“சர்வதேசத் தொழிலாளர் சங்கம்” 1864 செப்டம்பர் 28 அன்று இலண்டன் நகரில் செயின்ட் மார்டின் மண்டபத்தில் தொடங்கப்பட்டது. இதில் முதன்மையானவர்களில் ஒருவராக காரல்மார்க்சு இருந்தார். இக்கூட்டத்தில் அய்ரோப்பாவின் பல நாடுகளிலிருந்து தொழிலாளர்களின் பிரதிநிதிகள் 2000 பேர் கலந்துகொண்டனர். இச்சங்கம் ஆங்கிலத்தில் “International Workingmen’s Association” என்று அழைக்கப்பட்டது.
தமிழில் இது ‘முதலாம் அகிலம்’ என்று குறிப்பிடப்படுகிறது. முதல் அகிலத்தில் மார்க்சியத்தை ஏற்றுக் கொள்ளாத - ஆனால் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்குத் தம்மை முழுமையாக ஒப்படைத்துக் கொண்ட பலரும் இருந்தனர். இத்தகைய பல்வேறு போக்குக் கொண்ட பிரிவினரை ஒரு வேலைத் திட்டத்தின்கீழ் ஒன்றிணைத்தது காரல்மார்க்சின் மாபெரும் சாதனையாகும்.
முதலாவது அகிலம் உருவாக்கப்படுவதற்கு முன்பே, தொழிற்புரட்சி ஏற்பட்ட நாடுகளில் தொழிற்சங்கங்கள் அமைக் கப்பட்டுத் தங்கள் உரிமைக்காக - குறிப்பாக 14 முதல் 18 வரை இருந்த வேலை நேரத்தைப் பத்துமணி நேரமாகக் குறைக்க வேண்டும் என்பதை முதன்மையான கோரிக்கை யாக முன்னிறுத்திப் போராடின. அமெரிக்காவில் பிலடெல் பியாவில் 1806இல் தோற்றுவிக்கப் பெற்ற தொழிற்சங்கம் தான், உலகில் முதல் தொழிற்சங்கமாகக் கருதப்படுகிறது. இது உருவான இரண்டு ஆண்டுகள் கழித்துத்தான் இங்கிலாந்தில் தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டது.
ஒவ்வொரு நாட்டிலும் ஏற்படுத்தப்பட்ட தொழிற்சங்கங்களை ஒருங்கி ணைக்கும் வகையில் ‘தேசியத் தொழிற்சங்கம்’ உருவாக் கப்பட்டது. தேசியத் தொழிற்சங்கங்களை ஒருங்கிணைத்து உலக அளவில் தொழிலாளர்களிடையே ஓர்மையை உரு வாக்கவும், வழிகாட்டவும் “சர்வதேசத் தொழிலாளர் சங்கம்” 1864ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இச்சங்கம் உருவாகி 150 ஆண்டுகளாகிவிட்டன.
தொழிற்சங்கங்களில் பத்து மணிநேரம் வேலை என்பது நடைமுறைக்கு வந்தபின், “8 மணிநேரம் வேலை, 8 மணி நேரம் பொழுதுபோக்கு, 8 மணிநேரம் ஓய்வு” என்ற முழக் கத்தை முன்னிறுத்திப் பல நாடுகளில் தொழிற்சங்கங்கள் தீவிரமாகப் போராடின. இப்போராட்டத்தில் தொழிலாளர்கள் கொடுமையாக ஒடுக்கப்பட்டனர். தொழிற்சங்கத் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர். 8 மணிநேர வேலை என்ற கோரிக் கையை முன்னிறுத்தி 1886 மே முதல் நாள் சிகாகோ நகரில் தொழிலாளர்கள் போர்க்குணத்துடன் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டங்களில் காவல்துறையின் தாக்குதலால் தொழிலாளர்களின் இரத்த ஆறு ஓடியது. இது உலக அளவில் தொழிலாளர்களிடையே பேரெழுச்சியை உண்டாக்கியது.
