ஒருவனுக்கு மூன்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அவன் ஒரு குழந்தையை கொலை செய்ய வேண்டும், அல்லது ஒரு பெண்ணை வன் புணர்ச்சி வேண்டும், அல்லது மதுவை அருந்த வேண்டும். இதில் கட்டாயம் அவன் ஒன்றை தேர்ந்தெடுத்தே ஆக வேண்டும் என்பது அரசனின் கட்டளை. இதற்கு அவன் சிறிது நேரம் யோசித்தான். பிறகு குழந்தையை கொல்வது பாவம், பெண்ணை வன்புணர்ச்சி செய்வது தவறான செயல், மதுவை தேர்ந்தெடுப்பதால் பிறருக்கு ஒன்றும் தீங்கில்லை. எனவே அவன் மதுவை தேர்ந்தெடுத்து அருந்தினான். அதனால் போதை தலைக்கேறியது. அதனால் அப்பெண்ணை வன்புணர்ச்சிக்கு முயற்சி செய்தான் அதற்கு இடையூறாக அந்தக் குழந்தை இருந்ததால் அதனைக் கொன்றான். பின் அப்பெண்ணையும் கெடுத்து விட்டான். இதிலிருந்து என்ன தெரிகிறது. குடிப்பது பாவம், குடிக்கிறதால அறிவில்லாமல் போயிடும் அவன் முட்டாள் ஆயிடுவான்என்று குடி பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? என்று நண்பர் ஒருவரிடம் கேட்டதற்கு அவர் இந்த கதையை கூறி எனக்கு அறிவுரை வழங்கினார்.

அக்கதை தொடர்பான வினாக்கள் விவாதங்கள் ஒருபுறமிருந்தாலும், அவர் கூறியதிலிருந்து நாம் பெறப்படுவது பொதுபுத்தியில் குடி என்பதும், குடிப்பதைவிட கொலை செய்வதும், வன்புணர்ச்சியில் ஈடுபடுவதும் சரியெனவும், குடிப்பதுதான் பெருங்குற்றம் என்று கூறுவது இதுபோன்ற நீதிக்கதைகள் கூறுவது ஆகிய கருத்தாடல்கள் வெகுசன மக்களிடையே இன்று நிலைத்திருக்கும் என்னவோட்டத்தின் வெளிப்பாடாகும். மரபான இதுபோன்ற கதைகள் ஏராளம். அது குடிப்பவர்களிடையேயும், மெத்த படித்த அறிவு ஜீவிகளிடமும் கூட படிந்திருக்கும் கருத்தாகும். அதேபோல ஒழுக்கவாதிகளும், சமயவாதிகளும் குடிப்பவர்களை அருவருக்கத்தக்க ஜந்துக்களாக பார்ப்பதும், அவர்கள் மீதான தங்கள் சுய கருத்துரைகளை பொதுமைப் படுத்துதல் இன்று இயல்பான ஒன்றாக உள்ளது.

இதன் பின்னணியில் குடிகுறித்த புரிதலும் அதன் மீதான விவாதமும் இன்று அவசியமான ஒன்றாக உள்ளது. மேலும் தமிழகத்தை பொறுத்தவரை குடிப்பவர்களின் எண்ணிக் கையும், ‘டாஸ்மார்க்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்வதை அனைவரும் அறிந்த ஒன்றே. இதற்கான காரணமென்ன? இவ்வினாவிற்கான பதில்கள் எதுவாக இருப்பினும், ஒரு சமூகம் சமகாலத்தில் எதை நோக்கி / எதன் ஊடாகப் பயணிக்கிறது என்பதை பிரக்ஞை பூர்வமாக விவாதிக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது.

மேற்குறிப்பிட்ட இவையனைத்தும் மேற்கிளப்பும் முகாந்திரமாக முத்தையா வெள்ளையனின் குடியின்றி அமையா உலகு.... (கட்டுரைகளின் தொகுப்பு) வெளிவந்துள்ளது. புலம் வெளியீடான இந்நூல் பல்வேறு கட்டுரையாளர்களின் வழியே குடியின் ஆணிவேர்களை அகழ்ந்தெடுத்துள்ளன. இத்தொகுப்பின் மூலம் பெரிய விவாதப் பொருளை தமிழ்ச் சூழலில் முன்வைத்துள்ளார்.

