின் கூற்றுப்படி இங்கு நியாயமான ஆட்சி நடைபெற்று வருகிறது என்றால் இங்குள்ள ஊழல் அரசியல்வாதிகளை அடைப்பதற்கு இந்த நாட்டிலுள்ள சிறைச் சாலைகளில் இன்று இடமில்லாமல் போயிருக்கும். இங்கு அகப்பட்டுக் கொண்ட ஒரு சில ஊழல் பேர்வழிகள்தான் தண்டிக்கப்படுகின்றனர். ஆனால் அதைக் காட்டி இங்கு ஊழல் பேர்வழிகள் அனைவரும் தண்டிக்கப்படுவது போலவும், சட்டத்தின் ஆட்சி நடைபெறுவது போலவும் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

‘காவிரிப் பிரச்சனையில் ஜெயலலிதா விட்டுக் கொடுக்காமல் போராடினார்; அதற்குப் பழி வாங்கும் நோக்கத்தில்தான் கர்நாடக நீதி மன்றம் அவரைத் தண்டித்து விட்டது’ எனக் கூறி ஒரு சிலர் ஜெயலலிதாவைத் தமிழ் நாட்டின் மக்கள் நலனுக்காகப் போராடியவராகச் சித்தரித்து அவரைத் தியாகி ஆக்க முயற்சி செய்து வருகின்றனர். அவர்கள் தமது குறுகிய தேசிய இனவாத அரசியலுக்குத் தீ மூட்டிக் குளிர் காய விரும்புகின்றனர்.

admk protest

வேறு சிலரோ இன்னும் ஒருபடி மேலே சென்று ‘அம்மா உணவகம்’, ‘அம்மா மருந்தகம்’, ‘அம்மா குடி நீர்’ ‘அம்மா உப்பு’ என்று அரசுத் துறையை வளர்க்க ஜெயலலிதா முயற்சி செய்து வருகிறார். ஆனால் இங்குள்ள ஆளும் வர்க்க முதலாளிகளும் பன்னாட்டுக் கார்பரேட் நிறுவனங்களும் தனியார்மயமாக்கலை விரும்புகின்றனர். அவர்களுக்கு ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் எதிராக உள்ளன. எனவே அவர்களின் கூட்டுச் சதிதான் அவர் தண்டிக்கப்பட்டதற்குக் காரணம் எனக் கூறி ஜெயலலிதாவை முதலாளிகளுக்கும், கார்பரேட் நிறுவனங்களுக்கும் எதிரியாக நிறுத்துகின்றனர். ஆளும் வர்க்கங்களின் நெருக்குதலால்தான் நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா அவ்வாறு தீர்ப்பளித்துள்ளார் எனக் காரணம் கற்பிக்கின்றனர். இந்தச் சமூகத்தில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வையும் ஆளும் வர்க்கங்கள்தான் திட்டமிட்டு நடத்தி வருகின்றன, வேறு காரணிகள் இருக்க முடியாது; நேர்மையுடன் இருக்கும், சிறந்த விழுமியங்களைக் கொண்டு ஒழுகும் குன்ஹா போன்ற சில தனிநபர்கள் விதிவிலக்காக இருக்க முடியாது என இவர்கள் கருதுகின்றனர். அனைத்தையும் கருப்பு வெள்ளை என்ற அடிப்படையில்தான் அவர்களால் பார்க்க முடியும். இரண்டுக்கும் இடைப்பட்டது அவர்களுக்கு இருக்க முடியாது. குன்ஹா தனக்குக் கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்கியுள்ளார் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்தத் தீர்ப்பு சமூகத்தில் உள்ள பல்வேறு சக்திகளுக்கும் பாதகமாகவோ அல்லது சாதகமாகவோ இருக்கலாம் என்பது வேறு விடயம். அதற்காக குன்ஹா நெருக்குதலின் காரணமாக வேண்டுமென்றே சிலருக்கு சாதகத்தை உருவாக்க வேண்டும் எனக் கருதித் தனது தீர்ப்பை வழங்கியுள்ளார் எனக் கருதுவது அபத்தமானது.

