மறைந்து அரை நூற்றாண்டுகள் ஆகிவிட்ட பெரியார்தான் இன்னும் காவிகளை கதற வைத்துக் கொண்டிருக்கிறார் என்றால், பெரியாருக்கு 12 வயதாக இருக்கும்போதே மறைந்துவிட்ட கால்டுவெலும் தன் பங்குக்கு கதற வைத்துக்கொண்டிருக்கிறார். கால்டுவெல் பெரியாரைப் போல நாத்திகர் இல்லை, பெரியாரைப் போல கடவுள் இல்லவே இல்லை என்று கூறவில்லை. பிறகு ஏன் காவிக்கூட்டம் அவரைக் கண்டு அஞ்சுகிறது என்றால், தனித்துவ ‘தமிழ்’நாட்டுக்கான அடித்தளத்தில் அவருக்கும் மிகப்பெரிய பங்கு இருக்கிறது. செத்த மொழி சமஸ்கிருதத்தில் இருந்தே இந்திய மொழிகள் அனைத்தும் உருவானவை என்ற ஆரியக் கற்பிதங்களை உடைத்து, சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று நிறுவியவர் கால்டுவெல்.

கால்டுவெல் மீது காழ்ப்புணர்ச்சி ஏன்?

caldwell and tamilஉண்மையில் ஆர்.என்.ரவி கூறுவதுபோல இராபர்ட் கால்டுவெல் மதபோதகராகத்தான் சென்னைக்கு வந்திறங்கினார். ஆனால் அதனால்தான் ஆர்.என்.ரவி வகையறாக்களுக்கு கால்டுவெலின் மீது கோபம் என்றால் அது பெரும் நகைப்புக்குரியது. இன்றைக்கும் இந்தியாவில் கிருத்தவர்களின் மக்கள்தொகை என்பது 2.3%-ஆக மட்டுமே உள்ளது. இந்து மதத்தில் இருந்து பெரும் எண்ணிக்கையில் கிருத்துவத்திற்கு மதமாற்றம் நடந்திருக்குமானால் 200 ஆண்டுகளுக்கு மேலாகியும் கிருத்தவர்களின் மக்கள்தொகை உயரவில்லையே! அதேபோல இராபர்ட் கால்டுவெல் பல லட்சம் பேரை மதம் மாற்றி விட்டார் என்று குற்றம்சாட்டுவதற்கும் எந்த ஆதாரமோ, தரவோ எவரிடத்திலும் இல்லை. எனவே அவர்களின் சிக்கல் அதுவல்ல, “இந்தியாவில் 2 இனங்கள் இருக்கின்றன. ஒன்று ஆரிய இனம், மற்றொன்று திராவிட இனம்” என்று அறுதியிட்டுச் சொல்வதற்கான ஆய்வுகளை கால்டுவெல் முன்வைத்தார். அதுதான் கால்டுவெல் மீதான காவிகளின் எரிச்சலுக்குக் காரணம்.

இராபர்ட் கால்டுவெலுக்கு மதத்தைத் தாண்டி, மொழியியல் ஆய்வுகள் மீது சிறுவயதில் இருந்தே பெரும் நாட்டம் இருந்தது. அது சென்னைக்கு வந்த பிறகு முளைத்ததல்ல. கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் கால்டுவெல் படித்துக்கொண்டிருக்கும்போதே ஐரோப்பிய சமய நூல்கள், நீதி நூல்களைத் தேடித்தேடி படித்தார். அப்பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் சர். டேனியல் சேண்ட்போர்ட் என்பவரின் பாடங்களால் மிகவும் ஈர்க்கப்பட்டிருந்தார். பேரசிரியர் டேனியல், கிரீக் மொழியின் சிறப்புகள், அதன் அருமை பெருமைகளைப் பிற மொழிகளுடன் ஒப்புமைப்படுத்தி விளக்கினார். அத்தகைய மொழியியல் ஆய்வுகள் மீதான இத்தகைய ஈர்ப்புப் பின்புலத்தோடே கால்டுவெல் சென்னைக்கு வந்தார்.

அதனால்தான் அவரால் இங்கு சமயப் பணிகளோடு தனது எல்லையை சுருக்கிக் கொள்ள இயலவில்லை. தமிழைக் கற்றறிந்தார். பிற மொழிகளில் வெளியான ஆய்வுகளையும் கற்று, ஏராளமான தரவுகளை சேகரித்தார். இப்படி அவர் 18 ஆண்டுகாலம் கொடுத்த உழைப்பின் விளைச்சலே, “திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற நூல். இதுவரை மொத்தம் 3 பதிப்புகள் வெளியாகியுள்ளன. முதல் பதிப்பு 1856-இல் இராபர்ட் கால்டுவெல் வெளியிட்டது. அதை அவரே மீண்டும் திருத்தம் செய்து 1875-இல் இரண்டாம் பதிப்பை வெளியிட்டார். ஜே.எல்.வயட், டி.ராமகிருஷ்ண பிள்ளை ஆகியோரால் சில பகுதிகள் நீக்கப்பட்டு, 1913-இல் இலண்டனில் மூன்றாம் பதிப்பு வெளியிடப்பட்டது. இந்த மூன்றாம் பதிப்பை மறுபதிப்பாக சென்னைப் பல்கலைக்கழகம் 1956-இல் மீண்டும் வெளியிட்டது.

