குடும்ப அரசியல், அய்யோ அய்யோ குடும்ப அரசியல் என்று குடும்பம் இருப்பவர்கள், இல்லாதவர்கள், இவர்களோடு சேர்ந்த பல குரங்குக் கூட்டங்கள் என்று பலரும் இன்று கூவக் கேட்கிறோம். தமிழக அரசியல் களத்தில், இலவசங்கள், துரோகங்கள், அட்டூழியங்கள், ஊழல்கள், போட்டிகள், அதிருப்திகள், கூட்டுகள், கீழறுப்புகள், நடிகர்கள், நடிகைகள், தொகுதிகள், சாதிகள், கணக்குகள் என்ற சொற்கள் நிறைந்து கிடக்கும் இந்தத் தருணத்தில், குடும்ப அரசியல் என்ற ஒன்றை சற்று சிந்தித்துப் பார்க்கத் தோன்றுகிறது.
வைகோ அணி மாறியது பலரையும் எரிச்சல் ஏற்படுத்தியது என்றாலும், கீழ்த்தரமான அரசியலுக்கு இவரின் பங்களிப்பு என்று சொல்லி விட்டு விட்டு விடலாம். இதை வைகோவின் அநாகரிகம் என்று கருதும் போது, இதுவா அநாகரீகம், இதை விட அநாகரீகத்தை இதோ காணீர் என்று செவ்விகள் பல கொடுத்தார். அதில், கருணாநிதி பொடாவில் இருந்து விடுதலை ஆக எந்த முயற்சியும் செய்யவில்லை என்று சொன்னதும், நான் உள்ளே இருந்தால் எங்கே எனது புகழ் வளர்ந்து விடுமோ என்று அஞ்சி சிறையில் வந்து பார்த்தார் என்று சொன்னதும் வைகோவின் அநாகரீகத்தின் உச்சம். எது எப்படியிருந்தாலும், தற்போது அவரும் அவரின் தலைவியும் குடும்ப அரசியல் என்ற வாதத்தை வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்கள்.
இந்தக் குடும்ப அரசியல் என்ற சங்கதி எதனாலெல்லாம் பெரிதாகப் பேசப்படுகிறது?
1) இசுடாலின், மிசாவுக்குப் பிறகு ஏறத்தாழ 30 வருடங்களாக தி.மு.கவில் முக்கியம் பெற்று வருவது.
2) மாறன் குடும்பம் தொலைக்காட்சி, வானொலி, ஏடுகள் ஆகிய மிடையங்களில் வலுவடைந்து வருவது.
இசுடாலின் மீது சாட்டப்படும் குற்றங்கள் என்ன? என்ற வினாவுக்கு எத்தனை பேரால் சரியான காரணத்தைக் கூற முடியும் என்று தெரியவில்லை. அவரின் மீதும் கருணாநிதியின் மீதும் இராசீவ் காந்தி கொலைச் சதி கூட சுமத்தப் பட்டது. அதனால் தி.மு.க பாதிக்கப் பட்டதும் உண்மை. கருணாநிதியை 6 மாதம் அரசியல் ஓய்வெடுக்க வைக்கும் அளவிற்கு அந்தக் குற்றச்சாட்டு அவரை பாதித்தது. பின்னர்தான் மக்களுக்கு அது "இடுதேள் இட்ட" எதிரணியினரின் சதி என்று புரிந்தது. வேறு ஏதும் சில்லறைக் காரணங்கள் இருக்குமானால் அக்காரணங்களினால் அவர் இன்றைய அரசியலில் இருக்கும் அனைவரையும் விட தாழ்ந்தவர் என்று கருதிவிடலாகாது.
அவரும் இரு முறை மேயராகப் பணி புரிந்திருக்கிறார். அதிகம் பேசாமல் ஓரளவு திறமையான நிர்வாகி, செயல்திறன் என்றும் சொல்லப்படுகிறார்.
