சென்ற இதழின் தொடர்ச்சி...

Dravidian years 4501984-இல் எம்.ஜி.ஆர் உடல்நலக் குறைவுக்கு ஆளானபோது தமிழ்நாடு அரசானது விமான ஓட்டி இல்லாது தானாக இயங்கும் விமானம் போல் செயல் பட்டது. இந்நிகழ்வானது அரசு எந்திரத்திற்கான பாராட்டாக அமைந்தது என்கிறார் நூலாசிரியர்.

சொத்துரிமை, ஆவணப்பதிவு, பிறப்பு இறப்புச் சான்றிதழ்கள் வழங்கல், கல்விநிறுவனங்களில் சேர சாதிச்சான்றிதழ் வழங்கல், உணவுப்பொருள் விநியோகம், ஓய்வூதியம் வழங்கல், அரசின் நல்கை களை வழங்கல், அரசின் திட்டங்களை நடைமுறைப் படுத்துவது தொடர்பாக விவாதித்து முடிவெடுத்தல் என்பன வழக்கம் போல் நிகழ்ந்தன. வழக்கம் போலவே, அரசின் நிர்வாகம் கண்காணிக்கப்பட்டு நிர்வாக நிலையில் மதிப்பீடு செய்யப்பட்டது. தத்தம் துறைகளை நிர்வகிக்கும் அனுபவம் வாய்ந்த மூத்த அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையும் செயல்பட்டது.

 • ···

1988-1989 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஆளுநர் ஆட்சி நடந்தது. நல்ல நிர்வாகத்திறன் கொண்ட பி.சி.அலெக்சாண்டர் ஆளுநராக இருந்து ஆட்சியை நடத்தினார். மத்திய அரசின் நிதிநல்கையுடன் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் நல்ல முன்னேற்றம் நிகழ்ந்தது.

இதனையடுத்து 13 ஆண்டுகள் கழித்து 1989-இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது; மத்தியில் ஆட்சியில் இருந்த வி.பி.சிங்கின் அரசுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தது. வி.பி. சிங்கின் அரசும் இதனையடுத்து வந்த சந்திரசேகரின் ஆட்சியும் அற்ப ஆயுளில் முடிந்தன.

தி.மு.க. ஆட்சியைக் கலைக்கும்படி, காங்கிரஸ் கட்சியின் வாயிலாக சந்திரசேகர் அரசிடம், ஜெயலலிதா நெருக்கடி கொடுத்து வந்தார். இதில் அவர் வெற்றியும் பெற்றார்.

1991-இல் நிகழ்ந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து அ.தி.மு.க போட்டியிட்டது. இக்கூட்டணி 225 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. பெற்ற வாக்குகளின் விழுக்காடு 59.09% ஆக அமைந்தது. இதுவரை அ.தி.மு.க. பெற்று வந்த வாக்குகளின் விழுக்காடை விட இது அதிகம். எம்.ஜி.ஆரின் வாரிசாக ஜெயலலிதாவை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டதன் வெளிப்பாடாக இது அமைந்தது.

ஜெயலலிதாவின் அரசியல் நுழைவு

இத்தகைய செல்வாக்கை ஜெயலலிதா திடீரென அடைந்துவிடவில்லை. 1982-ஆவது ஆண்டில் அவர் அ.இ.அ.தி.மு.க.வில் சேர்ந்தார். அவரைக் கொள்கைப் பரப்புச் செயலாளராக எம்.ஜி.ஆர். நியமித்தார். இதற்கு முன்னர் இவர் அரசியலில் ஆர்வம் காட்டிய வரல்லர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ற இரு பெயர்களும் திரைஉலகில் இணைத்தே பேசப்பட்டு வந்தன. 1973இலிருந்து 1982 வரையிலான காலம் ஜெயலலிதாவைப் பொருத்த அளவில் அமைதியான காலமாகவே இருந்தது. திரையுலகில் இருந்தும், எம்.ஜி.ஆரிடம் இருந்தும் அவர் விலகி நின்றமையால் பொதுமக்கள் பார்வையில் அவர் தென்படவில்லை. எம்.ஜி.ஆர். அமெரிக்கா சென்றிருந்தபோது, ஜெயலலிதாவும் மருத்துவச் சிகிச்சைக்காக அங்கு ஏற்கெனவே தங்கியிருந்தார். இருவருக்கும் பொதுவாக தலைவர் வாயிலாக இருவரும் சந்தித்துக் கொண்ட தாக எழுத்தாளர் வாசந்தி தமது ஆங்கில நூலில் குறிப்பிட்டுள்ளார்.

வளர்ச்சியடைந்திருந்த அ.இ.அ.தி.மு.க. விற்கு மக்கள் திரளை ஈர்க்கும் ஆற்றல் உடைய ஒருவர் தேவை என்று எம்.ஜி.ஆர் கருதினார். முதலமைச்சர் என்பதால் பொதுக்கூட்டங்களில் அதிக அளவில் பங்கேற்க எம்.ஜி.ஆரால் இயலவில்லை. மற்றொரு பக்கம் கருணாநிதியோ பொதுக் கூட்டங்களில் பங்கேற்று, மட்டுமீறிய தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தார். இச்சூழலில் பொதுக் கூட்டங்களில் உரையாற்ற ஜெயலலிதாவைப் பயன்படுத்திக் கொள்ள எம்.ஜி.ஆர். முடிவு செய்தார்.

