சொல்லும் பொருளும் 1

சசிபெருமாள் என்னும் முதிய காந்தியவாதி மது எதிர்ப்பாளர்களின் ஒற்றைப் பிரதிநிதியாக 34 தினங்கள் உண்ணாவிரதம் இருந்து, பிறகு அதனை முடித்துக் கொண்டார். பூரண மதுவிலக்கு என்பது காலம்காலமாக கூவப்பட்டு வருகிற பழைய வேண்டுதல் தான் என்றாலும், அதனை சாதிப்பதற்கு சசிபெருமாள் போன்ற முதிய தனிமனிதர்களால் இயலுமா என்னும் வினா சோர்வைப் பொழிகிறது. மதுவை அரசாங்கம் விற்கலாமா? என்பது நெடுங்காலக் கேள்வி. மதுவைத் தனியார் வசமாக்குவதல்ல இதன் நோக்கம். ஒரு சமூகம் மதுவை முற்றிலுமாகக் கைவிடுவதற்கு முன் அதனை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கட்டுப்படுத்துவது தான் ஒரு அரசின் கடமையாக இருக்க முடியும். அதற்கெதிரான சாலையில் விரைந்து கொண்டிருப்பது வேதனை.

மதுவிலக்கு என்பதை விட "பார்கள்" ஒழிக்கப்படுவது நல்லதொரு முன் நகர்வு. டாஸ்மாக் என்ற பேரில் அரசு மது விற்கிற பார்களின் வாசலில் தினந்தினம் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சீலர்களால் நிறுத்தப்பட்டு,  மயங்கியவர்களால் எடுக்கப்படுவது கொடுமை. தினந்தோறும் சாலைகளில் ஓடுகிற வாகனங்களில் எத்தனை சதம் மது அருந்தியவர்களால் ஓட்டப்படுகின்றன என்பது தலை சுற்றச் செய்யும் புள்ளிவிபரம்.

இன்னுமொரு வஞ்சகத்தை சொல்லியாக வேண்டும். திரையரங்குகளில் மூத்தபிள்ளை போக்கிரி; அடுத்த பிள்ளை கொலைகாரன் என்கிறாற் போல புகைப்பழக்கம் உயிரைக் கொல்லும்; புகைப்பிடித்தல் கேன்சர் நோய்க்கு ஆளாக்கும் என்று புகைப்பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரத்தில் காணப்படுகிற கடுமையும் கவனமும் அதற்கடுத்து சொல்லப்படும் "மது அருந்துதல் உடல் நலத்துக்குத் தீங்கானது" என்பதாக நெகிழ்ந்து விடுவது உற்று நோக்கினால் புகைப்பழக்கத்தில் உழல்பவர்களை மதுவின் பால் திருப்புகிற சதியாகக் கூட இருக்கலாம் என்னும் ஐயம் எழாமல் இல்லை.

சமீப முன் காலத்தில் 'மது வீட்டுக்கு நாட்டுக்கு உயிருக்குக் கேடு' என்னும் வாசகம் இருந்ததையும். பிறகு அரசு முகம் மாறி "மது வெறும் தீங்கு" என்ற அளவிற்கு நீர்த்துப் போயிருப்பதையும் உணரலாம். மேலும் அது மதுவின் பிடிமானத்தில் தொடர்ந்து தன் மக்கள் இருப்பதைப் புள்ளிவிவரங்களில் அதிகரிக்கும் இலக்கங்களின், ஏறுமுகமாக இருக்கும் வரைபடக் கோடுகளின் வாயிலாக மௌனமாய் ரசிக்கிறது.

மதுவின் தலையாய தீமை அதில் புழங்கும் பணம் என்பதை உணர்ந்த எவருக்கும் இது போராடித் தீர்த்துவிடக் கூடிய பிரச்சினை அல்ல என்பது நன்றாய்ப் புரியும். மதுப்பழக்கம் சில நபர் போராட்டங்களால் முடிவுக்கு வரக் கூடியதல்ல. மதுவிலக்கும் நிரந்தரத் தீர்வல்ல. மது என்பது தனிநபர் ஒழுக்கம் சார்ந்தது. அதனை தொடாமல் கைவிடுவது என்பது ஒவ்வொருவரும் தனித்தனியே செய்தாக வேண்டிய சாகசம். கல்வி வளர்ச்சியின் வாயிலாக அது சாத்தியமாகலாம். காலம் ஆகும்.

Pin It