அ.தி.மு.க. தலைவியும், ஆரியப் பார்ப்பனிய வெறியருமான செயலலிதா, ஆட்சிக் கட்டிலில் ஏறும்போதெல்லாம் அடக்குமுறைக் கட்டமைப்புகளை ஊக்குவித்து வளர்க்கப்படும் என்பதை நாம் காலந்தோறும் பலமுறை பார்த்திருக்கிறோம். கடந்த 14.12.2012 அன்று சென்னையில் நடைபெற்ற, மாவட்ட ஆட்சியாளர்கள் - காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில், தற்போது மீண்டும் அது உறுதிப்பட்டிருக்கிறது.

மாவட்ட ஆட்சியாளர்ளும், காவல்துறை கண்காணிப்பாளர்களும் கலந்து கொண்ட இம்மாநாட்டில், சிவகாசி, கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படுவது, இராமநாதபுரம் மாவட்டத்தில் சூரிய ஒளி மின்சக்திப் பூங்கா அமைக்கப்படுவது, பழநி முருகன் கோயிலில் புதிதாக ஓரு மலையேறும் வண்டி அமைக்கப்படுவது என மாநாட்டிற்கு தொடர்பே இல்லாத பல திட்டங்களை முதல்வர் செயலலிதா அறிவித்தார்.

ஞாயமாக சட்டப்பேரவையில் வெளியிடப்பட வேண்டிய இந்த அறிவிப்புகள், அதிகாரிகள் மாநாட்டில் வெளியிடப்பட்ட முறையைப் பார்த்தாலே, செயலலிதா, சட்டப்பேரவையையும், அதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளையும் எந்தளவிற்கு மதிப்பிடுகிறார் எனப் புரியும்.

இவை ஒருபுறமிருந்தாலும், செயலலிதா, சட்டப்பேரவையில் அறிவிப்புகளை வெளியிடும் போதும் கூட, யாரும் விவாதிக்க முடியாத அறிவிப்புகளை வெளியிட உதவும் 110 என்ற அவசர விதியின் கீழ்தான் வெளியிடுவார். அவர் என்ன அறிவிப்பை வெளியிட்டாலும், அதிலுள்ள சாதக பாதகங்களை விவாதிக்கும் உரிமை, அ.தி.மு.க. உறுப்பினர்கள் உள்ளிட்டு யாருக்கும் கிடையாது என்பதை மறைமுகமாக உணர்த்தும் வகையில் தான் அவர் நடந்து கொள்வார். இது தான் அவர் சனநாயகத்தை மதிக்கும் இலட்சணம்!

கட்சியில் வெளிப்படுகின்ற, செயலலிதாவின் ‘சனநாயக மறுப்பு” என்ற இயல்புத்தன்மையை முழுமனதாக ஏற்றுக் கொண்டு அ.தி.மு.க.வினர் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், மக்களும் அவரது கட்சியினரைப் போன்ற அடிமைகள் என அவர் கருதக் கூடாதல்லவா? எனவே தான், மக்களை பாதிக்கும் செயலலிதாவின் சனநாயக விரோத நடவடிக்கைகளை நாம் கூடுதல் கடுமையுடன் எதிர்க்கிறோம்.

அந்த வகையில், முதல்வர் செயலலிதா, வழக்கம் போல் சனநாயகத்திற்கு விரோதமான பல பாசிச அறிவிப்புகளை அம்மாநாட்டில் வெளியிட்டார். அன்றைய ஒரே நாளில் சற்றொப்ப, 340க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை வெளியிடப்பட்ட செயலலிதா, ஆள்தூக்கிச் சட்டமாக மனித உரிமை ஆர்வலர்களால் சுட்டிக்காட்டப்படும் குண்டர் சட்டத்தில் செய்துள்ள புதியத் திருத்தங்கள் கடும் ஆபத்தானவை ஆகும்.