முக்கியமாக இந்தியா குடியரசான 1950ல் இருந்து இன்றைக்கு சுமார் 56 ஆண்டுகளில் தமிழகத்தை ஆட்சி செய்த, தலைவர்களின் குடும்பங்களை நினைத்துப் பார்க்கவேண்டியது அவசியமாகிறது.
எட்டாண்டுகள் தமிழகத்தை ஆண்ட காமராசருக்குக் குடும்பம் கிடையாது. 2 ஆண்டுகள் ஆண்ட பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு சொந்தப் பிள்ளைகள் கிடையாது; தத்துப் பிள்ளைகள்தான். 13 ஆண்டுகள் ஆண்ட எம்சியாருக்கு குடும்பம் இருந்தாலும் பிள்ளை குட்டிகள் கிடையாது. சில மாதங்கள் ஆண்ட சானகி அம்மாள் எம்சியாரின் மனைவி. இது வரை 10 ஆண்டுகள் ஆண்டுவிட்ட செயலலிதாவிற்கு பிள்ளைகள் கிடையாது.
ஆக, 56 ஆண்டுகளில் 33 ஆண்டுகளை பிள்ளை குட்டியில்லாதவர்கள்தான் ஆண்டிருக்கிறார்கள் (60%). பேராயக் கட்சி (காங்கிரசு) ஆட்சியில் இருந்து அகற்றப் பட்ட பின்னர்(1967) இதோடு 39 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த 39 ஆண்டுகளில் சுமார் 26 ஆண்டுகள் (அதாவது 79%) தமிழகத்தை பிள்ளை குட்டி இல்லாதவர்களே ஆண்டிருக்கிறார்கள். அதனாலேயே, பிள்ளைகுட்டி இருக்கிற கருணாநிதியும் அவர் பிள்ளை இசுடாலினும் குடும்ப அரசியல் என்ற தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள் என்று, சொன்னால் அதை அவ்வளவு எளிதாக மறுத்து விடமுடியாது.
இந்த 39 ஆண்டுகளில் தமிழகத்தை ஆண்ட 6 முதலமைச்சர்களில் நால்வருக்கு பிள்ளைகுட்டிக் கிடையாது. பன்னீர் செல்வத்துக்கு பிள்ளைகுட்டிகள் உண்டா என்பது எனக்குத் தெரியாது.
தோன்றும் வினாக்களில், பிள்ளை குட்டி இல்லாத எம்சியார், சானகி அம்மாள், செயலலிதா ஆட்சி செய்த 23/24 ஆண்டுகளில் தமிழகம் சந்தித்த சீரழிவுகளை விட, பிள்ளை குட்டி இருக்கின்ற கருணாநிதி இசுடாலினால் எந்த அளவிற்கு சீரழிவுகள் அதிகமாகின?/அதிகமாகிவிடும்?, என்ற வினா ஒன்று!
அல்லது, கருணாநிதி இசுடாலின் குடும்பம் வராமல், விவேகத்திலும், வீராவேசத்திலும், போர்த்தந்திரத்திலும்), கண்ணியம், மற்றும் நேர்மைக்குப் பேர்போன வைகோ வந்தால் இந்தத் தமிழ் நாடு என்ன நிலையை எய்தி விடும்?
கருணாநிதியின் பிள்ளை இசுடாலின் வரக்கூடும் என்பதால் குடும்ப அரசியல் என்று சொல்லப்படுகையில், பிள்ளை குட்டி இல்லாவிடிலும், "எம்சியார் எம்சியாருக்குப் பின்னால் சானகி அம்மாள் - அவருக்குப் பின்னால் செயலலிதா" என்று எண்ணிப் பார்க்கையில், எத்தனை பேருக்கு இது ஒரு குடும்பம் என்று தோன்றாமலிருக்கும்? சானகி அம்மாள், எம்சியாரின் மனைவி! செயலலிதா, எம்சியார் மறைந்ததும் உடன் கட்டை ஏறப் போகிறேன் என்று அந்தப் பிண வாகனத்தில் ஏறினார் என்பது இந்தியா முழுக்க அறிந்த உண்மை.