1889இல் நடைபெற்ற இரண்டாவது அகிலத்தின் முதலாவது கூட்டத்தில் பிரடெரிக் எங்கெல்சு, “சிகாகோ தொழிலாளர்களின் ஈகத்தை நினைவுகூரும் வகையில், மே மாதம் முதல் நாளை 1890ஆம் ஆண்டு முதல் ‘மே நாள்’ என்ற பெயரில் உலகத் தொழிலாளர் நாளாகக் கொண்டாட வேண்டும்” என்று முன்மொழிந்த தீர்மானம் ஏற்கப்பட்டது. 1890 முதல் மே நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
8 மணிநேர வேலை என்பதில் வெற்றி கண்டபின். தொழிற் சங்கங்கள், தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்தில் பாதுகாப்பான சூழ்நிலை, வீட்டு வசதி, தொழிற்சாலைகளில் நியாயமான விலையில் உணவு, மருத்துவ வசதி, வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் முதலான கோரிக்கைகளை முன்னி றுத்தித் தொடர்ந்து போராடின.
1929 முதல் 1933 வரை உலக அளவில் நீடித்த பெரும் பொருளாதார மந்தத்தால் தொழிலாளர்கள் கடுமையான துன்பங்களுக்கு இலக்காயினர். எனவே தங்கள் போராட் டத்தை மேலும் தீவிரப்படுத்தினர். இரண்டாம் உலகப்போர் 1945இல் முடிந்தபிறகு ‘மக்கள் நல அரசு’ எனும் கோட்பாடு வலிமை பெற்றது. இது, முதலில் தொழிலாளர்களிடையே செயல்படுத்தப்பட்டது. குறிப்பாக அய்ரோப்பிய நாடுகளில் தொழிலாளர்களுக்கு உரிமைகளும் அடிப்படைத் தேவை களும் நிறைவாகக் கிடைத்தன.
இந்தியாவில் சென்னையில் பின்னி ஆலைத் தொழிலாளர் களின் கடுமையான பேராட்டத்துக்குப் பின்னர்தான், 1926இல் தொழிற்சங்கச் சட்டம் இயற்றப்பட்டது. மேதை அம்பேத்கர் 1942-46 ஆண்டுகளில் வைசுராய் அமைச்சர வையில் தொழிலாளர் நல அமைச்சராக இருந்தபோதுதான், 8 மணிநேர வேலைச் சட்டம், குறைந்தபட்ச ஊதியச் சட்டம்- தொழில் நிறுவனங்கள், தொழிலாளர் பாதுகாப்பு விதிகளை முறையாகப் பின்பற்றுகின்றனவா என்று ஆய்வு செய்வதற் காக ஆய்வாளர்களை அமர்த்தும் சட்டம் ஆகியவை இயற்றப் பட்டன.
இந்தியா சுதந்தரம் பெற்ற பின் 1947இல் “தொழில் தகராறு சட்டம்” இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் தொழி லாளர்களுக்கும் நிர்வாகத்துக்கும் ஏற்படும் தகராறுகளைத் தீர்க்கும் வகையில், சமரச முயற்சிக்கான சமரச அதிகாரி களும், தொழிலாளர் நீதிமன்றங்களும் உருவாக்கப்பட்டன. வேலை நிறுத்தம் செய்வதை இச்சட்டம் அனுமதித்தது. அதேசமயம் இச்சட்டம் சுற்றுவழியில் வேலை நிறுத்தங் களைத் தடைசெய்யவும் இடமளித்தது.
20ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் நடந்த இரண்டு உலகப் போர்களால் பேரழிவுகளும், சமூக-பொருளாதாரச் சீர்குலைவுகளும் ஏற்பட்டிருந்தன. இரண்டாம் உலகப் போருக்குப்பின், காலனிய நாடுகள் விடுதலையாயின. தேசிய இன எழுச்சியின் அடிப்படையில், இறையாண்மை பெற்ற நாடுகள் வீறுநடை போட்டன. 1950 முதல் 1980 வரையில் உலக அளவில் ‘மக்கள் நல அரசு’ எனும் கோட் பாட்டாலும், தொழிலாளர்களின் போராட்டங்களாலும் தொழி லாளர்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டன; பாதுகாப் பான நல்வாழ்வு கிடைக்கத் தொடங்கியது.
