பொள்ளாச்சியில் நிகழ்ந்துள்ள பாலியல் வன்கொடுமை பற்றிய செய்திகள் குருதியை உறையச் செய்வனவாக உள்ளன. “உன்னை நம்பித்தானே வந்தேன்... இப்படி பண்ணிட்டியே”, “பெல்டால் அடிக்கா தீங்கண்ணா... வலிக்குது... நானே கழட்டிடுறேன்” என்று வீடியோ பதிவுகளில் ஒலித்த இளம் பெண்களின் ஓலம் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. குரல் ஒலி வழியிலான அக்கொடிய காட்சியை நேரில் பார்த்தது போல் நெஞ்சம் நடுங்குகிறது.

தனிநபர் நிலையில் பெண்கள் மீது நிகழ்த்தும் பாலியல் துன்புறுத்தல்கள், வல்லுறவுகள், கொலைகள் பற்றிய செய்திகள் நாள்தோறும் ஏடுகளில் வெளியா கின்றன. மூன்று அகவை, ஆறு அகவை, பத்து அகவை என்று பெண் குழந்தைகளும் சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகின்றனர். சிறுமியர் மீதான பாலியல் தடுப்புச் சட்டமும் இயற்றப்பட்டுள்ளது.

பெண்கள் மீது ஆண்கள் கூட்டாகப் பாலியல் வன் கொடுமையை நிகழ்த்துவதும் நடக்கிறது. 2012 திசம்பர் 12 இரவில் தில்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி கூட்டு வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட கொடுமை இந்தியா முழுவதும் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காக நீதிபதி வர்மா தலைமையில் ஒரு குழு அமைக்கப் பட்டது. 2013இல் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன. ஆயினும் சிறுமிகள் - பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்கின்றன. ஏனெனில் இது சட்டம் - தண்டனை என்கிற வட்டத்திற்குள் மட்டும் அடங்கிவிடும் சிக்கல் அல்ல. சமூகத்தில் பெண்கள் மீது - பெண்ணின் உடல் குறித்து ஆண்கள் கொண்டுள்ள ஆதிக்க - அனுபவிப்பு உரிமை சார்ந்த மனப்போக்கே பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு மூல காரணமாக இருக்கிறது.

pollaci rape case 600பொள்ளாச்சி பாலியல் பயங்கரவாதம் தனிநபர், கூட்டுப் பாலியல் வன்கொடுமை என்கிற எல்லையைத் தாண்டி, புதிய பரிமாணம் எடுத்துள்ளது. தகவல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் - ‘ஸ்மார்ட் போன்களில்’ உள்ள முகநூல், வாட்ஸ்அப், புகைப்படம் - வீடியோ எடுக்கும் வசதிகள் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்துவதற்குத் தூண்டுதலா கவும் துணையாகவும் இருந்திருக்கின்றன. முகநூல் மூலம் இளம் பெண்களுடன் நயவஞ்சகமாகப் பேசி நட்பை ஏற்படுத்திக் கொள்வது; அவர்களை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரச்செய்து, கடத்திச் சென்று, கூட்டாக வல்லுறவு கொள்வது, அதை வீடியோவில் படம் பிடிப்பது, இதைக்காட்டி மிரட்டிப் பணம் பறிப்பது, மீண்டும் மீண்டும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவது என்கிற தன்மையில் இக்கொடுஞ்செயல் நிகழ்த்தப்பட்டு வந்துள்ளது.

கடந்த ஏழு ஆண்டுகளில் இருநூறு பெண்களுக்கு மேல் இதுபோன்று வஞ்சிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர் பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோ பதிவுகள் எடுக் கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இளம் பெண்கள் மட்டு மின்றி, சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்கி வந்த திருமணமான-குழந்தைகள் பெற்ற-படித்த-பணக்கார வீட்டுப் பெண்களும் இக்கொடுமைக்கு இலக்காகி உள்ளனர். வீடியோ பதிவைக் காட்டி மிரட்டி வைத்திருப்பதால், இக்கொடுமைக்கு உள்ளான பெண்கள் தங்கள் குடும் பத்தினரிடமும், காவல்துறையிடமும் கூறிட அஞ்சினர்.

ஏழாண்டுகள் இது தொடர்ந்து நடந்து வந் துள்ளது. இது காவல்துறைக்கும் புலனாய்வுத் துறைக்கும் தெரியாமல் நடந்திருக்காது. சில இளைஞர்கள் மட்டுமே இக்கொடிய செயலைத் தொடர்ந்து செய்ய முடியாது. இக்குற்றச் செயல் களுக்குப் பின்னால் அதிகார மய்யங்களின் துணை இருந்திருக்க வேண்டும். அரசியல்வாதி களுக்கும் உயர் அதிகார வர்க்கத்திற்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்று பரவலாகக் கருதப் படுகிறது.

பொள்ளாச்சியில் தனியார் பெண்கள் கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் ஒரு மாணவி தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தலைத் துணிந்து தன் குடும்பத்தினரிடம் கூறியதாலும், அக்குடும்பத்தினரும் ‘குடும்ப கவுரவம்’ என்கிற கூட்டுக்குள் முடங்கிவிடாமல், இக்கயவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று முடிவு செய்து, காவல் துறையில் புகார் அளித்ததால்தான் பொள் ளாச்சியின் பாலியல் பயங்கரம் வெளி உலகிற்குத் தெரிய வந்தது.