இதில் 1913-இல் நீக்கப்பட்ட பகுதிகளுக்கு முந்தைய பதிப்பை பேராசிரியர் பா.ரா.சுப்பிரமணியன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 2021-இல் வெளியிட்டது. அவரது ஆய்வின் முக்கிய அம்சமே தென்னிந்திய மொழிக் குடும்பத்திற்கு ‘திராவிட’ என்ற பதத்தை பயன்படுத்தியிருப்பது. திராவிட இயக்கத்தின் மீதான ஒவ்வாமையால், திராவிட இயக்கம் ஒரு நூற்றாண்டாக இம்மண்ணில் செய்திருக்கிற பணிகளின் மீதான ஒவ்வாமையால் ‘தமிழ் வேறு, திராவிடம் வேறு’ என்று இப்போதும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள். இரத்தப் பரிசோதனை செய்து தமிழரா இல்லையா என்று தரம் பிரிப்பவர்கள் அவர்கள்.

தமிழும் திராவிடமும் வேறுவேறல்ல!

அவர்களுக்கு அப்போதே பதிலளித்து விட்டார் கால்டுவெல். “திராவிட என்னும் சொல் தமிழ் என்னும் சொல்லோடே தொடர்புபடுத்தக் கூடியதே” என்றும், “தமிழ் என்ற சொல்லில் இருந்தே திராவிடம் என்ற சொல் உருவாகியிருக்க வேண்டும்” என்றும் தனது ஆய்வில் நிறுவியவர் கால்டுவெல். தமிழ்- தமிழா- தமிலா- த்ரமிளா- த்ரமிடா- திராவிடா என்று திரிந்திருக்க வேண்டுமென்று கருதுவதில் தவறில்லை என்றும் கூறுகிறார். அதனால்தான் கால்டுவெல் மீது ஆர்.என்.ரவிக்கு இருக்கும் அதே கோபம், சீமானுக்கும் மணியரசனுக்கும் இருக்கிறது. ஒருகாலத்தில் தென்னிந்திய மொழிகளைச் சுட்டுவதாக இருந்த திராவிடம் என்ற சொல், ஆரியப் பண்பாட்டுக்கு எதிராக பெரியார் தொடங்கிய அரசியல் யுத்தத்தில் திராவிட இனமாக உருவகப்படுத்தப்பட்டு, இன்றைக்கு திராவிடப் பண்பாடாகவும், திராவிட மாடல் அரசாகவும் பல்வேறு பொருள்களில் விரிவடைந்து இருக்கிறது.

ஈராயிரம் ஆண்டுகளாக பார்ப்பனர்கள் இம்மண்ணில் வாழ்ந்தாலும், சமூக ரீதியாக தங்களை தனித்துவமாகக் காட்டிக்கொள்வதில், தங்களுக்கு என தனித்த பண்பாடு இருக்கிறது என வெளிப்படுத்திக்கொள்வதில் அவர்கள் தயங்குவதில்லை. அவர்களுடைய ஆரியப் பண்பாட்டை நம்மீது திணிக்கவும் அவர்கள் தயங்குவதில்லை. அந்தத் திணிப்பில் இருந்து விலகி, நம் சுய அடையாளத்தோடு வாழ நமக்கிருக்கும் இருக்கும் ஒற்றை ஆயுதம் ‘திராவிடம்’. அதனால்தான் பெரியார் திராவிடம் என்ற அடையாளத்தை கையிலெடுத்தார். பெரியாரின் இம்முடிவு சரியானதே என்பதற்கு, சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே நிறுவப்பட்ட ஆய்வாகவே இராபர்ட் கால்டுவெலின் ஒப்பிலக்கணம் திகழ்கிறது.

திராவிட மொழிக் குடும்பத்திற்கும்- சமஸ்கிருத மொழிக்கும் இடையிலான வேறுபாடுகளை கால்டுவெல் சுட்டிக் காட்டியிருக்கும் அதேவேளையில், ஆஸ்திரேலிய பழங்குடியின மொழிகளுக்கும், செமிட்டிக் மொழிகளுக்கும் திராவிட மொழிகளுக்கும் இடையில் இருக்கும் ஒற்றுமைகளையும் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோல பின்னிஷ், துருக்கி, மங்கோலியம் உள்ளிட்ட சித்திய மொழிக் குடும்பத்திற்கும் திராவிட மொழிகளுக்கும் இடையில்கூட ஏதேனும் ஒற்றுமை இருக்கலாம் என்பதும் அவரது கருத்து.

