குடியரசுத் தலைவரால் தங்கள் கருணை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட 18 பேரும் மரண தண்டனையை மீளாய்வு செய்யுமாறு உச்சநீதிமன் றத்தில் முறையீடு செய்திருந்தனர். இவர்களில் 15 பேரின் மரணதண்டனையை வாழ்நாள் தண்டனை யாகக் குறைப்பதாக 21.1.2014 அன்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. இத்தீர்ப்பை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சிவகீர்த்தி சிங் ஆகியோரைக் கொண்ட ஆயம் வழங்கியது. மாந்தநேயத்திலும், மானுட உரிமையி லும், சனநாயக நெறிமுறைகளிலும் பற்றுகொண்ட அனைவரும் இத்தீர்ப்பை வரவேற்றனர்.
இந்த 15 பேர் போக எஞ்சியுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் விண்ணப்பங்கள் மீதான விசாரணை 29.1.2014 அன்று உச்சநீதிமன்றத் தில் நடைபெறவுள்ளது. வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட 15 பேரில், பிலவேந்திரன், சைமன், ஞானப்பிரகாசம், மாதையன் ஆகிய நால்வரும் சந்தனக் காட்டு வீரப்பனின் கூட்டாளிகள். வீரப்பனைப் பிடிப் பதற்காக அமைக்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப் படை யினரில் 22 பேர் 1993 ஏப்பிரல் 9 அன்று பாலாறு காட்டுப் பகுதியில் கண்ணிவெடித் தாக்குதலில் மாண்ட னர். இக் கண்ணிவெடியை வீரப்பனின் கூட்டாளி களான இந்நால்வர்தான் வைத்தனர் என்ற குற்றச் சாட்டின் பேரில் இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
2012 திசம்பரில் தில்லியில் ஓடும் பேருந்தில் இளம் பெண் மீதான கொடிய பாலியல் வல்லுறவு நிகழ்ச்சி; 9.2.2013 அன்று அப்சல் குரு தூக்கிலிடப் பட்டமை; 12.4.2013 அன்று தேவேந்திர பால் சிங் புல்லாரின் மேல்முறையீட்டுக் கருணை விண்ணப் பத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்தமை; தில்லி இளம் பெண் மீதான பாலியல் வல்லுறவு வழக்கில் 2013 செப்டம்பரில் நால்வருக்கு விதிக்கப்பட்ட மரண தண்ட னைத் தீர்ப்பு; 23.11.2013 அன்று வெளியிடப்பட்ட ‘உயிர்வலி’ ஆவணப்படத்தில் பேரறிவாளன் வாக்கு மூலத்தில் “அந்தப் பேட்டரிகளை எதற்காக வாங்கி வரச் சொன்னார்கள் என்று எனக்குத் தெரியாது” என்று கூறியதைப் பதிவு செய்யாமல் விட்டது குறித்துப் புல னாய்வு அதிகாரி தியாகராசன் கூறியமை ஆகியவற் றால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மரண தண்டனை குறித்த விவாதங்கள் தொடர்ந்து ஊடகங்களில் நடந்து வருகின்றன. இந்நிலையில் 2014 சனவரி 21 அன்று உச்சநீதிமன்றம் 15 பேரின் மரண தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைத்திருப்பது மரண தண்டனை வேண்டுமா என்கிற விவாதத்தை மேலும் கூர்மைப் படுத்தியுள்ளது.
