புரட்சிகர கட்சியானது மக்களை அமைப்பாக்கிப் பாதுகாக்கிற நடைமுறையைக் கொண்டிருந்தால் மட்டுமே மக்கள் அந்த கட்சியின் பின்னால் அணி திரளுவார்கள். மக்களின் வாழ்க்கைக்குப் பயனளிக்காத, வாழ்க்கையைப் பாதுகாக்காத எந்த கட்சியிலும் அவர்கள் சேர வேண்டிய அவசியமேயில்லை. வெற்று புகழுக்காக மக்கள் எந்தக் கட்சியிலும் சேருவதில்லை.

தலித் மக்கள் புரட்சிகர கட்சியின் கீழ் அமைப்பாக வேண்டும் என்றால் அவர்களின் வாழ்க்கையின் மீது செல்வாக்கு செலுத்துகிற சாதியாதிக்க சக்திகளிடமிருந்து பாதுகாப்பளிக்கிற வல்லமையை புரட்சிகர கட்சி கொண்டிருக்க வேண்டும். தலித் மக்களின் சிறிய அசைவுகளும் தாக்குதலுக்கு உள்ளாகிறது. அவர்களின் உயிரையும், உடைமையையும் பறிப்பது மட்டுமல்லாமல் அவர்களுக்கு வேலை தர மறுப்பது, கடைகளில் பொருள் தர மறுப்பது, குடியிருப்புகளில் இருந்து வெளியேற முடியாமல் பாதைகளை அடைத்து விடுவது என்கிற வன்முறைகளால் தலித்துகள் அடிபணிய வைக்கப்படுகிறார்கள்.

இதைத் தடுப்பதற்கு புரட்சிகர கட்சிகளிடம் என்ன பலம் இருக்கிறது?

சாதிய வன்முறைகளைத் தடுக்க வேண்டுமானால் ஆதிக்க சாதியிலுள்ள உழைக்கும் மக்கள் புரட்சிகர பாதையில் திரட்டப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு ஆதிக்க சாதியிலும் உள்ள சாதிவெறியர்கள் வன்முறைக்குத் தூண்டும்போதும் அது அச்சாதியிலுள்ள உழைக்கும் மக்களால் எதிர்க்கப்பட வேண்டும்.

எந்தப் புரட்சிகர கட்சி ஆதிக்க சாதியிலுள்ள உழைக்கும் மக்களைத் திரட்டி சாதியாதிக்கத்திற்கு எதிராக செயல்பட வைத்திருக்கிறது?

சாதியப் பிரச்சினையில் த.நா.மா.லெ.க-விடம் ‘மேல்சாதியிலுள்ள உழைக்கும் மக்களிடம் மண்டிக்கிடக்கும் உயர்சாதித் திமிரை ஒழிக்க வேண்டியது முக்கியமானப் பணி’ என்ற கொள்கை உள்ளது. ஆனால் த.நா.மா.லெ.க-வுக்குள் மேல்சாதியிலிருந்து எவ்வளவு ஊழியர்கள் வந்தபோதும் அவர்கள் தங்களது சொந்த சாதியின் ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடுகிற நடைமுறைப் பணிகளில் ஈடுப்படுத்தப் படவேயில்லை. மாறாக வந்தவர்கள் எல்லோரும் உயர்சாதித் திமிர் ஒழிப்போம் என தலித் மக்களிடம் பிரசங்கம் செய்தார்கள். எவ்வளவு திமிர்? இப்போது இம்முழக்கத்தை கூட கைவிட்டு விட்டார்களா என சந்தேகமாக உள்ளது. அண்மையில் சாதி ஒழிப்புத் திட்டம் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிற தோழர் கி.வே.பொன்னையன் உட்பட பலரும் இந்த முழக்கத்தை கவனமாக தவிர்த்து ‘இரண்டு அரங்கிலானப் பணிகள்’ என எதையோ உபதேசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல் இசுலாமிய மக்களுக்கு இந்துத்துவ அரசப் பயங்கரவாதத்திற்கு எதிராக அமைப்பாக வேண்டிய அவசியமிருக்கிறது. இசுலாமியர்களை அமைப்பாக்க வேண்டுமென்றால் மத அடிப்படைவாதம்தான் தங்களுக்கு பாதுகாப்பு என்கிற மனநிலையை உடைக்க வேண்டும். அதற்கு இசுலாமியர்கள் அல்லாத சனநாயக சக்திகளை கொண்ட இந்துத்துவப் பயங்கரவாதத்திற்கு எதிரான இயக்கம் தொடர்ந்து செயல்பட்டு அம்மக்களிடம் நம்பிக்கையை உருவாக்க வேண்டும்.

கொடுமை என்னவென்றால் இசுலாமிய மக்கள் மீது நிலவும் ஒடுக்குமுறையால் அம்மக்கள் அதை எதிர்கொள்வதற்கான புரட்சிகர நடைமுறைக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்பதையே இயக்கங்கள் நம்புவதில்லை. இசுலாமியர் பிரச்சினையை இசுலாமிய இயக்கங்களே பார்த்துக் கொள்ளட்டும் என்கிற ஒருவகை இந்துத்துவ மனநிலைதான் பெரும்பாலான இயக்கங்களிடம் உள்ளது.

