சமூக செயற்பாட்டாளரும், மகாராஷ்டிரா மூடநம்பிக்கை ஒழிப்புக் குழுவின் தலைவருமான நரேந்திர தபோல்கர் 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி காலை நேரத்தில் புனேவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவருடைய மூடநம்பிக்கை ஒழிப்புப் பணிகளுக்கு இந்துத்துவ அமைப்பான சனாதன் சன்ஸ்தா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இக்கொலை நடந்தது. தபோல்கர் கொலை வழக்கை முதலில் புனே போலீசார் விசாரித்தனர். பின்னர் பம்பாய் உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, 2014-ல் சிபிஐ விசாரணையை மேற்கொண்டது. இந்த வழக்கில் சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் வீரேந்திரசிங் தவாடேவை 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிபிஐ கைது செய்தது.

மேலும், சச்சின் அன்டுரே, ஷரத் கலாஸ்கர் ஆகியோர் தபோல்கரை சுட்டுக் கொன்றதாக சிபிஐ குற்றம்சாட்டியது. நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்ட அதே பாணியில் கோவிந்த் பன்சாரே (2015), கல்புர்கி (2015), கவுரி லங்கேஷ் (2017) என முற்போக்காளர்கள் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்து மதத்தின் ஏற்றத்தாழ்வுகளுக்கு, மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் பேசியவர்கள், களத்தில் செயல்பட்டவர்கள் தேடித்தேடி கொல்லப்பட்டதன் பின்னணியில் மிகப்பெரிய சதித்திட்டம் இருப்பதும், சனாதன் சன்ஸ்தா என்கிற இந்துத்துவ பயங்கரவாத அமைப்பே அதன் பின்னணியில் இருப்பதும் விசாரணையில் அம்பலமானது.tabolkar 271இந்நிலையில் நரேந்திர தபோல்கர் வழக்கில் சுமார் பத்தரை ஆண்டுகளுக்குப் பிறகு, புனேவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் மே 10-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதி பிபி ஜாதவ் அளித்த தீர்ப்பில், சச்சின் அன்டுரே, ஷரத் கலாஸ்கர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளார். ஆனால் மூளையாகச் செயல்பட்ட வீரேந்திரசிங் தவாடே, சஞ்சீவ் புனலேகர், விக்ரம் பாவே ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லாததால் நீதிமன்றம் அவர்களை விடுவித்துள்ளது.

கொலையாளிகளை தப்பவிட்ட சிபிஐ

கொலைக்கான காரணத்தையும், கொலைக்கு மூளையாகச் செயல்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டையும் சிபிஐ நிரூபிக்கத் தவறிவிட்டதாக நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. “சச்சின் அன்டுரே, ஷரத் கலாஸ்கர் ஆகிய இருவரும் கொலை செய்வதற்கான கருவியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளனர். இந்தக் குற்றத்தின் பின்னணியில் முக்கிய மூளையாக வேறு ஒருவர் இருக்கிறார். புனே காவல்துறையும், சிபிஐயும் அந்த நபரைக் கண்டறியத் தவறி விட்டன. இது அவர்களின் தோல்வியா அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களின் செல்வாக்கின் காரணமாக செயல்படாமல் அமைதி காத்தனரா என்பதை அவர்களே சுயபரிசோதனை செய்ய வேண்டும்” என்று நீதிபதி காட்டமாகக் கூறியுள்ளார்.

வீரேந்திரசிங் தவாடேதான் கொலைக்கான மாஸ்டர் மைண்ட் என்று புனே காவல்துறையும், சிபிஐ-யும் குற்றப்பத்திரிகையில் அடையாளம் காட்டின. சனாதன் சன்ஸ்தா மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்பான இந்து ஜன்ஜக்ருதி சமிதியில் முழுமையாக ஈடுபடுவதற்கு முன்புவரை வீரேந்திரசிங் தவாடே மருத்துவராக செயல்பட்டுள்ளார். தபோல்கர் பகுத்தறிவாளர், மூட நம்பிக்கை எதிர்ப்பாளர் என்பதாலேயே அவர் மீது வீரேந்திரசிங் தவாடேவுக்கு தனிப்பட்ட பகை இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த பின்னணியில்தான் கொலை நடந்திருக்கிறது. ஆனால் தவாடே மீதான குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களைத் திரட்ட சிபிஐ தவறிவிட்டது.

சிசிடிவி ஆதாரம் கூட இல்லை

இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட 20 சாட்சியங்களில் சஞ்சய் அருண் சத்வில்கர் மிக முக்கியமானவர். 2004 இல் தபோல்கர் ஒரு பொது நிகழ்ச்சிக்காக கோலாப்பூருக்குச் சென்றிருந்தபோது, தவாடே தபோல்கருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சத்வில்கர் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி, தபோல்கர் கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, சத்வில்கரிடம் ஒரு கைத்துப்பாக்கி செய்துத் தருமாறு தவாடே கேட்டிருக்கிறார். இதை அவர் வாக்குமூலமாகக் கொடுத்துள்ள போதிலும், கொலையில் தவாடேவின் பங்கை நிரூபிக்க சிபிஐ தவறியிருக்கிறது.

