கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

களப்பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன

இராசிபுரம் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா -    மகளிர் தினவிழா -  சிறந்த பெண் சேவையாளர்கள், சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா இராசிபுரம் கன்னட சைனீகர் திருமண மண்டபத்தில் 21.4.2019 ஞாயிறு மாலை  5.45 மணியளவில்  தொடங்கியது

women 600சுமதி மதிவதனி (தி.வி.க. இராசிபுரம்) தலைமை தாங்கினார். மணிமேகலை (தி.வி.க. ஈரோடு) வரவேற்புரை யாற்றினார். வி.பாலு (தி.மு.க.முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்), கழகத் தலைவர் கொளத்தூர்மணி, முனைவர் சுந்தரவள்ளி (த.மு.எ.க.ச.) நிகழ்வில் சிறப்புரையாற்றினர்.

1) மதவாத சக்திகளுக்கு எதிராகவும், சமூக நீதி காக்கவும் துணிச்சலாக களமாடி வருகிற முனைவர் சுந்தரவள்ளி அவர்களுக்கு ‘மக்கள் அரசியல்’ விருதினையும்,

2) கரூர்மாவட்டம் பள்ளப்பட்டியைச் சார்ந்த பெரியார் பற்றாளரும் இந்தியாவின் தலைசிறந்த 100 இயற்கை வேளாண்மை விவசாயிகளில் ஒருவராக டெல்லியில் தனியார் ஊடகம் ஒன்றால் தேர்ந்தெடுக்கப் பட்டவரும், காடுகளை அழித்தொழித்த ஈஷா யோகா அமைப்பினர் அழைக்கும் பாராட்டு விழாவை முற்றிலும் புறக்கணித்து வருகிற  கு. சரோஜா அவர்களுக்கு ‘இயற்கை வேளாண்மை’  விருதும்,

3) சேலம் (ஏற்காடு மலை அடிவாரத்தில்) பெண் களுக்கான  காப்பகத்தை ‘தாய் அன்பு இல்லம்’ என்ற பெயரில் நடத்தும் த கா. சுமதி அவர்களுக்கு ‘மனிதநேயர்’ விருதும்,

4) சேலம் 5 ரோடு பகுதியில் பெண்களுக்கான தையலகத்தை அமைத்து பல பெண் தையற் கலைஞர்களை உருவாக்கி அவர்கள் தனியாக கடை தொடங்குகிற அளவுக்கு  உதவிகள் செய்து வருவதோடு சேலம் - குரங்கு சாவடி பகுதியில் தனது வீட்டு மாடியில் மாடித் தோட்டம் அமைத்து எண்ணற்றப் பெண்களுக்கு அதை கற்றுத்   தருவதோடு, அருகிலுள்ள  விவசாய நிலத்தில் இயற்கை வேளாண்மை முறையில் காய்கறிகள், கீரைகளைப் பயிரிட்டு மக்கள் ஆரோக்கியமான முறையில் உண்டு வாழவும், மண்ணை  மலட்டுத் தன்மைக்கு உள்ளாக்காமலும் பலருக்கும் இயற்கை வேளாண்மை முறையை கற்றுத் தந்து வருகிற கா. கா. அல்லி (ஆரண்யா ஆர்கானிக்) அவர்களுக்கு  ‘இயற்கை வேளாண்மை’ விருதும்,

5) சேலத்தில்  சாலைகளிலும், வீதி தோறும்  ஆதரவற்ற நிலையில், மன வளர்ச்சி  குன்றிய நிலையில் சுற்றித் திரிகிறவர்களுக்கு தினமும் 200 நபர்களுக்கும், ஞாயிற்றுக்கிழமை 500 நபர்களுக்கும் என மதிய வேளை உணவு அளித்து வருகிற, மிகவும் மனநலம் குன்றியவர்களுக்கு உடைகளை மாற்றி விடுவதோடு, முடிகளையும் மழித்து உதவி செய்து வருகிற சேலம் அமுதசுரபி அறக்கட்டளை குழுவுக்கு  ‘மனிதநேயர் விருதும்’

6) பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி மூலம் 300-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கார்மெண்ட்ஸில் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தித் தந்ததோடு சுய தொழில் தொடங்கவும் உதவி வரும் இராசிபுரம் ஜேசிஐ மெட்ரோவின் பட்டயத் தலைவரான ச. சசி  ரேகா அவர்களுக்கு ‘மகளிர் வளர்ப்புத் திறன்’ விருதும்

7) பெண்கள், குழந்தைகள் நலனே சமூக ஆரோக்கி யமாக மாறும் என நம்பிக்கைக் கொண்டு பெண்களிடத்தில் விழிப்புணர்வு இயக்கம் நடத்தி வரும் ஓமியோபதி மருத்துவர் கோ. பிரேமா BHMS  அவர்களுக்கு ‘மாற்று மருத்துவம்’ விருதும்,