கூட்டத்தைத் திரட்டுவதில் தொடக்கத்திலேயே ஜெயலலிதா வெற்றி பெற்றார். தி.மு.க.வினரின் குத்தல் பேச்சுக்களுக்கு சரியான பதிலடி கொடுத்தார்.

எம்.ஜி.ஆருடன் நெருக்கமானவராக இருந்த ஆர்.எம்.வீரப்பனும், வேறு சிலரும் ஜெயலலிதாவின் வருகையை எதிர்த்துத் தீவிரமாகச் செயல்படத் தொடங்கினர். சாதாரணமானவராக அவரை அவர்கள் கருதவில்லை. சில எதிர்பார்ப்புகளுடனேயே அவர் கட்சியில் நுழைந்துள்ளதாக அவர்கள் அஞ்சினர். எம்.ஜி.ஆரின் பல்வேறு திரைப்படங்களுக்கு தயாரிப்பு மேலாளராகவும், நிதி நிர்வாகத்தைக் கையாள்பவராகவும் இருந்து வந்தவர், ஆர்.எம். வீரப்பன். எம்.ஜி.ஆர். மன்றங்களின் புரவலராகவும் அவர் இருந்து வந்தார். இக்காரணங்களால் தலைமைக்கான போட்டியில் சட்டமன்ற உறுப்பினர் களின் ஆதரவு ஆர்.எம்.வீரப்பனுக்கே இருக்கும் என்று கருதப்பட்டது.

ஆனால், தம் உரைகளால் கூட்டம் சேர்ப்பவராக ஜெயலலிதா காட்சியளித்த போது கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கட்சிக்கு அவரது சேவை அவசியம் என்பதை உணர்ந்தார்கள். 1984-இல் எம்.ஜி.ஆர். அவரைப் பாராளுமன்றத்தின் மாநிலங் களவை உறுப்பினராக்கினார். இந்த வாய்ப்பை அவர் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு, ஓர் அறிவார்த்த மான அரசியல்வாதியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அவர் ஆற்றிய முதல் உரையே ஆளும் கட்சியாக இருந்த காங்கிரசின் மூத்த தலைவர்களை - குறிப்பாக, பிரதமர் இந்திராகாந்தி உட்பட அனை வரையும் ஈர்ப்பதாக இருந்தது. எதிர்பாராத முறையில் மாநிலங்களவையின் விவாதங்களில் குறுக்கிட்டுப் பேசும் ஆற்றல் அவருக்கிருந்தது. அவருடைய பதவிக் காலத்தில் குறிப்பிடத்தக்க அளவிலான தாக்கத்தை அவர் மாநிலங்களவையில் ஏற்படுத்தினார். இராஜீவ் காந்தியுடன் அவருக்கு நல்ல நட்புறவு இருந்தது.

எம்.ஜி.ஆரின் நிலை

திராவிட இயக்கச் சிந்தனைகள் வலிமை குன்றி வருவதாக, எம்.ஜி.ஆர். கருதலானார். மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்த எதிர்க்கட்சிகளிடம் இருந்து விலகி நின்றார். தேசிய வளர்ச்சிக் குழுவின் கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளி நடப்பு செய்தபோது அ.இ.அ.தி.மு.க. அதில் கலந்து கொள்ளவில்லை. ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் என்.டி.ராமராவின் ஆட்சி கலைக்கப்பட்டபோது, அதை அவர் கண்டிக்கவில்லை.

தன்னுடன் கூட்டணியில் தொடர்பவராகவே எம்.ஜி.ஆரை இந்திராகாந்தி கருதிவந்தார். இதற்காகத் திராவிட இயக்கம் சுயமரியாதை இயக்கம் என்ற அடையாளங்களை எம்.ஜி.ஆர். இழக்க வேண்டியிருந்தது.

எம்.ஜி.ஆரின் உடல்நலக் குறைவு

இந்த நேரத்தில் எம்.ஜி.ஆரின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதிக அளவிலான நீரழிவு நோயால் அவர் பாதிக்கப்பட்டவர் என்றாலும் அவர் இனிப்புப் பிரியர். அதிகாரிகளுடனான கூட்டமானாலும் அமைச்சரவைக் கூட்டமானாலும் அவருக்கு மிகவும் பிடித்தமான பாசந்தி என்ற இனிப்பு அனைவருக்கும் பரிமாறப்படும். இது அதிக அளவில் சர்க்கரை கலக்கப்பட்ட பால் இனிப்பு.

இக்கட்டுப்பாடு மீறலானது அவரது உடல் நலத்தைப் பாதித்தது. 1984 அக்டோபரில் அவர் உடல்நலக் குறைவுக்கு ஆளானார். மூச்சுத்திணறலில் இருந்து அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் போராடினர். அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரைக் காண, பிரதமர் இந்திராகாந்தி வந்து சென்றார். சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா செல்ல விமானம் ஒன்றை ஒழுங்கு செய்தார். 1984-இல் இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப் பட்ட போது எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார்.