ஆனால் 1980களில் தொடங்கி, 1990களில் வீறுபெற்ற தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் ஏகாதிபத்தியக் கோட்பாடு தொழிலாளர்களின் வாழ்வுரிமைகளைப் படிப்படியாகப் பறிக்கத் தொடங்கியது. மக்கள் நல அரசு எனும் கோட்பாடும் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை போலாயிற்று. நாட்டின் உற்பத்தி முறையும், வருவாய் வழியும் தலைகீழாயின.
முன்பு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (GDP) வேளாண்மையும் தொழிற்சாலை உற் பத்தியும் பெரும்பங்கு வகித்தன. ஆனால் இப்போது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் சேவைத்துறையின் (Service Sector) பங்கு 60 விழுக்காடாக உயர்ந்துவிட்டது. தொழில் பிரிவின் பங்கு 23 விழுக்காடாகவும், வேளாண் மையின் பங்கு 17 விழுக்காடு எனவும் சுருங்கி விட்டது. இம் மூன்று துறைகளிலுமே உழைப்பாளர்களின், தொழிலாளர் களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன.
இக்கட்டுரையில் தொழில்துறையில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலையை மட்டும் காண்போம். அமைப்புச் சார்-தொழிலாளர்கள், அமைப்புச்சாரா-தொழிலாளர்கள் என இரு பிரிவினர் உள்ளனர். எரிசக்தியைக் கொண்டு உற்பத்தி நடைபெறும் நிறுவனத்தில் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர் வேலை செய்தால், அது அமைப்புச்சார் தொழில் நிறுவனமாகும். எரிசக்தி இல்லாமல் உற்பத்தி நடைபெறும் நிறுவனங்களில் 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர் களைக் கொண்டிருப்பதும் அமைப்புச்சார் பிரிவில் அடங்கும். இது வெறும் ஏட்டளவில் உள்ள வரையறைதான்.
மொத்தத் தொழிலாளர்களில், அமைப்புச்சார் பிரிவில் 10 விழுக்காடு தொழிலாளர்கள் மட்டுமே வேலை செய்கின்றனர். ஆனால் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 80 விழுக்காடு அமைப்புச்சார் நிறுவனங்களில் தயாரிக்கப்படுகிறது. அதேபோன்று மதிப்புக்கூட்டப்பட்ட பண்டங்கள் (Value Added Products) தயாரிப்பில் அமைப் புச்சார் நிறுவனங்கள் 3இல் 2 பங்கு இடம்பெற்றுள்ளன. மீதி அமைப்புச்சாராப் பிரிவில் தயாரிக்கப்படுகின்றன. அமைப்புச்சார் தொழிலாளர்களுக்குப் பணியிடத்தில் பாதுகாப்பான சூழல், குறைந்தபட்சக் கூலி, போனஸ், பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு, வருங்கால வைப்பு நிதிப் பங்களிப்பு, பணிக்கொடை முதலானவை சட்டத்தின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளன. அதேசமயம் அமைப்புச்சாராத் தொழிலாளர்களுக்கு இந்த உரிமைகள் இல்லை.
தொழிலாளர்கள் தொடர்பாக 144 சட்டங்கள் இருக்கின்றன. இவை பெயரளவில் இருப்பினும், உலக வங்கியும், பன் னாட்டு நிதியமும், பன்னாட்டு முதலாளிய நிறுவனங்களும், உள்நாட்டுத் தரகு முதலாளிகளும், “உலகிலேயே கடுமை யான தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்கள் இந்தியாவில் தான் இருக்கின்றன; எனவே தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற சூழலை உருவாக்கி, அதிக மூலதனம் இடுவதற்காக, தொழிலாளர் சட்டங்களில் உள்ள தடைகளை நீக்க வேண்டும்” என்று 1991 முதல் இடையறாது அரசை வலியுறுத்தி வருகின்றன. 1991இல் நரசிம்மராவ் தொடங்கி, இடையில் வாஜ்பாய், அதன்பின் பத்து ஆண்டுகள் மன்மோகன்சிங் தலைமை யிலான ஆட்சிகளின் போது, சீர்திருத்தம் என்ற பெயரில் தொழிலாளர்கள் பெற்றிருந்த உரிமைகளும், சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் படிப்படியாகப் பறிக்கப்பட்டன.