8) 8 வருடங்களுக்கு மேலாக லைப் டிரஸ்ட் என்ற அமைப்பு வழியாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் ஆதரவற்றோருக்குப் பல வகையிலும் உதவி வரும் சேலம் செ. கலைவாணி அவர்களுக்கு ‘மனிதநேயர்’ விருதும்,

9) நாமக்கல்-நகராட்சி சேந்தமங்கலம் சாலையில் உள்ள மின்மயானத்தில் 6 வருடங்களுக்கும் மேலாக பிணங்களை எரிக்கக் கூடிய பணிகளை துணிச்சலாக செய்து வருகிற மோ. கலாராணி,   பா. மலர்க்கொடி இருவருக்கும் ‘செயல்துணிவு’ விருதும்,

10) ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டிகளில்  பங்கேற்று சாதனைகள் புரிந்து வரும் நாமக்கல் அ. கதீஜாபேகம் அவர்களுக்கு ‘உடல்வலு சாதனை’ விருதும்,

11) ஆசிய பளுதூக்கும் போட்டியில் முதல் இடத்தையும், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலக அளவிலான பளுதூக்கும் போட்டியில் தனிநபர் பிரிவுகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கமும் வென்ற கா. கமலி, நாமக்கல்  அவர்களுக்கு ‘உடல்வலு சாதனை’ விருதும்,

12) ஹிமாச்சல் பிரதேசம், கோவை, பஞ்சாப்பில் நடைபெற்ற தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டிகளில் இரண்டாம் இடம் பெற்றவரும், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற மாநில அளவிலான பளு தூக்கும் மற்றும் பளுதூக்கும் போட்டிகளில் முதல் இடம் பெற்றவருமான கு. பாரதி, சேலம் அவர்களுக்கு ‘உடல்வலு சாதனை’ விருதும்,

13) ஜாதி மறுப்புத் திருமணம் செய்து  கொண்டதால் பெற்றோர்களின் ஆதரவை இழந்த நிலையில் கணவர் இயற்கை ஆர்வலர் என்பதால் தமது கணவரோடு இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்து வரும் வி. சாருபிரபா, வெண்ணந்தூர் அவர்களுக்கு ‘இயற்கைப் பேணல் ஆர்வலர்’ விருதும்,

14) கஜா புயலால் பாதித்த பகுதிகளுக்கு 15  பெண்களுடன்  இணைந்து தாம் சார்ந்த மகளிர் குழுவின் உதவியுடன் உள்ளூரில்  பொதுமக்கள் மூலமாக சேகரித்த ரூ.  50,000 மதிப்பிலான நிவாரணப் பொருள்களை  தந்து உதவிய ம. அனிதா, ஹ. திவ்யா  (இராசிபுரம்) இருவருக்கும் ‘மனிதநேயர்’ விருதும் வழங்கப்பட்டன.

கழக நிகழ்வுகளுக்கு தொடர்ந்து பேருதவி அளித்து வருவதோடு, இந்த நிகழ்வும் சிறக்க 13,000 ரூபாய் நிதி அளித்த தோழர் வி.பாலு (தி.மு.க. முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்)  அவர்களுக்கு கழகப் பெண் தோழர்கள் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது

மேலும் நிகழ்வில் இரவு உணவு செலவுக்காக ரூ 10,000 நிதி அளித்த சிவக்குமார் (நாமக்கல்) அவர்களுக்கும், 2003 இல் இராசிபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மேடையில் அமைக்கப்பட்டிருந்த பேனரில் சாட் பேப்பரில் வரையப்பட்டிருந்த பெரியாரின் படத்தைப் பார்த்து அதை வரைந்தவருக்கு தனது  பாராட்டைக் கூறுங்கள் என கழகத் தலைவர் கொளத்தூர் மணி பாராட்டுக்குரிய  உருவப்படத்தை தோழர்  பட்டணம் மதி  துணையுடன் டெக்கரேசன் பணியை குறைந்த செலவில்  அருமையாக வடிவமைத்துக் கொடுத்த.  இராசிபுரம் (கெட்டிமேளம்) டெக்கரேசன் உரிமையாளர் சேகர் அவர்களுக்கும் கழகத் தலைவர்  நினைவுப் பரிசு வழங்கினார்.

நிகழ்வில் ஆயில்பட்டியைச் சேர்ந்த நந்தினி என்ற பெண் இராசிபுரம் தி.வி.க. சார்பில் ஏற்காடு தோழர் பெருமாள் பிரபாகரன்  துணையுடன் கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஏற்காட்டில் நடைபெற்ற  பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, தலைவரின் களப்பணியை, எளிமையை நேரடியாகவே  அறிந்தமை யால் அவர் மீது பற்றுக் கொண்ட காரணத்தால் தலைவரின் உருவப் படத்தையும் சுந்தரவள்ளி உருவப் படத்தையும் அழகாக வரைந்து எடுத்து வந்து  அதை மேடையிலேயே இருவருக்கும் வழங்கி மகிழ்ந்தார். முத்துலட்சுமி (தி.வி.க. திருப்பூர்) நன்றி கூறினார்.