 • ···

இரண்டாண்டுக் காலமாக ஜெயலலிதாவுக்குக் கட்சியில் முக்கியத்துவம் கொடுத்து வந்தார் எம்.ஜி.ஆர். பொதுநிகழ்ச்சிகளுக்கு ஜெயலலிதா வரும்போது எழுந்து நிற்கவேண்டுமென்று அமைச்சர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இதனால் அவருடன் மேடையில் பங்கேற்பதில் அமைச்சர்கள் அசட்டை யாக இருந்தனர்.

எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் இருந்தபோது அவரைக் காணச் சென்ற ஜெயலலிதாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்த விவரங்களை ஜெயலலிதாவால் கேட்டறிய முடியவில்லை. ஜப்பான் நாட்டு மருத்துவ நிபுணர் களை மருத்துவர்கள் அழைத்துள்ளதாக அவர் அறிக்கை வெளியிட்டபோது, கட்சியின் பொதுச் செயலாளரான ப.உ. சண்முகம் அதை மறுத்து, அது கட்சி அலுவலகத்தால் வெளியிடப்படவில்லை என்று அறிக்கை வெளியிட்டார். எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றங்கள் ஜெயலலிதாவை ஆதரிக்க முன்வர வில்லை. அவரது அரசியல் வாழ்க்கை முடிந்து போனதாகக் கருத்து உருவானது.

எம்.ஜி.ஆர். உடல்நலம் பெற்றுத் திரும்பினார். 1984 தேர்தலில் அவரது கட்சி வெற்றி பெற்றது.

1985 முதல் 1987 வரையிலான காலகட்டத்தில் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவராகவே ஜெயலலிதா காட்சியளித்தார். இக்காலத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகளில் அவரது செல்வாக்கு இடம் பெற்றிருந்ததாக அதிகாரவர்க்கம் கருதியது.

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பின்

எம்.ஜி.ஆர். இறந்தபோது அவரது உடல் ஏற்றப்பட்டிருந்த வண்டியில் ஜெயலலிதா ஏறுவதைத் தடுத்தனர். அ.இ.அ.தி.மு.க.வில் அவருக்கு இடமில்லாமல் செய்வதில் மூத்த தலைவர்கள் ஒன்றுபட்டிருந்தனர். அ.இ.அ.தி.மு.க.வின் சட்ட மன்றத் தலைவராக எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியைத் தேர்வு செய்ய அவர்கள் முடிவெடுத்தனர். இது தொடர்பாக சட்டமன்றத்தில் அமளி ஏற்பட்டு, ஆட்சி கலைக்கப்பட்டு, ஆளுநர் ஆட்சி அறிமுகம் செய்யப்பட்டது.

1991இல் தமிழ்நாட்டின் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றார். திராவிட அரசியலில் இருந்து மாறுபட்டவராகவே அவர் காட்சியளித்தார். கடவுள் மறுப்புக் கொள்கைக்கு மாறாக, சமய நம்பிக்கை உடையவராகவும், சடங்குகளில் நம்பிக்கை கொண்டவராகவும், கோவில் புனரமைப்பில் ஆர்வம் கொண்டவராகவும் அவர் விளங்கினார்.

இடஒதுக்கீடு, சாதியச் சமன்பாடு, வாக்குச் சேகரிப்பு என்பன தவிர, சமூகநீதி, சமூக சீர்திருத்தம் என்பன குறித்து அவருக்கு நம்பிக்கை இருக்க வில்லை.

கையூட்டு, நிதிமுறைகேடு தொடர்பாக பல வழக்குகளை அவரும், உயர் அதிகாரிகளும் எதிர் கொள்ள நேரிட்டது. இதே காலத்தில் இவரது அமைச்சரவையில் அங்கம் வகித்த அமைச்சர்கள் சிலரின் சிறப்பான செயல்பாடுகள் குறித்த செய்தி களையும் நூலாசிரியர் குறிப்பிடத் தவறவில்லை. குறிப்பாக,  உணவு அமைச்சராக இருந்த ஜி. விசுவநாதன், மக்கள் நலத்துறை அமைச்சராக இருந்த முத்துச்சாமி ஆகியோரின் செயல்பாடுகளைப் பாராட்டியுள்ளார் நூலாசிரியர். நிர்வாகத்திறன் கொண்ட இவ்விரு அமைச்சர்களுக்கும் அவர்களது துறைகளின் செயலாளர்கள், ஊழியர்களின் ஆதரவு இருந்த தாகவும் குறிப்பிட்டுள்ளார். இவ்விரு துறைகளின் செயல்பாடுகள் குறித்து சற்று விரிவாகக் கூறிப் பாராட்டியுள்ளார்.

