ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி.லோகுர், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அஜித் பி ஷா மற்றும் பத்திரிகையாளர் என்.ராம் ஆகிய மூவரும் இணைந்து ராகுல்காந்திக்கும் நரேந்திர மோடிக்கும் நேரடி விவாதத்தை ஏற்பாடு செய்தனர். அந்த அழைப்பை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டார். ஆனால் மோடி தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. இவர்கள் இருவரும் சந்தித்து உரையாடினால் எப்படி இருக்கும். ஒரு கற்பனை…

ராகுல் : நமஸ்தே.. விவாதத்திற்கு வந்துட்டிங்களே.! சபாஷ்!!

rahul and modi 393மோடி : விவாதமா? அதுக்கெல்லாம் நான் வரல, அப்படினா எனக்கு என்னென்னே தெரியாது. பத்து வருட நாடாளுமன்ற அனுபவத்தில சொல்றேன். நான் எந்த விவாதத்திலாவது பேசிருக்கேனா? சொல்லுங்க பாப்போம். வாய்ப்பில்லை ராஜா, சாரி இளவரசரே..!

ராகுல் : அப்போ இங்க எதுக்கு வந்துருக்கீங்க, ஷோ நடத்தவா?

மோடி : பயந்துக்கிட்டேனு நெனைச்சு மக்கள் உண்மையை புரிஞ்சுகிட்டாங்கன்னா, நான் விவாதத்துக்கு அஞ்சாத சிங்கம் என்று ஷோ காட்ட வந்துருக்கேன்..

ராகுல் : எப்படியோ வந்துட்டிங்க.. சரி உங்க கேள்விகளுக்கு நான் பதில் தர தயார்! என்னுடைய கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுவீங்களா?

மோடி : இதுக்கெல்லாம் வேற ஆளை பாருங்கய்யா! நான் மட்டும் பேசித்தான் எனக்கு பழக்கம். இரண்டே இரண்டு பாயிண்ட் தான். நாங்கள் இந்து. முஸ்லீம் எங்கள் விரோதி. எங்களை எதிர்த்தால் அவர்கள் எல்லாம் இந்து விரோதிகள், பாகிஸ்தான் ஆதரவாளர்கள். அவ்வளவுதான். நான் பிரதமராக தொடர்வதற்கு இது தெரிந்தாலே போதும்…

ராகுல் : பத்தாண்டுகளாக என்ன சாதனைகளை செய்திருக்கீங்க. அதை பேசவே மாட்டீங்களா?

மோடி : நான் எதுக்கு பேசனும்? போய் அம்பானி கிட்ட கேளுங்க. அதானி கிட்ட கேளுங்க.. ராம பகவான் கிட்ட கேளுங்க… அவங்க பதில் சொல்லுவாங்க.!

ராகுல் : ஆக, மக்களிடம் கேட்க வேண்டாம்னு சொல்றீங்க.. வேலைவாய்ப்பு கிடைக்கலனு மக்கள் கதறுராங்களே அது தெரியுமா?

மோடி : எதுக்கு கதறனும். நான் தான் பகோடா விற்க சொன்னேன்ல அது போதாதா? நாங்க என்ன வேலையை வெச்சுக்கிட்டா தர மாட்டேங்கிறோம். இப்போ கூட இஸ்ரேல் நாட்டுக்கு இந்துக்களை வேலைக்கு அனுப்புறோமே!

ராகுல் : உள்நாட்டில் வேலை கேட்டால் போர் நடக்கும் நாட்டுக்கு போக சொல்றீங்க. எதிர்க்கட்சிகளை சந்திக்க பயந்து நாடாளுமன்றத்துக்கே நீங்க வரமாட்டிங்க. இப்போ நம்ம இளைஞர்களை மட்டும் போர்க்களத்துக்கு தள்ளி விடுரீங்க. நல்லா இருக்குதே உங்க நியாயம். நீங்க நாட்டின் சொத்துக்களை அம்பானிக்கும் அதானிக்கும் விற்பீங்க, ஆனால் எங்க இளைஞர்கள் மட்டும் பகோடா விற்கனுமா?

மோடி : யாருக்கு விற்கிறோம்.. இந்துக்களுக்கு தானே, பாகிஸ்தானுக்கா விற்கிறோம்?

ராகுல் : பாதிக்கப்படுகிற ஏழை எளிய மக்கள், பெட்ரோல், டீசல், சிறு குறு தொழில் நடத்துபவர்கள், ஜிஎஸ்டி கட்டுபவர்கள் எல்லாம் இந்துக்கள் தானே. அவர்களை எல்லாம் வதைக்கலாமா?