இதைப்போலத்தான் உடனடியான புரட்சிகர நடைமுறையை ஏற்றுக்கொள்கிற நிலையில் மீனவர் சமுதாயம் மற்றும் பழங்குடி சமுதாயங்கள் உள்ளன.

நிலைமை இப்படி இருக்கும்போது பல புரட்சிகர இயக்கங்கள் சொல்வது என்னவென்றால், மக்கள் இப்போது புரட்சிகர கட்சியின் கீழ் அமைப்பாகிற நிலையில் இல்லை; ஆகவே நமது ஒரே கடமை சமூக முன்னணியாளர்களை வென்றெடுப்பதேயாகும் என்பதுதான்.

அடடா! வேலை எளிதாகி விட்டதல்லவா!! இனி நீங்கள் கஷ்டப்பட வேண்டியதில்லை. சமூகத்தின் சிறப்பு நிலைமைகள் குறித்து ஆராய வேண்டியதில்லை.

த.நா.மா.லெ.க உட்பட பல புரட்சிகர இயக்கங்கள் முதன்மைப் பகுதி, முக்கிய வேலை என்பதையே மறந்து விட்டன. எல்லோரும் சமூக முன்னணியாளர்களை வென்றெடுக்க போட்டியிடுகிறார்கள். அதற்கு தங்கள் திட்டம்தான் சாலச்சிறந்தது என எழுத்துப் போட்டியில் இறங்கி விட்டார்கள். தங்களது திட்டங்கள் எவ்வளவு உயர்ந்தது என மற்றவரது திட்டங்களை மட்டம் தட்டுகிற வகுப்புகளை நடத்திக் கொண்டேயிருக்கிறார்கள். கிராமங்கள் முதன்மையான பணிப்பகுதி, விவசாயிகள் அல்லது தொழிலாளர்கள் முதன்மையான மக்கள் பிரிவினர் என்ற நிலைப்பாடுகளையெல்லாம் மூட்டைக் கட்டிப் போட்டுவிட்டு எல்லா இயக்கங்களும் பெருநகரங்களில் குடியேறுகின்றன.
மக்கள் உயிர் போகிறப் பிரச்சினையில் வீதியில் இறங்கி தீர்வுக்கான நடைமுறையைத் தேடும்போது நடைமுறையை மறுத்த கோட்பாடுகளை மேடையில் முழங்கி அங்கும் வகுப்பெடுக்கிறார்கள்.

புரட்சிகர வாய்ச்சவடாலை முறியடிக்கும் அரசு ஆதரவு வாய்ச்சவடால்கள்

எப்போது அரசியல் போராட்டம் மட்டுமே என புரட்சிகர இயக்கங்கள் சட்டவாதத்தை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனவோ அரசு மகிழ்வோடு அதை அங்கீகரித்து அழிக்கத் தொடங்கி விட்டது.

ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் என்பவற்றுக்கே அனுமதிப் பெறுவதற்கு இயக்கத்தவரை அலைய விட்டு அவர்களின் சக்தியை உறிந்து சோர்வடைய வைக்கிறது அரசு. அதே நேரத்தில் அரசு ஆதரவு குழுக்களுக்கு உடனடி அனுமதி வழங்கி படுபயங்கரமாக பேச வைக்கிறது. இந்த கைக்கூலி அமைப்புகளின் பேய்க்கூச்சலில் காலதாமதமாக வருகிற அல்லது வர முடியாமல் தடுக்கப் படுகிற புரட்சிகர வாய்வீச்சு செல்லாக்காசாக்கப்படுகிறது. அவ்வளவுதான். அரசாதரவுக் குழுக்கள் சமூக முன்னணியாளர்களை வென்றெடுத்துக் காயடிக்கிறார்கள். புரட்சிகர இயக்கங்கள் தங்களது பத்திரிக்கையிலோ அல்லது ஆதரவாளர் கூட்டங்களிலோ எல்லோரையும் திட்டித் தீர்த்து விட்டு ஓய்ந்து விடுகின்றன.

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? புரட்சிகர நடைமுறையால் சிறைப்படுகிற தோழர்களிடம் “நீங்கள் ஏன் இந்த இயக்கத்தைத் தேர்ந்தெடுக்கக் கூடாது?” என உளவுத்துறை பரிந்துரைக்கும் பட்டியலில் நமது புரட்சிகர வாய்வீச்சு இயக்கங்கள் உள்ளன.