போக்குவரத்துத் துறை அமைச்சராக முத்துச்சாமி பணியாற்றியபோது அவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையிலான நெருக்கம் தொடர்பான ஒரு நிகழ் வையும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

கைக்கடிகாரங்கள், மின்னணுப் பொருட்கள் மீது எம்.ஜி.ஆருக்கு விருப்பம் அதிகம். ஒருமுறை எம்.ஜி.ஆருடன் முத்துச்சாமி ஜப்பான் சென்றுள்ளார். தொலைக்காட்சியுடன் கூடிய கைக்கடிகாரம் ஒன்று அப்போதுதான் அறிமுகம் ஆகி ஜப்பானில் கிடைப் பதாக எம்.ஜி.ஆர். அறிந்திருந்தார். டோக்கியோவில் கலந்துகொள்ள வேண்டியிருந்த சில அதிகாரப் பூர்வமான கூட்டங்களைத் தவிர்த்து விட்டு டோக்கியோ நகரில் அக்கைக்கடிகாரத்தைத் தேடி விலைக்கு வாங்கி எம்.ஜி.ஆரிடம் கொடுத்தார் முத்துச்சாமி. பிரமித்துப்போன எம்.ஜி.ஆர். அதைப் பெற்றுக் கொண்டதுடன் பல்வேறு நிகழ்வுகளில் அதை அணிந்து காட்சியளித்தார்.

எம்.ஜி.ஆரின் மறைவையடுத்து 1991க்குப் பின்னர் கட்சியில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக முத்துச்சாமி விளங்கினார். பின்னர் அதை இழக்கவும் நேரிட்டது. அரசு மருத்துவமனை களுக்குத் தேவையான மருந்துகளைக் கொள்முதல் செய்வதில், அவரும் மக்கள் நலத்துறையின் செயலாளராக இருந்த ஆர். பூரணலிங்கம் என்ற இந்திய ஆட்சிப் பணித்துறை அதிகாரியும் எதிர் கொண்ட சிக்கல்களையும், அவற்றில் இருந்து விடுபட அவர்கள் மேற்கொண்ட வழிமுறை களையும் விரிவாகவே ஆசிரியர் கூறிச் செல்கிறார்.

இதனையடுத்து உணவுப்பொருள் வழங்கும் துறையின் செயல்பாடுகளையும், அத்துறையின் அமைச்சராக இருந்த ஜி. விசுவநாதனின் செயல் பாட்டையும் இத்துறையில் நிகழ்ந்த பயனுள்ள மாறுதல்களையும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசுடனான உறவு

மத்திய அரசில் செல்வாக்குப் பெறுவது தொடர் பாக, தி.மு.க., அ.இ.அ.தி.மு.க என்ற இரு திராவிடக் கட்சிகளுக்கும் இடையே நிழல் யுத்தம் நிகழலாயிற்று.

1996, 1998 ஆண்டுகளில் மத்திய ஆட்சியில் தி.மு.க. அங்கம் வகித்தது. 1998இல் பி.ஜே.பி.யின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்.டி.எ.) அ.இ.அ.தி.மு.க இணைந்து கொண்டது. ஆனால் குறுகிய காலமே (1998-1999) இவ்வுறவு நீடித்தது. 1999 முதல் 2004 முடிய முரசொலி மாறன் மத்திய அமைச்சராக பி.ஜே.பி.யின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பதவி வகித்தார்.

2001-இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி வைத்துப்  போட்டியிட்ட அ.இ.அ.தி.மு.க. தமிழ்நாட்டின் ஆட்சியைக் கைப் பற்றியது. மத்தியில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருந்த நெருக்கம் காரணமாக மாநில அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளில் இருந்து தி.மு.க. தன்னைப் பாதுகாத்துக் கொண்டது.

மத்தியில் நிகழும் ஆட்சி மாறுதல்களுக்கு ஏற்ப தி.மு.க. தன்னைத் தகவமைத்துக் கொண்டது. 2004 வரை தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் நட்புறவு கொண்டிருந்த தி.மு.க. 2004 தொடங்கி 2014 முடிய காங்கிரசுடன் இணைந்து கொண்டு மூன்று மத்திய அமைச்சர் பதவிகளைப் பெற்றது.

2001 சட்டமன்றத் தேர்தல்

இத்தேர்தலில், ‘நல்ல நிர்வாகம்’, 1996இல் இருந்து மேற்கொண்ட ‘சாதனைகள்’ என்ற இரண்டையும் முன்வைத்து தி.மு.க. சட்டமன்றத் தேர்தலை எதிர் கொண்டது. வளர்ச்சியிலும், நல்லாட்சியிலும் ஆர்வம் கொண்டவர் என்ற அடையாளத்துடன் அக் கட்சியின் தலைவராகக் கருணாநிதி சித்திரிக்கப்பட்டு முன்னிலைப்படுத்தப்பட்டார்.

மற்றொரு பக்கம் அவரது குடும்ப உறுப்பினர்கள், வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையே தனது தேர்தல் பரப்புரையில் Ôகுடும்ப அரசியல்Õ என்று குறிப்பிட்டார் ஜெயலலிதா. மேலும், 2000ஆவது ஆண்டில் தன் கட்சியின் மூத்த தலைவர்களின் பதவிகளைப் பறித்து கட்சி தன் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக அவர் வெளிப் படுத்தியிருந்தார். இதனால் பொதுமக்கள் மத்தியில் ‘வாரிசு அரசியல்’ என்பது தி.மு.கவுடனேயே தொடர்புபடுத்திப் பார்க்கப்பட்டது.