மோடி : இப்போ சொல்றேன் கேட்டுக்கோங்க.. எங்க பாஜக ஆதரவாளர்கள் மட்டுமே உண்மையான இந்துக்கள். நாங்கள் தான் கோயில் கட்ட வேண்டும் என்று ராம பகவானே எங்களுக்கு ஆணையிட்டார். பகவான் எங்களை மட்டுமே இந்துக்கள் என்று ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

ராகுல் : ஏற்கனவே இந்துக்கள் ஜாதிவாரியாக பிரிந்து கிடக்கிறார்கள். இப்படி நீங்களே கட்சியை வைத்து இந்துக்களை பிளந்து, இந்துக்களை மைனாரிட்டி ஆக்கிட்டிங்களே..

மோடி : இந்துக்களை இரண்டாம்தர குடிமக்களாக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அவர்கள் முதல்தர குடிமக்களாக இருக்க வேண்டும். அதற்கு இந்துக்கள் எங்கள் கட்சியில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். எங்களுக்கு மட்டுமே ஓட்டு போட வேண்டும். அவர்கள் தான் முதல்தர குடிகள்.

ராகுல் : சனாதனம் தான் இந்துக்களை பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்று நான்கு தரங்களாக வைத்திருக்கிறது. அதை எதிர்த்து நீங்கள் பேசுவீங்களா?

மோடி : இதோ பாருங்க.. எனக்கு சனாதனம் என்ற ஒற்றைச் சொல் மட்டுமே தெரியும். அதற்கு அர்த்தமெல்லாம் எனக்கு தெரியாது. அதற்கான தேவையும் இல்லை. ஒரு பிரதமராக இருப்பதற்கு இதுவே போதும்..

ராகுல் : பால ராமன் சிலையை பிரதிஷ்டை செய்யும் உரிமை உங்களுக்கு இல்லை என்று சங்கராச்சாரிகள் எதிர்த்தார்களே, அதாவது உங்களுக்கு தெரியுமா?

மோடி : அதற்கு தான், ஒரு வாரம் பிரதமர் பதவியில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு விரதம் இருந்தேன். சங்கராச்சரிகளின் கட்டளையின் படி அழுக்கில் கிடந்த நான் என்னை நானே தூய்மைப்படுத்திக் கொண்டதால் பால ராமன் என்னை ஏற்றுக்கொண்டார். அவரின் கண்கள் வழியாக அதை எனக்கு உணர்த்தினார். அப்போது ஒரு தெய்வீகத்தை உணர்ந்து மெய்மறந்து சிலிர்த்து போனேன். பிறகு மீண்டும் பிரதமராகி இப்போது பிரச்சாரத்துக்கு வந்துள்ளேன். நீதான் இந்த பாரதத்தின் நிரந்தர பிரதமர் என்று பகவான் ஆணையிட்டுவிட்டார்.

ராகுல் : பிறகு எதுக்கு தேர்தல் நடத்துரீங்க.. ஊர் ஊராக போய் மதவெறுப்பை கக்குறீங்க?

மோடி : நானா பேசுகிறேன். அல்ல.. அல்ல.. பகவான் ராமன் தான் என்னை அப்படி பேச வைத்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தை உன் கட்டுப்பட்டிற்குள் கொண்டுவந்து விடு என்று ஆணையிட்டார். கெஜ்ரிவாலை கைது செய்து உள்ளே போடு என்று கூறினார். ஹேமந்த் சோரனை வெளியே விட்டு வைக்காதே என்று உத்தரவிட்டார். மணிப்பூர் பற்றியெறிந்தாலும் பரவாயில்லை. அந்த பக்கம் தலைவைத்து படுக்காதே என்றார். காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை உடனே முடக்கு, இல்லையென்றால் தேசத்திற்கே ஆபத்து என்று கறாராக கட்டளையிட்டார். அதுமட்டுமா? நாங்க ஆட்சி செய்யாத மாநிலங்களை முடக்கு, நிதி தராதே! அமலாக்கத்துறையை அனுப்பு! அங்கே வாழும் இந்துக்கள் எனது உண்மையான பக்தர் அல்ல, அவர்கள் இராவணனின் கைக்கூலிகள். பாஜகை எதிர்க்கும் இந்துக்கள் எனது பக்தர்கள் அல்ல என்று எனது கனவில் வந்து கூறினார். புயல் வெள்ள பாதிப்புகள் வந்தாலும் பாஜக ஆளாத மாநிலங்களுக்கு நிதி தராதே! பாஜக ஆளாத மாநிலத்தில் வசிக்கும் இந்துக்கள், இந்துக்களே அல்ல என்று இராம பகவான் உறுதியாக கூறிவிட்டார். அந்த கட்டளையை ஏற்றுதான் நான் அப்படியே செயல்படுகிறேன். இப்போதுதான் ராமராஜ்ஜியமே துவங்கி இருக்கிறது. இவ்வளவு பேசுகிறீர்களே, நீங்களெல்லாம் அயோத்திக்கு வந்து இராம பகவானை வழிபட்டீர்களா? மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இராம பகவானே உங்களை வெற்றிபெற விடமாட்டார்.