39 ஆண்டுகளில் 24 ஆண்டுகளை இம்மூவரும் ஆண்டிருப்பது குடும்ப அரசியல் இல்லை என்று எத்தனை பேர் மறந்து விட்டிருக்கிறார்கள் அல்லது மறக்கடிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று எண்ணிப் பார்த்தால் இசுடாலின் மற்றும் கருணாநிதி மேல் சாட்டப்படும் கோயபல்சு குற்றச்சாட்டின் நோக்கம் என்னவென்று புரியும்!
10 ஆண்டுகள் ஆட்சிசெய்த செயலலிதாஉடன் எந்தக் குடும்பம் இருக்கிறது? சசிகலாவும் சசிகலாவின் குடும்பமும் ஒன்றுக்குள் ஒன்றாக இருந்து போயசு தோட்டத்திலேயும் அய்தராபாத் தோட்டத்திலேயும் வாழ்ந்து, அவர்களின் வாரிசுகள் அரசியலில் ஆதிக்கம் செலுத்தவில்லையா? அது குடும்ப அரசியலா இல்லையா? சசிகலா, நடராசன், இளவரசி, தினகரன், சுதாகரன் இன்னும் எத்தனையோ பேரைக் கொண்ட அந்தக் குடும்பம் செயலலிதா அரசியலில் பங்கேற்கவில்லை என்று எத்தனை பேரால் சொல்லமுடியும்?
கருணாநிதியின் பிள்ளைகள் இசுடாலின் அழகிரி இருவரும் மோதிக் கொண்டு அசிங்கப் படுத்தியது உண்மைதான். கருணாநிதியாலேயே தீர்க்க முடியாத அப்பிரச்சினையை செயலலிதாதான் தீர்த்து வைத்து புண்ணியம் கட்டிக் கொண்டார். குடும்ப அரசியலால் தமிழ்நாட்டில் பிரச்சினை என்றால் எனக்குத் தெரிந்த வரை இசுடாலின் அழகிரி பிரச்சினைதான். அதைத்தான் அம்மையார் தீர்த்து வைத்து விட்டாரே, அப்புறம் என்ன பெரிய பாதிப்பு வந்து விடப் போகிறது தமிழகத்திற்கு இனிமேல்?
வைகோ போன்ற அறிவாளிகளுக்கும், அதை விடச் சிறந்த அறிவாளியான செயலலிதா அம்மையாருக்கும், இவர்களை வளர்த்து விடுவதே தம் பிறவிப் பயன் என்று 30/40 ஆண்டுகளாக சேவை செய்து வரும் பத்திரிக்கைகளும், குடும்ப அரசியல் என்றால் என்ன என்பதற்கான அகராதி போடும் முன்னர் இவையெல்லாம் சிந்திப்பார்களா என்றால், மாட்டார்கள்!
பிள்ளை குட்டி இருக்கிறது, அவர்களும் அரசியலில் ஈடுபடுகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக தி.மு.கவையும் கருணாநிதியையும் சாடுவதானால், அது வெறும் பேதைத்தனம் மற்றும் கல்லாமை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. அதற்கு மாறாக, இசுடாலினால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட தீமைகள் என்ன என்று எவரேனும் சிந்திக்க முற்பட்டு, அத்தீமைகளின் அளவை மற்றோர் ஆட்சியோடு/அரசியலோடு ஒப்பிட்டு விளக்கினார்கள் என்றால் அது அறிவார்ந்த செயல். இல்லையென்றால் ஊத்தை வாய்களின் உளறல் என்ற வகையிலேயே அது தெரிகிறது.
அடுத்ததாக, மிடையங்களில் ஆதிக்கம்!; தேர்தல் காலத்தில் வானொலியில், பின்னர் தொலைக்காட்சியில் (தூரதரிசனத்தில்) அரசியல் கட்சிகளுக்கு ஒரு அரைமணி நேரம் அல்லது கால் மணிநேரம் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒதுக்கப் படும். 1984 தேர்தலின் போது, தி.மு.கவிற்கு ஒதுக்கப்பட்ட அந்த நேரத்தில் கருணாநிதி பேசமாட்டேன் என்று புறக்கணித்தார். காரணம், அப்போதிருந்த பேராயம் + அ.தி.மு.க செல்வாக்கினால், தொலைக்காட்சி, கருணாநிதியின் பேச்சை, தணிக்கை செய்துதான் போடுவோம் என்று சொல்லியதால்.
