"ஏழைகள், பலவீனமானவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள், அதிகாரம் இல்லாதவர்கள், வெறுக்கப்பட்டவர்கள் இவர்களுக்குத்தான் மரண தண்டனை வழங்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள்'' - ராம்சே கிளார்க்: முன்னாள் அமெரிக்க தலைமை அரசு வழக்கறிஞர்

சென்னை புத்தகக் கண்காட்சியில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு அரங்கு. 12 நாட்கள் நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியில் ஆயிரக்கணக்கான பதிப்பாளர்கள், லட்சக்கணக்கான புத்தகங்கள், 700க்கும் மேற்பட்ட கடைகள் என மக்களின் அறிவுத் தேடலை பூர்த்தி செய்யும் ஒரு சூழ்நிலையில், தனது மகனின் தூக்கு தண்டனைக்கு எதிராக ஒரு குரலை பதிவு செய்துள்ளார் 57 வயது நிரம்பியவரான அற்புதம்மாள்.

இந்தியாவில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதியான பேரறிவாளனின் அம்மா தான் அற்புதம்மாள். 22 வருட காலமாக சிறையில்இருந்து வரும் பேரறிவாளன், தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்.

இவரின் இந்தப் போராட்டத்திற்கு அரசின் கதவுகள் திறக்கும் என்ற நம்பிக்கையில் மக்களிடம் தூக்கு தண்டனைக்கு எதிரான தன்னுடைய குரலை வலிமையாக பதிவு செய்து வருகிறார். தூக்கு தண்டனைக்கு எதிரான போராட்டம் என்பது என்னுடைய மகனுக்கான போராட்டம் மட்டுமல்ல, மாறாக ஒட்டுமொத்தமாக தூக்கு தண்டனையே இந்தியாவில் நிறைவேற்றப்படக்கூடாது என்பதையே பிரதான முழக்கமாக வைத்துள்ளார்.

இதனை வலியுறுத்தி சென்னை புத்தகக் கண்காட்சியில் ஒரு அரங்கு ஒன்றில் தூக்கு தண்டனைக்கு எதிரான புத்தகங்கள், சி.டி.க்கள் போன்றவைகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், அவருடைய மகன் பேரறிவாளன் சிறையில் இருந்து எழுதிய ""தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்'' என்ற புத்தகத்தையும், தூக்கு தண்டனைக்கு எதிரான பல்வேறு வாசகங்களையும் மக்களின் பார்வைக்கு வைத்துள்ளார்.

கடைக்கு வரும் வாசகர்களிடம் தூக்க தண்டனை என்பது மனிதனுக்கு கொடுக்கக் கூடிய அநீதியின் உச்சக்கட்டம் தான் என்றும், இது மனித சமூகத்திற்கு எதிரானது என்றும் பிரச்சாரம் செய்கின்றார்.

இந்த அரங்கில் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி விஆர். கிருஷ்ணய்யர், டி.என். பகவதி, இலக்கியச்சோலை வெளியிட்டுள்ள வேண்டாம் மரண தண்டனை ஏன்? மற்றும் பல்வேறு சட்ட வல்லுநர்கள் எழுதிய தூக்கு தண்டனைக்கு எதிரான புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

அதேப்போன்று, ""தூக்கு தண்டனைக்கு எதிரான மக்கள் அமைப்பு'' சார்பில் ""உயிர் வலி, ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்ட கதை'' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட பேரறிவாளன் தொடர்பான சி.டி.யும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அற்புதம்மாள் கூறுகையில், நான் கடந்த 22 ஆண்டுகளாக இந்த புத்தகக் காட்சிக்கு வருகிறேன். இந்தப் புத்தகக் காட்சிக்கு பல்வேறு தரப்பு மக்களும் வருகிறார்கள். இதில் படித்தவர் படிக்காதவர் என்ற வேறுபாடில்லை. அனைத்து தரப்பு மக்களும் இந்தப் புத்தகக் காட்சிக்கு வருகை தருகின்றனர்.

என்னுடைய நியாயமான கருத்தை இதன் மூலம் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவும், இந்தியாவில் இனிமேல் யாருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்படக்கூடாது என்பதற்காக 25,000 ரூபாய் பணம் கட்டி அரங்கை வாடகைக்கு எடுத்தேன்.

இந்தப் பணத்தை செலவழிப்பதன் மூலம் என்னுடைய மகன் தூக்கில் இருந்து காப்பாற்றப்படுவான் என்று நம்புகிறேன். இந்த அரங்கில் தூக்கு தண்டனைக்கு எதிரான புத்தகம் யார் வெளியிட்டாலும், அவர்களுடைய புத்தகம் இங்கு வைக்கப்படும் என்று உணர்ச்சி பொங்க கூறினார்.

அற்புதம்மாள் அவர்களின் கணவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். அவருக்கு மாத மாதம் கிடைக்கும் 7,000 ரூபாய் ஓய்வூதியத்தை கொண்டு தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.

புத்தகம் விற்றாவது தன்னுடைய மகனை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றிட வேண்டும் என்ற இந்த நிகழ்வு, அடித்தட்டு மக்களிடம் இருந்து, ஆளும் அரசுகள் வரை எதிரொலிக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

தூக்கு தண்டனையை பெரும்பாலும் நிறைவேற்றி வந்த நாடுகள், இன்று அந்த சட்டத்தையே அடியோடு கைவிட்டு விட்டன. தண்டனை என்பது ஒரு மனிதன் தான் செய்த தவறை உணர்வதற்காகத்தான். அதற்கு குறிப்பிட்ட காலங்கள் சிறைத்தண்டனையே போதுமானதாகும்.

ஆனால், ராஜீவ் காந்தி கொலை வழக்கின் விசாரணை கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து விட்டனர். இதற்கு பிறகும் அவர்களுக்கு தூக்கு தண்டனை என்பது மிகக் கொடூரமானதாகும்.

இதை உணர்ந்து ஆளும் அரசுகள் இவர்கள் விஷயத்தில் கருணை காட்ட வேண்டும். அதுமட்டுமல்லாமல் தூக்கு தண்டனையை முழுமையாக ஒழிக்க வேண்டும். தூக்கு தண்டனைக்கு எதிரான ஒரு மக்கள் சக்தியை உருவாக்க வேண்டும்.

- நெல்லை சலீம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It