ராகுல் : இது ஜனநாயக, மதச்சார்பற்ற நாடு. இங்கு வாழ்கிற அனைத்து குடிமக்களையும் இப்படி மதத்தால் பிளவுபடுத்துகிறீர்களே?

மோடி : குடியுரிமையிலேயே மதத்தை புகுத்தியது நாங்கள் தான். அடுத்து குடிமக்களையும் மதத்தால் பிளவுபடுத்தி இராமராஜ்ஜியத்தை அமைப்பது தான் எங்கள் இலட்சியம். அதற்காக கட்சிகளை உடைப்போம். ஆட்சிகளை கவிழ்ப்போம். ஊழல் செய்தவர்களை மிரட்டி கட்சியில் சேர்ப்போம். வழக்குகளில் இருந்து அவர்களை விடுவிப்போம். பாலுறவு வன்முறைகளில் கை தேர்ந்தவர்களை கட்சியில் சேர்த்து அவர்களுக்கு பதவிகளை வழங்குவோம். அவர்களை தேச பக்தர்களாக போற்றுவோம்.

ராகுல் : மக்களுக்கு வாழ்வுரிமையை தரமாட்டீர்கள். அதற்கான கணக்கெடுப்பை நாங்கள் நடத்தச் சொன்னால் பாகிஸ்தானிகள் என்று அலறுகிறீர்கள். இந்த தேர்தலில் பாகிஸ்தானில் இருந்து யாராவது போட்டியிடுகிறார்களா? சரி இந்திய கிராமங்களை சீனா ஆக்கிரமித்து வைத்து அதற்கு சீனப் பெயர்களை சூட்டியுள்ளதே, அதைக் கண்டித்து பேசமாட்டீர்களா?

மோடி : அசுக்கு.. புசுக்கு.. இப்படியெல்லாம் உசுப்பேத்தி எங்களை சீனாவுக்கு எதிராக தூண்டி விடப் பார்க்கிறீர்களா? வலிமையான சீனாவை எதிர்த்தால் என்ன நடக்கும் என்று எங்களுக்கு நன்றாக தெரியும். நாங்கள் என்ன அவ்வளவு முட்டாள்களா? பால இராமனே வந்து சீனாவை எதிர்க்க ஆணையிட்டாலும் நாங்கள் எதிர்க்க மாட்டோம்.

ராகுல் : நடந்து முடிந்த வாக்குப்பதிவில் மக்கள் உங்களை ஏற்கவில்லை என்ற செய்திகள் எல்லாம் வருகிறதே, அதாவது உங்களுக்கு தெரியுமா?

மோடி : அப்படியெல்லாம் இராம பகவான் எங்களுக்கு துரோகம் செய்ய மாட்டார். அப்படி துரோகம் செய்தால் இராமனை கைவிட்டுவிட்டு கிருஷ்ணனுக்கு தாவிவிடுவோம். கிருஷ்ணனுக்கு கோயில் கட்ட தொடங்கிவிடுவோம். கிருஷ்ணனை வைத்து நாங்கள் ஆட்சிக்கு வருவோம்.

ராகுல் : ராமன் இல்லாவிட்டால் கிருஷ்ணன், கிருஷ்ணன் இல்லாவிட்டால் அனுமான், அனுமான் இல்லாவிட்டால் சிவன். எந்த காலத்திலேயும் அரசியல் சட்டம் ஒன்று இந்த நாட்டில் உள்ளதை ஏற்றுக்கொள்ளவே மாட்டிங்க, அப்படித்தானே..

மோடி : எங்களுக்கு அந்த குப்பைகள் எல்லாம் வேண்டாம். பாரத மாதாவும், சனாதனமும், மதவெறியும் இருந்தாலே போதும் நாங்கள் தான் உண்மையான தேச பக்தர்கள். சட்டங்கள் ஒழிக! சனாதனம் வாழ்க! பாரத் மாதா கி ஜே!

- கோடங்குடி மாரிமுத்து

Pin It