மனித வாழ்க்கை எல்லாவிதமான சாத்தியப்பாடுகளுடனும் திறந்து விரிந்ததாகக் கிடக்கிறது; வஞ்சகத்தையும் வன்மத்தையும் பொறாமையையும் தனது வாழ்வின் ஆதாரமாகக் கொண்டியங்கும் இந்த மனிதர்களை என்னவாகவும் மாற்றிப் பிசைந்து படைத்துக் கொள்ளலாம் என்பதுதான் இதன் வரலாறாக இருக்கிறது. நாவலாசிரியர் மாதவைய்யாவின் ஒன்றுவிட்ட சகோதரர், பெ.நா.அப்புஸ்வாமியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘தமிழர் நேசன்’ என்ற பத்திரிக்கை (1917) வெளியிட்ட கொள்கைப் பிரகடனத்தில் ஒரு புள்ளிவிவரம் வெளிவந்துள்ளது. 1911-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கிடைத்த அரிய புள்ளிவிவரம் இதுதான்:

lady 256ஒரு வயது நிறையாத பெண் விதவையர் 31 பேர்

ஒன்றுக்கு மேல் இரண்டுக்குள் வயதுக்குள் 34 பேர்

இரண்டுக்கு மேல் மூன்று வயதுக்குள் 85 பேர்

மூன்றுக்கு மேல் நான்கு வயதுக்குள் 149 பேர்

நான்கிற்கு மேல் ஐந்து வயதிற்குள் 383 பேர்

மொத்தம் 15 வயதிற்குள் 23,068 விதவைகள்

இப்படிப்பட்ட விவரங்களைப் படிக்க நேரும் போது இந்த மனிதர்களை நினைத்து அழுவதா சிரிப்பதா என்பதே தெரிவதில்லை; கூடவே “இன்றைக்கு நாம் ஒரு சிறிதும் மன உறுத்தலின்றி இயல்பானவை போலக் கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் பழக்க வழக்கங்களைக் கண்டு வரப்போகிற தலைமுறை எப்படியெல்லாம் தலையில் அடித்துக் கொள்ளப் போகிறதோ” என்று ஓர் எண்ணம் எழுந்து வருவதையும் தடுக்க முடியவில்லை; மனித சாதியின் வாழ்க்கை இப்படி இருக்கிறது; ஆனாலும் பெண்ணினத்தின் மேல் இந்த ஆணாதிக்கச் சமூகம் நிகழ்த்தியிருக்கிற - நிகழ்த்திக் கொண்டிருக்கிற கொடுமைகளுக்கு ஈடாக வேறு எதையும் சொல்லமுடியாது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது; இந்தக் கொடுமைகளின் உச்சக்கட்ட வடிவமாக விதவைகள் என்று ஒரு புதிய பிரிவை பெண்ணினத்தில் உருவாக்கியதைச் சொல்ல வேண்டும். மாதவையா, பாரதியார், பெரியார், பாரதிதாசன் என்று ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக பல்வேறு ஆளுமைகள், பல்வேறு விதமாகப் போராடி, சட்டங்கள் கூட இயற்றப்பட்ட பிறகும் இந்தக் கொடூரத்தை நம் சமூகத்திலிருந்து அறவே அழித்துவிட்டோமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல நேர்கிறது. இதைவிட வெட்கக்கேடு ஒரு சமூகத்திற்கு வேறு என்ன இருக்க முடியும்?

சென்னை மாநிலக் கல்லூரியில் படித்ததால் தமிழகமெங்கும் அங்கங்கே என் வகுப்புத் தோழர்கள் எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள். அப்படி ஒரு நண்பர் கோவையில் இருக்கிறார்; அந்த நண்பரோடு தங்கி இரவெல்லாம் பேசி வர வேண்டும் என்பதற்காகவே கவிஞர் சிற்பியி;ன் 75-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவிற்குப் பொள்ளாச்சி செல்ல வேண்டிய நான், முதல் நாளே கோவைக்குச் சென்று தங்கிவிட்டேன்; என் வாழ்வில் கிடைத்த அற்புதமான இரவுகளில் இந்த இரவும் ஒன்று; என்னவெல்லாமோ பேசினோம்; அதில் ஒன்றை உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவருடைய மாணவி ஒருத்தியைப் பற்றியது.