1982ஆம் ஆண்டு, எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது போதைப் பொருள் கடத்துபவர்கள், காடுகளை அழிப்பவர்கள், ஆள்கடத்தல்களில் ஈடுபடுபவர்கள், குடிசைப் பகுதிகளை ஆக்கிரமிப்பவர்கள் ஆகிய கடும் குற்றங்களில் தொடர்நது ஈடுபடுபவர்களை தண்டிக்க, தமிழ்நாடு குண்டர் தடுப்புச் சட்டம் என்ற பெயரிலான, Tamil Nadu Prevention of Dangerous Activities of Bootleggers, Drug-offenders, Forest-offenders, Goondas, Immoral Traffic Offenders, Slum-grabbers Act (Tamil Nadu Act 14 of 1982) என்ற சட்டத்தை இயற்றியது. 2004ஆம் ஆண்டு செயல்லிதா ஆட்சிக்கு வந்த பின்னர், திரைப்படத் துறையினரைக் குளிர்விக்கும் விதமாக, இதில் திருட்டுக் குறுந்தகடுகள்(வி.சி.டி.) தயாரிக்கும் குற்றமும் சேர்க்கப்பட்டது.

உண்மையில், குண்டர் சட்டத்தின் கீழ்வரும் குற்றங்களை நாம் பரிசீலிக்கத் தொடங்கினால், அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் என கட்சி வேறுபாடு பாராமல் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் தேர்தல் கட்சிக்காரர்கள் தான், முதலில் அச்சட்டத்தின்படி கைது செய்யப்பட்டிருக்க வேண்டியவர்கள் என்பது புரியும்.

காடுகளை அழித்து வனத்தை சிதைப்பதும், குடிசைப் பகுதிகளை ஆக்கிரமித்து அவற்றை பன்னாட்டு நிறுவனங்களிடம் கொடுப்பதையும் இங்குள்ள அரசுகளும், அதன் கட்சிப் பிரமுகர்களும் தொடர்ந்து செய்து வருவது ‘வனத்தை சிதைத்தல்’ மற்றும், ‘குடிசைகளை ஆக்கிரமித்தல்’ பிரிவுகளின்படி குற்றம் ஆகாதா என்ன?

உணவுப் பொருட்கள் துறையில் வழங்கப்படும் அரசி, கோதுமை உள்ளிட்டப் பொருட்களையும், இயற்கை வளமான மணலையும் நாள்தோறும் அண்டை மாநிலங்களுக்கு கடத்திச் செல்லும் பினாமிகளுக்குப் பின்னணியில் உள்ள அரசியல் கட்சிப் பிரமுகர்களும், காவல் நிலையக் கட்டப் பஞ்சாயத்து, அடிதடி – ஆள்கடத்தல் நிகழ்வுகளில் தொடர்புடைய அரசியல் கட்சி ஆதரவுப் பெற்ற அரம்பர்களும், ‘கடத்தல்’ குற்றவாளிகள் ஆகமாட்டார்களா என்ன?

செயலலிதா, நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட போது, அதைக் கண்டித்து வன்முறையில் ஈடுபட்ட கரைவேட்டிகளும், மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் மீது கொடுந்தாக்குதல் நடத்தி மூவர் உயிரைக் குடித்தவர்களும், ‘பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவராக’கருதி, குண்டர் சட்டங்களுக்கு இலக்காகியுள்ளனரா என்ன?

இவ்வாறு, பல குற்றப் பின்னணியுடைய அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் அரம்பர்கள் மீது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாக குண்டர் சட்டம் ஏவப்பட்டாலும் கூட, உண்மையில் அவை குற்றங்களைக் களைய வேண்டும் என்ற நோக்கில் பயன்படுத்தப்படுவதில்லை என்பதே நடைமுறை உண்மையாகும்.