தந்தை பெரியார், அ. மார்க்ஸ், விக்ரமாதித்யன், ஜெ. பிரான்சிஸ் கிருபா, நாஞ்சில் நாடன், ஜமாலன், ஹெச்.ஜி. ரசூல், பெருமாள் முருகள், ரெங்கையா முருகன், ஹரி சரவணன் ஆகியோரின் குடி தொடர்பான கருத்தாடல்கள் சற்று ஊன்றி கவனிக்கத்தக்கது. இவர்களுடைய கருத்துகளின் மைய நீரோட்டத்தை முத்தையா வெள்ளையனின் மொழியின் வழியாகவே கூறலாம்.

குடியைப் பற்றியப் புத்தகம் வந்து இருக்கிறதா என்று தேடியபோது தன்னை மறந்து இருக்கிற உணர்வைத்தரும் குடிக்கு எதிரான, குடி ஒரு நோய் என்கிற புத்தகங்களே கிடைத்தன. ஆதரவான புத்தகங்கள் ஒன்றுகூட கிடைக்கவில்லை’. குடிக்கு ஆதரவான எதார்த்த எடுத்துரைப்புகளாகவே இக்கட்டுரைகளின் மையப்புள்ளி அமைகிறது.

இந்நூலின் ஒரு சில கருத்துகளை முன்வைப்பதற்கு முன் சில புரிதல்கள் அவசியமாகிறது. இன்று நாம் அறிந்திருக்கும் குடிக்கும், நம் தாய்-தகப்பன்கள் உணவாக, மருந்தாக குடித்த குடிக்குமான தொப்புள்கொடி அறுத்த நிலையை உணர முடிகிறது. சங்க இலக்கியங்கள் சார்ந்த இனக்குழுக்களின் -குடிஎன்பது கள்ளுண்ணுதல், உண்டாட்டு போன்ற குடியை கொண்டாடிய வாழ்க்கை பின்னாளில் ஐரோப்பிய காலனிய ஆதிக்கத்தின் பின் உருவான கெமிக்கல்ஸ்கலந்த திரவத்தின் மூலம் புட்டிகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் குடிக்கும் நேர் எதிர் நிலையை உள்வாங்குதல் அவசியம். இவ்விரு பண்பாட்டையும் ஒன்றென கருதுவது வரலாற்று புரிதலின்மையின்பாற்படும்.

பெருமாள் முருகன், நாஞ்சில் நாடன் முன்வைக்கும் சில செய்திகள் இன்றைய பண்பாட்டு கலாசார சூழலோடு விவாதிக்கபட வேண்டியவை. சங்க காலத்தில் பெண்கள் கள்ளுண்டார்கள், ஆண்களோடு சேர்ந்து மது அருந்தினார்கள், வீரத்தின் அடையாளமாக போரில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு வேந்தன் கொடைகளை வழங்கி கள்ளையும் கறியையும் கொடுத்து கொண்டாடினார்கள்.

சங்க கால இனக்குழுச் சமூக நீட்சியாகவே இன்றும் பல்வேறு இனக்குழு சமூகங் களிடையே கள்ளுண்ணுவது, சாராயம் குடிப்பது போன்ற மதுவகைகளை அருந்துவதை ரெங்கையா முருகன் மற்று ஹரி சரவணன் கட்டுரை மூலம் கள ஆய்வுச் செய்திகளை பகிர்ந்து கொள்ள முடிகிறது. பெரும்பாலான நாடோடி இனக்குழுக்களிடமும், கிராமப்புறங்களிலும் குடிப்பது என்பது தவறான ஒன்றாக கருதவில்லை. குலதெய்வ வழிபாட்டு முறையில் குடிபொருள். தெய்வத்திரு படைக்கப்பட்ட பிறகு பிரசாதம் எனக்கூறி குடும்பத் தலைவர்கள் அருந்துவது இயல்பு. குடித்துவிட்டு அருள்கூறுவது, காட்டேரி, முனி, பூவாடைக்காரி கும்பிடுவது போன்ற நிகழ்ச்சிகளில் இது நடைபெறுவதை பார்க்கலாம். இதை யாரும் குற்றமாக கருதுவதில்லை.

