முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொந்த தொகுதியான ஆர்.கே நகர் தொகுதியில் உள்ள தண்டையார்பேட்டை படேல் நகரைச் சேர்ந்த பாரதி என்ற 13 வயது சிறுவன் கஞ்சா சாக்லெட் சாப்பிட்டு மயங்கி விழுந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக காவல்துறை ‘கடும் நடவடிக்கையைத்’ தற்போது எடுத்துள்ளது. சென்ற அதிமுக ஆட்சியில் 2013 ஆம் ஆண்டு புகையிலைப் பொருட்களைக் குறிப்பாக பான்மசாலா மற்றும் குட்கா போன்றவற்றிற்குத் தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டது  நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் சிகிரெட், பீடி போன்றவை அமேசான் காடுகளில் உள்ள அறிய வகை மூலிகைகளால் தயாரிக்கப்படுவதால் ஜெயலலிதா அவர்கள் தாயுள்ளத்தோடு அதை மட்டும் தடை செய்யாமல் விட்டுவிட்டார்.

 ஏற்கெனவே ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சர் ஆனவுடன் தமிழ்நாட்டில் இருந்த ரவுடிகள் அனைவரும் ஆந்திராவுக்கு ஓடிவிட்டதால் தமிழ்நாட்டில் ஜெயலலிதா அவர்கள் போட்ட சட்டத்தை எதிர்த்துப் பான்மசாலா மற்றும் குட்கா போன்றவற்றை விற்கும் தைரியம் யாருக்கு இருக்கும்? அதுவும் ஸ்காட்லாண்டு யார்ட் காவல்துறைக்கு இணையான?தமிழக காவல்துறை இருக்கும் போது எவனாவது இந்தக் கருமத்தை எல்லாம்  தமிழ்நாட்டில் விற்க முடியமா? இல்லை விற்றால்தான் சும்மா விடுவார்களா?. ஆனால் பாருங்கள் தமிழக காவல்துறைக்குத் தெரியாமல் மூன்று ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இதை எல்லாம் விற்று தள்ளி இருக்கின்றார்கள். அதுவும் ஒரு கடை பாக்கி இல்லாமல். இதனால் தமிழக அரசுக்கு பல கோடிகள் வரி இழப்பு ஏற்பட்டு இருக்கின்றது. இதுவரை தமிழகம் முழுவதும் நடந்த சோதனையில் 1.2 கோடிகள் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன அதே போல ஏறக்குறைய 200 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தெரிகின்றது.

 ஜெயலலிதா அரசுக்கும் தமிழக காவல்துறைக்கும் குறிப்பாக எதிர்கட்சி தலைவர்கள் குசு விட்டால் கூட உடனே அதை ஜெயலலிதாவிற்கு அப்டுடேட் மெசேஜ் செய்யும் தமிழக உளவுத்துறைக்குத் தெரியாமல் மூன்று ஆண்டுகளாக பான்மசாலா மற்றும் குட்கா போன்ற்வற்றை விற்ற அந்த அயோக்கியர்களை செருப்பால் அடிப்பதா இல்லை விளக்கமாறால் அடிப்பதா இல்லை நேர்மையான நம் காவல்துறை அதிகாரிகளைக்கொண்டு என்கவுண்டர் செய்வதா என்று தெரியவில்லை.

 இது எல்லாம் ஜெயலலிதாவிற்குத் தெரியாமல் நடந்துவிட்டது. வட இந்தியாவை சேர்ந்த புகையிலை வியாபாரிகள் ஜெயலலிதாவின் நேர்மையைச் சோதித்து விட்டார்கள். தமிழ்நாட்டு மக்கள் மீது பேரண்பு கொண்ட ஜெயலலிதா தன்னை வாழவைக்கும் தெய்வங்களான அவர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் சும்மா விடுவாரா? பான் மசாலா, குட்கா போன்றவை எவ்வளவு கொடூரமானவை. எத்தனை ஆயிரம் குடும்பங்களை அழித்திருக்கின்றது. அந்த அழிந்துபோன குடும்பங்களில் அதிமுக தொண்டர்களின் குடும்பங்களும் இருக்கும் என்று ‘எல்லாம் தெரிந்த’ ஜெயலலிதாவிற்குத் தெரியாமலா இருக்கும். அதனால் தான் தாயுள்ளத்தோடு அதை எல்லாம் தடைசெய்தார்.