அந்த மாணவி எட்டாம் வகுப்பு படிக்கும் போதே சடங்காகி இருக்கிறாள்; உடனே அம்மா மாப்பிள்ளை பார்த்து விட்டாள்; கூடப் பிறந்த தம்பி தான்; தாய் மாமனுக்கு வாக்கப்பட்டுத் திருப்பூருக்குப் புலம்பெயர்ந்து விட்டாள்; தாய் மாமனுக்கும் அந்தப் பதின் மூன்று வயது சிறுமிக்கும் ஓயாத சண்டை; சண்டை கொதிநிலை அடையும் போது மாமன்காரன் ஓடிச்சென்று தன் தலையைச் சுவரில் இரத்தம் வரும் வரை முட்டிக் கொள்வானாம்; இப்படி அந்தச் சிறுமிக்கு வாழ்க்கை வாய்த்திருக்கிறது; ஓராண்டு காலத்திற்குள்ளேயே கருவுற்று ஐந்து மாதமாக இருக்கின்ற ஒரு நாளில் சண்டை போட்டுக் கோபித்துக் கொண்டவன் கத்தி எடுத்துத் தன் கழுத்தைத் தானே அறுத்துக் கொலை செய்து கொண்டான். அந்தக் காட்சியைப் பார்க்க நேர்ந்த இந்தக் கர்ப்பிணிச் சிறுமி எத்தகைய கனமான தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பாள்? கற்பனை பண்ணிக்கூடப் பார்க்க முடியவில்லை; பிறகு என்ன? அம்மா வீட்டிற்கு வந்துவிட்டாள்;

விதவைக்குக் குழந்தை பிறந்தது; ஆண் குழந்தை; குழந்தையைவிட அதிகமாக இவளே அழுது கரைந்தாள்; குழந்தைக்காகப் பாலூறியதோ என்னமோ கண்களில் கண்ணீர் ஊற்றெடுப்பது மட்டும் நிற்கவில்லை; குழந்தை பள்ளிக்கூடம் போகத் தொடங்கிய போது தானும் பள்ளிக்கூடம் போனால் என்ன? என்ற பொறி நெருப்பாய் விழுந்து அவளைப் பிடித்துக் கொண்டது; இப்பொழுது பெற்றோர் விருப்பத்திற்கு எதிராகப் பேசவும் தெரிந்திருந்தது; வாதாடவும் வலு இருந்தது; பெற்றோர்களுக்கும் அவள் படிப்பதில் சம்மதம் இல்லாவிட்டாலும் அவள் படுகின்ற துயரத்திற்கு வடிகாலாக இருக்கும் என்கின்ற ஒரு சிந்தனையில் வாயைச் சுருக்கிக் கொண்டார்கள்; இப்படிப் பள்ளிக்கூடம் போகத் தொடங்கியவள் எம்.ஏ., எம்.ஃபில்., முடித்துவிட்டு என் நண்பரிடம் பிஎச்.டி ஆய்வு மாணவியாக வந்து சேர்ந்துள்ளாள்; பையன் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்திருக்கிறான்; அப்பொழுது கூடவே ஆய்வு செய்கின்ற ஒரு மாணவனோடு ஒருவிதமான புரிதல் ஏற்பட்டிருக்கிறது; அவனும் ஏற்கத் தயாராக இருந்திருக்கிறான்; இவள் அம்மாவாயிற்றே! பையனுக்குத் தெரியாமல் இது நிகழ்ந்து விடக்கூடாது என்று அவனிடம் சொல்லியிருக்கிறாள்; “எனக்கு உன்னத் தவிர யாரும்மா இருக்கா! நீயும் போயிட்டா என்ன யாரும்மா பாத்துக்கிடுவா?” பையனின் அழுகை இவளைப் பல நாள் தூங்கவிடவில்லை; சாபம் பெற்ற அகலிகையாய்க் கல்லாகிக் கொண்டாள்; அந்தப் பையனும் ஒரு சில ஆண்டுகள் காத்திருந்து பார்த்துவிட்டு அவனுக்கான ஒரு கூட்டை ஏற்பாடு செய்து கொண்டான்.