தி.மு.க. ஆட்சியின் போது, அ.தி.மு.க.வினர் மீதும், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் தி.மு.க.வினர் மீதும் என அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்காக, ஒருவர் மீது ஒருவர், ஆட்சி மாறுகின்ற போதெல்லாம், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவதும், பின், விடுதலையாவதும் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் உண்மையில், இச்சட்டம் இவர்களை எந்த வகையிலும் திருத்திவிடவில்லை.

பழிவாங்கும் உணர்ச்சி காரணமாக, அ.தி.மு.க. அரசு, தி.மு.க.வினர் மீது குண்டர் சட்டம் ஏவுவதைக் கண்டித்த, அக்கட்சியின் தலைவர் கருணாநிதி, குண்டர் சட்டத்தை கருப்பு சட்டம் என வர்ணிக்கவும் தவறவில்லை. செயலலிதா அரசு ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் மட்டும் 323 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதையும் அவர் புள்ளி விவரங்களுடன் அம்பலப்படுத்தினார்.

ஆனால், அவரது தி.மு.க. ஆட்சிக்காலத்திலோ, சென்னை நகரில் மட்டும் 2008ஆம் ஆண்டு 319 பேரும், 2009ஆம் ஆண்டு 553 பேரும், 2010 ஆகத்து மாதம் வரைக்குள் மட்டும் 438 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதாக்க் கூறும் இன்னொரு புள்ளி விவரம் கருணாநிதியையும் சேர்த்து அம்பலப்படுத்துகிறது. (காண்க: தி டைம்ஸ் ஆப் இந்தியா, 27.08.2010)

இவ்வாறு, தி.மு.க. – அ.தி.மு.க. அரசுகள், குண்டர் சட்டத்தைப் பயன்படுத்தி மாற்றுக் கட்சிப் பிரமுகர்களையும், தமது ஆட்சிக்கு வேண்டாத அரம்பர்களையும் தளைப்படுத்துவதோடு நிற்பதில்லை. மாறாக, எளியவர்களையும், மக்கள் போராட்டங்களில் ஈடுபடும் போராளிகளையும் கடுமையாக ஒடுக்க இச்சட்டத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

தி.மு.க. ஆட்சிக்காலத்தில், ஈழத்தில் போர் நிறுத்தம் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல் திருமாவளவன் காலவரையற்ற உண்ணாப் போராட்டத்தில் ஈடுபட்ட போது, அப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 26 விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் மீது குண்டர் சட்டத்தை ஏவியது கருணாநிதி ஆட்சி.

கூடங்குளம் அணுஉலைக்க எதிராகப் போராடிய எளிவர்கள் மீதும், நாமக்கல் கல்லூரி மாணவி காயத்ரியின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டுப் போராடிய ஆதித்தமிழர் பேரவைத் தோழர்கள் மீதும் அ.தி.மு.க. அரசு குண்டர் சட்டத்தை ஏவியது.

இவ்வாறு மக்கள் போராளிகள் மீதும், மாதந்தோறும் காவல் நிலையங்களில் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட திருட்டு மற்றும் அடிதடி வழக்குகளுக்காக காவல்துறையினரால் கணக்குக்காக தளைபடுத்தப்படும், எளியவர்கள் மீதும் தான் இச்சட்டம் பெருமளவில் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றது. இது பலமுறை அம்பலமாகியும் உள்ளது.

கடந்த 19.10.2012 அன்று, குண்டர் சட்டத்தை, தகுந்த ஆவணங்கள் ஏதுமின்றி தவறான முறையில் ஏவிய விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கும், அதற்கு பரிந்துரைத்த காவல்துறை அதிகாரிக்கும் மதுரை உயர்நீதிமன்றம் ரூ. 5000 அபராதம் விதித்தது. கண்களை மூடிக்கொண்டு செயல்படும் அதிகாரிகளைக் கடுமையாகக் கண்டித்து தீர்ப்புரைத்தது, நீதிமன்றம்.