முகநூல் வழியாக நட்பான சபரிராஜன் 12.2.2019 அன்று கல்லூரி இடைவேளையின் போது அப்பெண்ணை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வரச்சொன்னான். அப்பெண் அங்குச் சென்றதும் சபரிராஜன் அப்பெண்ணை ஒரு மகிழுந்தில் அழைத்துச் சென்றான். மகிழுந்தில் அவனு டைய நண்பன் திருநாவுக்கரசு இருந்தான். வழியில் மற்ற இரு நண்பர்கள் வசந்தகுமார், சதீஷ்குமார் மகிழுந்தில் ஏறினர். அப்பெண்ணின் மேலாடையைக் கழற்றி வீடியோ எடுக்க முயன்ற போது அப்பெண் போராடி அவர்களிடமிருந்து தப்பினாள்.

பத்து நாள்கள் மனப்போராட்டத்துக்குப்பின் தன் அண்ணனிடம் நடந்ததைக் கூறினாள். 24.2.2019 அன்று அக்குடும்பத்தினர் பொள்ளாச்சி காவல் நிலை யத்தில் புகார் அளித்தனர். சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ்குமார் ஆகிய மூவர் 25.3.2018 அன்று கைது செய்யப்பட்டனர். திருநாவுக்கரசு தலைமறைவானார். இதற்கிடையில் திருநாவுக்கரசின் அ.தி.மு.க. நண்பன் நாகராசன் என்பவர் தன் மூன்று நண்பர்களுடன் சென்று புகார் அளித்த அப்பெண்ணின் அண்ணனைத் தாக்கி னார். இவர்கள் மீது புகார் அளித்ததன் பேரில் நாகராசன் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டு அடுத்த நாளே பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். அ.தி.மு.க. விலிருந்து நாகராசன் நீக்கப்பட்டதாக அக்கட்சி அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவின் இரண்டு காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாயின. அவற்றில் தான் இரண்டு பெண்களின் அவலக் குரல்கள் ஒலித்தன. இது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி யது. இளம்பெண்களைக் கொண்டுள்ள குடும்பங்கள் அஞ்சி நடுங்கின. எதிர்க்கட்சிகள் குற்றவாளிகள் மீதும் அவர்களுக்குத் தொடர்புடைய அதிகாரம் படைத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரின. 5.3.2019 அன்று திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டான். தமிழகம் முழுவதும் பொள்ளாச்சி வன்கொடுமையைக் கண்டித்தும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் கல்லூரிகளில் மாணவர்கள் பலவகையான போராட்டங்களை நடத்தினர். தமிழ்நாட்டு அரசின் காவல்துறை இப்போராட்டங்களை ஒடுக்க முனைந்தது.

கோவை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர், உச்சநீதிமன்றத்தின் நெறிமுறைகளுக்கு மாறாக, கல்லூரி மாணவியின் பெயரை வெளியிட்டார். இதன்நோக்கம் பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் புகார் அளிக்க முன்வரக்கூடாது என்பதே ஆகும். மேலும் புலனாய்வும் விசார ணையும் தொடங்குவதற்கு முன்பே, குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இல்லை என்று கூறினார். இந்த வழக்கு 13.3.2019 அன்று சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. அதே நாளில் சில மணிநேரத்துக்குள் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றுவதாக அறிவிக்கப்பட்டது. ஏழாண்டுகளாக நடைபெற்று வந்த பாலியல் வன்கொடுமையில் தொடர்புடையவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்களா என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ். காரரான ஆசீமானந்தா குண்டு வெடிப்புக் குற்ற வழக்கிலிருந்து 2019 மார்ச்சு மாதம் விடுதலை யாகியிருப்பது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் சட்டத்தை எப்படியும் வளைக்கலாம் என்பதையே காட்டுகிறது.

27.3.2019 நாளிட்ட ‘துக்ளக்’ இதழில் அதன் ஆசிரியர் பார்ப்பனக் குருமூர்த்தி, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகள் நிகழ்வதற்கு, பெரியார் பெண்களுக்குக் கற்பு தேவையில்லை என்று கூறி கலாச்சாரச் சீரழிவை ஏற்படுத்தியதே காரணம் என்று நஞ்சை உமிழ்ந்துள்ளார். பெண்ணுக்குக் கற்பு வற்புறுத்தப்படுவது போல் ஆணுக்கும் கற்பு வற்புறுத்தப்பட வேண்டும் என்று பெரியார் வலியுறுத்தினார் என்பது அனைவரும் அறிந்ததாகும். கற்பு என்கிற கற்பிதத்தைக் கொண்டு மிரட்டியே பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இந்துமத இதிகாசகங்கள், புராணங்கள், சாதி-மதச் சடங்குகள் பெயரால் பெண்கள் மீதான கருத்தியல் வன்முறை நிகழ்த்தப்படுகிறது. பெண்ணுக்குத் தன் உடல் மீதான உரிமை மறுக்கப்பட்டுள்ளது. பெண்ணின் உடல் ஆணின் ஆளுகைக்கு-அனுபவிப்புக்கு உரியது என்கிற ஆதிக்க மனநிலை ஒழிந்து, ஆணும் பெண்ணும் எல்லா வகையிலும் சமம் என்கிற நிலையை உருவாக்குதே பொள்ளாச்சி பாலியல் பயங்கர வாதம் போன்றவை நிகழாமல் தடுப்பதற்கான வழியாகும்.

Pin It