இதற்கு எதிரான நிலையில் மதநூல்களும், நீதிநூல்களும் தோன்றிய காலத்தில் சமய சித்தாந்தக் கருத்துகளை முன்நிறுத்தி தனிமனித ஒழுக்கங்களை மதங்கள் வரையறுக்கத் தொடங்கிற்று.

இதில் சமண-பௌத்த நிலைபாடுகள் மிக முக்கியமானவை. சமயம் பரப்புவதற்கான முதன்நிலை செயல்பாடாக குடியை குற்றச் செயலாகவும் புலால் உண்ணாமை, பெண்கள் மீதான ஒழுக்க முறைமைகளையும், அவைதீக மரபின் பின்னணியிலிருந்தே வைதீக மரபுகளும் கைகொள்ளத் தொடங்கின. மக்களை தன்வயப்படுத்துதலில் நிகழ்ந்த சமயப்போட்டிகள் அதன்மூலம் உருவான ஒழுக்கம் சார்ந்த விழுமியங்கள் குறித்து ஜமாலன் மற்றும் அ. மார்க்ஸ் கட்டுரைகளில் காணலாம்.

இதன் தொடர்ச்சியாக இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ மதங்களின் குடி மீதான பார்வை இங்கு முன்வைக்கப்படுகிறது. இஸ்லாத்தின் குடிக் கலாசாரம் குறித்த ஹெச்.ஜி. ரசூல் கூறும் செய்திகள் இஸ்லாமிய அறிஞர்கள் விவாதிக்க மறந்த மற்றொரு அத்தியாயத்தை இதன்மூலம் திறந்து வைக்கிறார். இறுக்கமான சமூகமாககுறிப்பிடப்படும் இஸ்லாத்தில் குடிமீதான பார்வை சங்க கால மரபோடு தொடர்புபடுத்தி கூறலாம். அதாவது இயற்கை சார்ந்த பொருட்களை (பழரசம்) கொண்டு மதுவை உற்பத்தி செய்தல் என்பதை ஏற்கிறது.

ஆனாலும் திருக்குர் ஆனின் மொத்தமுள்ள 6236 வசனங்களில் மூன்று வசனங்கள் மட்டுமே மதுபானம் அருந்துதல் பற்றி குறிப்பிடுகிறது.

கிறித்துவத்தில் குடி மீதான பார்வை சற்று நெகிழ்வுத் தன்மையுடையதாக காணலாம். மீதமான குடியை ஆதரித்தும், மிகைக் குடியை கண்டித்துள்ளது. ஆனால் மதுவை ஒதுக்கவில்லை என்பதே உண்மை. கிறித்துவ ஆலயங்களில் பாதிரிமார்களால் இன்றளவும் அப்பம் ஒயினில் நனைத்து வழங்கப்படுகிறது. (ஏசுவும் தனது கடைசி விருந்தில் ஒயின் அருந்தினார்.)

வரலாற்று நெடுங்கிலும் குடி தொடர்பான வெவ்வேறு வகையிலான பார்வையில் புரிந்துணர்களும் இருந்து வந்துள்ளன. ஆனால் அரசு சார்ந்த அதிகாரங்கள் இதனை கைகொள்ளும் போது குடி மீதான விழுமியங்கள் மாற்றி கட்டமைக்கப்படுகின்றன. இதன் அடிசரடாக நாம் இன்னொரு விஷயத்தையும் பார்க்க வேண்டும். பெரியார் குறிப்பிடும் இவ்வார்த்தைகள்:- அரசாங்கம் தலையிட்ட பிறகே மது கேவலமாக்கப்பட்டது. கள்ளை விஷமாக்காமல் தோப்பிலேயே விற்க அனுமதிக்க வேண்டும்அன்றும் சரி, இன்றும் சரி கள் இறக்க பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அரசும், அரசியல் கட்சிகளும் மௌனமாயிருப்பது வழக்கமான ஒன்றாகி விட்டது.

தனிமனித அனுபவத்தின் ஊடான விக்ரமாதித்தன், பிரான்சிஸ் கிருபா கட்டுரைகளை குடி மீதான மற்றும் சில கோணங்களில் வெகுசன மக்களின் பிரச்சனைகளை முன்நிறுத்தி செல்கின்றன. குடியே பிரதானமாக நாள்முழுவதும் குடிப்பவன், பொண்டாட்டி தாலியை அறுத்து அடகுவைத்து குடிப்பவன் இவர்கள் மீதான பார்வை என்னவாக இருக்க வேண்டும்? என்ற கேள்வி எழுகிறது. தன்னை இழந்த சூழ்நிலையில் அவன் பொருளாதார ரீதியாக சுரண்டப்படுவதையும் விளங்கிக்கொள்ள வேண்டும்.