காலம் ஓடிவிட்டது; இவள் பி.எச்.டி பட்டம் முடித்துவிட்டு ஒரு தனியார் கல்லூரியில் வேலைக்கும் சேர்ந்து விட்டாள்; ஓரளவு ஞாயமான கல்லூரி என்று பேரெடுத்த கல்லூரி என்பதால் பாதிச் சம்பளம் கிடைத்தது; பையன் படிப்பில் கெட்டி; சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து அரசாங்க வேலையும் வாங்கி விட்டான்; அரசாங்கம் தரும் சம்பளத்தைவிட அதிகமாக வெளியே சம்பாதித்தான்; இந்த நேரத்தில் யு.பி.எஸ்.சி விளம்பரம் ஒன்று அவள் கண்ணில் பட்டது; அரசுக் கல்லூரிகளில் காலியிடத்தை நிரப்புவதற்கான விளம்பரம்; “தனியார் கல்லூரி வேண்டாம் அம்மா! அரசுக் கல்லூரிக்கு விண்ணப்பம் போடுங்கள்” என்று மகன் கட்டாயப்படுத்தவே அதற்காக அலைந்து விண்ணப்பமும் போட்டு விட்டாள்; மாதக் கணக்காகக் கிடந்து அந்த விண்ணப்பத்திற்கு எப்படியோ உயிர் பிடித்து நேர்முகத் தேர்விற்கான அழைப்பும் வந்துவிட்டது; டில்லிக்குப் போக வேண்டும்; கூட வேலை பார்க்கிற மற்றொரு துறை சார்ந்த தோழியோடு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்து கொண்டாள்; டில்லியில் அந்தத் தோழிக்குச் சொந்தமானவர் வீட்டில் தங்குவதற்கும் வசதி செய்து கொண்டார்கள்.

ஒருநாள் தங்குவதற்குச் சென்ற அந்த வீட்டில் இவ்வளவு நடந்துவிடும் என்று யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும்; யாருக்கும் எந்த நேரமும் எதுவும் எந்தவிதமாகவும் நடக்கலாம் என்பதுதான் இந்த வாழ்வு கொடுத்துக் கொண்டிருக்கும் செய்தி; அதுபடி நடந்தது; அந்த வீட்டில் 45 வயதுள்ள ஒருவர்; அவர் பெயர் சந்திரசேகரன் எனும் சந்துரு. இன்னும் திருமணம் ஆகவில்லை; நம்ம செல்ல எழுத்தாளர் வல்லிக்கண்ணன் மாதிரி அம்மா பாசம்; “அம்மா கஷ்டப்பட்டு வளர்த்தாங்க அவங்க மனம் எந்தக் காரணம் கொண்டும் புண்பட்டு விடக்கூடாது; கல்யாணம் முடித்தால் அது நடந்து விடும்; எனவே அம்மா இருக்கிற வரை கல்யாணமில்லை” தீர்க்கமான முடிவு; அம்மா போய்ச் சேர்வதற்குள் இவருக்கு 45 வயது ஆகிவிட்டது; இப்பொழுது மணமுடிக்கத் தடையில்லை; ஆனால் இந்த வயதில் யார் பொண்ணு கொடுப்பா? இந்தச் சூழலில்தான் இவள் அங்கே தங்கப் போனது; இவளுக்கும் இப்பொழுது 40-ஐ நெருங்கிவிட்டது;

