ஏப்ரல் மாதத்தில் கல்லூரிகள் திறக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. திடீரென்று நமது கல்வி மீது பலருக்கு அக்கறை ஏற்பட்டுள்ளது. கல்விவணிகமயமாக்கப்பட்டு, சாராயம் அரசுடைமையாக்கப்பட்டு பணமிருந்தால் கல்வி என்று மாறியுள்ள நிலையைப் பற்றி இதுவரை கொஞ்சம்கூட கவலைப்படாத பல்வேறு அரசியல் கட்சிகள், இன்று நமது படிப்பும், எதிர்காலமும் நமது போராட்டத்தால் எங்கே வீணாகிவிடுமோ என்று முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். இத்தகைய தமிழீழ துரோகிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதத்தில் நமது படிப்பையும் போராட்டத்தையும் வெற்றியாக்கும் திட்டத்தோடு நமது அடுத்த வேலைகளை முன்னெடுத்துச் செல்வோம்.

அடுத்து நாம் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றி நமக்குள் பரிமாறிக் கொள்வதற்கு முன் நமது கோரிக்கைகளாக எதை முன்னிலைப் படுத்துவது என்பதைப் பற்றிய சரியான புரிதலை நாம் வந்தடைய வேண்டியுள்ளது,

நமது மூன்று கோரிக்கைகள் :

ஏற்கனவே தமிழகம் முழுவதும் போராடி வரும் மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தாலும், கீழ்வரும் இரண்டு கோரிக்கைகள் மட்டும் அனைவராலும் முன் வைக்கப்பட்டுள்ளது.

1 . சிங்கள இனவெறியன் ராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியாக, இனப் படுகொலையாளனாக சர்வதேச நீதி மன்றத்தின் முன் நிறுத்த வேண்டும்.

2. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும்.

மேற்கூறிய கோரிக்கைகள் இரண்டும் நம் தொப்புள் கொடி உறவுகள் தமிழீழ மக்களின் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கக் கூடியது ஆகும்.

நாம் அனைவரும் இன்னுமொரு அடிப்படையான கோரிக்கையை உடனடியாக முன்னுக்குக் கொண்டுவர வேண்டிய அவசர அவசியம் உள்ளது. முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்கு பிறகு சிங்கள வெறியன் ராஜபக்சே அரசு நாம் யாருக்காக போராடிக் கொண்டிருக்கிறோமோ அந்த தமிழினத்தை இலங்கையில் இல்லாமல் செய்துவிட வேண்டும் என்று பல்வேறு கொடுரமான செயல்களைத் திட்டமிட்டு தொடர்ந்து செய்துவருகிறது, இத்தகைய இந்த இன அழிவை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும், இன அழிப்புப் போராலும், தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் சிங்கள இனவெறி அரசின் கொடூரமான அடக்கு முறையாலும் தமிழீழ மக்களின் வாழ்நிலையானது மிக, மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இத்தகைய ஈழத் தமிழர்களின் மறுவாழ்வுப் பணிகளை உடனடியாக நடைமுறைப் படுத்த வேண்டிய கடமையும் நம் முன்னுள்ளது.

எனவே, நாம் அனைவரும் ஈழத் தமிழர்களின் நிரந்தரத் தீர்விற்கான போராட்டங்களைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கும் அதே வேளையில், ஈழத் தமிழர்களின் உடனடி சிக்கலான

இன அழிப்பை உடனடியாகத் தடுத்து நிறுத்தி, ஈழத் தமிழர்களின் மறுவாழ்வுப் பணிகளைஉடனடியாக நடைமுறைப்படுத்து” என்பதை இந்திய அரசின் முன்வைத்துப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

எனவே, நாம் நிரந்தரத் தீர்விற்கான இரண்டு கோரிக்கைகளை முன்வைப்பதோடு, ஈழத் தமிழர்களின் உடனடி சிக்கலுக்கான மூன்றாவது கோரிக்கையையும் நாம் முன் வைத்துப் போராடவேண்டும்.

நமது இந்த மூன்று அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து நமது போராட்டங்களை நகர்த்துவதன் மூலம் மட்டுமே ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான உறுதியான ஆதரவுப் போராட்டத்தைக் கட்டியமைக்க முடியும்.