மத்தியில் ஆட்சி புரிந்த பி.ஜே.பி.யை, அ.இ.அ.தி.மு.க. தன் தேர்தல் பரப்புரைகளில் விமர்சிக்கவில்லை. இத்தேர்தலில் 141 தொகுதிகளில் போட்டியிட்ட அ.இ.அ.தி.மு.க. 132 தொகுதிகளில் வெற்றிபெற்றது. கூட்டணி என்ற முறையில் 195 இடங்களில் வெற்றிபெற்றது என்றாலும் அதன் தனிப்பட்ட வெற்றியால் கூட்டணிக்கட்சிகளின் துணையின்றியே ஆட்சி அமைத்தது.

இந்த ஆட்சிக்காலத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. மதிய உணவுத்திட்டத்தில், உணவுப்பொருட்களை வழங்குவோர், அரசு ஊழியர், அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இடையே ஒருவகையான ஒப்பந்தம் நிலவுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதிக விலைக்குத் தரமற்ற பொருட்களை வாங்குவதாகக் கூறப்பட்டது. அமைச்சர்கள், உயர்அதிகாரிகள் ஆகியோர் இக்குற்றச்சாட்டுக்கு ஆளாயினர். ஆயினும், நீதிமன்றத்தில் இது உறுதிப்படுத்தப்படவில்லை.

அரசுப்பணத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஊழல் செய்ததாக, இரண்டு மூத்த உயர் அதிகாரிகள் மீதும், அமைச்சர் ஒருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக, முதல்வர் மீதும் அவரது தோழியான சசிகலா, அவரது உறவினர்கள் மீதும் வழக்குகள் தொடரப்பட்டன. பதினெட்டு ஆண்டுகள் நடந்த இவ்வழக்கின் தீர்ப்பு 2017 சனவரியில் உச்சநீதிமன்றத்தால் வழங்கப் பட்டது. குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் சிறைத்தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பு வழங்கப்பட்டபோது ஜெயலலிதா உயிருடன் இல்லை.

ஆட்சியிலும் நிர்வாகத்திலும் எப்படி இரு விதமான போக்குகள் ஒரே நேரத்தில் நிலவின என்பது கேள்விக்குரிய ஒன்று. ஒரு பக்கம் அமைச்சர் களும், அரசுச் செயலாளர்களும், சிறந்த திட்டங்களுக் காகவும், நிர்வாகத்திற்காகவும் செயல்பட்டமைக்குச் சான்றுகள் உள்ளன. மற்றொரு பக்கம், ஊழல் நடவடிக்கைகளை மேற்கொண்ட அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் இருந்தனர். முதலமைச்சரின் அலுவலகம் குறித்தும் இதே பதிவைச் செய்ய முடியும். இன்றும் கூட இது பொருந்தும் தன்மையது தான்!

நலத்திட்ட அரசியல்

1996 வாக்கில் ஜெயலலிதா ஆட்சியின் மீதான நம்பிக்கையை வாக்காளர்கள் இழக்கத் தொடங்கினர். அவரது வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணத்தில் வெளிப்பட்ட பகட்டு, ஊடகங்களால் மக்களிடையே பரவலாகச் சென்றடைந்தது. தலைமைச் செயலகத்தில் நடந்த வேலை நிறுத்தத்தை அரசு கையாண்ட முறையானது அரசு ஊழியர்களின் எதிர்ப்பை ஈட்டிக் கொடுத்திருந்தது. கிராமப்புறங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த அரசு ஊழியர்கள் பலரும் குறைந்த அளவு ஊதியமே பெற்று வந்தனர். இவர்களது எதிர்ப்புணர்வு வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. எம்.ஜி.ஆர். காலத்தியக் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், அவரது மறைவுக்குப் பின் ஜெயலலிதாவை அ.இ.அ.தி.மு.க.வின் தலைவராக்கு வதில் முக்கியப் பங்காற்றினர். இத்தேர்தலின்போது இவர்கள் ஓரங்கட்டப்பட்டிருந்தார்கள். முக்கிய அரசியல் புள்ளியாக உருவாகியிருந்த சசிகலா, மக்களால் ஒரு தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட வில்லை.

திரைப்பட உலகின் செல்வாக்கு மிகுந்திருந்த தமிழ்நாட்டில், தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியை இத்தேர்தலில் ரஜினிகாந்த் ஆதரித்தார்.

இச்சூழலில் 1996 தேர்தலில் தி.மு.க. 221 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க.வின் முக்கிய தொகுதிகள் நொறுங்கிப் போய் நான்கு சட்ட மன்ற உறுப்பினர்களை மட்டுமே அக்கட்சி பெற்றது. பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா தோல்வி அடைந்தார்.

கருணாநிதி முதல்வரானதும் அரசு நிர்வாகத்தைச் சரிசெய்வதிலும், வளர்ச்சிக்கான திட்டமிடுதலிலும் அக்கறை காட்டினார். அத்துடன் முந்தைய ஆட்சியின் ஊழல்கள், வருவாய்க்கு அதிகமாகப் பொருளீட்டியது என்பனவற்றை மையமாகக் கொண்ட குற்றச்சாட்டுக் களைப் பதிவு செய்வதிலும், வழக்குத் தொடுப் பதிலும் அக்கறை காட்டினார்.