அதேபோல மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் புனலேகர், 2008 ஆம் ஆண்டு தானே மற்றும் பன்வெல் குண்டுவெடிப்பு உட்பட பல பயங்கரவாத வழக்குகளில் இந்து அடிப்படைவாதிகள் சார்பில் ஆஜரானவர். 2017-இல் கவுரி லங்கேஷை சுட்டுக் கொன்ற பிறகு துப்பாக்கியை ஒரு சிற்றோடையில் எறிந்து விடுமாறு புனலேகர் அறிவுறுத்தியதாக கொலையாளிகள் கூறியுள்ளனர். அதையும் சிபிஐ நிரூபிக்கத் தவறியதால், புனலேகரும் விடுதலை செய்யப்பட்டுள்ளார். புனலேகரின் உதவியாளர் பாவே கொலையாளிகளான சச்சின் அன்டுரே, ஷரத் கலாஸ்கருடன் இருந்துள்ளார். ஆனால் அதற்கான ஒரு சிசிடிவி ஆதாரத்தைக் கூட சிபிஐ முன்வைக்கவில்லை. தபோல்கர் கொல்லப்பட்ட தெருவானது எப்போதும் மக்கள் அதிகமாக புழங்கும் பகுதிதான். அப்படிப்பட்ட இடத்தில் இருந்துகூட சிபிஐயால், ஒரு சிசிடிவி காட்சியை சமர்ப்பிக்க முடியவில்லை என்பதில் இருந்தே கொலையாளிகளை காக்க வேண்டுமென்ற நோக்கத்தை மிக எளிமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

இந்து விரோதி முத்திரை குத்துவதா?

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரகாஷ் சல்சிங்கிகர், கொலையாளிகளின் செயலை நியாயப்படுத்தும் வகையிலான வாதங்களை வைத்துள்ளார். இந்துக் கடவுள்களை அவமதித்ததால் தபோல்கர் வெறுக்கப்படுகிறார் என்ற தொனியில் அவரது வாதங்கள் இருந்தன. “தபோல்கரை இந்து விரோதி என்று முத்திரைக் குத்தி, கொலையை நியாயப்படுத்தும் வகையில் இந்த வாதம் உள்ளது. இந்த அணுகுமுறையானது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த கொலை நிச்சயம் சச்சின் அன்டுரே, ஷரத் கலாஸ்கர் ஆகியோர் மட்டும் செய்ததல்ல. முன்கூட்டியே திட்டமிடப்பட்டு தெளிவாக நிகழ்த்தப்பட்ட கொலை. ஆனால் அந்த முகமூடியை அவிழ்க்க அரசு தவறிவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் சனாதன் சன்ஸ்தாவுடன் தொடர்புடையவர்கள் என்பது குறுக்கு விசாரணையிலேயே ஒப்புக் கொள்ளப்பட்டது. சனாதன் சன்ஸ்தா, இந்து ஜன்ஜக்ருதி சமிதி மற்றும் அதனுடன் இணைந்த இந்து அமைப்புகள் கடுமையான பகையை வளர்த்து வருகின்றன என்பதும் தெளிவாகிறது” என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.tabolkar case criminalsதபோல்கரோடு முடியப் போவதில்லை!

இது தபோல்கர் வழக்கோடு மட்டும் முடிந்துவிடப் போவதில்லை. இதே நபர்கள்தான் கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் கொலையிலும் தொடர்புடையவர்களாக இருப்பதால் அந்த வழக்குகளிலும் குற்றவாளிகள் தப்பிப்பதற்கான கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது. ஏனென்றால், கவுரி லங்கேஷைக் கொல்லப் பயன்படுத்திய துப்பாக்கியின் பகுப்பாய்வுதான், கல்புர்கியின் கொலைக்கும் அதே துப்பாக்கியே பயன்படுத்தப்பட்டது என்பதை உறுதி செய்தது. நான்கு கொலைகளிலும் பல பொதுவான அம்சங்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. நால்வரும் செய்த முற்போக்கு பரப்புரையை வேறு யாரும் செய்யக்கூடாது என்ற நோக்கம் இருந்ததும் தெளிவாகிறது. கவுரி லங்கேஷ் கொலையில் சச்சின் அன்டுரே, ஷரத் கலாஸ்கர் பங்கு கண்டறியப்பட்ட பின்பே, மகாராஷ்டிராவில் அவர்கள் இருவரும் 2018ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டனர். உண்மையில் சித்தராமையா அரசு இந்த விசாரணையில் வேகம் காட்டும் வரை, தபோல்கர் கொலை விசாரணையில் சிபிஐ எந்தத் துரும்பையும் கிள்ளிப் போடவில்லை.

இது நாடு முழுக்க இருக்கிற முற்போக்காளர்கள், பகுத்தறிவாளர்களுக்கு விடுக்கப்பட்டிருக்கிற நேரடி எச்சரிக்கையாகவே இருக்கிறது. இந்து மதத்தின் பாகுபாடுகள், பிற்போக்குத்தனங்களுக்கு எதிராகப் பேசினால் கொலை செய்யப்படுவீர் என்று சனாதன் சன்ஸ்தா அமைப்பு விடுக்கும் எச்சரிக்கையாகவும், அப்படி கொல்லப்பட்டாலும் குற்றவாளிகளை விசாரித்து தண்டனை பெற்றுத் தர மாட்டோம் என்று சிபிஐ அமைப்பும் விடுக்கிற எச்சரிக்கையாகவே இத்தீர்ப்பு அமைந்திருக்கிறது. இது ஜனநாயகத்திற்கு பேராபத்தானது. தபோல்கர் வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அவரின் மகன் ஹமீத் தபோல்கர் மற்றும் மகள் முக்தா தபோல்கர் தெரிவித்திருக்கின்றனர். சனாதன் சன்ஸ்தா இந்துத்துவ அமைப்பை பயங்கரவாத அமைப்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிக்க வேண்டும். பயங்கரவாத செயலுக்கு துணைபோகிற அதிகாரிகளையும் உள்ளடக்கி மறு விசாரணை நடத்தப்பட்டு, கொலையாளிகளும், கொலைக்கு துணைபோனவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். அதுவே தபோல்கரின் கொலைக்கு கிடைக்கும் நியாயமான நடவடிக்கை.

- விடுதலை இராசேந்திரன்

Pin It