சாவுத் தண்டனை பெற்றோரின் கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க நடுவண் அரசும் குடியரசுத் தலைவரும் மிக அதிகமாகக் கால தாமதம் செய்துவிட்டார்கள், ஆகவே நீண்டகாலம் சாவுத்தண்டனை கொட்டடியிலிருந்து மனச் சித்தரவதைக்கு ஆளாகி உள்ள 15 பேரின் நீண்ட காலத் துன்பத்திற்கு நிவாரணம் தரும் வகையில் அவர்களுடைய உயிர் பறிக்கும் சாவுத் தண்டனையை நீக்கி வாழ்நாள் தண்டனையாக மாற்றி ஆணையிடுகிறோம் என்று இன்று (21.01.2014) உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு. சதாசிவம் அவர்கள் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரலாற்றுச் சிறப்பு மிக்க திசை காட்டும் தீர்ப்பை வழங்கியிருப்பதற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சாவுத்தண்டனை சட்ட நூலிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட வேண்டும் என்ற மனித உரிமைக் கோரிக்கை இந்தியாவில் வலுப்பெற்று வரும் இக்காலத்தில் அந்த இலக்கை நோக்கிய ஒரு நகர்வாக இத்தீர்ப்பை எடுத்துக் கொள்ளலாம்.

இத்தீர்ப்பின் மூலம் பயன் பெறும் 15 பேரில் 4 பேர் வீரப்பன் தொடர்பான வெடிகுண்டு வழக்கில் கொலைக் குற்றம்சாட்டப்பட்டோர் ஆவர். திருவாளர்கள் பிலவேந்திரன், ஞானசேகரன், சைமன், மீசை மாதையன் ஆகிய நால்வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களை அண்மையில் கர்நாடகத்தில் உள்ள பெல்காம் சிறையில் சென்று சந்தித்து வந்தோம். அவர்கள், காவல்துறை குற்றம் சாட்டியுள்ள பாலாற்று வெடிகுண்டு நிகழ்வில் பங்கெடுக்காத அப்பாவிகள் என்று தெரிந்தே இவ் வழக்கில் காவல்துறை அவர்களை சேர்த்தது. எனவே அவர்கள் அனைவரும் முழுமையாக விடுதலை செய்யப்பட வேண்டியவர்கள்.

இராசீவ் காந்தி கொலை வழக்கில் சாவுத்தண்டனை வழங்கப் பெற்று சிறையில் வாடுவோர் அனைவரும் அப்பாவிகள் என்பதை அவ்வழக்கை விசாரித்த காவல் அதிகாரிகளின் இப்போதைய கூற்றுகள் மூலம் மெய்பிக்கப்பட்டு வருகின்றன.

அப்பாவிகள் எந்த வகையிலும் தண்டிக்கப்படக் கூடாது என்ற அறம் மிக முகாமையானது. இது ஒரு பக்கம் இருக்க கொலைக் குற்றம் புரிந்திருந்தாலும் அதற்காக ஒருவரை அரசு கொலை செய்ய வேண்டியதில்லை என்ற அறத்தையும் இந்திய நீதித்துறை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே சாவுத்தண்டனை முற்றிலுமாக நீக்கப்படவேண்டும்.

இனி சாவுத்தண்டனை பெற்றோரின் கருணை மனுக்களை காலம் தாழ்த்தாமல் மறுத்து விட்டால் அவர்களைத் தூக்கில் போடலாம் என்ற நிலை இத்தீர்ப்பில் உள்ளுறையாக இருக்கிறது. மேலும், கருணை மனு நிராகரிக்கப்பட்ட 14 நாட்களுக்குள் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் எனவும் இத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், நிராபராதிகள் பலர் தூக்குத் தண்டனை பெற்று தண்டிக்கப்படவே வாய்புள்ளது. எனவே, இந்த அவலத்தை நீக்க சாவுத்தண்டனை ஒழிப்பே சிறந்த வழி.

உச்ச நீதிமன்றம் மேற்கண்ட 15 பேருக்கும் சாவுத்தண்டனையை நீக்கிவிட்டாலும் அவர்களுக்கு வாழ்வுரிமை வழங்கி விட்டதா என்று பார்த்தால் இன்றைய நிலையில் அதற்கான வாய்ப்பில்லை.

ஏனெனில் ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் வாழ்நாள் தண்டனை என்பது உயிருள்ள வரை சிறையிலிருப்பது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்பு அநீதியானது. வாழ்நாள் தண்டனைக்குக் கால வரம்பு வேண்டும். வாழ்நாள் தண்டனை பெற்றோர் 14 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டால் அவர்களின் நன்னடத்தையைப் பொறுத்து அவர்களை விடுதலை செய்யலாம் என்ற சட்டமுறை ஏற்கெனவே இருந்தது. அந்த நடைமுறை இப்பொழுது செயலற்றதாகிவிட்டது.

இது பற்றியும் தலைமை நீதிபதி திரு சதாசிவம் அவர்கள் கவனம் செலுத்தி வாழ்நாள் சிறைக்கு அதிக அளவு காலம் 14 ஆண்டுகள் மட்டுமே என்ற விதிமுறையை உருவாக்கி பழைய தீர்ப்பை மாற்றவேண்டும். அப்போதுதான் சாவுத்தண்டனை நீக்கப்பட்டதற்கான பலனை உரியவர்கள் அனுபவிக்க முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

- பெ.மணியரசன், தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. 

Pin It