“உழுவார் உலகத்தார்க்(கு) ஆணி’’ என்றும், “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” என்றும் உழவின் பெருமையையும், உழவர் பெருமையையும் உயர்த்திப் பேசியவர் திருவள்ளுவர்.

modi in head down 1தமிழ் நாட்டுக்கு வரும் போது ஏதாவது ஒரு திருக்குறளைச் சொல்லி நடித்து விட்டுப் போகும் ஒன்றிய அரசின் பிரதமர் நரேந்திர மோடிக்கு இப்படிப்பட்டக் குறட்பாக்கள் எல்லாம் தெரிந்திருக்க முடியாது.

அதனால்தான் வேளாண் மக்களுக்கும், வேளாண்மைக்கும் எதிராக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளார் மூன்றுத் திருத்தச் சட்டங்களை.

இக்கொடுமையானச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரிக் கடந்தப் பதினொரு மாதங்களைத் தாண்டி இன்றும் போராடிக் கொண்டிருக்கிறார்கள் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்கள்.

இலட்சக் கணக்கான மக்கள் தலைநகர் டில்லியை முற்றுகையிட்டுப் போராடி வரும் நிலையில், ஆறுதலுக்காக ஒருமுறை கூட இவர்களைச் சந்தித்துப் பேச முன்வரவில்லை, மோடி. ஏறத்தாழ 600க்கும் மேற்பட்டோர் இப்போராட்டக் களத்தில் உயிரை இழந்துள்ளார்கள்.

பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை விற்பதும், அவைகளுக்கு “விசுவாசமாக “ நடந்து கொள்வதும் வழக்கமாகி விட்டது.

அப்படித்தான் இந்நாட்டின் வேளாண்மையைக் கார்ப்பரேட்டுகளின் காலடியில் கொண்டு போய்ச் சேர்க்க இத்திருத்தச் சட்டங்கள் வழிவகை செய்கின்றன. இதனால் வருங்காலங்களில் வேளாண் மக்கள் மிகப் பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள். எதிர்காலத்தில் வேளாண் தொழில் என்பதே கேள்விக்குறியாகி விடும் நிலை உருவாகி இருக்கிறது.

மக்களின் அழுகுரல் மோடியின் காதில் ஏறவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், நாடாளுமன்றத்திலாவது இச்சட்டம் குறித்து எதிர்க்கட்சிகளுடன் பேச ஒத்துழைக்க வேண்டும், மோடி. அதற்கும் அவர் முன்வருவதாகத் தெரியவில்லை.

இந்நிலையில் வேளாண் மக்களின் போராட்டத்தை உதாசீனப்படுத்துவதையும், வேளாண் விரோதச் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரியும் 27-09-2021 அன்று இந்திய ஒன்றிய அளவில், நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்து, ஆதரவையும் வேண்டியுள்ளது ஒன்றுபட்ட வேளாண் முன்னணியான "சம்யுக்தா கிசான் மோர்ச்சா" என்ற அமைப்பு.

இப்பேராட்டத்திற்குத் திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகம், காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள் எல்லாம் முழுமையான ஆதரவைக் கொடுத்துள்ளன. ஒன்றிய அளவிலும் எதிர்க்கட்சிகளின் ஆதரவும் இப்போராட்டத்திற்கு வலிமை சேர்க்கின்றன.

வளையாமல் நிற்கும் மரமும் வலிமையான புயலில் வீழ்ந்து விடும். நாணல் வளைந்து கொடுத்து நிமிர்ந்து நிற்கும். அரசு அதிகாரத்தை விட மக்களின் கோபம் வலிமை வாய்ந்தது.

மூன்று வேளாண் சட்டங்களைப் பிரதமர் மோடி அரசு திரும்பப் பெற வேண்டும்.

“நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
 நாடொறும் நாடு கெடும்” .  - திருவள்ளுவர்

- எழில்.இளங்கோவன்

Pin It