ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தண்டனைக் குறைப்பின் கீழ் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, 17 ஆண்டுகாலம் சிறையில் இருந்து வருகிறார். அண்மையில் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா - நளினியை சென்னை சிறையில் சந்தித்ததைத் தொடர்ந்து, நளினியின் விடுதலைப் பிரச்சனை விவாதத்துக்கு வந்துள்ளது. 15 ஆண்டுகள் சிறையில் இருந்த ஆயுள் கைதிகளை, கடந்த ஆண்டு கலைஞர் ஆட்சி விடுதலை செய்தது. அதில் நளினி இடம் பெறவில்லை.
கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான ஆலோசனை வாரியம் நளினியின் விடுதலை கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்து விட்டது. இப்போது நளினியை விடுதலை செய்யுமாறு - உயர்நீதிமன்றத்தில் நளினியின் வழக்கறிஞர் எஸ். துரைசாமி தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஜோதிமணி ஏப்.30 ஆம் தேதி விசாரணைக்கு ஏற்றுள்ளார். நளினியின், மனுவை தள்ளுபடி செய்த, ஆலோசனை வாரியம் சிறைவிதிகளுக்கேற்ப நியமிக்கப்பட்டதல்ல என்று வழக்கறிஞர் சுட்டிக் காட்டியதை, நீதிபதி ஏற்றுக் கொண்டார்.
சிறைவிதிகளின்படி முறையான எண்ணிக்கையில், முறையான அதிகாரிகளைக் கொண்டிராத ஆலோசனை வாரியம், நளினியின் மனுவை நிராகரிப்பதற்கு முன்பு, வேலூர் சிறை அதிகாரிகளிடமோ, மனநல மருத்துவர்களிடமோ, மருத்துவ அதிகாரிகளிடமோ, கருத்துகளைக் கேட்டிருக்க வேண்டும். அப்படி கேட்காமலே மனுவை தள்ளுபடி செய்துள்ளது. வாரியம் - இந்த முடிவினை எடுத்தபோது, அந்தக் கூட்டத்தில் இதற்கான பொறுப்பு அதிகாரியும் பங்கேற்கவில்லை. பொறுப்பு அதிகாரி நளினியை கடும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யலாம் என்றே பரிந்துரை செய்திருந்தார்.
ஆனாலும் வாரியம் - விடுதலை கோரிக்கையை நிராகரித்து எடுத்த முடிவில் அதற்கான ஒப்புதல் கையெழுத்தை அதற்குப் பிறகு தான் பொறுப்பு அதிகாரியிடம் கேட்டுப் பெற்றுள்ளது. இவ்வளவு குறைகளையும் கவனத்தில் எடுத்தக் கொள்ளாமல், உள்துறை செயலாளர் அக்.30, 2007 இல் நளினியின் விடுதலை கோரிக்கையை நிராகரித்து, ஆணை பிறப்பித்துள்ளார்.
நளினியின் தூக்குத் தண்டனையை, ஆயுள் தண்டனையாக தமிழக அரசு குறைத்த போதே மத்திய அரசை கலந்து ஆலோசித்துதான் முடிவெடுத்தது. எனவே இப்போது விடுதலை செய்வதற்கு மத்திய அரசின் ஆலோசனை பெற வேண்டிய அவசியம் இல்லை என்பதை வழக்கறிஞர் துரைசாமி சுட்டிக்காட்டினார். நீதிபதி வழக்கு விசாரணையை ஜூன் 10 ஆம் தேதி தள்ளி வைத்துள்ளார். வழக்கறிஞர் துரைசாமியுடன், வழக்கறிஞர் இளங்கோவும் வழக்கில் ஆஜரானார்.