“அதிகாரம் சட்டத்திற்குப் புறம்பான வழியில் செல்வத்தைச் சேர்ப்பதற்கு இட்டுச் சென்று ஜனநாயக அமைப்புக்கே எவ்வாறு உண்மையான ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு குறுகிய ஐந்தாண்டு காலத்தில் ஜெயலலிதாவும் மற்றவர்களும் குவித்துள்ள மிகப் பெரும் சொத்துக்கள் ஆகும்” என நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில் கூறியுள்ளது ஜெயலலிதாவுக்கும் மட்டுமல்ல, இங்குள்ள அரசியல்வாதிகள் அனைவருக்கும் பொருந்தும். அதிகாரத்தைக் கொண்டு ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள சொத்துக்களைக் குவித்துக் கொண்டு முடி சூடா மன்னர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் இந்த அரசியல்வாதிகள் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்து வருகின்றனர். தொடர்ந்து தமது அதிகாரம் நீடிப்பதற்காக மன்னர் காலத்து நிலப்பிரபுத்துவக் கலாச்சாரத்தைப் பரப்பி வருகின்றனர். தன்னைச் சுற்றிலும் துதிபாடிகளையும், அடிவருடிகளையும் வளர்த்து வருகின்றனர். அந்தத் துதிபாடிகளும், அடிவருடிகளும் தமது தலைவரின் நல்ல எண்ணத்தைப் பெற்று அவரிடமிருந்து பெருத்த இலாபங்களை அடைவதற்காகத் தங்களுக்குள் கடும் போட்டியில் ஈடுபட்டு வருகின்றனர். நேர்மை, தன்மானம், ஜனநாயகப் பண்பு எதுவும் அவர்களுக்குத் தேவையில்லை. அவர்களுக்குத் தேவையானதெல்லாம் தங்களுடைய தலைவரைத் திருப்திப்படுத்த வேண்டும் அதன் மூலம் தாம் கொழுத்த இலாபம் அடைய வேண்டும். அதற்காக அவர்கள் எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள் அதைத்தான் நாம் இன்று ஜெயலலிதா விடயத்திலும் கண்டு வருகிறோம். மற்ற கட்சியினர் இதற்கு விதிவிலக்கல்ல.

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட இந்தத் தண்டனை தமக்குச் சாதகமாக அமையும் என்று பலர் கணக்குப் போடலாம். ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வு முடிந்துவிட்டது, எனவே 2016ல் தமிழ் நாட்டின் அரசுக் கட்டிலில் அமரப் போவது தமது கட்சிதான் எனத் தி.மு.க.வினர் கனவு காணலாம்.

ஏற்கனவே தி.மு.க. மக்கள் செல்வாக்கை இழந்து விட்டது, இப்பொழுது அ.தி.மு.க.வும் காலி. இனி நமது காட்டில்தான் மழை என பா.ஜ.க.வினர் மனப்பால் குடிக்கலாம்.

இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளும் ஒழிந்து விட்டன, இனி தமிழ் நாட்டில் கூட்டணி ஆட்சிதான். அதில் நமக்குரிய பங்கைச் சுருட்டிக் கொள்ளலாம் என உதிரிக் கட்சிகளின் நாவில் நீர் ஊரலாம்.

ஆனால் இன்றுள்ள இதே நிலை நீடித்தால், ஜெயலலிதா தியாகி ஆக்கப்பட்டு 2016 லும் அ.தி.மு.க.வே ஆட்சிக் கட்டிலேறும். யாரோ ஒரு ஓனா பானாவைப் பொம்மை முதல்வர் ஆக்கி விட்டு, நடைமுறையில் ஜெயலலிதாவே முதல்வராக இருப்பார். ஜனநாயகப் பண்பு வளராத, நிலப்பிரபுத்துவக் கலாச்சாரமே ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த நாட்டில் இது ஒன்றும் அதிசயம் அல்ல. செருப்பே நாட்டை ஆண்ட வரலாற்றைக் கொண்டதுதானே நமது “பழம் பெரும் பாரத நாடு”.

- புவிமைந்தன்

Pin It