ஜெயமோகனின் கட்டுரையைப் பகிர்ந்துகொண்ட Mariadoss Chinnappa Rajanனுக்கு நன்றி. ஜெயமோகனின் கட்டுரையைப் படிக்க.. http://www.jeyamohan.in/?p=31009

-----------------------------------------------------------------------------------------------------------

நான் யோசித்தெல்லாம் எழுதவில்லை. உங்களைப் போன்ற சிந்தனையார்கள் முன்பு எனக்கெல்லாம் யோசனை வருமா என்ன? உங்கள் கட்டுரையைப் படிக்கும் போக்கில் எழுந்த கேள்விகள் மட்டுமே இவைகள்.

உங்களுக்கு இடதுசாரிகள் வெறும் கமிஷன் ஏஜெண்டுகள்.. அறிவானவர்கள் இல்லை.

நான் கமிஷன் ஏஜெண்ட் இல்லை என்பது எந்த அளவு உண்மையோ அந்த அளவு எனக்கு ‘உங்களைப் போன்ற’ அறிவில்லை என்பதும் உண்மை.

எனவே, படிக்கப் படிக்க எழுந்த கேள்விகளை உங்களிடம் கேட்கிறேன். பதிலளித்து என் அறிவை மேம்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையோடு.. நீங்கள்தான் அனைத்தையும் அறிந்த அறிவானந்தர் ஆயிற்றே..

1. விவசாயப் பொருள் வணிகத்தில் இருக்கும் தரகர்கள் வலுவானவர்களாக இருக்கிறார்கள். சரி.. ஆனால், அனைத்தையும் அடக்கியாளும் இந்திய அரசு, சுரங்கத் தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாக தனியார் படையை அனுமதித்து, இராணுவ பலத்தோடு ஆதிவாசிகளை/பழங்குடிகளை அழிக்கும் மத்திய அரசு, ஏன் இந்த தனியார் சிறுவணிக ஏஜெண்டுகளை அழிக்க முடியவில்லை? ஒருவேளை கார்ப்பரேட் முதலாளிகளை விட பெரிய கமிஷனை மண்ணுக்கு, சோனியாவுக்கு, ப.சிக்கு இந்த கமிஷன் ஏஜெண்டுகள் கமிஷனாக அளித்துவந்தார்களோ! இப்போது கொடுக்க மறுத்து விட்டார்களோ? எப்படி சாத்தியம்?

ஒட்டன்சத்திரம் வியாபாரிகள் எப்படி கார்ப்பரேட்டுகளை வென்றார்கள்? அப்புறம் எப்படி கார்ப்பரேட்டுகள், கார்ப்பரேட்டுகளாக இருக்கிறார்கள்?

2. உழவர் சந்தையை ஏதோ சில கமிஷன் வியாபாரிகள்தான் நடத்துகிறார்கள் என்றால், அவர்களின் இடுப்பெலும்பை உடைக்க தமிழக அரசால் ஏன் முடியவில்லை? தமிழக அரசு கூடங்குளம் மக்களுக்கே தண்ணி காட்டிக்கொண்டிருக்க, இந்த சில்லறை கமிஷன் வியாபாரிகள், ஊருக்குச் சில பேர் ஆனாலும், உங்கள் பாஷையில், 'மாபியா'க்களுக்கு எதிராக ஏன் தமிழக அரசால் செயல்பட முடியவில்லை?

3. சுதந்திர வணிகம் என்றால் என்ன? ஒவ்வொருவரும் என்ன நினைக்கிறார்களோ அதுதான் சுதந்திர வணிகம். சமூகம் முழுமைக்கும் சுதந்திரமான வணிகம் எப்படிச் சாத்தியம்? விவசாயி, கமிஷன் வியாபாரி, ‘ரிலையன்ஸ் போன்ற நல்ல முதலாளிகள்’, எங்கே கூடுதல் எச்சில் கிடைக்கிறதோ அங்கே வாலாட்டும் அரசியல்வாதிகள் என்ற சமூகத்தில் நீங்கள் சொல்வது யாரின் சுதந்திர வணிகம்?

விவசாயி கோடிக்கணக்கில் இல்லையென்றாலும், ஆயிரங்களைக் கையில் வைத்துக்கொண்டா பொருட்களை விற்கிறான்? அவனுக்கு எங்கேயிருந்து சுதந்திர வணிகம் வாய்க்கும்?