21.1.14 அன்று உச்சநீதிமன்ற அமர்வு 15 பேரின் மரண தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைத்ததற்கு, அவர்களின் கருணை விண்ணப்பங்கள் மீது அநியாயமாக ஏழு ஆண்டுகள் முதல் பதினொரு ஆண்டுகள் வரை காலத்தாழ்வு செய்யப்பட்டுள்ள தையே முதன்மையான காரணமாகக் கூறியுள்ளது. மேலும் எப்போது தூக்கிலிடப்படுவோம் என்று அவர் கள் ஆண்டுக்கணக்கில் அன்றாடம் சாவின் விளம்பில் உயிர் ஊசலாடியவாறு கொடிய மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருந்ததையும் கருத்தில் கொண்டதாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
மரண தண்டனைக் கைதிகள் தொடர்பாக உச்சநீதி மன்ற அமர்வு மேலும் சில நெறிமுறைகளை அறி வித்துள்ளது :
“அரசமைப்புச் சட்டத்தில் விதி 72இன் கீழ் குடியரசுத் தலைவருக்கும், விதி 161இன்கீழ் மாநில ஆளுநருக்கும் மரண தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கும் அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது, ஆனால், கருணை விண்ணப்பங்கள் மீது குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோர் முடிவு எடுப்ப தற்கான காலவரையறை எதுவும் அரசமைப்புச் சட் டத்தில் குறிப்பிடப்படவில்லை. அதனால் இதை அவர் களுக்கு அளிக்கப்பட்ட தனி உரிமையாகக் (Prerogative) கருத முடியாது. எனவே இது அரசமைப்புச் சட்டம் சார்ந்த அவர்களின் கடமையாகிறது. ஒரு நியாயமான கால வரம்புக்குள் கருணை விண்ணப்பங்கள் மீது முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அரசு நிர்வாகத் தலைமை அதற்கேற்ப விரைந்து செயல்பட வேண் டும். உரிய காரணமோ, விளக்கமோ இல்லாமல் கருணை விண்ணப்பங்கள் நீண்டகாலம் கிடப்பில் போடப்படும் நிலையில் உச்சநீதிமன்றம் தலையிட்டு அரசமைப்புச் சட்டத்தின் மாண்பினை நிலைநாட்டும்.
கருணை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பிறகும், முடிவு எடுப்பதில் ஏற்பட்ட காலத்தாழ்வு, கைதியின் மனநிலை பாதிப்பு, தனிமைச் சிறையில் வைத்திருத் தல், நெறிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படாமை ஆகிய காரணங்களின் அடிப்படையில் மரண தண்ட னைக் கைதிகள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய லாம். இதற்கான ஆவணங்களைச் சிறைத்துறை அளித்து உதவ வேண்டும்.
தூக்கிலிடுவதற்கு 14 நாள்களுக்கு முன்பு அது குறித்து எழுத்து வடிவில் மரண தண்டனைக் கைதிக் குத் தெரிவிக்க வேண்டும். அத்துடன் அருகில் உள்ள சட்ட உதவி மய்யத்திற்கும் இச்செய்தியைத் தெரிவிக்க வேண்டும். இது சிறைக் கண்காணிப்பாளரின் கடமை யாகும். மேலும் மரண தண்டனைக் கைதியின் உற வினர்களுக்குத் தெரிவிப்பதுடன், சிறையில் அவர்கள் இறுதியாகச் சந்திப்பதற்கும் அனுமதிக்க வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
ஆனால் அப்சல் குருவின் தூக்குத் தண்டனை யில் இந்த நெறிமுறை எதுவும் பின்பற்றப்படவில்லை.
அப்சல்குருவின் கருணை விண்ணப்பம் 3.2.2013 அன்று நிராகரிக்கப்பட்டது. ஆனால் 7.2.2013 அன்று மாலை தான் அவரது குடும்பத்திற்கு இது குறித்துப் பதிவு மடல் அனுப்பப்பட்டது. அப்சல் குரு 9.2.2013 ஞாயிறு காலை தூக்கிலிடப்பட்டார். அப்சல் குருவுக்கே அன்று விடியற்காலைதான் அவர் தூக்கிலிடப்படப் போகிறார் என்ற செய்தி தெரிவிக்கப்பட்டது. சிறைத் துறை அனுப்பிய கடிதம் அவர் தூக்கிலிடப்பட்ட அடுத்த நாள்தான் அவர் மனைவிக்குக் கிடைத்து. அப்சல் குரு, தான் சாவதற்கு முன் தன் மனைவி, மகன், தாய் ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்பு திட்டமிட்டே மறுக்கப்பட்டது. 13.12.2001 அன்று நாடாளுமன்றத் தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அப்சல் குரு மூளை யாகச் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டே இன்றளவும் ஒரு வினாக்குறியாக உள்ளது. தேசிய ஒருமைப்பாடு, இந்திய சனநாயகத்தைப் பாதுகாத்தல் என்பவற்றில் ஆளும்வர்க்கம் எந்த அளவுக்கு உறுதியுடன் உள்ளது என்பதைக் காட்டிக் கொள்வதற்காக அப்துல் குருவை அவசர அவசரமாகத் தூக்கிலிட்டுக் கொன்றது.