2014 மே மாதம் ‘வளர்ச்சி’ என்ற முழக்கத்தை முன்னி லைப்படுத்தி ஆட்சியில் அமர்ந்த நரேந்திர மோடி, அயல்நாடு களுக்குப் பறந்து பறந்து சென்று, அங்குள்ள பெருமுதலாளி களிடம், “இந்தியாவில் அதிக முதலீடு செய்யுங்கள்; இந்தியாவில் தயாரியுங்கள் (Make in India), நீங்கள் எதிர்பார்க் கின்ற தன்மையில் தொழிலாளர் சட்டங்களைத் திருத்து வேன்” என்று வகைவகையாய் வேடம் பூண்டு கூத்தாடிக் கொண்டி ருக்கிறார். இதற்காக நடுவண் அரசு, தொழிலாளர் சட்டத் திருத்த வரைவு ஒன்றை உருவாக்கி உள்ளது.
தொழிலாளர் உறவுகள் குறித்த விதிகள்
நடுவண் அரசின் தொழிலாளர் சட்டத் திருத்த வரைவில், தொழிற்சங்கங்களைப் பதிவு செய்தல், பணி செய்யும் இடத்தில் உள்ள சூழ்நிலைகள், தகராறுகளை ஆய்வு செய்தல் மற்றும் தீர்வு காணுதல் தொடர்பாக, பணிக்குழு (Works Committee) மற்றும் குறைதீர்க்கும் குழு (Grievance Redressal Committee) என இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்புதிய சட்டவரை வின் நோக்கம் 1926ஆம் ஆண்டின் தொழிற் சங்கச் சட்டம், 1946இன் தொழிலாளர் சட்டம், 1947இன் தொழில் தகராறு சட்டம் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து அவற்றை நீர்த்துப்போகச் செய்து ஒரே சட்ட மாகக் காட்டி அந்நிய மூலதனத்தை ஈர்ப்பதுதான்.
இத்திருத்த வரைவில், 100 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யும் தொழி லகங்களில், பணிக் குழு அமைக்கப்பட வேண்டும். இக் குழுவில் தொழிலாளர் பிரதிநிதிகள் 50 விழுக்காடு, நிர்வாகத்தின் சார்பில் 50 விழுக்காடு இருப்பார்கள். இக்குழு, பணி இடத்தில் உள்ள ஒளி, தூய்மை, சிற் றுண்டி வசதி, ஆண்டுதோறும் அளிக்கப்படும் விடு முறை நாள்கள் பற்றிக் கண்காணிக்கும்.
ஆனால் இக்குழுவுக்கு போனஸ், கூலி, தொழில் தகராறுகள் பற்றிப் பேசுவதற்கான அதிகாரம் இல்லை. இதன் மூலம் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மாறாக, தொழிலாளர்களுக்கும் முதலாளிக்கும் இடையே இணக்கமான நல்லுறவு இருக்குமாறு பேணுவது பணிக்குழுவின் கடமையாகும் என்று இந்த வரைவில் வலியுறுத்தப் பட்டுள்ளது. இது, தொழிற்சங்கத்தின் வாயிலாகத் தங்கள் தேவைகளை, உரிமைகளைத் தொழிலாளர்கள் கேட்கவிடாமல் முடக்குவதாகும்.
தொழிலாளர்கள் தங்களது கூட்டு பேர முயற்சி களை (Collective Bargaining) வலியுறுத்துவதற்கு வேலை நிறுத்தத்தை ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்பதே உலகெங்கிலும் உள்ள நடைமுறை.
எரிசக்தியைப் பயன்படுத்தி இயக்கப்படும் தொழில் நிறுவனங் களில், 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்தால், அதில் குறைதீர்க்கும் குழு அமைக்கப்பட வேண்டும் என்று இந்த வரைவில் கூறப்பட்டுள்ளது. இக் குழுவிலும் தொழிலாளர்கள் சார்பிலும் நிறுவனத்தின் சார் பிலும் சமமான பிரதிநிதிகள் இருப்பார்களாம்.