ஒரு வேளை வால்மார்ட் பில்லியன்களை கையில் வைத்துக்கொண்டு, பில்லியன்களை டிரில்லியன்கள் ஆக்குவதை மறந்துவிட்டு ஆயிரம்கூட இல்லாத விவசாயியின் சுதந்திர வணிகத்தை உறுதி செய்யுமா?

அம்மாடி..ஏசுவின் மறுபிறவிகள்தான் இந்த MNCக்கள் என்று நீங்கள் சொல்கிறீர்களா?

4. சிறுவணிகத்தில் இருக்கும் தரகர்களை அன்னிய முதலீட்டாளர்கள்தான் அழிக்க முடியும் என்று சொல்கிறீர்கள்! ஏன் அரசே தனது மூலதனத்தைப் பயன்படுத்தி (உங்கள் படித்து ஊதிய மூளை அரசின் மூலதனப் பலம் என்ன என்பதைச் சொல்லியிருக்கும். என் போன்ற ‘இடதுசாரி அறிவுக்குறைவுள்ளவர்கள்’ சொல்வது உங்களை அவமானப்படுத்துவதாக இருக்கும் என்பதால் விட்டுவிட்டேன்) இந்த சின்னஞ்சிறு இடைத் தரகர்களைக் ஒழித்துக் கட்டக்கூடாது? கொசுவை அடிப்பதற்கு எதற்கு சுத்தி? இந்திய அரசின் கைகள் போதுமே?

5. நீங்கள் சொல்கிறீர்கள், ‘சந்தைப்பொருளியல் தேவையா என்று கேட்டால் என்னுடைய பதில் வேறு. தேவையில்லை. இந்தியக் கிராமங்களை ஒருங்கிணைக்கும் ஒரு கூட்டுவினியோக அமைப்பு உருவாக முடிந்தால் இந்தப் பிரச்சினையைத் தாண்டமுடியும். அதற்கான காந்தியப் பொருளியல் சார்ந்த வழிகாட்டல்கள் ஐம்பதாண்டுகளுக்கு முன்னதாகவே ஜெ.சி.குமரப்பா போன்றவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. சந்தைப் பொருளியலுக்குள்கூட அமுல் போன்ற காந்திய அடிப்படை கொண்ட மக்கள் கூட்டமைப்புகள் இந்தப் பிரச்சினையை வெற்றிகரமாக சமாளிக்க முடியும்’. அதை ஏன் காந்தியின் (எந்தக் காந்தி என்று என்னை கேட்காதீர்கள்.. அனைத்து காந்திகளும் என்று நான் நினைப்பது உங்களின் சூரியனை நிகர் அறிவொளிக்குத் தெரியும்) காங்கிரஸ் அரசு செய்யவில்லை? மக்களின் ஆற்றலை அரசின் பலம் ஆக்குவதின் மீது காந்திகளுக்கு என்ன வெறுப்பு?

6. ‘ஆனால் அதற்கான நிதியை உருவாக்க இந்தியப் பெருந்தொழில் நிறுவனங்களால் முடியவில்லை என்கிறார்கள்’, என்று வக்காலத்து வாங்கிறீர்கள். ஒரு கேள்வி: நிலக்கரி ஊழலில் அரசு இழந்த பணத்தை மட்டும் சேமித்திருந்தார்கள் என்றால், தமிழகத்தின் MNREGA திட்டத்தில் உள்ள ‘பயனாளிகளுக்கு’ இன்னும் 118 வருடங்களுக்கு 132 ரூபாய் கூலியில் 100 நாள் வேலை வழங்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்திய தொழில் நிறுவனங்கள் இந்திய இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதை தங்களின் மூலதன சேர்க்கையின் முதுகெலும்பாக மாற்றிக்கொண்டார்கள் என்பது தெரியுமா? பெற்ற நிலக்கரியை மின்சாரமாக்காமல் அதிக விலைக்கு விற்று லாபம் பார்த்த மக்கள் நேய இந்திய முதலாளிகளை உங்களுக்குத் தெரியுமா? தெரியும் என்றால், அரசும், பெருந்தொழில் நிறுவனங்களும் விவசாயிகளைக் காப்பாற்றுவார்கள் என்று எப்படி உங்ளின் அறிவொளி மிக்க மூளை நம்புகிறது?