எனவே, தற்போது உச்சநீதிமன்றம், மரண தண்ட னைக் கைதிகளுக்கிடையில், பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டவர்கள், மற்ற கொலைக் குற்றங்களில் ஈடுபட்ட வர்கள் என்று பாகுபாடு காட்டக்கூடாது என்று கூறியுள்ளது. ஆனால் உச்சநீதிமன்றமே இத்தகைய பாகுபாட்டு மனப்போக்குடன் நடந்து கொள்கிறது. பஞ்சாப் காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்த புல்லார் 1993 செப்டம்பரில் தில்லியில் இளைஞர் காங்கிரசு அலுவலகத்தின் மீது குண்டுவீசித் தாக்கியதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். ஆனால் புல்லார் குறிவைத்த இளைஞர் காங்கிரசுத் தலைவர் எம்.எஸ். பிட்டா உயிர் தப்பிவிட்டார். இந்த வழக்கில் புல்லாருக்குத் தடா விசாரணை நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது.
மேல்முறையீட்டில் 17.12.2002 அன்று உச்சநீதி மன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு 2 : 1 என்ற விகிதத்தில் புல்லாரின் கோரிக்கையை ஏற்க மறுப்பதாக அறிவித்தது. மூன்று நீதிபதிகள் கொண்ட இந்த அமர்வின் தலைவராக இருந்த எம்.பி. ஷா, தன் தீர்ப்பில், “புல்லார் கூறியதாக உள்ள வாக்கு மூலம் உண்மைதான் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் காட்டப்படவில்லை. மேலும் இந்த வழக்கு, அரிதினும் அரிதானது என்கிற வகைப்பாட்டில் அடங்காது. எனவே மரண தண்டனை விதிக்கக் கூடாது” என்று கூறி யிருந்தார். மற்ற இரண்டு நீதிபதிகளான பசாயத்தும், அகர்வாலும் புல்லாரின் கருணை விண்ணப்பத்தின் மீது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் கருத்தைக் கேட்டறிந்து குடியரசுத் தலைவர் முடிவு எடுக்கலாம் என்று கூறியிருந்தனர். இந்த அறிவுரை பின்பற்றப் படவில்லை. ஆனால் குடியரசுத் தலைவராக இருந்த பிரதீபா பாட்டீல் 2011 மே 25 அன்று உள்துறை அமைச்சகம் அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில் புல்லாரின் கருணை விண்ணப்பத்தை நிராகரித்தார்.
எனவே புல்லார் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிங்வி, முகோபாத்யாயா ஆகியோர் 12.4.2013 அன்று, “கருணை விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்க ஆன காலதாமதம், தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைப்பதற்கு ஒரு காரணமாக அமையலாம். ஆனால் தடாச் சட்டம் மற்றும் அதுபோன்ற சட்டங்களின் கீழ் தண்டிக்கப்பட்டவர்களுக்கு அந்த நடைமுறையைச் செயல்படுத்த முடியாது” என்று கூறி கருணை விண்ணப்பத்தை நிராகரித்தனர். அதுமுதல் புல்லார் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே நீதிபதிகளான சிங்வியும், முகோபாத்யாயாவும் 2013 திசம்பரில் விதி 377-இன்படி தன்பாலின உறவு குற்றச் செயலேயாகும் என்ற பிற்போக்குத்தனமான தீர்ப்பை வழங்கினர்.
எனவே புல்லார் மரண தண்டனை வழக்கில் ஒவ்வொரு நீதிபதியும் வெவ்வேறான கருத்தைக் கொண்டிருந்தனர் என்பது தெளிவாகப் புலப்படுகிறது. ஆகவே மரண தண்டனை விதிப்பது என்பதில் நீதி பதியின் மனநிலை, குற்றஞ்சாட்டப்பட்டவரின் அரசியல்- சமூகம்-பணம் முதலானவற்றின் செல்வாக்கு, (கீழ் வெண்மணியில் தலித்துகள் 44 பேர் குடிசையில் பூட்டிக் கொளுத்தப்பட்ட வழக்கில் மேல்சாதிப் பண்ணை யாரான கோபால கிருஷ்ண நாயுடு சேரிக்குச் சென்று இதைச் செய்திருக்கமாட்டார் என்று கூறி விடுதலை செய்யப்பட்டார்). அப்போதுள்ள அரசியல் சூழ்நிலை (1975-77இல் இந்திராகாந்தியின் நெருக்கடி நிலையை உச்சநீதிமன்றம் ஆதரித்தது). ஆட்சியாளர்களின் எதிர் பார்ப்பு, ஊடகங்கள் மூலம் மக்களிடையே உருவாக்கப் பட்டுள்ள சிந்தனைப் போக்கு முதலானவை செல் வாக்குச் செலுத்துகின்றன.