நமது போராட்டத்தோடு, தமிழக மக்களின் போராட்டமும், தமிழகத்தில் உள்ள M.P.க்களின் நாடாளுமன்ற போராட்டமும் இணைந்து இந்திய அரசைக் கடுமையான நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இச்சூழலில் இந்திய அரசானது தங்களது உளவுத் துறை, கைத்தடிகள் மூலமும், தமிழகத்திலுள்ள காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மூலமும் நமது போராட்டத்தைத் திசைதிருப்பும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளது. (தமிழகத்தின் முகாம்களில் அடைக்கப்பட்டுக் கிடக்கும் ஈழத் தமிழர்களுக்காக முதலில் போராடுங்கள், இந்திய அரசை நிர்ப்பந்திப்பதால் பயனில்லை, அமெரிக்காவை நிர்ப்பந்தியுங்கள், காங்கிரஸ் ஈழத் தமிழர்களுக்காக உண்மையாகப் போராடுகிறது, சுப்ரமணியசாமிதான் (இவன் எதிர்க்கப்பட வேண்டியவன் என்றாலும் இப்பொழுது முன்னிலைப் படுத்த வேண்டியவன் அல்ல) அனைத்திற்கும் காரணம், ராஜீவ் படுகொலையின் பின்னனியைஆய்ந்தறிவதுதான் தமிழீழச் சிக்கலுக்குத் தீர்வு, மாணவர்களுக்கு அரசியல் கூடாது... . ) என்று

தொலைக்காட்சி, பத்திரிகை, இணையதளம் மற்றும் தங்கள் கைத்தடிகள் மூலமாக நமது முக்கியமூன்று கோரிக்கைகளிலிருந்து திசை திருப்பும் வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளனர். வாக்காளர் அடையாள அட்டையை திருப்பி தருவது, அமெரிக்க பொருட்களை நிராகரிப்பது, மௌன புரட்சி, இந்தியாவில் உள்ள முதலாளிகளின் (இலங்கையில் முதலீட செய்துள்ள) பொருட்களை நிராகரிப்பது... போன்ற நடைமுறை சாத்தியமற்ற, வீரியமற்ற செயல்பாடுகள் சில மாணவர் கூட்டமைப்புகளால் முன் வைக்கப்படுகிறது. நமது போராட்டத்தின் இலக்கு என்பது இந்திய அரசை நிர்ப்பந்தித்து, நமது கோரிக்கைகளை ஏற்க வைப்பது என்பதிலேயே ஒன்று குவிக்கப்பட வேண்டும். இந்தியா, இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கவில்லை என்றால், உலக நாடுகள் ஈழத்திற்கு ஆதரவாய் ஐ.நா. வில் வாக்களிக்க வில்லையென்றால், இந்திய முதலாளிகள், பன்னாட்டு முதலாளிகளின் பொருட்களை புறக்கணிப்போம் என்று எச்சரிக்கை விடலாம்.

நமது போராட்டத்தை அரசியல் கட்சிகள் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டது மிகவும் சரியானது. இதுவே பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் நமது போராட்டம் தொடர்பாக முன்வைக்கப்படும் கருத்துகளைப் புறக்கணிக்க வேண்டும் என்ற சிலரால் மாற்றப்பட்டது. இச்செயல் மாணவர்களாகிய நாம் பரந்த அரசியல் அறிவைப் பெறுவதைத் தடுக்கும் செயலாகும். மாணவர்களாகிய நாம் பல்வேறு கூட்டமைப்புகளில் தனித்தனியாக ஒன்றிணைந்து போராடினாலும் நம் அனைவரையும் இணைப்பது நமது அடிப்படைக் கோரிக்கைகள்தான்.

இத்தகைய கருத்தொற்றுமையை சிதைக்கும் வேலையைத்தான் காங்கிரசு கட்சியும், இந்திய (காங்கிரஸ்) அரசும் செய்து கொண்டிருக்கிறது. நாம் அனைவரும் விழிப்புடன் இக்கருத்துகளை முறியடிக்க வேண்டும்.

படிப்பையும் போராட்டத்தையும் வெற்றியாக்குவோம்

சில தனியார் கல்லூரிகள் திறந்துள்ள நிலையில், ஏப்ரல் 3இல் அனைத்துக் கல்லூரிகளும் திறக்கவுள்ளது. நமது செமஸ்டர் தேர்வுகள் வரும் ஏப்ரல் தொடங்கி மே வரை நடக்கவுள்ளது. மறுபடியும் கல்லூரி ஜூலையில் திறக்கவுள்ளது. சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு மே-வில் செமஸ்டர் தொடங்கி ஜூனில் முடிகிறது. ஆகஸ்டில் கல்லூரி திறக்கவுள்ளது.

