தமிழகத்தின் ஆளுநர், பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுதலை செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்குத்தான் இருக்கிறது என்று தெரிவித்திருப்பது ஒட்டு மொத்தத் தமிழனத்தை, மனித உரிமையை, ஜனநாயகத்தை, சட்டத்தை, அனைத்தையும் இழிவுபடுத்துவதாக, கொச்சைப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
ஆளுநர், பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்குத்தான் இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். அந்த அடிப்படையில் நீதிமன்றத்தில் 9-2-2021 அன்று அந்த வழக்கு மறுபடியும் வருகிறது.
நீதிமன்றத்தில் அந்த வழக்கில் தன்னுடைய பிரமாணப் பத்திரத்தை மத்தியஅரசு பதிவு செய்திருக்கிறது. அதில் ‘‘விடுதலை செய்கிற அதிகாரம் குடியரசுத் தலைவருக்குத்தான் இருக்கிறது என்று ஆளுநர் கடந்த 25-ஆம் தேதியே சொல்லிவிட்டதாகக்’’ கூறப்பட்டிருக்கிறது.
கடந்த 30ஆம் தேதி தமிழக முதலமைச்சர் ஆளுநரிடத்தில் மனு அளித்து எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்போது ஏன் ஆளுநர் எதையும் சொல்லவில்லை? அல்லது ஆளுநர் சொன்ன எதையும் ஏன் முதலமைச்சர் சொல்லவில்லை?
இங்கே முதலமைச்சருக்கு எந்த மரியாதையும் இல்லையா? அந்த மரியாதையை முதலமைச்சர் காப்பாற்றிக் கொள்ளவில்லையா? முதலமைச்சர் என்ற தனிமனிதருக்கு இல்லை, ஒட்டுமொத்தத் தமிழக மக்களுக்கும் இது அவமானம்.
அதிகாரம் குடியரசுத் தலைவரிடம் இருக்கிறது என்றால், நான்கைந்து நாட்களுக்குள் இதனை ஆளுநரே முடிவு செய்துவிடலாம் என்று நீதிமன்றம் சொன்னதே, அப்படியென்றால் நீதிமன்றம் சட்டத்தைப் பார்க்காமல் சொல்கிறதா?
ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்று நீதிமன்றம் சொன்னது பிழையா? அல்லது எனக்கு அதிகாரம் இல்லை என்று ஆளுநர் சொல்கிறாரே அது பிழையா?
கொல்லப்பட்டவர் ஒரு நாட்டின் பிரதமரென்பதால் நான் முடிவெடுக்க முடியாது என்கிறார் ஆளுநர். இது என்ன கூத்து? ஒரு குற்றம் என்ன என்பதைப் பார்த்துத்தான் வழக்கும் தீர்ப்பும் இருக்க வேண்டுமே தவிர, அந்தக் குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர் யார் என்பதைப் பொறுத்துத் தீர்ப்பு மாறுமா? யாராவது ஒரு சாதாரண மனிதர் கொல்லப்பட்டாரென்றால் அதற்கு ஒரு தீர்ப்பு, கொல்லப்பட்டவர் பெரிய மனிதரென்றால் வேறு தீர்ப்பு என்று சொன்னால் இது ஜனநாயக நாடுதானா?
இதே ஆளுநர் சென்ற ஆண்டு, தருமபுரியில் பேருந்து எரிப்பு வழக்கில் மாணவியர் துடித்து இறந்து போனார்களே, அந்த வழக்கில் அனைவரையும் விடுதலை செய்யவில்லையா?
இப்போதும் அரசியலமைப்பின் 161-வது பிரிவின்படி தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று சொன்னால் அந்த அடிப்படையிலேதான் 2018 செப்டம்பர் 9ஆம் தேதி ஒரு தீர்மானத்தை ஒரு மனதாக, சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது அரசு. அப்போதே அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
இரண்டரை ஆண்டுகள் எதுவும் நடைபெறவில்லை. இப்போது தனக்கு அதிகாரம் இல்லை என்று ஆளுநர் சொன்னால் என்ன நியாயம்?
இப்போதும் தமிழக அரசு இரண்டாவது முறை அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என்பதுதான் சட்டம். எப்படி?
குடியரசுத் தலைவராக இருந்த இராஜேந்திர பிரசாத் அவர்கள் பிரதமரோ அமைச்சரவையோ அனுப்புகின்ற எல்லாவற்றையும் நான் ஏற்க
வேண்டியதில்லை என்று சொன்னபோது, ஒருமுறை வேண்டுமானால் திருப்பி அனுப்பலாம். ஆனால், இரண்டாவது முறையும் அமைச்சரவை அந்தத் தீர்மானத்தை வலியுறுத்தி அனுப்பினால் குடியரசுத் தலைவர் ஏற்றாக வேண்டும் என்றுதானே விதி ஏற்படுத்தப்பட்டது.
அந்த விதி குடியரசுத் தலைவருக்குப் பொருந்துமானால் ஆளுநருக்கும் பொருந்தும்தானே?
எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிற மு.க.ஸ்டாலின் ‘‘அவர்களை விடுதலை செய்ய வேண்டும்’’ என்று மிக அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். இது தமிழனத்திற்கு மட்டும் விடப்பட்டிருக்கிற அறைகூவல் இல்லை. இது மனித நேயத்திற்கும் ஜனநாயக அமைப்புக்கும் விடப்பட்டிருக்கிற அறைகூவல்.
காத்திருக்கிறது தமிழகம். உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் காத்திருக்கிறோம். தமிழர்களைத் தொடர்ந்து அவமதிக்காதீர்கள். தமிழர்களின் உணர்வுகளைச் சீண்டாதீர்கள். தமிழகம் பொங்கி எழுந்தால் அதன் விளைவுகளைத் தமிழக அரசு சந்திக்க வேண்டி வரும்.
- சுப.வீரபாண்டியன்