நேற்று முன்தினம் சென்னையில் நடந்த அடுக்கு மாடி கட்டிட விபத்து பலரை பலி வாங்கி இருக்கும் நிலையில் இதற்கு காரணமான அனைவரும் தண்டிக்க பட வேண்டும் என்பதுதான் இனி அடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க உதவும்! ஆனால் சம்பவ இடத்தை பாரவையிட்ட முதல்வர் அனுமதி வழங்கப்பட்டதில் விதிமீறல் இல்லை! கட்டுமானத்தில் தான் விதி மீறல் நடந்து உள்ளது என பேட்டி அளித்து இருப்பது உண்மைக் குற்றவாளிகளை கண்டு பிடிக்க உதவாது!

moulivakkam building

கட்டுமான நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டு உள்ளது என்பது உண்மையானால் அந்த விதிமீறலுக்கு உதவுபவர்கள் அதிகாரிகள் அவர்களின் உதவியின்றி இவர்கள் எதுவும் செய்ய இயலாது!

ஏரியை பதிவு செய்த பதிவுத்துறை, அனுமதி வழங்கிய CMDA, மாவட்ட நிர்வாகம், கவுன்சிலர்கள், குடிநீர் வாரியம், வடிகால் வாரியம், மின்சார வாரியம், இப்படி எல்லா அதிகாரிகளுக்கும் ஆளுங்கட்சி வட்ட மாவட்டங்களுக்கும் கோடிக் கணக்கில் அழுது விட்டுத்தான் இதுபோன்ற குடியிருப்பு வளாகம் கட்டப் படுகிறது! ஒரு வீட்டையே லஞ்சமாக பெற்ற கவுன்சிலர்கள் உண்டு!

ஆனால் கட்டுமான நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ள அரசு, தனது அதிகாரிகளுக்கும், அரசியல் வாதிகளுக்கும் தண்டணை கொடுக்காமல் பழியை ஒரு பக்கத்தில் தள்ளி விடுவதால் இனி இதுபோன்ற நிலை வராமல் எப்படி தடுக்க முடியும்?

மண்ணின் தன்மை ஆராயப் படும் என சொல்லும் முதல்வர் அதை ஆராயாமல் அடுக்கு மாடிக்கு அனுமதி கொடுத்த அதிகாரிகள் தண்டிக்க படுவார்கள் என அறிவித்து இருந்தால் பலனளிக்கும்! அதைச் செய்யாமல் கட்டுமான நிறுவனத்தை தண்டிப்பதால் எந்தப் பலனும் இல்லை! இந்த நிறுவனம் இனி இது போன்ற செயலில் ஈடுபடுவதை தடுக்கும். ஆனால் தண்டிக்கப்படாத அதிகாரிகள் வேறு ஒரு கட்டுமான நிறுவனத்தில் கையூட்டு பெற்றுக் கொண்டு வேறு விபத்துக்கு வித்திடுவார்கள்!

ஆகையால் தவறு செய்தவர்கள் அனைவரும் தண்டிக்கப் பட்டாலன்றி இதுபோன்ற துயரங்கள் தொடரவே செய்யும்!

மேலும் இரண்டு லட்சம் இழப்பீடு என்பது மனித உயிருக்கு மலிவான மதிப்பீடு ஆகும்! தேவையில்லாத விழாக்களுக்கும், விருதுகளுக்கும், வெற்று விளம்பரங்களுக்கும் கோடிக் கணக்கில் செலவு செய்யும் அரசு, வேலையின் போது உயிரை இழந்த குடும்பம் வருவாயின்றி என்ன பாடுபடும் என்பதை உணர்ந்து இழப்பீடு தொகையை உயர்த்த வேண்டும்!

- செங்கிஸ் கான்

Pin It