இதன் விளைவாக தமிழ்நாடு உயர் அதிகார வர்க்கத்தினர், கொள்கை முடிவுகள் எடுப்பதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் விழிப்புடன் செயல் படலாயினர். மற்றொரு பக்கம் முந்தைய ஆட்சியின் ஆதரவாளர்கள், தற்போதைய ஆட்சியின் ஆதர வாளர்கள் என உயர் அதிகார வர்க்கம் பிளவுண்டு போனது. இது நிலைபெற்றுப் போய் அடுத்த இருபதாண்டுகளில் அரசுத் திட்டங்களையும் நிர்வாகத்தையும் பாதித்தது என்பது ஆசிரியரின் கருத்தாக உள்ளது.

 • ···

இக்காலத்தில்தான் ‘உழவர்சந்தை’, ‘சமத்துவ புரம்’ என்ற இரு புதியத் திட்டங்களை கருணாநிதி அறிமுகப்படுத்தினார். மழைநீரைச் சேகரிக்கும் வகையில் புதிய குளங்கள் வெட்டப்பட்டன. குடிமைப் பொருள் வழங்கல், மதிய உணவுத் திட்டம் என்பன விரிவுபடுத்தப்பட்டன. இவை மாவட்ட ஆட்சித்தலைவர், முதலமைச்சர் ஆகியோரின் பார்வையில் நிகழ்ந்தன. கிராமப்புற மக்களிடையே இவை ஆதரவைப் பெற்றன.

2001 தேர்தல்

2001-இல் தமிழக சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் வந்தபோது, தனது சாதனைகளையும் மேற் கொண்ட நல்ல நிர்வாகத்தையும், தி.மு.க. மக்களிடையே சுட்டிக்காட்டியது.

கருணாநிதியின் மகன் ஸ்டாலின் சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்ததையும், தி.மு.க.வில் கருணாநிதியின் மகள் கனிமொழியும், மூத்த மகன் அழகிரியும், கட்சியில் செல்வாக்குடன் இடம் பெற்றிருப்பதையும் சுட்டிக்காட்டி ‘குடும்ப ஆட்சி’ என்று கூறி ஜெயலலிதா பகடி செய்யலானார். இது, தாக்குதல் தொடுப்பவர் என்ற நிலையில் இருந்து, தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலைக்குக் கருணாநிதியை ஆளாக்கியது.

இத்தேர்தலில் திராவிட சித்தாந்தங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. மத்தியில் ஆட்சிபுரிந்து வந்த பி.ஜே.பி.யை விமர்சனம் செய்வதை அ.தி.மு.க. தவிர்த்தது. 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தில் 141 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. 132 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணிக்கட்சிகள் 64 தொகுதி களில் வெற்றி பெற்றன. கூட்டணிக் கட்சிகளின் துணை யின்றியே அக்கட்சி ஆட்சி அமைத்தது. மூன்றாவது அணிக்குத் தமிழகம் ஆயத்தமாகவில்லை என்பதையும் இத்தேர்தல் வெளிப்படுத்தியது.

அத்துடன் ‘நல்ல நிர்வாகம்’, ‘வளர்ச்சி’ என்பன மட்டும் வாக்குகளை ஈர்க்க உதவாது என்பதையும் இத்தேர்தல் உணர்த்தியது.

ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஜெயலலிதா வழக்குகள் பலவற்றை கருணாநிதி மேல் பதிவு செய்ததுடன் அவரைக் கைது செய்தார். குற்றப்பத்திரிகையில் பல அதிகாரிகளின் பெயர்களும் இடம் பெற்றன. ஆனால் போதுமான சான்றுகள் இல்லாமையால் இவை வெற்றி பெறவில்லை.

2004 பாராளுமன்றத் தேர்தல்

மத்தியில் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தி.மு.க. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. தி.மு.க. 16, காங்கிரஸ் 10, பாட்டாளி மக்கள் கட்சி 5 என தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றதுடன் முக்கியத் துறைகளில் அமைச்சர் பதவியையும் பெற்றது. இக்காலக் கட்டத்தில் குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு இதன் அமைச்சர்கள் ஆளாகி இன்றுவரை வழக்குகள் நடந்து வருகின்றன.

 • ···

2006இல் நிகழ்ந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. 2011-இல் அ.தி.மு.க.விடம் ஆட்சியை இழந்தது.

இப்படி அய்ந்தாண்டுகளில் ஒருமுறை தம் ஆதரவை வாக்காளர்கள் மாற்றிக் கொள்வதானது வாக்காளர்களின் அறிவு முதிர்ச்சியைக் காட்டு வதாகவும், திராவிட, சுயமரியாதை சித்தாந்தச் சார்பு நீர்த்துப் போனதாகவும் ஆசிரியர் கருதுகிறார்.