சனநாயக நாட்டில், பெரிய கட்சியொன்றின் தலைவரின் பேச்சுக்குக் கூட தணிக்கை விதிக்கும் அளவிற்கு சார்புத்தன்மைகொண்டு தூரதரிசனம் இயங்கியது சனநாயகத்தைக் காட்டுவதாக இல்லாமல் காழ்ப்புணர்ச்சியைக் கொட்டுவதாகவே தெரிந்தது. சன் தொலைக்காட்சி, தூரதரிசனத்தை அடுத்த தொலைக்காட்சி ஓடையாகத் தோன்ற, முழுமையான தனியார் தமிழ் ஓடையாக வெளிவர, இன்று ஒரு அசுர பலத்துடன் வளர்ந்து நிற்கத் தூண்டுகோலாக இருந்தது, அன்றைய தணிக்கையும், தூரதரிசனத்தில் மிகுந்து கிடந்த, அன்றைய நடுவணரசை ஆளும் கட்சியாக இருந்த பேராயம் மற்றும் இங்கே செல்வாக்கு பெற்றிருந்த எம்சியார் கட்சியும் இவர்கள் தி.மு.கவிற்கு எதிராக செய்த பிரச்சாரங்களும்தான் பெருமளவு காரணம் என்பது மிகையல்ல. அரசு மிடையங்கள் தவறாகப் பயன்படுத்தப் பட்டதற்கு பல சான்றுகள் உண்டு!
1976ல் திமுக ஆட்சியில் இருந்து அகற்றப் பட்ட, தொலைக்காட்சிகள் இல்லாத அந்தக் கால கட்டத்தில், வானொலியைத் திறந்தாலே, எம்சியாரும், இந்திராகாந்தியும், வானொலியும், மேலும் இவர்களின் கைத்தடிகளும் கோவணத்தில் ஊழல், வெற்றிலை சீவலில் ஊழல், சுண்ணாம்பில் ஊழல், கொட்டைப் பாக்கில் ஊழல், கொத்தரங்காயில் ஊழல் என்று செய்திகளாக இல்லை, கொக்கரிப்பாகவும் காழ்ப்புணர்ச்சியுடனும் கூவியது, அந்தக் கால கட்டத்தில் வயதுக்கு வந்திருந்த அத்தனை பேருக்கும் இன்னும் நினைவில் இருக்கும்.
ஆனால், அதில் பல பேர் கூட, சன் தொலைக்காட்சியில் செயலலிதா கைது செய்யப்பட்டு, அவரின் செருப்பைக் காட்டினார்கள், சேலை துணிமணி அலமாரியைக் காட்டினார்கள், நகைக் கடையைக் காட்டினார்கள்!, இதெல்லாம் காட்டலாமா? இது மாபெரும் தவறு என்றெல்லாம் அங்கலாய்ப்பதும், இதுவும் குடும்ப அரசியல் என்று சொல்வதும் இவர்களின் சிந்தனைக் குறைவைக் காட்டுவதாக இருக்கிறது.
பட்டவனுக்குத்தான் அதன் வலிதெரியும். ஆகவே, வானொலி, தொலைக்காட்சிகளுக்கு பதிலடியாகத் தோன்றியவைதான் சன் குழுமத்தின் தொலைக்காட்சி நிறுவனம் என்பதை மறந்து விடக் கூடாது.
அன்றைக்கு வானொலி, தூரதரிசனம் கொடுத்த தி.மு.க எதிர்ப்பு போல் இன்று எந்த மிடையமும் செய்யுமானால் அவர்களுக்கு அதை விட வலுவான, சொல்லப்போனால் அசுர பலத்துடன் சன் தொலைக்காட்சி கொடுக்கக் கூடிய வல்லமையை பெற்றுள்ளது என்பது அங்கைநெல்லி.