‘கேட்டுப் பார்த்தால் என்ன?’ தோழி மூலம் அவள் குறித்த எல்லாத் தகவல்களையும் திரட்டத் திரட்ட சந்துருக்குப் பொருத்தமான தேர்வுதான் என்பது உறுதியாகிவிட்டது; நேர்முகத் தேர்வு முடித்து ஊருக்கு வந்த பிறகு ஒருநாள் வேலை பார்க்கும் இடத்தில் காதோடு காதாகக் கவனமாக சந்துருவின் யோசனையைத் தோழி தெரிவித்தாள்; அவள் அப்படி நினைத்துப் பார்க்கவே மறுத்துவிட்டாள்;

“இனிமேலா? ஊர், உலகம் என்ன சொல்லும்? இனி அப்படி ஒன்று நடந்துதான் என்னவாகப் போகிறது?” என்பதுதான் அவளுடைய பதிலாக இருந்தது;

ஆனால் சந்துரு விடுவதாக இல்லை; “மகன் டாக்டரிடம் இப்படி ஒரு வரன் குறித்து ஆலோசனை நடத்திப் பார்” என்று அந்தத் தோழிக்கு யோசனை கூறினார்;

மகன் ‘கப்பென்று’ பிடித்துக் கொண்டான்; “அம்மாவைத் தனியாக விட்டுவிட்டு எப்படிக் கல்யாணம் முடித்துக் கொள்வது” என்ற கவலையின் இடுக்கிப் பிடியில் அவன் தத்தளித்துக் கிடந்திருக்கிறான்; எனவே இது சரியாக இருக்குமென்று முடிவெடுத்து விட்டான்;

“அம்மாவை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று தோழியிடம் சொல்லி விட்டான்;

‘இவனுக்குச் சம்மதம்’ என்ற செய்தி அவன் பேச்சைத் தொடங்குவதற்கு முன்பே அம்மாவிற்குப் போய்ச் சேர்ந்துவிட்டது. அவள் அதுவா இதுவா என்று மனிதர்களை ஆட்டிப் படைக்குமே ஒரு சஞ்சலப் பேய் அதற்குள் சிக்கிக் கொண்டாள்; ஒருநாள் நேரம் பார்த்து பையன், வாயைத் திறக்கத் தொடங்குவதற்குள்,

“பேசாத, அதெல்லாம் முடியாது; நான் உனக்குப் பொண்ணு பார்த்து முடிச்சு வைக்க வேண்டிய ஒரு காலகட்டத்தில், நீ எனக்கு வரம் பாக்கிறியா? என்னடா கூத்து! என் தலை எழுத்தப் பாத்தியா? அன்னைக்கு ஒன்னுந் தெரியாத வயசில என்னப் பெத்தவா செஞ்ச தப்பு, என்னை என்ன பாடு படுத்துது பாத்தியா? பேசாம போயிரு; என்னப் புண்ணாக்காத”

டாக்டர் பையன் மௌனமானான்; அன்றைக்கு விட்டுவிட்டான்; இன்னொரு நாள் இரவு தொடங்கினான்:-

“அம்மா? அன்னைக்கு நாஞ் சின்னப் பையனா இருந்தப்போ நீ ஒரு கல்யாணத்தை நோக்கி அசையத் தொடங்கிய போது நான் என்ன சொல்லி மறுத்தேன்; நினைவிருக்கா? 'என்னத் தனியா விட்டுட்டா! நான் எங்கம்மா போவேன்'-சொன்னே இல்ல! இப்ப அதத்தான் நினைச்சுப் பாக்கிறேன்; நான் இப்போ கல்யாணம் பண்ணிப் போயிட்டா நீ தனிமரமா ஆயிருவியே அம்மா! எனக்கொரு ஞாயம்; உனக்கு ஒரு ஞாயமா? அந்த அளவிற்கு நான் அறியாத முட்டாளா? சுயநலவாதியா? உன்னத் தனியாத் தவிக்க விட்டு விட்டு நான் ஏம் பொண்டாட்டியோட சந்தோசமா வாழமுடியும்னு நீ நினைக்கிறியா? என்னால முடியாதும்மா! இதுக்கு நீ ஒத்துக்கிடாட்டி, நானும் இப்படியே இருந்தேறேம்மா”