ஒரு தொழிலாளி தன்னுடைய குறை குறித்து இக்குழுவிடம் அளிக்கும் விண்ணப்பத்தின் மீது 45 நாள்களுக்குள் இக்குழு தன் முடிவைத் தெரிவிக்க வேண்டும். இந்தத் தீர்ப்பு நியாயமற்றது என்று தொழிலாளி கருதினால், நிறுவனத்தின் தலைமைக்கு (முதலாளிக்கு) மேல் முறையீடு செய்யலாம். இதன் மீது முதலாளி ஒரு மாதத்திற்குள் தன் தீர்ப்பை வழங்க வேண்டும். 1947இன் தொழில் தகராறு சட்டத்தில் தொழிலாளர் நீதி மன்றம் செய்த வேலையை மோடி அரசு முதலா ளியிடம் ஒப்படைக்கிறது. இதில் தொழிலாளிக்கு எப்படி நியாயம் கிடைக்கும். நண்டைச்சுட்டு நரியைக் காவ லாக வைப்பது போன்றதல்லவா இது!
வேலை நிறுத்தம், கதவடைப்பு, அபராதம்
இந்தச் சட்ட வரைவு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்வதானாலும், முதலாளிய நிறுவனம் கதவடைப்புச் செய்வதாயினும் 6 மாதங்களுக்கு முன்பே அறிவிக்கை அளிக்க வேண்டும். தொழிலாளர்களின் வேலை நிறுத்தத் தையும் முதலாளியின் கதவடைப்பையும் சமமாகக் கருதுவது கடைந்தெடுத்த கயமையாகும்.
ஏனெனில் வேலை நிறுத்த மாயினும், கதவடைப்பாயினும் இரண்டாலும் பாதிக்கப்படு வது தொழிலாளர்கள் மட்டுமே! சட்டத்துக்குப் புறம்பான கதவ டைப்பு என்பது உறுதிப்படுத்தப்பட்டால், முதலாளிக்குத் தண்டம் (அபராதம்) விதிக்கப்படுமாம். ஆனால் கதவடைப்புக் காலத் தில் வேலை இல்லாமல் இருந்த தொழிலாளிக்கு ஊதியம் தரப்படமாட்டாது. எனவே இக்குறைபாட்டை நீக்கிட, கதவ டைப்புக் காலத்தில் தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் முத லாளி தரவேண்டும்; அல்லது கதவடைப்புச் சிக்கல் தீரும் வரையில், தொழிலாளர்களின் ஊதியத்தை அரசின் கருவூலத் தில் செலுத்தி வரவேண்டும் என்கிற விதியைச் சேர்க்க வேண்டும்.
முன்பு, சட்டத்துக்குப் புறம்பான கதவடைப்புக்கு முதலா ளிக்கு ஒரு நாளைக்கு ரூ.50 அபராதம் விதிக்கப்படும் என்று சட்டம் இருந்தது. இப்போது இப்புதிய திருத்தச் சட்டத்தில், இத் தொகை ஒரு மாதத்திற்கு ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை முதலாளிக்கு அபராதமாக விதிக்கப்படும் என்று உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம் சட்டவிரோதமான வேலை நிறுத்தம் என்று முடிவு செய்தால், எல்லாத் தொழிலாளர் களுக்கும் தனித்தனியாக ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும். அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் ஒரு மாதம் சிறைத்தண்டனை.
முதலாளியும் தொழிலாளியும் சமம் என்கிற மோடியின் புதிய சமூகநீதிக் கொள்கைக்காக அவருக்கு நோபல் பரிசுகூடக் கொடுக்கலாம்? முதலாளி என்கிற ஒருவருக்கு மட்டும்தான் அபராதம்; நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு அபராதம் கிடையாது. ஆனால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் அத்தனை பேருக்கும் குறைந்தது ரூ.20,000 அபராதம் விதிக்கப்படும் என்பது இந்துத்துவத்தின் மனுநீதி ஆட்சிதானே!
மேலும் வேலை நிறுத்தம் செய்யுமாறு தூண்டிவிட்டவர் களுக்கும் இதே அளவு தண்டனை விதிக்கப்படும். இந்த விதியின் நோக்கம் அந்நிறுவனத்தில் பணிசெய்யாத தொழிற் சங்கத்தின் தலைவர்களைப் பழிவாங்குவதேயாகும். இதை விடக் கொடுமையானது என்னவென்றால், வேலை நிறுத்தத் தின்போது, ஊதியம் இல்லாமல் இருக்கும் தொழிலாளர்களுக்குப் பணஉதவி செய்யும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கூட இந்தத் தண்டனை உண்டு என்கிறது இவ்விதியின் துணைப் பிரிவு 17.
பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கம், இப்புதிய சட்டத்தின் படிக் கேட்கப்படும் அறிக்கைகளை, விவரங்களை அனுப்பா விட்டால், தொழிற்சங்கப் பொறுப்பாளர் ஒவ்வொருவருக்கும் ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப் படும். ஆனால் இந்த விவரங்களை முதலாளிய நிறுவனம் அனுப்பாவிட்டால் அந்த நிறுவனத்துக்கு மட்டும் அபராதம் விதிக்கப்படும். அதன் நிர்வாக இயக்குநர்கள் மீது அபராதம் விதிக்கப்படமாட்டாது. இதுதான் ஒரு கண்ணில் வெண்ணெயும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் வைத்துப் பார்ப்பது என்பது.
பதிவு செய்யப்படாத தொழிற்சங்கத்தைப் பதிவு செய்யப் பட்ட தொழிற்சங்கம் என்று தொழிலாளர்களிடம் கூறி ஏமாற்று வோர்க்கு, ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும். தொழிற்சங்கங்கள் அமைக்கப்படுவதைத் தடுக்கவும், தொழிற் சங்கத் தலைவர்களை அச்சுறுத்தவும் இந்த விதி கொண்டு வரப்பட்டுள்ளது.
லே-ஆஃப் (lay-off)) எனப்படும் ஊதியமில்லாத விடு முறையைத் தொழிலாளர்களுக்கு அறிவிப்பதற்கு, 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யும் நிறுவனங்கள், அரசின் முன் ஒப்புதலைப் பெறவேண்டும். இப்போது இந்த எண்ணிக்கை வரம்பு 300க்குமேல் என உயர்த்தப்பட் டுள்ளது. இனி முதலாளிய நிறுவனங்கள் தொழிலாளர் எண் ணிக்கையை 300 என்கிற எல்லைக்குள் வைத்துக்கொண்டு, அவை விரும்பும் போதெல்லாம் லே-ஆஃப் செய்து தொழி லாளர்களை அச்சுறுத்தலாம்.
1991 முதல் நடுவண் அரசும், மாநில அரசுகளும் பெரு முதலாளிய நிறுவனங்களின் முகவர்கள் போல் செயல்பட்ட தால், தொழிற்சங்க நடவடிக்கைகள் முடக்கப்பட்டன. வேலை நிறுத்தங்களைவிட முதலாளிய நிறுவனங்கள் லே-ஆஃப் மற்றும் கதவடைப்புச் செய்ததால் அதிக அளவில் மனித வேலை நாள்கள் (man days) வீணாயின. 1999-2008 வரையிலான பத்து ஆண்டுக் காலத்தில், முதலாளிய நிறுவனங்கள் செய்த கதவடைப்பால் 17 கோடி மனித வேலை நாள்கள் வீணாயின. அதே காலத்தில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் 8.4 கோடி மனித வேலை நாள்கள் மட்டுமே வீணாயின. இந்தப் புள்ளிவிவரம் முதலாளிகள் எந்த அளவுக்கு ஆதிக்கம் செய்கின்றனர் என்பதைப் புலப் படுத்துகிறது. மோடி அரசு கொண்டுவரவுள்ள தொழிலாளர் சட்டத் திருத்தம் மேலும் முதலாளிகளின் ஆதிக்கத்தை வலுப் படுத்துவதாகவே உள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்கள் முதலீட்டை அதிகப் படுத்துவதற்கு இந்தியாவில் உள்ள தடைகளில் ஒன்றாக ‘இன்ஸ்பெக்ஷன் ராஜ்’ (Inspection Raj) இருப்பதாகக் கூறிவருகின்றன. தொழில் நிறுவனத்தில் தொழிலாளர்களின் உரிமைகளும் பாதுகாப்பு வசதிகளும், முறையாகப் பின்பற்றப் படுகின்றனவா என்பதை ஆய்வு செய்ய ஆய்வாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டம் 1946இல் அம்பேத்கரின் முயற்சியால் உருவாக்கப்பட்டது. ஆனால் 1991க்குப் பிறகு, “ஆய்வா ளர்கள் வீண்தொல்லை தருகிறார்கள்” என்று முதலாளிகள் அரசிடம் கூறிவந்தனர். உண்மை நிலை என்னவெனில் தாராளமயம், தனியார்மயம் நடைமுறைக்கு வந்த பின்னர், ஆய்வாளர்கள் ஆய்வு செய்வதையே குறைத்துக் கொண்டனர்.
