கீற்றில் தேட...

 

மூன்றடுக்கு பாதுகாப்பு, நான்கடுக்கு பாதுகாப்பென தமிழக மக்களின் மனப்பதிவுகள் பூட்டப்பட்ட கதவுகளுக்கு பின்னால் பல பெட்டிகளில் ஒருமாத காலம் பத்திரமாக பாதுகாக்கப்பட்டது. மே 13 அன்று திறக்கப்பட்ட பெட்டிகள் தெளிவாக வெளிப்படுத்தியது மக்களின் உணர்வை. ஆம். ஆளும் அரசின் மீதான எதிர்ப்பையும், புதிய அரசின் மீதான எதிர்பார்ப்பையும்தான்.

ஊழலும், குடும்ப ஆதிக்கமும் குழிதோண்டி புதைத்திருக்கிறது திமுக வை. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, 108 அவசர உதவி வண்டி, கலைஞர் காப்பீட்டு திட்டம், இலசவ டிவி, இலவச எரிவாயு அடுப்பு என எப்போதும் போல் பட்டியல் இட்டுக்கொண்டே இருந்தார், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள், பட்டியல் இடுவதும், பட்டியலை அறிக்கையாகவும், உடன்பிறப்புகளுக்கு கடிதமாகவும் எழுதுவதில் எப்போதும் அவர் சளைத்தவர் இல்லையே? ஆனால், மக்களும் பட்டியல் போட தவறவில்லை.

1,76,000 கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்றாலும் வெங்காயம் கிலோ 100 ரூபாய், டிவி சேனல், எப்எம் ரேடியோ, சினிமா, ஊடகம் என அனைத்திலும் குடும்ப ஆதிக்கம், மணற் கொள்ளை, நிலமோசடி, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு இப்படி பட்டியல் நீளூம். இந்த பட்டியலின் வினை தான் மக்களை ஏப்ரல் 13 அன்று நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்க வைத்தது.

       தமிழகத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் 70.82 சதம். ஆனால் இந்த தேர்தலில் 78.80 சதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பணியை நிச்சயம் பாராட்டாமல் இருக்க முடியாதுதான். அதே சமயம் தேர்தல் ஆணையமே ஒப்புக் கொண்டது போல், பிடிபட்ட பணம் நூறில் ஐந்து சதவிகிதம் தான். இத்தனை கெடுபிடிகளையும் தாண்டி பணம் பட்டுவாடா தமிழகம் முழுவதும் தேர்தலுக்கு முந்தைய இரண்டு நாட்களில் வெகு ஜோராக நடந்துள்ளது. சாதனை பட்டியலை நம்பி ஒன்றும் இவர்கள் தேர்தலை சந்திக்கவில்லை என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். ஒருவேளை எப்படியும் ஆட்சியை விட்டுப் போகப்போகிறோம் கொள்ளையடித்ததில் கொஞ்சத்தையாவது மக்களுக்கு பிரித்து கொடுத்துவிட்டு போகலாம் என நினைத்தார்களோ என்னவோ.

எப்படியோ மக்கள் தாங்கள் ஏமாளிகள் அல்ல என்பதை தங்கள் வாக்குகள் மூலம் தெளிவாக்கிவிட்டனர். பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை கூட திமுக வால் பெறமுடியவில்லை. பிரதான எதிர்க்கட்சி என்பதற்கு சில அடிப்படைகள் உண்டு (1) மொத்த தொகுதி எண்ணிக்கையில் 10 சதம் இடத்தை பெற்றிருக்க வேண்டும் அதாவது 234ல் 24 இடத்தையாவது பெற்றிருக்க வேண்டும். ஆனால் திமுக பெற்றது வெறும் 23 மட்டுமே. (2) ஆளும் கட்சிக்கு அடுத்த படியான இடத்தை பெற்றிருக்க வேண்டும். ஆளும் கட்சிக்கு அடுத்த இடத்தை பெற்றிருப்பது 29 இடத்தில் வென்ற தேமுதிக தான். பட்டியல் மேல் பட்டியல் போட்ட திமுக, தேர்தல் பட்டியலில் மூன்றாவது இடைத்தைத்தான் பெற முடிந்தது.