நாம் செமஸ்டர் தேர்வில் வெற்றியடைந்து நமது பெற்றோரின் மனதைக் குளிர வைப்போம். தமிழீழ மக்களுக்கான ஆதரவுப் போராட்டத்தில் வெற்றியடைந்து தமிழீழ மக்களின் மனதை மலரச் செய்வோம்.

ஏப்ரல் - மேவில் நாம் நான்கு வேலைகளை முடிப்போம்

1. கல்லூரிக்கு முறையாகச் செல்வோம். செமஸ்டர் தேர்வுக்கு நம்மை தயார் செய்து கொள்வோம்.

2. கல்லூரி முடிந்த மாலை நேரங்களில் வாரத்தில் மூன்று (அ) நான்கு நாட்கள் நமது கல்லூரியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் சென்று பல்வேறு பிரிவினரின் மத்தியில் நமது மூன்று அடிப்படை கோரிக்கைகளின் நியாயத்தையும், அதற்காக மக்கள் அனைவரும் போராட வேண்டியதன் அவசியத்தையும் தொடர்ந்து பரப்புரை செய்வோம். மேலும் சனி (அ) ஞாயிறுகளில் ஏதாவது ஒரு நாள் நமது கல்லூரியைச் சுற்றியுள்ள கிராம மக்களிடமும் மேற்கூறிய பரப்புரையைக் கொண்டு செல்லவேண்டும்.

3. தமிழகம், பாண்டிச்சேரியில் உள்ள 40 MPக்களின் வீடுகளுக்கும் மாணவர்கள் பெருமளவில் அணி திரண்டு சென்று,

  • 40 M.P.க்களும் நமது மூன்று கோரிக்கைகளை நாடாளு மன்றத்தில் வலியுறுத்தப் போராட வேண்டும். (தனித் தெலுங்கானாவிற்காக தெலுங்கானா M.P.க்கள் போராடியது போல).
  • இந்தியாவில் உள்ள அனைத்து M.P.க்களையும் தமிழக 40 M.P.க்கள் குழுக்களாக பிரிந்து சென்று நேரில் பார்த்து, பேசி, அழுத்தக் குழுக்களை உருவாக்கி நமது மூன்று கோரிக்கை களையும் காங்கிரசு அரசு ஏற்கும்படசெய்ய நிர்ப்பந்திக்க வேண்டும்.
  • இம்மூன்று கோரிக்கைகளை வரும் செப்டம்பரில் ஐ.நா. பொதுப் பேரவையில் இந்தியாவே முன்வைக்க வேண்டும். அதற்கு அட்சாரமாக நாடாளுமன்றத்தில்இம் மூன்று கோரிக்கைகளையும் தீர்மானமாக நிறைவேற்ற வைக்க வேண்டும். ஐ.நா. பொதுப் பேரவையில் இத்தீர்மானம் நிறைவேற உலக நாடுகளிடம் இந்திய அரசு தொடர்ந்து பேசி தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க தயார் செய்ய வேண்டும்.
  • உடனடியாக இந்திய அரசு இலங்கையை நிர்ப்பந்தித்து சிங்கள இனவெறியன்ராஜபக்சே அரசு தொடர்ந்து நடத்தும் இன அழிப்பை தடுத்து நிறுத்தவேண்டும். போரால் பாதிக்கப் பட்டுள்ள ஈழத்தமிழர்களின் மறுவாழ்வு பணிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
  • தி. மு. க. - அ. தி. மு. க. கட்சிகள் ஓட்டு அரசியலுக்காகவும், பாராளு மன்றத் தேர்தலை மனதில் வைத்தும் ஈழச் சிக்கலை அணுகாமல், தங்களுக்குள் பாலசந்திரன் படுகொலை செய்யப்பட்ட படத்தை வைத்து சவ அரசியல் செய்யாமல், உண்மையிலேயே ஈழத் தமிழர்களுக்காக உரிமைக் குரல் எழுப்புவது நோக்கமாக இருந்தால் தமிழகமே ஒருமித்து ஒரே குரல் கொடுக்கும் வகையில் தங்களது செயல்பாடுகளை அமைத்துக் கொள்ளவேண்டும். அவ்வாறில் லாமல் இவ்விரு கட்சிகளும், மற்ற கட்சிகளும் ஓட்டு அரசியல்தான் முக்கிய மென்று ஈழத் தமிழர்களுக்கு முன்பு செய்த துரோகத்தைச் செய்ய நினைத்து செயல்பட்டால், அக்கட்சித் தலைவர்கள் வீட்டை முற்றுகையிட்டுப் போராடுவோம் என்ற அடிப்படையில் எழுதப்பட்ட மனுக்களை அனைத்துத் தமிழக அரசியல் கட்சிகளின் மாவட்ட, மாநிலத் தலைவர்களிடம் கொடுக்க வேண்டும்.