1986இல் பதிவு செய்யப்பட்டிருந்த 1,65,637 தொழில் நிறுவனங்களில் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தது 63 விழுக்காடு நிறுவனங்கள் மட்டுமே. ஆனால் இது 2008இல் 18 விழுக்காடாகக் குறைந்துவிட்டது. இதுவும் கூடாது என்கிற முதலாளிகளின் ‘அபயக்குரலை’க் கேட்ட ‘மோடி பகவான்’ புதிய சட்டத் திருத்தத்தில் ‘ஆய்வு செய்யும் முறையையே’ நீக்கிவிட்டார். தொழில் நிறுவனங்களின் முதலாளிகளே, தொழிலாளர்கள் எல்லோரும் ‘சேமம்’ என்று சான்று கொடுத்தால் போதும் என்று மோடி அறிவித்துவிட்டார். அதேபோல் தொழிலாளர் தொடர்பான பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டியதில்லை என்றும் முதலாளிகளுக்கு ‘அருள்பாலித்து’விட்டார் மோடி! ஹை-டெக் (High-teh) யுகத்தில் பதிவேடு பராமரித்தல் ‘சுத்த அம்பக்’ என்று கூறும் மோடி, முதலாளிகள் இணையதளத்தின் மூலம் தெரிவித் தாலே போதும் என்று கூறிவிட்டார்.
அமைப்புச்சார் நிறுவனங்களிலேயே தொழிலாளர் சட்ட விதிகளின் உரிமைகளையும் பயன்களையும் பெறக்கூடிய நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை, கடந்த இருபது ஆண்டுகளில் வேகமாகக் குறைந்துவருகிறது. 2003ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியில் நிரந்தரத் தொழிலாளர்களை அமர்த்துவதற்குப் பதிலாக, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கென (Fixed-term) தொழில் நிறுவனங்கள் தொழிலாளர்களை அமர்த்திக் கொள்ளலாம்; அதன்பின் அத்தொழிலாளர்களைப் பணியிலிருந்து நீக்கிவிடலாம் என்று சட்டத்திருத்தம் செய் யப்பட்டது. இவ்வாறு பணியில் சேரும் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தில் சேர்ந்திட அஞ்சுவார்கள்.
எனவே 2011-12இல் தேசியப் புள்ளி விவர மாதிரியின் (NSSO) 68ஆவது சுற்று ஆய்வின்படி, அமைப்புச்சார் தொழில் நிறுவனங்களில் மூவரில் ஒருவர் மட்டுமே தொழிற்சங்கத்தில் இருந்தார். இந்நிறுவனங்களில் நிரந்தரத் தொழிலாளரின் பங்கு 52.4 விழுக்காடு மட்டுமே. மற்றவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும், தற்காலிகத் தொழிலாளர்களாகவும் இருந்தனர்.
மேலும் இந்த ஆய்வறிக்கையின்படி, 2011-12இல் நிரந்தரப் பணியாளர்களில் 60 விழுக்காட்டினரும் தற்காலித் தொழிலாளர்களில் 93 விழுக்காட்டினரும் பணிக்கொடை, ஓய்வூதியம், மருத்துவச்செலவு, மகளிருக்கு மகப்பேறு சலுகை போன்ற சமூகப் பாதுகாப்பு உரிமைகள் பெறாதவர்களாக இருந்தனர். சட்டம் வழங்கும் உரிமைகளையும் சலுகை களையும் பெரும்பாலான தொழிலாளர்கள் பெறவில்லை என்ற அவலநிலையையே இது காட்டுகிறது.
தொழிலாளர் குறித்த சட்டம் இயற்றும் அதிகாரம் பொதுப் பட்டியலில் இருப்பதால், மாநில அரசுகளும் போட்டி போட்டுக் கொண்டு மூலதனத்தை ஈர்ப்பது என்ற பெயரில் தொழிலாளர் சட்டங்களில் கேடான பல திருத்தங்களைச் செய்து வருகின்றன. சிறப்புப் பொருளியல் மண்டலப் பகுதி களுக்கும், ஏற்றுமதி சார்ந்த தொழில்களுக்கும் தொழிலாளர் சட்டம் பொருந்தாது என்று தமிழ்நாடு, ஆந்திரம் போன்ற பல மாநிலங்கள் அறிவித்துள்ளன.