வாக்குகளுக்கான இலவசங்கள் (2006-2016)

தி.மு.க.விடம் இருந்து 2001-இல் ஆட்சியைக் கைப்பற்றிய அ.தி.மு.க. தன் முந்தைய ஆட்சிக் காலத்தில் (1991-1996) வரம்பு மீறி நடந்து  கொண்டது போல் நடந்து கொள்ளவில்லை. பொறுப்புணர்வு கொண்டவராக ஜெயலலிதா காட்சியளித்தார். அரசு ஊழியர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள வில்லை; அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டார். நலத்திட்டங்களை விரிவுபடுத்தி,

மதிய உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வற்றை அதிகரித்தார். இதனால் பெண்கள், கர்ப்பிணிகள், முதியோர்கள் பயன்பெற்றனர். 2004 சுனாமியின் போது நிவாரண வேலைகளை அவர் கையாண்ட முறை பாராட்டைப் பெற்றது.

இக்காரணங்களால் ஜெயலலிதாவே  மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. கருத்துக்கணிப்புகளும் இதையே வெளிப்படுத்தின.

67 விழுக்காடு மக்கள் ஜெயலலிதாவை ஆதரிப்பதாக ஒரு கருத்துக்கணிப்பு கூறியது.

ஆனால், கருணாநிதி தன் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் இவ் எதிர்பார்ப்பு களில் மாற்றம் தோன்றியது.

குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் கிலோ இரண்டு ரூபாய்க்கு அரிசி வழங்கப்படும் என்று அவர் வெளியிட்ட தேர்தல் அறிக்கை குறிப்பிட்டது. அத்துடன் பின்வரும் செய்திகளும் அத்தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தன.

 • · ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி
 • · ஏழைப்பெண்களுக்கு எரிவாயு அடுப்பு
 • · விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம்
 • · கூட்டுறவுச் சங்கங்கள் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யும்
 • · பேறுகால உதவியாக ஆறுமாத கால அளவுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
 • · ஆறாவது ஊதியக்குழு தன் பரிந்துரைகளை அறிவித்தவுடன் அது நடைமுறைப் படுத்தப்படும்.
 • · அ.தி.மு.க. அரசால் அகற்றப்பட்ட கண்ணகி சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப் படும்.
 • · எம்.ஜி.ஆர். பெயரிலான திரைப்பட நகரம் மீண்டும் நிறுவப்படும்.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியான பின்னர், தன்னுடைய அரசின் சாதனைகளையும், இயற்கைப் பேரிடர்களை எதிர்கொண்ட முறையையும், ஏழை மாணவர்களுக்கு இலவசப் பாடநூல்கள், சைக்கிள் வழங்கியதையும், ஜெயலலிதா தன் தேர்தல் பரப்புரையில் குறிப்பிட்டார்.

இத்தேர்தலில் தி.மு.க. 96 தொகுதிகளிலும், அ.தி.மு.க. 61 தொகுதிகளிலும், காங்கிரஸ் 34 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

நலத்திட்டங்கள், சமூகநீதி, ஆட்சி உரிமை என்பனவற்றில் இருந்து விலகி, இலவசங்கள் குறித்த மேற்கூறிய வாக்குறுதிகளில் திராவிட சித்தாந்தம் சார்ந்த திட்டங்கள் எவையும் இல்லை, சோர்வடைந்த நிலையில் கருணாநிதியின் கடைசி முயற்சியே இத்திட்டங்கள் என்பது  ஆசிரியரின் கருத்தாக உள்ளது. சமத்துவம், சமூக நீதிக்கான கோரிக்கை களை முன்வைக்காது, யார் அதிக அளவில் இலவசங்களை வழங்குகிறார்களோ அவர்களை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில்தான் மக்கள் உள்ளார்கள் என்கிறார். அரசியல்வாதிகள் தம் சொந்த ஆதாயத்தையே முன்னிலைப்படுத்துவதால் சித்தாந்தம் தொடர்பான வாக்குறுதிகளை முன்வைக்காது, தனிமனித ஆதாயங்களை முன்வைப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார்.

அவரது கருத்துப்படி 2006, 2011, 2016 ஆண்டு களில் நிகழ்ந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் திராவிட சித்தாந்தம் தொடர்பான எந்தத் திட்டங் களும் முன்வைக்கப்படவில்லை. இப்போக்கு 1991-இல் ஜெயலலிதாவின் வருகைக்கு முன்பே தோன்றி விட்டது. தொடர்ந்து, இந்தப் போக்கு தேர்தல் முடிவுகளை மாற்றியமைப்பதாக 2006-இல் மாறி விட்டது என்றாலும் தி.மு.க.வுக்கு அறுதிப் பெரும் பான்மையை இது வழங்கவில்லை. காங்கிரஸ் ஆதரவுடனேயே ஆட்சி நடத்த முடிந்தது. இதனா லேயே ‘சிறுபான்மை அரசு’ என்று அ.தி.மு.க.வினர் கூறி வந்தனர்.

 • ···

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு இருந்தது. வறுமைக்கோட்டிற்குக் கீழே இருப்பவர் களின் எண்ணிக்கையும் குறைந்து வந்தது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழக வாக்காளர்கள், கற்றவர்களாகவும், வேலைபார்ப்பவர்களாகவும் நல்லநிலையில் இருந்தார்கள். அத்துடன் திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகளில் எந்தக் கட்சியில் எத்தகைய ஆதாயம் கிடைக்கும் என்பது குறித்த தெளிவு அவர்களுக்கிருந்தது. திராவிட உணர்வை விட பொருளாதார ஆதாயத்தையே வாக்காளர்கள் விரும்புவதை இருகட்சிகளும் உணர்ந்திருந்தன.