சமஸ்கிருத கருத்துருவாக்கத்தை தகர்த்த கால்டுவெல்

திராவிட மொழிக்குடும்பத்தில் ஒவ்வொரு மொழிக்கும் இடையில் இருக்கும் ஒற்றுமை, வேற்றுமை என்ற கால்டுவெலின் ஆய்வும் முக்கியமானது. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் சமஸ்கிருதச் சொற்கள் கலந்திருக்கின்றன என்பது உண்மையே. ஆனால் தமிழில் இருந்து பிரிந்து சென்ற கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கு சமஸ்கிருதத்தின் துணை தேவைப்படலாம், தமிழுக்கு சமஸ்கிருதத்தின் துணை தேவையே இல்லை, தனித்தியங்கும் ஆற்றல் கொண்ட சொற்கள் தமிழில் ஏராளம் உள்ளன என்றும் நிறுவினார் கால்டுவெல்.

கால்டுவெலுக்கு முன்பிருந்தே திராவிட மொழிக்குடும்பம் குறித்தான கருத்தாக்கங்கள் இருந்தே இருக்கின்றன. கிபி 14-ஆம் ஆண்டில் நூற்றாண்டில் வெளியான லீலாதிலகம் என்ற மலையாள இலக்கண நூல், “தமிழும், மலைநாட்டுத் தமிழும், துளு, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளும் ஒரே அமைப்புடையன, வடமொழி வேறு” என்று கூறுகிறது. “செந்தமிழும், வடமொழியும் ஆனான் காண்” என்று ஆழ்வார்களும், நாயன்மார்களும் பாடியதாகக் குறிப்புகள் உள்ளன. “தமிழும் வடமொழியும் சிவன் கற்பித்த வேறு வேறு அமைப்புடைய மொழிகள்” என்று பரஞ்சோதி முனிவர் பாடியுள்ளார். வீரமாமுனிவரும் தமிழை திராவிடம் என்றே வழங்கியிருக்கிறார். எல்லீஸ், சாமுவேல் பிள்ளை போன்றவர்களும் கால்டுவெலுக்கு முன்பே திராவிடம் குறித்த கருத்தாக்கங்களை முன்வைத்துள்ளனர். ஆனால் கால்டுவெலின் ஆய்வுகள் மட்டும் அரசியலாக்கப்பட்டு, அவர் எதிர்க்கப்படுவதற்குக் காரணம், இந்தியாவில் மொழிவழித் தேசியக் கருத்தாக்கம் வலுப்பெற்ற காலத்தில் இவரது ஆய்வுகள் வெளியானதே.

ஆரிய - பார்ப்பனியம் சமூகப் படிநிலையில் உயர்ந்தது, மற்ற சமூகங்கள் தாழ்ந்தது என்ற வருணாசிரம கோட்பாட்டுக்கு எதிராக உருவானதே திராவிட அரசியல் கருத்தியல். அறிவியல் பார்வைக்கு ஒவ்வாத அந்த நகைமுரண் கோட்பாட்டை திராவிட அரசியல் கருத்துருவாக்கம் கேள்வி எழுப்புவதற்கு முன்பே, அந்தப் பணியை திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தொடங்கிவிட்டது. அதைவிட மிக முக்கியமானது, ஓர் ஒப்பிலக்கண நூல் மிகப்பெரிய சமூக, சமய, அரசியல் மாற்றத்தை உருவாக்குவதற்கான ஆயுதமாக அமையும் என்பதை கால்டுவெல் எண்ணியிருப்பாரா என்று தெரியவில்லை. எந்தவிதமான ஆய்வும் இல்லாமல், இந்திய மொழிகளின் தாய் ‘சமஸ்கிருதம்’ என்று நிறுவி வைக்கப்பட்டிருந்த ஆரிய கருத்துருவாக்கத்தை தனியொரு மனிதனாக கால்டுவெல் தகர்த்து விட்டார் என்ற கோபவே இப்போதும் அவர்கள் எதிர்க்க, குமுறலை வெளிப்படுத்த ஒற்றைக் காரணம்.

தகவல்கள்: ‘தமிழுக்கு என்ன செய்தார் கால்டுவெல்’ நூல்

நூல் குறிப்பு:

தமிழுக்கு என்ன செய்தார் கால்டுவெல்

வெளியீடு : கருஞ்சட்டைப் பதிப்பகம்

விலை : ரூ.60/-

தொடர்புக்கு : 81229 46408

Pin It