இந்தாண்டின் தொடக்கத்தில் கூட, 04.01.2013 அன்று, நெல்லை மாவட்டம் மூலக்கரையைச் சேர்ந்த பெரியதுறை என்ற 53 அகவை முதியவர் மீது, 7 திருட்டு வழக்குகள் இருப்பதைக் காரணம் காட்டி, அவர் மீது குண்டர் சட்டம் ஏவிய, அப்போதைய நெல்லை மாவட்ட ஆட்சியர் செல்வராஜ்க்கு, மதுரை உயர்நீதிமன்றம் ரூ. 5000 அபராதம் விதித்தது.

உரிய கவனம் இல்லாமலும், தகுந்த ஆவணங்கள் இல்லாமலும் மாவட்ட ஆட்சியரால் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக நீதிமன்றம் கண்டித்தது. மேலும் தனது தீர்ப்பில், “குண்டர் சட்ட வழக்கில், அதிகாரிகள் செய்யும் தவறை சுட்டிக்காட்டிய போதும், அதிகாரிகள் அதை திருத்திக்கொள்வதாகத் தெரியவில்லை” என்று கண்டித்தார் நீதிபதி. (காண்க:தினத்தந்தி, 05.01.2012)

நெல்லை வழக்கு மட்டுமல்ல, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும் பல்வேறு வழக்குகளிலும் இது தான் உண்மை நிலையாக உள்ளது. கூடங்குளம் அணுஉலைக்கு எதிராகப் போராடிய லூர்துசாமி என்ற 70 அகவை முதியவர் மீது, எந்த வழக்கும் இல்லாத நிலையில், அவர் மீது புதிய வழக்குகள் பதியப்பட்டு, அவரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவுப் பிறப்பித்தது, தற்போது அபராதம் விதிக்கப்பட்டு, நீதிமன்றத்தின் கண்டனத்திற்கும் உள்ளாகியுள்ள, மாவட்ட ஆட்சியர் செல்வராஜ் தான் என்பதை நாம் இங்கு நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும்.

இது மட்டுமின்றி, தமிழகத்தில் நடைபெற்ற பல சாதி மோதல்களின் போது குண்டர் சட்டம் பயன்படுத்தப்படுவதும் நடைபெறுகின்றது. சில சமயங்களில் 18 வயதுக்குக் கீழான இளையவர்கள் மீது கூட, தமிழக அரசு குண்டர் சட்டத்தை ஏவியிருக்கிறது.

குண்டர் சட்டத்தில் போடப்படும் வழக்குகளில் பெரும்பாலனவை, காவல்துறையினர் அரசிடம் குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக காட்டுவதற்காக புனையப்பட்ட வழக்குகளே என்று, அரசின் மனித உரிமைகள் சிறப்பு வழக்கறிஞர் வி.கண்ணதாசன் கூறுகிறார். (காண்க: தி டைம்ஸ் ஆப் இந்தியா, 27.08.2010).

இவ்வாறு, பல அப்பாவிகள் மீது தான் குண்டர் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை நீதிமன்றங்கள் பலமுறைச் சுட்டிக்காட்டித் தீர்ப்பளித்துள்ளன. கடந்த 2010ஆம் ஆண்டு, மலையாள ஆலுக்காஸ் நகைக் கடையை முற்றுகையிட்டதன் காரணமாக தளைப்படுத்தப்பட்டு, சென்னை புழல் சிறையில் நாங்கள் அடைக்கப்பட்டிருந்த போது, குண்டர் சட்டப் பயன்பாட்டை நேரில் பார்த்தவன் என்பதால் இதை உறுதிபடச் சொல்கிறேன்.

நட்புக்காகவும், கவுரவத்திற்காகவும், பழி வாங்கும் உணர்ச்சியிலும், குடிபோதையிலும் என நிகழும் பல திருட்டு, அடிதடிக் குற்றங்களில் ஈடுபட்ட இளவயது இளைஞர்கள் பலர், காவல்துறையினர் தமது எல்லைகளுக்கென நிர்ணயிக்கப்பட்ட, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டியவர்களின் இலக்கை எட்டுவதற்காக, குண்டர் சட்டத்தின் கீழ் பலரை தளைப்படுத்துவதைக் கண்டோம். இவர்களில் பெரும்பாலானர்கள், எளிய அடித்தட்டு மக்கள் ஆவர் என்பதையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும்.