 தன்னாட்டு மக்கள் கண்ட கண்ட கருமம்பிடித்த சரக்குகளை அடித்து உடலை கெடுத்துக்கொள்ள கூடாது என்று தன்னுடைய சொந்த செலவில் அக்காமாலா, கப்ஸி போன்ற ஆரோக்கிய பானங்களை உற்பத்திசெய்து தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்தார். இதைப் புரிந்துகொள்ளும் குறைந்த பட்ச அறிவுகூட இல்லாத சில தமிழக மக்களும், எதிர்க்கட்சி தலைவர்களும் தொடர்ந்து குய்யோ முய்யோ என்று சத்தம் போட்டுக்கொண்டே இருந்ததால் இவர்களின் தொல்லை தாங்க முடியாமல் 500 கடைகளை மட்டும் மூடி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டால் எந்தத் திட்டங்களையும் அறிவிக்க முடியாது என்ற உண்மையை நன்கு தெரிந்திருந்தும் கூட களத்தில் இறங்கி ‘கட்ஸ்’ காட்டிய சில மறக்குடி வீரர்கள் தேர்தல் முடிந்தவுடன் ‘வட போச்சே’ என்று வருத்தத்துடன் அமைதியாக போய்விட்டார்கள்.

 இந்தச் சூழ்நிலையில்தான் ஆளும் அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற கெட்ட நோக்கத்துடன் எதிர்கட்சிகளைச் சேர்ந்த சிலரின் தூண்டுதலின் பேரில் கஞ்சா சாக்லெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. இது நேர்மை, உண்மை போன்றவற்றை மட்டுமே தனது வாழ்வின் ஒரே குறிக்கோளாக கொண்டு தவ வாழ்வு வாழும் ஜெயலலிதா மேல் தப்பான ஒரு தோற்றத்தை ஏற்படுத்த செய்த சதியாகும். என்னவோ கஞ்சா வியாபாரிகளிடம் இருந்து ஜெயலலிதா அரசு கையூட்டு வாங்கியதைப் போன்றும், புகையிலை வியாபாரிகளிடம் இருந்து பெரும் அளவிலான பணத்தை வாங்கிக்கொண்டுதான் இந்த மூன்று ஆண்டுகளாக தமிழக அரசு அதை கள்ளத்தனமாக விற்க அனுமதித்தது போன்றும் மக்களை ஏமாற்ற எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

 ஆனால் தமிழக மக்கள்  இதை எல்லாம் ஒரு போதும் நம்பமாட்டார்கள். அவர்களுக்கு நன்றாக தெரியும், கஞ்சா, பான்மசாலா ,குட்கா போன்றவை உடல்நலத்திற்குக் கேடு அதனால் அதை விற்பது தவறு என்றும் மற்றபடி பீடி, சிகிரெட் அப்புறம் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் ஸ்பெசல் ஆரோக்கிய பானங்கள் போன்றவை உடல்நலத்திற்குச் சக்தி அளித்து அது சிறப்பாக இயங்குவதற்கு உதவக்கூடியது என்றும். அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர் போன்றவற்றைக் கொடுத்து  ஏழை எளிய மக்களின் வாழ்வை மேன்மையுறவைக்கும் ஜெயலலிதா தங்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டார் என்பதும் அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் வெளிப்பாடுதான் அவரை மீண்டும் மீண்டும் அவர்கள் தேர்ந்தெடுக்கின்றார்கள்.

 தன்னுடைய ஆட்சிக்கு உட்பட்ட எல்லையில் மூன்றாண்டுகளாக தன்னால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்றவை விற்பதே தெரியாமல் கள்ளம் கபடமற்று ஆட்சிசெய்யும் அந்த தாயுள்ளம் கொண்ட தெய்வத்தை வாழ்த்த வயதில்லை என்பதால் நாம் அனைவரும் வணங்குவோம். அதே போல இந்த அதிரடி ஆப்ரேசனில் பங்கெடுத்துள்ள தமிழக காவல்துறை, சுகாதார துறை மற்றும் இத்தியாதி இத்தியாதி துறைகளைச் சேர்ந்த நேர்மை தவறாத அதிகாரிகளையும் நாம் பாராட்ட வேண்டும். தமிழ்நாட்டில் காற்றழுத்த தாழ்வுநிலையால் வரும் மழையை விட இந்த வாய்மை தவறாத அதிகாரிகளால் தான் அதிகம் மழை பொழிகின்றது என்பது கண்டுகொள்ளப்படாத செய்தியாக உள்ளது.

 எனவே ஜெயலலிதா அவர்கள் ஆட்சி செய்யும் தமிழ்நாட்டில் ஒழுக்கக் கேடாக கஞ்சா சாக்லெட், பான்மசாலா, குட்கா போன்றவற்றை விற்ற தமிழின துரோகிகளைத் தன்மானம் உள்ள தமிழக காவல்துறை கைது செய்து சட்டத்தின் முன்னால் நிறுத்த வேண்டும் என்றும் இது போன்ற தீய சக்திகள் தமிழ்நாட்டில் தலைதூக்காமல் இருக்க தமிழக அரசே டாஸ்மாக்கில் விற்கும் தரமான ஆரோக்கிய பானங்களை ஏழை எளிய மக்களுக்கு எளிதில் கிடைக்குமாறு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஜெயலலிதாவிற்கு மீண்டும் ஒரு முறை தமிழ்நாட்டை ஆளும் பொன்னான வாய்ப்பை வழங்கிய தமிழக மக்களின் சார்பில் அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.

- செ.கார்கி

Pin It