இதற்கு விக்ரமாதித்தன் கூறும் விஷயத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். குடியைக் குறையாகவோ (அ) கேவலமாகவோ நான் பேச முடியாது. ஆனால் மறுபக்கமாக அதைப்பற்றி உயர்வாகவும் பேச முடியாது. ஏனெனில் அவ்வளவு துன்பங்களையும் என் அம்மாவும், மனைவியும், பிள்ளைகளும் தாங்கியிருக்கிறார்கள்.

குடிப்பதற்கான நியாயப்பாடுகளை தருவதற்கு நாம் யாரும் தவறுவதில்லை. குடிப்பதற்கு ஒவ்வொருவரும் காரணங்களை கூறலாம். (அது உண்மையானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை). குடும்பம் என்ற அமைப்பு சார்ந்த சமூகத்தில் ஆண்களை முன்நிறுத்திய சமூகத்தில் பெண்ணின் நிலைப்பாடு சார்ந்து மேலெழுப்பிய கேள்வி இத்தொகுப்பினுள் என்னவாக இருக்கும் என்றால் அது கேள்வியே. இது ஒருபுறமிருக்க, மற்றொரு புறம் மக்களின் வாழ்க்கை பற்றி சிறிதும் அக்கறையில்லாத மாநில அரசுகளும், பிரதான அரசியல் கட்சிகளும், ‘குடி குடியை கெடுக்கும்என்ற வாசகத்தை கிளிப்பிள்ளை போல தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளும், ஓட்டு அரசியலுக்காக, ஆள் சேர்ப்பதற்கு தங்கள் கட்சி மாநாடுகளுக்கும், கட்சி கூட்டங்களுக்கும், ‘குவாட்டரும் பிரியாணியும்வாங்கித் தருவதும் தேர்தல் நேரங்களில் சரா£யமும், குவார்டரும் தான் ஓட்டு வங்கிகளை நிரப்புகின்றன என்பதே நிதர்சனம்.

வரலாற்றை பார்க்கும் போது குடியை போற்றிய / கொண்டாடிய சமூகம் இன்று அதற்கு நேர் எதிர்நிலையில் இருப்பது துரதிருஷ்டவசமானது. ஆனால இன்று பிரதான பிரச்சனையாக முன்னெடுக்க வேண்டிய சமூக பிரச்சனையும் இதுவே. அந்த வகையில் குடி தொடர்பான பல பிரச்சனைகளை மேற்கிளப்பும் கட்டுரைகளை ஒரு சேர தொகுத்த இம்முயற்சி பெருமுயற்சியே.

இருப்பினும் இத்தொகுப்பினுள் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் சில ஏற்கெனவே நூல்களிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன. அதனை மீண்டும் இத்தொகுப்பில் தரவேண்டிய அவசியமென்ன? (இத்தொகுப்பிற்கு தேவையானதாக இருப்பினும்) ஒரு கட்டுரையை திரும்ப திரும்ப வாசிக்கும் வாசக மனநிலையை ஒரு திசை நோக்கிய முயற்சியாக பார்க்க முடிகிறது.

மேலும் பண்பாட்டு ரீதியில் மாற்றுக் கலாசாரத்தை விரும்பும் இத்தொகுப்பு குடி’-மக்களின் பொருளாதார சுரண்டலின் அரசியலை காத்திரமாக முன்வைக்காதது ஏன்? என்பதன் ஊடாக ஜோசப் ரோத் (The legend of the holy drinker), பிளேட்டோ போன்ற ஆங்கில நூல்களை முன்நிறுத்த வேண்டியுள்ளது.

வரலாற்றில் குடிதொடர்பான ஆய்விற்கும், விவாதத்திலும் ஆதார நூலாக மட்டுமில்லாமல் சமுக பிரக்ஞை கொண்ட கலகக் குரலாகவே இத்தொகுப்பைப் பார்க்கலாம்.

 

Pin It