மேற்கூறிய அடிப்படைகளை உள்ளடக்கிய கோரிக்கை மனுக்களை நாம் கொடுத்து வலியுறுத்திப் பேசவேண்டும். தொழிற் சங்கங்கள், வணிகர் சங்கங்கள், ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் எனப் பல்வேறு இயக்கங்கள், அமைப்புகளிடமும் நமது கோரிக்கை மனுவைக் கொடுத்து, அவர்களையும் 40 M.P.க்களின் வீடுகளுக்கு பெருங்கூட்டமாகச் சென்று மனு அளித்து வலியுறுத்திப் பேசச்சொல்லவேண்டும்.

4. செமஸ்டர் தேர்வுக்கு முன் தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் ஒருங்கிணைந்து ஒரே நாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து காங்கிரசுத் தலைவர்கள், காங்கிரசு M.P.க்களின் வீடுகளை முற்றுகையிட்டு, ஈழத் தமிழர்களுக்குத் துரோகமிழைத்த காங்கிரசு கட்சியை விட்டு விலகச் சொல்லியும் கட்சி பதவி, மந்திரி பதவிகளை ராஜினாமா செய்யச் சொல்லியும் முழக்கங்கள் எழுப்பி முற்றுகைப் போராட்டம் நடத்தவேண்டும்.

மேற்கூறிய அம்சத்தை பல்வேறு பிரிவு மக்களிடம் பிரச்சாரமாகக் கொண்டு சென்று, தமிழகத்தில் உள்ள மக்களையும், காங்கிரசுத் தலைவர்கள், M. L. A. க்களின் வீடுகளை முற்றுகையிட்டுப் போராடும்படி வேண்டுகோளை முன்வைத்து (காங்கிரசு கட்சிக்கு) காங்கிரஸ அரசிற் கெதிராக பெரும் மக்கள் எழுச்சியை கட்டியமைக்க வேண்டும்.

ஜூன் - ஜூலை (விடுமுறை நாட்களில்) நமது வேலை

செமஸ்டர் தேர்வு முடிந்ததும் விடுமுறை நாட்களில் ஆயிரக் கணக்கான மாணவர்கள் பல்வேறு பிரச்சாரக் குழுக்களாகப் (குறைந்தது ஒரு குழுவில் 10 முதல் 15 பேர்) பிரிந்து தமிழகத்தின் அனைத்து கிராமங் களுக்கும் சென்று, நமது மூன்று கோரிக்கைகளை விளக்கிப் பிரச்சாரம் செய்வதோடு, அதற்காக மக்கள் பெரும் எழுச்சியுடன் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் விளக்கி வீதி நாடகங்கள், தெருமுனைக் கூட்டங்கள், பாடல்கள் மூலமும் மற்றும் சேனல் 4 வெளியிட்ட ஆதாரத்தைப் படங்களாகப் போட்டுக் காட்டியும் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

வரும் செப்டம்பரில் ஐ.நா. பொதுப் பேரவை கூடும்போது, இந்திய அரசு தவிர்க்க இயலாமல் நமது மூன்று கோரிக்கைகளை முன்வைத்து ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்ற, உலக நாடுகளின் ஆதரவைப் பெற முயற்சிக்கும்படி நிர்பந்திக்க மக்கள் போராட்டங்களை ஆகஸ்டு, செப்டம்பரில் தீவிரப்படுத்தச் சொல்லி பிரச்சாரம் செய்ய வேண்டும்,

ஆகஸ்டு - செப்டம்பரில் நமது வேலை

ஆகஸ்டில் சேனல் -4 சிங்கள இன வெறியன் ராஜபக்சே அரசின் இனப்படுகொலையை முழுமையாக உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டவுள்ளது. சேனல்-4 வெளியீட்டைப் பல்லாயிரக்கணக்கான ஊனு-க்களாகப் போட்டு தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு இலவசமாக வழங்கவேண்டும்,

செப்டம்பரில் நடக்கவுள்ள ஐ.நா. பொதுப்பேரவையில் இந்திய அரசு நமது மூன்று கோரிக்கைகளை ஐ.நா. வில் முன்வைத்துத் தீர்மானத்தை நிறைவேற்ற கடுமையான நிர்பந்தத்தை இந்திய அரசிற்கு (காங்கிரசு அரசுக்கு) கொடுக்கும் விதமாக மாணவர்கள் போராட்டத்தை தமிழகத்தின் பெரும் மக்கள் எழுச்சியாக, 40 M.P.-களும் நாடாளுமன்றத்தையே அதிர வைக்கும் போராட்டமாக ஆகஸ்ட், செப்டம்பரில் நாம் முன்னெடுக்க வேண்டும்.