ஒருவேளை சன் தொலைக்காட்சி தவறுகள் செய்யுமானால், அது வலுவாகக் கண்டிக்கப் படக்கூடியதே. ஆனால், அந்தக் கண்டிப்பை செய்யும் திமுகவின் எதிரணிக்கு முழு யோக்கியதை இருப்பதாக எண்ணி ஏமாந்து விடக் கூடாது.
அடுத்ததாக ஏடுகள்!; இன்று சன் தொலைக்காட்சியும், அது சார்ந்த ஏடுகளும் தமிழகத்தின் மிடையக் குழுமங்களைப் பற்றி போர்முனையில் நிற்பது போன்ற பதிலடிகளைக் கொடுத்து வருகின்றன.
தமிழகத்தில் இருக்கும் ஏடுகள் எத்தகையன?
ஒரு ஆங்கில நாளேடு! தமிழ் நாட்டில் ஆங்கிலச் சேவையும் சிங்களச் சேவையும் செய்து வருகிறது. அந்த ஏட்டுக்காரர்களைப் பிடித்து உள்ளே போட அதிமுக அரசு உத்தரவிட்டது சட்டமன்றத்தில். ஆனால், எங்களையா பிடிக்கப் பார்க்கிறாய்? என்று ஓடி ஒளிந்து கொண்டு, எங்களைப் பிடித்தால் இந்தியாவே அலறும் என்று சவால் விட்டு சட்டத்தின் பிடியில் மாட்டாமலேயே தப்பித்து சாதித்தார்கள். ஆனால் இவர்கள் சட்டத்தைப் பற்றி நிறைய பேசுவார்கள். இது அவர்களின் ஆங்கிலச் சேவைக்குக் கிடைத்த பலன். இவர்களால் இந்தியாவையே குலுக்க முடியும்!
ஆயினும் தமிழ்நாட்டில் ஏடு நடத்தும் இவர்களுக்கு, சந்திரிகா அம்மையார், சிங்களத்தீவினில், அவர் பதவி காலாவதியாகிப் போகும் முன்னர், அவசர அவசரமாக இந்த ஏட்டுக்காரர்களைக் கொழும்பு அழைத்து விருது கொடுத்தது எதற்காக? சற்று யோசித்துப் பார்க்க வெண்டும்!!
தினமும் மலரும் இதழ்! தென் தமிழ்நாட்டில் பெரிய மூளைச் சலவையையே செய்து முடித்திருக்கிறது. கருணாநிதியையும் அவர் குடும்பத்தை மட்டுமல்ல, திராவிடம், தமிழ் என்ற சொற்கள் உணர்வற்றுப் போக என்ன வெல்லாம் எழுத முடியுமோ அவ்வளவையும் எழுதுவது இந்த இதழ்!
தந்தி, மணி எல்லாம் ஏறத்தாழ ஒரே வகைதான். குமுத விழியாளும், விகடகவியாரும் தமிழகத்திற்கு இழைத்திருப்பவை அளவிடற்கரியன என்று யாரும் சொன்னால் நான் மறுக்க மாட்டேன்! இன்னொரு வார இதழ்க்காரர், என்று கொழும்பு போய் விருது வாங்கி வரப் போகிறாரோ தெரியவில்லை.
செயலலிதா ஆட்சியிலே பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக நடந்த வன்முறை எத்தனை? எத்தனை முறை இவர்கள் தாக்கப் பட்டிருக்கிறார்கள். பத்திரிக்கை முதலாளிகளும் சரி, பத்திரிக்கைச் செய்தியாளர்களும் சரி. கைதுகள், அடி உதைகள், சிறையீடுகள், உச்சமாக பொடாவில் கூட கோபால் போடப்பட்டார். அத்தனையும் மறந்து பெரும்பான்மையான ஏடுகள் அ.தி.மு.க சார்புத் தன்மையை எடுக்கின்றன என்றால் அதற்கென்ன காரணம் இருக்க முடியும்?