2011 தேர்தல்

இத்தேர்தலில் ஜெயலலிதா பின்வரும் வாக்குறுதி களை வாக்காளர்களுக்கு வழங்கினார்.

 • · ஒரு குறிப்பிட்ட அளவுக்கும் குறைவான வருவாய் உடையவர்களுக்கு இலவசமாக அரிசி வழங்கப்படும்.
 • · ஏனையோருக்கு 20 கிலோ அரிசி இரண்டு ரூபாய் விலையில் வழங்கப்படும்.
 • · +2 படிக்கும் பெண் குழந்தைகளுக்கும் இலவசமாக மடிக்கணினி வழங்கப்படும்.
 • · குடும்பம் ஒன்றுக்கு நான்கு வெள்ளாடு, கறவைமாடு, மின்விசிறி, குக்கர்கள் இலவசமாக வழங்கப்படும்.

இத்தேர்தலில் 150 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. தி.மு.க.வால் 23 இடங்களில்தான் வெற்றி பெறமுடிந்தது. அவ்வப்போது தன்னிச்சையான அறிவிப்புகள் வாயிலாக பல்வேறு நலத்திட்டங் களை ஜெயலலிதா அறிவித்து வந்தார். இவற்றுள் ஒன்று ‘அம்மா உணவகம்’ ஒரு ரூபாய்க்கு ஓர்

இட்லி, அய்ந்து ரூபாய்க்கு புளியோதரை, தயிர்ச் சாதம் எனக் குறைந்த விலையில் இங்கு உணவு வழங்கப்பட்டது. சென்னை நகரில் மட்டும் 500 அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் 1,500 உணவகங்கள் வரை உள்ளன. இதன் நுழைவாயிலில் பெரிய அளவிலான ஜெயலலிதா படம் மாட்டப்பட்டிருக்கும். Ôஅம்மா நீர்Õ என்ற பெயரில் ஒரு லிட்டர் தண்ணீர் பத்து ரூபாய்க்கு பேருந்து நிலையங்களிலும் இரயில் நிலையங் களிலும் விற்கப்பட்டது.

 • ···

அதே நேரத்தில் சமூக சீர்திருத்தம், திராவிட சித்தாந்தம் என்பனவற்றில் ஜெயலலிதாவுக்கு நம்பிக்கையில்லை. தேர்தலில் வெற்றி பெறுவதை நோக்கமாகக் கொண்டே அவரது செயல்பாடுகள் இருந்தன. பெரும்பான்மையான வாக்காளர்களுக்கு நேரடியாகப் பயன்தரும் திட்டங்களிலேயே அவர் அக்கறை காட்டினார். அவர்களது அன்றாடப் பயன் பாட்டில் இடம்பெறும், அம்மா உணவகம், மிக்சி, கிரைண்டர் என்பனவற்றின் வாயிலாக அவரது அரசு நினைவு கூரப்பட்டு அவரது கட்சியின் அரசியல் தளத்தை வலுப்படுத்தியது.

அய்ந்தாண்டுகளுக்கு ஒருமுறை வழங்கும் தேர்தல் வாக்குறுதிகளுக்கு மாறாக, ஆண்டுதோறும் ஏதாவது ஒரு திட்டத்தை அறிவிப்பதை வழக்கமாகக் கொண்டார். இது அவரது வெற்றிக்குத் துணை நின்றது.

எதிர்காலம்

தற்போதைய மத்திய அரசிடம் இருந்து தனக்கு உரிய பங்கை, தமிழ்நாடு பெறவில்லை என்ற உணர்வு மேலோங்கி வருகிறது. ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு முறை என்பனவற்றில் மத்திய அரசின் நிலைப்பாடு தமிழகத்திற்கு ஆதரவாக இருக்கவில்லை என்ற கருத்தும் உள்ளது. தொழில் முதலீடுகள் குறைந்து வருகின்றன. தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட சேவைத் துறைகளில் தேக்கநிலை உருவாகியுள்ளது. அரசின் வருவாயில் பெரும்பகுதி நலத்திட்டங்களில் செலவாகிறது.

வளர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்யப்படவில்லை. ஜி.எஸ்.டி. வரி அறிமுகம் தமிழ் நாட்டின் வருவாயைப் பாதிக்கும் நிலையுள்ளது. வேளாண் துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டிற்கான பின்தங்கியோர் பட்டியலில் 95 விழுக்காட்டினரும் முன்னேற்றமடைந்த சாதியினராக அய்ந்து விழுக்காட்டினரும் இடம் பெற்றுள்ளனர். சாதி அடிப்படையிலான அமைப்புகள் அரசியல் கட்சிகளாக உருப்பெற்றுள்ளன, அல்லது சில குறிப்பிட்ட நிலப்பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மீது அழுத்தம் கொடுக்கும் ஆற்றல் உடையனவாய் இயங்குகின்றன.

இவற்றையெல்லாம் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இன்றையத் தமிழ்நாடு உள்ளது.

Pin It