அன்றைய இரவு, தாங்க முடியாத அளவிற்குக் கனத்துக் கிடந்தது இருவருக்கும்; ‘நானும் இப்படியே இருந்திடுவேன்’ என்று கடைசியாகப் போட்ட போடு அம்மாவிற்குள் வேலை செய்யத் தொடங்கிவிட்டது.

‘அம்மாவிற்குக் கல்யாணம் கோயில்ல் வந்திடுங்க!’ என்று மகன் வந்து பத்திரிக்கை கொடுத்த போது என் நண்பர் அப்படியே ஒரு நிமிடம் உட்கார்ந்து விட்டாராம்; “வாழ்வுதான் என்னென்ன கூத்தெல்லாம் நடத்துகிறது!” அன்றெல்லாம் ஒரே யோசனை மயமாக இருந்திருக்கிறார்.

கல்யாணத்திற்குப் போயிருக்கிறார்; வாழ்த்திவிட்டு வந்திருக்கிறார்; அங்குமிங்கும் ஓடியாடி கல்யாண வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்த அந்த மகனையே பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார்.

“இது கதையா? வாழ்வா?” என்று என் நண்பர் அன்றிரவு சிறிது போதையோடு கேட்ட கேள்வி எனக்குள் இன்னும் சுட்டிச் சொல்ல முடியாத அளவிற்கு ஏதோவொன்றை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது.

படிக்காத அம்மா செய்த தப்பிற்கு அந்தப் பெண் எடுத்துக் கொண்ட கல்வியால் ஓரளவு நிவாரணம் கிடைத்திருக்கிறது; இல்லையென்றால் ‘விதவை’ என்று ஆணாதிக்கம் கட்டிவிட்ட புனைவிற்குள்ளேயே கிடந்து மடிந்திருப்பாள். இந்த 21-ஆம் நூற்றாண்டிலும் இந்தப் புனைவிற்குள் புதையுண்டு போகிறவர்கள் இந்தியாவில் இன்னும் எத்தனை எத்தனை பேர்? சிதம்பரம் நடராசர் கோயில் வருமானத்தில் பங்கு வேண்டுமென்றால் திருமணம் முடித்திருக்க வேண்டும் என்ற விதி இருப்பதனால் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான குழந்தைத் திருமணம் இன்றும் நடந்த வண்ணம்தானே இருக்கின்றது; சட்டம் நமது தேசத்தில் என்ன செய்யும்?

மனிதர்கள் வாழ்வதற்காகச் சமைக்கின்ற வடிவம் மனிதர்களுக்கானதாக இல்லை; அதிகாரத்திற்கானதாக இருக்கிறது. இந்த உண்மை தரும் வலியை எப்படி எதிர்கொள்வது? சிறுமிகளுக்கு மணம் முடித்து விதவையாக்கிப் பார்க்கும் இம்மனிதப் பழக்கத்தைப் பாரதியார் போல் சாபமிடத்தான் தோன்றுகிறது.

பால ருந்து மதலையர் தம்மையே
பாத கக்கொடும் பாதகப் பாதகர்
மூலத் தோடு குலங்கெடல் நாடிய
மூடமூடநிர் மூடப் புலையர்தாம்
கோல மாக மனத்திடைக் கூட்டுமிக்
கொலையெ னுஞ்செய லொன்றினை யுள்ளவும்
சால வின்னுமோ ராயிர மாண்டிவர்
தாத ராகி யழிகெனத் தோன்றுமே!

- க.பஞ்சாங்கம், புதுச்சேரி-8

Pin It