இராசிவ் காந்தி கொலை வழக்கில் தடா சிறப்பு நீதிமன்றம் 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது முதல், தில்லியில் இளம்பெண் (நிர்பயா) மீதான பாலியல் வல்லுறவு வழக்கில் 2013 செப்டம்பரில் நால்வருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது வரையிலான வழக்கு களில், இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. நிர்பயா வழக்கின் தீர்ப்பில், “சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வுக்கு -எதிர்பார்ப்புக்கு (Collective Conscience of the Community)” மதிப்பளித்து இம்மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். ஒரிசாவில் கிறித்து வப் பாதிரி கிரஹம்ஸ்டெயின்சும் அவரது இரு மகன் களும் ஜீப்பில் உயிருடன் கொளுத்தப்பட்ட வழக்கில் குற்றவாளி இரபிந்திர பாஜிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஸ்டெயின்சின் கிறித்துவ மதமாற்றப் பிரச்சாரத்தால் இரபிந்திர பாஜி ஆத்திரம் கொண்டு இக்கொலையைச் செய்ய நேரிட்டதால் மரண தண்டனை வழங்கவில்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டது.
ஆகவே, மரண தண்டனை விதிக்கப்படுவதில் எண்ணற்ற தவறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாலும், தூக்கிலிட்டபின், அத்தவறுகளுக்குக் கழுவாய் இல்லை என்பதாலும், மரண தண்டனைக்கு அஞ்சிக் குற்றங்கள் நிகழ்வது குறையவில்லை என்ப தாலும், மானுட உரிமை வளர்ச்சி பெற்ற இன்றைய நாகரிக சமுதாயத்தில், ‘பல்லுக்குப்பல், கண்ணுக்குக் கண்’ என்கிற பழைய காட்டுமிராண்டித் தனமான தண்டனைகளுக்கு இடமிருக்கக் கூடாது என்பதாலும், அய்க்கிய நாடுகள் மன்றத்தில் உள்ள 193 நாடுகளில் 140க்கும் மேற்பட்ட நாடுகளில் மரண தண்டனை என்பது சட்டப்படி ஒழிக்கப்பட்டுள்ளது அல்லது நடைமுறைப் படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இசுரேல் நாட்டில் 1962க்குப்பின் எவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. 1994இல் தென்னாப்பிரிக் காவில் குடியரசுக்கான அரசமைப்புச் சட்டம் எழுதப் பட்ட போதே மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது. அதேபோல் தன்பாலின உறவு குற்றச் செயல் அல்ல என்றும் அறிவிக்கப்பட்டது.
2014 சனவரி 21 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, மரண தண்டனைக் கைதிகள் மனிதத் தன்மையுடன் நடத்தப்பட வேண்டும் என்பதை வலி யுறுத்தியுள்ளது. கருணை விண்ணப்பம் நிராகரிக்கப் பட்ட பின்னும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பை மேலும் கூடுதலாக்கி யுள்ளது. ஆனால் இரண்டு முதன்மையான வினாக் களுக்கு விடை கூறப்படவில்லை என்று இத்தீர்ப்பு குறித்து ஊடகங்களில் எழுதப்பட்ட திறனாய்வுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏற்றுக் கொள்ள முடியாத அளவிலான காலத் தாழ்வினைக் காரணமாகக் காட்டி 15 பேரின் மரண தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைத்த உச்சநீதிமன்றம், எத்தனை ஆண்டுகளுக்குள் கருணை விண்ணப்பத்தின் மீது முடிவு எடுக்க வேண்டும் என்பதை வரையறுத்துக் கூறவில்லை. விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வலி யுறுத்தியிருப்பதன் அடிப்படையில், உரிய முறையில் ஆராயாமலேயே கருணை விண்ணப்பங்கள் இந்திய நிர்வாகச் செயல்முறைக் குளறுபடிகளால் நிராகரிக்கப் படுவதற்கான வாய்ப்புகள் மிகுதி. எனவே காலவரம்பு என்ற ஒன்றை வகுப்பதைவிட, மரண தண்டனை என்பதை ஒழிப்பதே சரியான தீர்வாகும்.