இத்தகைய நமது மூன்று அடிப்படைக் கோரிக்கைகளை, வேலைத் திட்டத்தைக் குலைக்க நினைக்கும், திசைதிருப்ப நினைக்கும் தமிழீழ துரோகிகளை இனம்கண்டு நமது போராட்டப்பாதையில் உறுதியாக முன்செல்ல வேண்டும் என்று அனைத்து மாணவர்களையும், தமிழீழ ஆதரவு அனைத்துக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.

மாணவர்கள் எத்தகைய கூட்டமைப்பில் இருந்தாலும் எத்தகைய அரசியல் பின்னனியில் இருந்தாலும் நமது மூன்று கோரிக்கை, நமது வேலைத் திட்டம் என்ற இலக்கில் ஒன்றுபடுவோம்...

போராடுவோம்... வெற்றி பெறுவோம்... !

மாணவர்களே!

✯ வரும் செமஸ்டர் தேர்வில் வெற்றி பெற்று  பெற்றோரின் மனம் குளிர வைப்போம்!

✯ வரும் செப்டம்பர் போராட்டத்தில் வெற்றி பெற்று   தமிழீழம் மலரச் செய்வோம்!

✯   ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவோம்!

✯   இனஅழிப்பைத்தடுப்போம், மறுவாழ்வு மலரச் செய்யவோம்!!

தமிழக அரசியல் கட்சிகளே!

✯ஓட்டுஅரசியலைமுன்வைத்துஈழதமிழர்களுக்கு துரோக மிழைக்காதீர்!

✯ மழலை செல்வன் பாலசந்திரனின் படுகொலை படத்தை வைத்து சவ அரசியல்செய்யாதீர்கள்!

✯ஓட்டுக்காக ஒருவருக்கொருவர் சண்டையிடாமல் தமிழகமே ஒருமித்து ஒரே குரல்கொடுக்க செய்யுங்கள்!

காங்கிரசு M. L. A, M.P.க்களே! தலைவர்களே! தமிழக காங்கிரசு கட்சியினரே!

✯ ஈழத் தமிழர்களுக்குத் துரோகமிழைத்த காங்கிரசு கட்சியை விட்டு வெளியேறுங்கள்! கட்சிப் பதவியை, மந்திரி பதவிகளை ராஜினாமா செய்யுங்கள்!

✯ தமிழக (பாண்டிச்சேரி) 40 M.P.க்களே!

✯நாடாளுமன்றத்தில் ஒருமித்த குரல் எழுப்பி போராட்டத்தை வெற்றியாக்குங்கள்!

✯இந்தியாவில் உள்ள அனைத்து M.P.க்களையும் ஒன்றிணைத்து அழுத்தக் குழுக்களை உருவாக்கி காங்கிரசு அரசைப் பணிய வையுங்கள்!

இந்திய அரசே!

✯ இத்தாலிக்கு ஒரு நீதி   இலங்கைக்கு ஒரு நீதியா?

✯ இலங்கை வேண்டுமா?  தமிழ்நாடு வேண்டுமா?

✯ இலங்கை அரசை நிர்பந்தித்து,   ஈழத் தமிழர்களின் இன அழிவை உடனடியாக தடுத்து நிறுத்து!

✯  மறுவாழ்வு பணிகளை விரைவாக நடைமுறைப்படுத்து!

ய். நா. மன்றமே!

✯இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக, இனப்படுகொலையாளனாக சர்வதேச நீதிமன்றத்தில் பகிரங்க விசாரணை நடத்து!

✯வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பொதுவாக்கெடுப்பு நடத்து!

✯ஈழத் தமிழர்களின் மறுவாழ்வு பணிகளை அய். நா. மேற்பார்வையில் உடனடியாக நடைமுறைபடுத்து!

✯சிங்கள அரசு தொடர்ந்து நடத்தும் ஈழத்தமிழர்களின் இன அழிவை உடனடியாக தடுத்து நிறுத்து!

- தமிழீழ ஆதரவு அனைத்து கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

9789434804, 8682853634, 9042383070, 9080007013, 9629377789

Pin It