7. நீங்கள் சொல்கிறீர்கள், ‘வால்மார்ட் இந்தியாவை அழிக்கும் என்றவர்கள் நேற்று தொலைதொடர்பில் தனியார் முதலீடு இந்தியாவை அழிக்கும் என்றார்கள். அதற்கு முன் தொழில்துறையில் அன்னிய முதலீடு இந்தியாவை அழிக்கும் என்றார்கள். அதற்கு முன் கொக்கோகோலா இன்னொரு ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி என்றார்கள். முன்பு இவர்கள் சொன்னவற்றை நானும் நம்பியிருக்கிறேன். ஆனால் இன்று இவை யாருடைய நலனுக்காகச் சொல்லப்படுகின்றன என்றே யோசிக்கிறேன்’, என்று சொல்லி, இந்திய விவசாயிக்காகக் கண்ணீர் சிந்தி, சில்லறை விவசாயப் பொருட்கள் தரகர்களுக்கு எதிராக. விவசாயிகளுக்கு ஆதரவாகச் சீறுகிறீர்கள்… உங்கள் சீற்றம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. ஆனாலும் சில கேள்விகள்:

பசுமைப் புரட்சியை விவசாயிகளின் தலையில் கட்டியது யார்? வேதிப்பொருள் முதலாளிகள் இல்லையா? இயந்திர முதலாளிகள் இல்லையா? விவசாயத் தொழிலில் மூலதனமிட்ட முதலாளிகள் இல்லையா? அவர்களுக்குச் சேவை செய்த இந்திய அரசு இல்லையா? இன்றைக்கு
மரபணு மாற்ற விவசாயத்திற்காக பேசும் மான்சாண்டோ அன்றைக்கு என்னவாக இருந்தது?

8. நீங்கள் சொல்கிறீர்கள், ‘இன்று சிறுவணிகர்களை இந்தியாவின் அருந்தவப்புதல்வர்களாகக் காட்டி இடதுசாரிகள் கண்ணீர் சொட்டுகிறார்கள்’. அதெல்லாம் சரிதான், இந்திய விவசாயிகளைப் பசுமைப் புரட்சி தாக்கியபோது நீங்கள் கண்ணீர் சிந்தியதுண்டா? உங்கள் தோட்டத்தில் விளையும் தேங்காயின் விலை என்ன என்பதற்கு மேலாக உங்கள் மூளை சிந்தித்தது உண்டா? ‘இந்திய விவசாயத்தில் எதற்கு இத்தனை பேர்? சிங்கிள் டிஜிட் பெர்சண்டேஜ் இருந்தால் போதும்’, என்று சொன்ன காங்கிரஸ் மந்திரிகளை நீங்கள் கேள்வி கேட்டதுண்டா? செத்து சுண்ணாம்பாகியிருக்கும் விவசாயி என்ன ஆவான் என்று யோசித்தது உண்டா?

9. மாபியாவைக் கட்டுப்படுத்துவதுதான் வழியென்றால், ஏன் அதை அரசு மேற்கொள்ளவில்லை? உள்நாட்டு மாபியாவை ஒழிக்க அமெரிக்க முதலாளி வேண்டும் என்றால், இந்திய மக்கள் சக்தியற்றவர்கள் என்பதுதானே பொருள்? இந்திய அரசாங்கம் சக்தியற்றது என்பதுதானே பொருள்? பன்னாட்டு முதலாளிகள் சக்திமிக்கவர்கள் என்பதுதானே பொருள்.

தன்னாட்டில் மக்களை ஆற்றல்படுத்தாமல், தனது அரசைக் கேள்வி கேட்காமல், வெளிநாட்டுக்காரனுக்கே ஆற்றல் அதிகம் என்பது,‘வெள்ளைக்காரன் இருந்தான்னா இது நடந்திருக்காது’ என்ற அடிமை மனோபாவம் இல்லையா? அறிவாளியான நீங்கள் கிராமப்புரத்து பெரிசைக் காட்டிலும் அறிவற்றவராக இருப்பது எப்படி? அந்த கிராமத்துப் பெரிசுக்கு வெளி உலகம் தெரியாது.. மெத்தப் படித்த உங்களுக்குமா? நான் நம்பவில்லை. நீங்கள் நிறைந்த அறிவுடன் ‘வெள்ளைக்காரன்’ கைத்தடியாக இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

என்ன செய்ய? உலகத்தையேப் படித்தாலும் நாங்கள் மக்களின் சேவகர்கள்.

விவசாயியைப் பற்றிப் பேசினாலும் நீங்கள் வெள்ளைக்காரனின் கைத்தடி என்ற அந்தஸ்தில் பூரித்துப்போகும் தரகர்…

நான் என்ன செய்ய?

Pin It