எந்தத் தீர்வையும் பெற முடியாத வாய்வீச்சை மக்கள் புறக்கணிக்கிறார்கள்

தவிர்க்க முடியாத நிலையில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு மட்டுமல்ல, வாழ்க்கையை தக்கவைத்துக் கொள்வதற்கான பேரம் பேசுவதற்கும் மக்களுக்கு அரசியல் தீர்வு தேவைப்படுகிறது; அதற்கான அமைப்பும் தேவைப்படுகிறது. த.நா.மா.லெ.க போன்ற அமைப்புகள் முதன்மைப்படுத்துகிற அரசியல் போராட்டம் என்பது மக்களின் வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொள்வதற்கான பேரம் பேசுகிற இடைநிலைத் தீர்வைப் பெற்றுத் தர வேண்டும்.

தொழிலாளர், உழவர், சிறு வணிகர் மற்றும் உற்பத்தியாளர், பெண்கள், இளைஞர், மாணவர், தலித்துகள், இசுலாமியர், மீனவர், பழங்குடிகள் என எல்லோருக்கும் உடனடி கோரிக்கைகளும், அதற்கான தற்காலிகத் தீர்வுகளும் அடிப்படையாக உள்ளன. இதை அடைவதுதான் புரட்சிகர அரசியல் போராட்டம்.

ஆனால் இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. இப்படித்தான் படிப்படியாக மக்களை நாம் புரட்சிக்கு அணித்திரட்டுகிறோம் என ஆளும்வர்க்கம் பழைய புரட்சிகளின் அனுபவத்திலிருந்து உணர்ந்திருக்கிறதல்லவா? அவர்கள் உணர்கிற வகையிலும்தானே நாம் வேலைத்திட்டங்களையும் அச்சிட்டு விற்றுக் கொண்டிருக்கிறோம். அதனால் அரசு நமது இந்த வழிமுறைக்கும் ‘செக்’ வைத்திருக்கிறது. மக்கள் உடனடிக் கோரிக்கைகளுக்கு அமைப்பாவதற்கு தங்களின் கைக்கூலிக்களான சீர்த்திருத்த இயக்கங்களை வளர்த்து விட்டுக் கொண்டிருக்கிறது.

தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அங்கீகரிக்கப்படுகிற இயக்கங்கள் அரசால் கட்டுப்படுத்தப்பட்டவையாக இருக்கின்றன. நமது புரட்சிகர இயக்கங்கள் சில இதில் அனுமதிக்கப்படுகிறது என்றால் முதல் காரணம் நீங்கள் புரட்சிகர நடமுறையைக் கைக்கழுவி விட்டதை உறுதிப்படுத்தியிருப்பதாலும், புரட்சிகர நடைமுறைக்கான எந்த கட்டமைப்புகளும் இல்லாத நிராயுதபாணிகளாக இருக்கிறீர்கள் என்ற உத்தரவாதத்தாலும்தான். இது அரசுக்கு சாதகமாக இருக்கிறது. உங்களை மேலும் சட்டவாதத்தில் மூழ்கடிக்க வாய்ப்பளிக்கிறது.

கொஞ்சமேனும் புரட்சிகர கூறுகளை நாம் கொண்டிருந்தால் நம் பின்னால் அணித்திரளுகிற மக்களுக்கு அரசு இடைவிடாத தொந்தரவை வழங்குகிறது. அதேநேரத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கைக்கூலி இயக்கங்களுக்குப் பின்னால் உள்ள மக்களுக்கு சலுகையை வழங்குகிறது. அதன் மூலம் மக்களை புரட்சிகர இயக்கங்கள்பால் வெறுப்படையச் செய்து நமது கூடாரத்தை காலியாக்குகிறது.

அரசின் இந்த சூழ்ச்சி வலையை அறுத்தெரியத் தெரியாத நம்மை மக்கள் அணுகுவதேயில்லை. இவையெல்லாம் கொஞ்சமாவது முயற்சி செய்கிற இயக்கங்களுக்கு நேர்வதுதான். வெறும் படிப்பறை வாதத்தைக் கொண்டிருக்கும் த.நா.மா.லெ.க போன்ற இயக்கங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை.

ஆக மக்களின் உடனடித் தேவைகளுக்கு தற்காலிகத் தீர்வைப் பெற்றுத் தர முடியாத,

தலித் முதலான மக்கள் அணித்திரண்டால் அவர்களைப் பாதுகாக்க எந்த நடைமுறையும் இல்லாத,

வாழ்வா? சாவா? என போராடுகிற இசுலாமியர், மீனவர், பழங்குடியினர் போன்ற மக்கள் பிரிவினரை அமைப்பாக்குகிற எந்த கண்ணோட்டமும் இல்லாத,

த.நா.மா.லெ.க போன்ற இயக்கங்களில் மக்கள் அமைப்பாக வேண்டிய அவசியம் என்ன?

இவர்கள் சொல்லுகிற புரட்சிகர மக்கள் பாதை என்பது என்ன?

கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகியும் ஒரு சதவீத மக்களைக் கூடத் திரட்ட முடியாத இவ்வியக்கங்களின் புகழ் பாடித்திரியும் தோழர் கி.வே.பொன்னையன் போன்றோரின் நிலை என்ன?

- திருப்பூர் குணா

Pin It