சமூகம் இவர்களுக்கு முறையான வாய்ப்பளித்தால், தம்மை திருத்திக் கொண்டு அனைவரைப் போலவும், தமது வாழ்க்கையை வாழ வேண்டும் என எண்ணுபவர்கள் பலர் இதில் இருந்தும் கூட, குண்டர் சட்டத்தின் காரணமாக, அதிகரிக்கும் சிறைவாசக் காலம், அவர்களை சிறைக்குள் இன்னொருக் குற்றவாளியாக உருவாக்கத் துணை செய்கின்றது.

கடந்த 2011ஆம் ஆண்டில் மட்டும், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட 1926 பேரில், வெறும் 146 பேர் தான், அதன் முழு தண்டனைக் காலமான 1 ஆண்டு சிறைத் தண்டனையை அடைந்தவர்கள். அவர்களில், 1,291 பேர் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற ஆணைகளாலும், 489 பேர் அறிவுரைக் குழுமத்தின் ஆணைகளாலும், அவர்கள் மீதான குண்டர் தடுப்புச் சட்டப் பயன்பாடு தவறானது என மெய்பிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் ஆவர். எஞ்சிய 146 பேரில் பெரும்பாலானவர்கள், உயர்நீதிமன்றமோ, உச்சநீதிமன்றமோ சென்று வாதிடுவதற்கான பொருளியல் வசதி இல்லாத எளியவர்கள் என்ற தகவல் இச்சட்டத்தின் கோர முகத்தையும், அதன் தவறானப் பயன்பாட்டையும் அம்பலப்படுத்துகிறது. (காண்க: தி டைம்ஸ் ஆப் இந்தியா, 19.02.2011).

இவ்வாறு தவறான முறையில் பயன்படுத்தப்படுகின்ற குண்டர் சட்டத்தின் கீழ், ஒருவரைக் கைது செய்ய வேண்டுமென்றால் பல நிபந்தனைகள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று, இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி(IPC) தண்டிக்கப்படக் கூடியக் குற்றங்களைக் கொண்ட ஒன்றிற்கும் மேற்பட்ட வழக்குகளைக் கொண்ட ஒருவர் மீது தான் குண்டர் சட்டத்தை ஏவலாம் என்பது (குண்டர் தடுப்புச் சட்டப் பிரிவு 2(f)). தற்போது அந்த நிபந்தனையைத் தான் செயலலிதா அரசு நீக்கியிருக்கிறது.

ஒரு வழக்கு இருந்தால் கூட அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வழிவகுக்கும், தமிழக அரசின் இந்த புதிய ஆபத்தானத் திருத்தம், ஏற்கெனவே சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு ஒன்றில் முன்மொழியப்பட்டது தான். கடந்த 2011ஆம் ஆண்டு, சூன் 25 அன்று சென்னை உயர்நீதிமன்றம், சமூக பொது ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டதாக ஒரே குற்ற வழக்கு இருந்தால் கூட, அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என்ற கொடியத் தீர்ப்பை வழங்கியது. (காண்க: தி டைம்ஸ் ஆப் இந்தியா, 25.06.2011).

எனவே, இனி ஒருவர் பொது ஒழுங்கிற்கு பங்கம் விளைவிப்பவராக ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டால் கூட அவரை, குண்டர் தடுப்புச் சட்டத்தில் 1 ஆண்டு வரை தடுப்புக் காவலில் சிறையிலடைக்க முடியும். இந்தப் புதியத் திருத்தத்தின்படி, தவறான புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறை செல்லும் ஒருவரை, காவல்துறையினர் நினைத்தால் பிணையில் கூட வெளிவர முடியாமல், 1 ஆண்டு வரை சிறை வைத்திருக்க முடியும்.