மரண தண்டனையை வாழ்நாள் தண்டனை யாகக் குறைத்த பிறகு, இந்தக் கைதிகள் குறிப்பிட்ட ஆண்டுகள் சிறையில் கழித்திருந்தால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றோ அல்லது சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்றோ இந்தத் தீர்ப்பு தெளிவுபடுத்தவில்லை என்று ‘தினமணி’ நாளேடு 24.1.2014 அன்று தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
இராசிவ் காந்தி கொலை வழக்கில் 26 பேருக்கு, தடா நீதிமன்றத்தில் மரண தண்டனை பெற்றுத் தந்ததில் பெருமிதம் கொண்டவரும், பிறகு நடுவண் புலனாய்வுத் துறையின் இயக்குநராக இருந்தவரு மான டி.ஆர். கார்த்திகேயன் உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து மூன்று கருத்துகளைத் தெரிவித்துள்ளார். (1) குற்றங்களை நிரூபிக்கக் கடுமையாக உழைத்த காவல் துறைக்கும் புலனாய்வுத் துறைக்கும் இக்குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமும் வருத்தமும் தருவதா கும். (2) இராசிவ் கொலை வழக்கில் இருபது ஆண்டு களுக்கும் மேலாகச் சிறையில் இருப்பவர்களைத் தூக்கிலிடுவது என்பது இரண்டு தடவை தண்டிப்பது போன்றதாகும். 21.1.14 அன்றைய தீர்ப்பு பல நாடு களில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது போன்ற நிலை ஏற்பட வழிகோலும். (3) மரண தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப்பெற்றவர்கள் அவர்கள் சாகின்ற வரையில் சிறையிலேயே இருக்க வேண்டும் (The Hindu , 23.1.14). ‘இத்தகைய மனம்’ கொண்ட கார்த்திகேயன், தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராகவும் அமர்த்தப்பட்டார்.
இத்தீர்ப்பு காவல்துறைக்கும் புலனாய்வுத் துறைக் கும் ஒரு பின்னடைவு - அவர்களின் ஊக்கத்தைக் குலைக்கும் என்று கார்த்திகேயன் புலம்புகிறார். ஆனால் இதே காவல்துறையினராலும் துணை இராணுவப் படையினராலும், சிறப்பு அதிரடிப் படையினராலும் இலட்சக்கணக்கான ஏழை எளிய குடும்பங்கள் கொடிய வன்முறைக்கு ஆளாகி அல்லல்பட்டு அழிந்து கொண்டி ருக்கின்றனவே!
குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மனப்புண் ஆறாது என்பது உண்மைதான். உண் மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை எவரும் மறுப்பதில்லை. ஆனால் பொற் கோயிலில் ‘நீல நட்சத்திர நடவடிக்கை’ என்ற பெயரில் இந்திராகாந்தி இராணுவத்தை ஏவி ஆயிரக்கணக் கான அப்பாவி சீக்கியர்களைக் கொன்றாரே! அது அரச பயங்கரவாதமில்லையா! 1984இல் இந்திராகாந்தி கொல்லப்பட்ட போது, தில்லியில் மட்டும் மூவாயிரம் சீக்கியர்கள் காங்கிரசுக் கட்சியின் காலிகளால் படு கொலை செய்யப்பட்டனரே - அவர்களின் உயிர்களுக்கு மதிப்பில்லையா? 1993 சனவரியில் மும்பை நகரில் சிவசேனை - பா.ச.க. - ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட முசுலீம்களைக் கொன்றார்கள். இதுகுறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா குழுவின் அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கவில் லையே! 2002 குசராத்தில் கோத்ரா இரயில் பெட்டி எரிப்பையொட்டி இந்து வெறியர்களால் ஆயிரத்துக்கு மேற்பட்ட இசுலாமியர்கள் படுகொலை செய்யப்பட்ட னரே - மோடி ஆட்சியின் முழுப் பாதுகாப்புடன்! அந்த மோடி இப்போதே பிரதமராக வந்துவிட்டது போல் இந்தியா முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறாரே!