போட்டியிட்ட அமைச்சர் பெருமக்களில் 18 அமைச்சர்கள் தோல்வியை தழுவியுள்ளனர். திமுக வின் பொதுச் செயலாளரும், நிதி அமைச்சருமான பேரா. அன்பழகன், பொன்முடி, கே.என்.நேரு, வீரபாண்டி ஆறுமுகம் என பலரும் தோற்றுப் போயுள்ளனர்.

63 சீட்டுகள் கொடுக்க வேண்டும். அதுவும் நாங்கள் கேட்கும் இடங்கள்தான் கொடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்டளை போட்ட காங்கிரஸ் வெறும் 5 இடத்தில்தான் வென்றது. காங்கிரசில் உள்ள எதிர் அணி, இல்லை, இல்லை பல எதிர் அணிகளில் ஒரு அணியின் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இதை 63 நாயன்மார்களாக களம் கண்டவர்கள், பஞ்ச பாண்டவர்களாக வந்திருக்கிறார்கள் என்றார்.

மூன்று இடங்கள் கூடுதலாக காங்கிரஸ் கேட்டதற்கு கோபித்துக் கொண்ட கலைஞர் அவர்கள் மத்திய அமைச்சரவையிலிருந்தே விலகிக் கொள்ளும் அளவிற்கு அறிக்கை விட்டார். எப்போதுமே குடும்பத்தினர்கு மத்திய அமைச்சர் பதவி, இதுபோன்ற மூன்று, நான்கு இடங்களுக்காக நடைபெறும் பேரங்கள் போன்ற பெரிய பெரிய பிரச்னைகளுக்குதான் கலைஞர் இந்த அளவிற்கு பெரிய முடிவுகளை எடுப்பார். அணு சக்தி ஒப்பந்தம், பெட்ரோல், விலை உயர்வு, ஈழத் தமிழர் படுகொலை போன்ற சிறிய பிரச்னைகளுக்கெல்லாம் பெரிய அஸ்திரத்தை எடுத்து வீணாக்கும் பழக்கம் அவருக்கில்லை என்பது தமிழகம் அறிந்ததுதானே.

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் தங்கபாலுவின் மனைவிக்கு மைலாப்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. வேட்பு மனுவில் வேட்பாளர் கையெழுத்து போட வேண்டும் என்ற அறிவு அவருக்கு இல்லையா அல்லது போட வேண்டாம் என்று அறிவுரை ஏதேனும் பொறுப்பாக கையெழுத்திட்டிருந்த மாற்று வேட்பாளர் தங்கபாலு தனது மனைவிக்கு சொல்லியிருந்தாரோ? எல்லாம் அவர்களுக்கே வெளிச்சம். முப்பது இடத்தில் போட்டியிட்ட பாமக மூன்று இடங்களில்தான் வென்றது. ஏற்கனவே மக்களவை தேர்தலில் எதையோ போன்று அங்கேயும் இங்கேயும் தாவியதால் பலத்த அடிவாங்கியிருந்த நிலையில் இத்தோல்வி சில பாடங்களை அவர்களுக்கு புகட்டலாம்.

2011… எங்களின் ஆண்டு என்று சொன்னவர்கள் போன இடம் எங்கேயென்று இன்று வரை தெரியவில்லை. இவர்கள் யாருமே மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்லவில்லை. இவர்களுக்கு தலைமை தாங்கியவர் மக்கள் எனக்கு கொடுத்த ஓய்வு என்றார். பதவியிலிருந்தால் தான் வேலை, பதவி பறிபோனால் ஒய்வு என்று பெரியாரின் விரல்பிடித்தவரும், அண்ணாவின் தம்பியும், மக்கள் பணியே எனது மூச்சென சொல்லும் ஒரு பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர் எப்படி சொல்கிறார் என்று புரியவில்லை.