ஒரு குற்றச்சாட்டின் கீழ கைது செய்யப்படும் ஓருவர், அக்குற்றம் உண்மையென மெய்ப்பிக்கப்பட்டால் கூட 1 மாதம் தான் அதிகபட்ச சிறைத் தண்டனைக் கிடைக்கும் என வைத்துக் கொண்டாலும் கூட, அவர் மீது குண்டர் சட்டத்தை ஏவுவதன் மூலம் மட்டும் அவரை குறைந்தபட்சம் 6 மாதங்களாவது சிறையில் வைத்திருக்க முடியும்.

செயலலிதா வெளியிட்ட மற்றொரு அறிவிப்பு மேலும் அபாயகரமானது. குண்டர் சட்டத்தில் ஒருவரை அடைப்பதற்கான ஆவணத்தைக் காவல்துறையினர் தயாரிக்கும் போது, அதற்கான செலவீடாக ரூ. 3000 இதுவரை வழங்கப்பட்டு வந்தது. பாதையோரக் கடைக்காரர்களை மிரட்டி 10 ரூபாய் கேட்கின்ற ஒழுக்கக் கேடான காவலர்கள் நிறைந்த தமிழகத்தில், அரசின் இந்த 3000 ரூபாய் தொகை, கொள்ளையடிப்பதற்கான பெருவாய்ப்பு என்பதால் குண்டர் சட்டத்தை பலர் இந்த தொகைக்காகவே பயன்படுத்தும் போக்கு இன்றைக்கும் நடைமுறையில் உள்ளது. மாதக் கடைசியில் குண்டர் சட்ட வழக்குகள் அதிகமாக பதியப்படும் என்பதை உற்று நோக்கினால் இது எளிதில் விளங்கும்.

இந்நிலையில், இந்த 3000 ரூபாய் தொகையை, தற்போது 8000 ரூபாயாக உயர்த்தியுள்ளார் செயலலிதா. இதன் விளைவு, எதிர்வரும் காலங்களில் தமிழகச் சிறைகளில்தான் எதிரொலிக்கப் போகின்றது. ரூபாய் 8000 வேண்டும் என்பதற்காக, காவல்துறையினர் யார் மீது வேண்டுமானாலும் ஒரே ஒரு வழக்குப் போட்டு, குண்டர் சட்டத்தை ஏவுகின்ற பாசிச நடைமுறை செயல்பாட்டுக்கு வரவுள்ளது பெரும் அச்சத்தையே தோற்றுவிக்கிறது.

குண்டர் சட்டத்தின் அடுத்த திருத்தம், இணையக் குற்றங்களில்(Cyber Crimes) ஈடுபடுபவர்களும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படலாம் என்பது. முதலாளிகளுடனான ஒட்டுண்ணி வலைப்பின்னலில், அரசியல்வாதிகளும், ஊடகங்களும் சீரழிந்து நிற்பதன் காரணமாக, மக்கள் மாற்று ஊடகத்தின் மீது நம்பிக்கை வைத்து வளர்க்கின்றனர். இதன் காரணமாகவே, விக்கலீக்ஸ் போன்ற இணைய ஊடகங்கள் அரசுகளை ஆட்டிப்படைக்கும் வல்லமையுடன் மக்கள் முன் நின்றது. முகநூலின் செய்திப் பரிமாற்றம், சர்வாதிகாரத்திற்கு எதிரான அராபிய எழுச்சியை ஊக்குவித்து வளர்த்தது.

