அரசின் மதுவிலக்கு கொள்கையை(???) இழிவுபடுத்தியதற்காக, மக்கள் கலை இலக்கிய கழகத்தின் புரட்சிப் பாடகர் தோழர் கோவன், ஆளும் அராஜக அரசால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்தியில், மோடி அரசு ஆட்சி பீடத்தில் (பெரு முதலாளிகளால்) அமர்த்தப்பட்டதிலிருந்து, ஜனநாயகவாதிகளின் செயல்பாடுகள் தொடர்ந்து நசுக்கப்பட்டு வருகின்றது.
பாராட்டுக்களை வரவேற்று அளவில்லா மகிழ்ச்சியடையும் ஆட்சியாளர்களுக்கு, நியாயமான விமர்சனத்தை உள்வாங்கும் பக்குவம் அடியோடு அழிந்து விட்டது.
அதிலும் மோடியின் தோழியான செயலலிதாவிற்கோ, விமர்சனத்தை ஏற்கும் தன்மை எக்காலத்திலும் கிடையாது. தன்னையோ, தனது தலைமையின் கீழ் நடக்கும் ஆட்சியையோ யாராவது விமர்சனம் செய்தால், அவர்களுக்கெதிராக எப்படிபட்ட அடக்குமுறையை வேண்டுமானாலும் தூண்டிவிடுவேன் என்று, கோவனின் கைதின் மூலம் சமூக செயல்பாட்டாளர்களை மறைமுகமாக எச்சரிக்கிறார் செயலலிதா!!
இச்சம்பவம் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது. இந்நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தோழர் கோவன் பாடிய ஆளும் சாராய வியாபாரிகளுக்கெதிரான பாடலை, தெருவெங்கிலும் முழங்கும் போராட்டத்தை ஜனநாயகவாதிகள் தொடங்க வேண்டும். இப்போராட்டம் தோழர் கோவனின் விடுதலை வரை தொடர வேண்டும்.
அடக்குமுறையை அஞ்சாமல் எதிர் கொள்வோம்.
ஆளும் சர்வாதிகாரிகளுக்கு புரட்சி வரிகளால் பதிலடியைக் கொடுப்போம்.
- ஆழ்வை சம்சுதீன்