சன் தொலைக்காட்சி, சூரியன் வானொலி, தினகரன், தமிழ்முரசு, குங்குமம் முரசொலி என்ற இவற்றை தமிழகத்தில் இல்லாமல் செய்து விட்டால், மீதி இருக்கக் கூடிய தொலைக்காட்சிகள், ஏடுகள் போன்றவற்றில் எத்தனை நடுநிலையானவை? அல்லது எத்தனை பேர் திமுகவிற்கு ஆதரவாக இருப்பார்கள்?
சன் குழுமத்தின் மேல் எனக்கும் பலருக்கும் தீரா எரிச்சல் உண்டு. ஏனெனில் நல்ல தமிழ், தூய தமிழ்ப் புழக்கம் என்பது அதில் இல்லை. இன்றைய தமிழ்முரசு இதழ் கூட கொட்டை எழுத்தில் "யாருக்கு சான்சு" என்று வாய் கிழிய ஆங்கிலத்தைத் தமிழில் சொல்கிறது. சன் குழுமத்திற்கு மூத்த ஏடுகள் இட்ட வழியேதான் சன் குழுமம் போய்க் கொண்டிருக்கிறது என்பதில் அய்யமில்லை.
ஆனால், அதனால் மட்டுமே குடும்ப அரசியலைக் கண்டிக்க ஏனைய மிடைய அரசியலுக்கும் செயலலிதா வைகோ போன்றவர்களுக்கும் எந்த ஒரு அருகதையும் இருப்பதாக நினைக்க முடியவில்லை.
ஆக, கருணாநிதி குடும்ப அரசியலை விளம்பரப் படுத்துவதால் உண்மையில் என்ன ஆதாயம் என்று பார்த்தால், எம்சியார் குடும்பம் மற்றும் சசிகலா நடராசன் குடும்ப அரசியல் அந்த விளம்பரத்தில் திட்டமிட்டு மறைக்கப் படுகிறது என்பதுதான் உண்மை!
1977 முதல் இன்றுவரை எம்சியார்-குடும்பமும், சசிகலா நடராசன் குடும்பமும்தான் அரசியல் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்பது புள்ளிவிவரங்களைப் பார்த்தாலே தெரிகிறது. எம்சியார் குடும்பமும், சசிகலா குடும்பமும் அரசியல் நடத்தவில்லை என்று எத்தனை பேரால் சொல்ல ஏலும்?
நெடுஞ்செழியனிடம் இருந்து தந்திரமாகக் கட்சியைக் கைப்பற்றினார் கருனாநிதி என்று ஒரு வாதம் உண்டு. நெடுஞ்செழியனின் அரசியலைப் பார்த்தவர்களுக்கு அவரால் திமுகவை நடத்தியிருக்க முடியுமா என்ற அய்யமும் உண்டு.
அந்த நெடுஞ்செழியன், தன்னை உதிர்ந்த உரோமம் என்று சொன்ன செயலலிதாவையே "தன்மானத்தோடு" திரும்பச் சென்று ஒட்டிக் கொண்டார் அன்று.
பொய்க் குற்றச்சாட்டின்பேரில் பொடா என்ற கடுஞ்சிறை தள்ளிய செயலலிதாவையே "தன்மானத்தோடு" திரும்பச் சென்று ஒட்டிக் கொண்டார் வைகோ இன்று.
தன்னை கொ.ப.செ ஆக ஆக்கி, சட்டமன்ற உறுப்பினராக ஆக்கிய போதும் அடங்கா அகத்தால் இராசேந்தரும் குடும்ப அரசியல் என்று பேசி செயலலிதாவோடு போனார். நடுத்தெருவில் நிற்கிறார்.
நடுத்தெரு கூச்சல் பேர்வழிகளான வைகோ, இராசேந்தர் போன்றவர்களை நம்பி திமுகவை விடாத கருணாநிதி அறிவாளியாகத்தான் தெரிகிறார்!
- நயனன்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
குடும்ப அரசியலும் குரங்குக் கூட்டங்களும்!
- விவரங்கள்
- நயனன்
- பிரிவு: கட்டுரைகள்