அதே போல், முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்பு, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு, மூவர் தூக்கிற்கு எதிர்ப்பு என மாற்று ஊடகங்களில் நடைபெறுகின்ற பரப்புரைகள் இந்திய, தமிழக அரசுளுக்கு கடும் அச்சத்தையே தோற்றுவித்துள்ளது. இதன் காரணமாகவே, 2008ஆம் ஆண்டு இந்திய அரசு தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2005இல் பல புதிய திருத்தங்களைக் கொண்டு வந்தது. 66A போன்ற கொடும் சட்டப்பிரிவுகள் இணைக்கப்பட்டு, மாற்று ஊடகங்களில் அரசுக்கு எதிராக கருத்துச் சொல்பவர்களை சிறையிலடைத்து தண்டிக்க வழிசெய்யப்பட்டது.

இது போதாதென்று, தற்போது செயலலிதா அரசு இணையக் குற்றங்களில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க திருத்தமும் கொண்டு வந்துள்ளது. அதாவது, ஒருவர் கூடங்குளம் அணுஉலை வேண்டாம் என முகநூலில் கருத்துப் பதிந்தால் கூட, அல்லது ஏற்கெனவே பதியப்பட்ட கருத்துக்கு ஆதரவு வழங்கினால் கூட, அதை குற்றமெனக் கருதி உங்கள் மீது வழக்குப் பதிந்து, குண்டர் சட்டத்தின் புதிய திருத்தத்தின்படி 1 ஆண்டுவரை சிறையிலடைக்க முடியும். மாற்று ஊடகங்களின் மீது அரசுக்கு ஏற்பட்டுள்ள அச்சம், இந்த புதியத் திருத்தத்தின்படி மீண்டுமொருமுறை வெளிப்பட்டுள்ளது என்று தான் கூற வேண்டும்.

செயலலிதா வெளியிட்ட மற்றொரு அறிவிப்பு, காவல்துறை அதிகாரிகளின் தனி வழக்குகளை நடத்த, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் நிதி பெற்றுக் கொள்ளலாம் என்பது.

தனிப்புகார்கள் (Private complaints) எனப்படுபவை, காவல்துறை அதிகாரிகள் செய்கின்ற தவறுகள் மீது தரப்படும் புகார்கள் ஆகும். அதாவது, ஒரு காவலர் ஒரு மது குடித்துவிட்டு, சாலையில் போகும் ஒருவரை அடிக்கிறார் என வைத்துக் கொள்வோம். அடித்தவர் காவலர் என்பதால், அடிபட்டவர் தரும் புகாரை, காவல் நிலையங்களில் பெரும்பாலும் வாங்க மறுப்பர். எனவே, பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தில் நீதிபதியிடம் நேரடியாகத் தனிப்புகார்(Private Compaint) தரலாம்.

இவ்வாறு, காவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது வரும் தனிப்புகார்களின்படி வழக்கு நடத்த, அந்தந்த காவல்துறை அதிகாரிகள் தனது சொந்த செலவில் தான் பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும். இப்போது, அந்த நடைமுறையை மாற்றி, அரசே அதற்கு பணம் வழங்கும் முறையை செயலலிதா அரசு கொண்டு வந்துள்ளது.

அதாவது, காவல்துறையினர் மீது வரும் தனிப்பட்டப் புகார்களுக்குக் கூட, அரசே மக்கள் நிதியை அவர்களுக்கு வழங்கிக் காப்பாற்றும். இது காவலர்கள் மேலும் மேலும் வழக்குகள் குறித்து அஞ்சாமல் குற்றம் புரியவே ஊக்கமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

குண்டர் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள செயலலிதா அரசின் இந்தப் புதிய திருத்தங்கள், மக்களை ஒடுக்கும் மற்றொரு தடா – பொடா சட்டமாக குண்டர் சட்டத்தை மேலும் இறுக்கமாக மாற்றுகின்ற முயற்சியே! அரசுக்கு எதிரான மக்களின் கோப எழுச்சியே இக்கொடிய சட்டங்களை உடைத்து நீதியை நிலைநாட்டுமே தவிர, சட்டத்துக்காக மக்கள் என்றைக்கும் வளைந்து கொடுப்பதில்லை.

Pin It