ஆகவே கடந்த கால் நூற்றாண்டுக் காலமாக தனியார் மயம், தாராள மயம், நாட்டின் வளர்ச்சி என்கிற பெயர்களால் தொழிலாளர்களின் உரிமைகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும், உத்திரவாதமான வாழ்வும், நலன்களும் ‘கார்ப்பரேட் சாமிகளுக்குப்’ பலியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மோடி அரசு, பீகார் சட்ட மன்றத் தேர்தலுக்குப்பின் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் கொண்டுவர எண்ணியுள்ள தொழிலாளர் சட்டத்திருத்தம், எஞ்சியிருக்கும் தொழிலாளர்களின் உரிமைகளை அடியோடு துடைத்தெறிவதாகவே இருக்கும்.
இதற்கான முன்னோட்டமாக 2015 சூலை 21, 22 ஆகிய நாள்களில் நடைபெற்ற 46ஆவது இந்தியத் தொழிலாளர் களின் மாநாட்டை நரேந்திர மோடி தொடங்கி வைத்து ஆற்றிய உரை அமைந்துள்ளது. தொழிலாளர் சிக்கலில் அரசு தலையிடாது எனவும், தொழிற்சங்கங்களும் முதலீட்டாளர்களும் தமக்குள் இணக்கமாகப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அரசின் கொள்கையை வலியுறுத்தி அவர் பேசினார்.
“தொழிலாளர்கள் சில தியாகங்களைச் செய்ய வேண்டும்; அப்போதுதான் மற்ற தொழிலாளர்களும் பயன் பெறுவர்” என்று அறிவுரை கூறினார். அதாவது, அதிக ஊதியம் பெறும் நிரந்தரத் தொழிலாளரை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக இரண்டு, மூன்று இளம் தொழிலாளர்களைக் குறைந்த கூலிக்கு அமர்த்தி, அவர்களின் உழைப்பைச் சுரண்டுவது என்பதே இதன் பொருள்.
மேலும் அம் மாநாட்டில் மோடி, “தொழில் பயிலுநர் (apprentice) எண்ணிக்கையைத் தொழில் நிறுவனங் களில் அதிகப்படுத்துவதன்மூலம் வேலை வாய்ப்பை உருவாக்க முடியும். சீனாவில் 2 கோடி, சப்பானில் ஒரு கோடி, செரு மனியில் 30 இலட்சம் பேர் தொழில் பயிலுநர்களாக இருக் கிறார்கள்; இந்தியாவிலோ 3 இலட்சம் பேர்தான் இருக் கிறார்கள்” என்ற புள்ளிவிவரத்தையும் அள்ளி வீசினார்.
எனவே மோடியின் ஒட்டுமொத்த நோக்கம், முதலாளிகள் பெரிதும் விரும்புகின்றவாறு, தொழிலாளர்களை விரும்புகிற போது வேலைக்கு அமர்த்தி, வேண்டாதபோது, தூக்கி எறிகின்ற (Hire and Fire) நிலையை உருவாக்கி, தொழிலாளர்களின் உழைப்பை முதலாளிகள் சுரண்டுவதற்கான வேட்டைக்காடாக மாற்றுவதே ஆகும்.
மனிதகுல வரலாற்றில் வர்க்கச் சமூகம் ஏற்பட்ட பிறகு, இதுநாள் வரையில் உழைக்கும் மக்கள் திரள் பெற்றுள்ள உரிமைகளும், நலவாழ்வு ஏந்துகளும் ஆளும்வர்க்கத்தைக் கடுமையாக எதிர்த்துப் போராடி ஈட்டியவையாகும்.
எனவே உழைக்கும் வர்க்கம் தொடர்ந்து போராடி வெல்லவேண்டும். நரேந்திர மோடி அரசு கொண்டு வரவுள்ள தொழிலாளர் சட்டத் திருத்தத்தை உழைக் கும் மக்கள் ஓரணியில் திரண்டு முறியடிப்போம்!