அரசியல்வாதிகள், காவல்துறை, கிரிமினல்கள் ஆகியோரின் கூட்டு தான் நாட்டில் குற்றங்கள் பெருகுவதற்குக் காரணம் என்று பத்து ஆண்டுகளுக்கு முன்பே நடுவண் அரசு அமைத்த வோரா குழு அறிக்கை அளித்தது. காவல்துறையை - சிறைத் துறையைச் சீர்திருத்த வேண்டும் என்று அரசு அமைத்தக் குழுக்களின் அறிக்கைகள் மீது எந்தக் கட்சி ஆட்சிக்கு வந் தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆங்கிலேயன் 1860இல் வகுத்த குற்றவியல் சட்டமே ‘குடியரசு-இந்தியாவை’ ஆள்கிறது! ஏனெனில் இது ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்திற்கு வசதியாக இருக்கிறது.
24.1.14 அன்று ‘தி இந்து’ தமிழ் நாளேட்டில் வந்துள்ள ஒரு செய்தி - அரியலூர் மாவட்டம், பருக்கல் கிராமத்தைச் சேர்ந்த 67 அகவையினரான தென் தமிழனுக்கு ஒரு மாத கால பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 1986இல் மருதையாற்றுப் பாலத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்புத் தொடர்பான வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர். பிறகு அது வாழ்நாள் தண்டனை யாகக் குறைக்கப்பட்டது. திருச்சி சிறையில் ஒருகால் உடைந்து நடக்க இயலாத நிலை ஏற்பட்டது. சுய நினைவின்றி திருச்சி அரசுப் பொது மருத்துவமனை யில் மூன்று மாதங்களாக இருந்து வருகிறார். அவருடைய மகள் செங்கொடியின் முயற்சியால் தென் தமிழனுக்கு ஒரு மாத பரோல் வழங்கப்பட்டுள்ளது. தன் தந்தையின் உடல்நிலை கருதி அவரை விடு தலை செய்ய வேண்டும் என்று செங்கொடி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிறைத் தண்டனை என்பது உடலும் உயிரும் துடிதுடிக்கத் துன்புறுத்துவதற்கானதன்று; செய்த தவறை உணர்ந்து திருந்துவதற்காகவேயாகும். குற்றத் திமிங்கலங்கள் சுதந்தரமாகத் திரிந்து கொண்டிருக்கின்றன. குட்டி மீன்களே சிறையின் வலையில் சிக்கி விடுகின்றன என்பது கண்கூடான உண்மையாகும். தண்டனை பெற்றவர்கள் சாகும் வரையில் சிறையிலேயே இருக்க வேண்டும் என்பது குகை வாழ்மனிதர் காலத்துச் சீரழிந்த சிந்தனையாகும்.
எனவே வாழ்நாள் தண்டனை பெற்றவர்கள் தற்போது பெரும்பாலும் 14 ஆண்டுகளுக்குள் விடுதலை செய்யப்படுகின்றனர். சிறையாளிகளின் நன்ன டத்தையை ஆண்டுதோறும் மதிப்பீடு செய்ய சிறைத் துறைக்கு அப்பாற்பட்ட தன்மையிலான ஒரு ஆன்றோர் குழு உள்ளது. மேலும் சிறையாளி களின் உடல்நலம், மனநலம் ஆகியவற்றைப் பேணிட உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். ஆண்டு தோறும் ஆன்றோர் ஆய்வுக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சிறையாளிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
எனவே, உடனடியாக 14 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள மரண தண்டனைக் கைதிகள் அனை வரின் தண்டனையையும் வாழ்நாள் தண்டனை யாகக் குறைத்து, அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்; மரண தண்டனை என்பது சட்டப்படி ஒழிக் கப்பட வேண்டும். இவை உடனடியாகச் செயல்பாட் டுக்கு வரும் வகையில், 2014 ஏப்பிரல் மாதம் நடை பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எல்லா அரசியல் கட்சிகளும் தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இக்கோரிக்கைகளை ஏற்குமாறு மக்கள் திரள் பேரணி கள், பொதுக்கூட்டங்கள் மூலம் அழுத்தம் தரவேண்டும்.