சரி. யார்மீதும் சேற்றை வாரியிறைக்கும் வேலை நமக்கு கிடையாது. தோல்வியின் பின்புலம், வெற்றியின் அடிப்படை இவைகளை அலச வேண்டியது நமது கடமையல்லவா. இப்படி தமிழகம் முழுவதும் ஒரு எதிர்ப்பு அலை அஇஅதிமுக கூட்டணிக்கு ஒரு பெரும் வெற்றியை தந்துள்ளது. வெற்றி என்பது எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்பதற்கான வாய்ப்பல்ல. இதை, முந்தையவர்கள் செய்யவில்லை எனவே வருபவர்கள் சரியாக செய்ய வேண்டும் என்பதற்கான ஒரு வாய்ப்பே இந்த வெற்றி.

டாஸ்மாக் மதுபானக்கடைகள் அதிமுக ஆட்சி காலத்தில்தான் உருவாக்கப்பட்டதாக இருந்தாலும், இலக்கு நிர்ணயித்து இத்தனை கோடிக்கு விற்று லாபம் பார்க்க வேண்டும் என்ற வகையில் சென்றதில்லை. கள்ளச்சாராயத்தை ஒழிக்க ஒரு வழியாகவே பலர்இதை நம்பினர். ஆனால், இன்று இவை அரசு கஜானாவை நிரப்புவதற்காகவே செயல்படும் வகையில் தெருவுக்கு இரண்டு மூன்று கடைகள் முளைத்துள்ளது. தமிழகத்தில் ஆறில் ஒருவரை குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கியுள்ளது இந்த கடைகள். எனவே இக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். போதைப் பழக்கங்களை கைவிடும் வகையில் இளம் தலைமுறையை உருவாக்க வேண்டும்.

அண்ணா சொன்னதுபோல் வீதியோரத்தில் வேலையற்றதுகள். அவர்கள் நெஞ்சத்தில் விபரீத எண்ணங்கள் என்பதை நினைவில் கொண்டு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும். காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்பிட வேண்டியுள்ளது.

தமிழகத்தில், உலகத்தில் எங்கும் இல்லாத கனிம வளங்கள் பெருகிக் கிடக்கின்றது. இவைகளை பல தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபத்திற்கு வாரி சுருட்டிக் கொண்டுள்ளன. தமிழக அரசு இந்த வளங்களை பயன்படுத்தும் வகையில் புதிய தொழிற்சாலைகளை அமைத்து வேலைவாய்ப்புகளை பெருக்கிட முடியும். முடங்கிக் கிடக்கும் சேது கால்வாய் திட்டத்தை தொடர முயற்சி எடுத்திட வேண்டும்.

குழு நிர்ணயித்த கட்டணத்தை எந்த தனியார் பள்ளிகளும் மதித்து நடக்கவில்லை. பெற்றோர் + மாணவர்கள் போராடியும் கல்வித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் மீது, பள்ளிகள் மிகவும் மோசமான அணுகுமுறையை கையாளுகின்றனர். மாவட்ட அளவில், தவறிழைக்கும் பள்ளிகள்மீது நடவடிக்கை எடுக்கும் குழுக்களை அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சமச்சீர் கல்வியின் ஒரு பகுதியான பொதுப்பாடத் திட்டத்தை சில மாற்றங்களோடு இவ்வாண்டே அமல்படுத்திட வேண்டும். விவசாய துறையில் கூடுதல் கவனம் செலுத்தியும், தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டத்தை முறையாக அமல்படுத்தியும் கிராமப்புற மக்கள் இடம் பெயர்தலை தவிர்க்க வேண்டும்.

இப்படியான பல்வேறு எதிர்பார்ப்புகளோடு தான் தமிழகத்தில் ஒவ்வொரு ஓட்டும் பதிவாகியுள்ளது என்பதை நினைவில் கொள்வது நல்லது.

இந்த ஆட்சியாளர்களின் முந்தைய ஆட்சியில் அவர்களின் அணுகுமுறையில் பல்வேறு அனுபவங்கள் முற்போக்கு இயக்கங்களுக்கு உண்டு. இருப்பினும் ஒரு அரசியல் மாற்றம் இல்லை எனில் தமிழகம் முச்சுத்திணறி மடியும் என்பதை உணர்ந்தே இந்த மாற்றத்தை முற்போக்கு சக்திகளின் உந்துதலோடு மக்கள் சக்தி உருவாக்கியுள்ளது. அதை மதித்து செயல்படுவதே மக்களாட்சிக்கு உகந்தது.