ஊழல் ஆட்சிகளில் உழன்ற தமிழகம்! தொழில் வளர்ச்சியிலும் தோற்றது!
தமிழ்நாடு திருவள்ளுவரைப் பெற்றெடுத்தது. அவர் “அரசு” என்பது பற்றி ஆழ்ந்தகன்ற பட்டறி வுடன் நல்ல பல செய்திகளைத் தந்தார்.
உழுவார் உலகத்தார்க்கு ஆணி...!
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்...!
தள்ளாவிளையுளும் தக்காரும்
தாழ்விலாச் செல்வரும்...!
என்பவை உழவுத் தொழிலின் உயிரான தன்மை யையும், குறைவுபடாத - நிரம்பிய வேளாண் விளைச் சலையும், எல்லா வகைகளிலும் பண்பட்ட தக்காரையும் தனிஉரிமை பெற்ற தாழ்விலாத செல்வர்களையும் பெற்றிருப்பதே நல்ல குமுகம், நல்ல “நாடு” என்பதே அவர் கொள்கை.
பல இலக்கம் மக்கள் மட்டுமே வாழ்ந்த 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தில் வாழ்ந்தவர் திருவள்ளுவர். அவர் தந்த திருக்குறள் எந்தத் தமிழ ரசனுக்கும் தமிழ்ப்புலவர்களால் காட்டப்பட்டதாக - சொல்லப்பட்டதாக வரலாறு இல்லை.
தமிழ் மூவேந்தர்கள் எல்லோரும் மக்களுக்கு எழுத்தறிவு தரப் பொதுப் பள்ளிகள் வைக்கவில்லை; ஆனால் பார்ப்பனர்கள் படிக்க வேத பாட சாலைகளை நிறுவினர். கடவுள் நம்பிக்கையை வளர்க்க, கோவில்களையும் சத்திரங்களையும் கட்டினர்.
அத்துடன்கூட, மழைநீரையும், ஓடை வெள்ளத்தையும், ஆற்று நீரையும் தேக்கி வைக்க ஏற்ற பெரிய, சிறிய ஏரிகளையும் குளங்களையும் வெட்டினர். நீர்வளம் பெற்ற வேளாண் மக்கள் மாடாக உழைத்து நிரம்பிய - தள்ளா விளைச்சலை உண்டாக்கினர்.
அந்நிய வெள்ளையர் ஆட்சியில் இந்நீர் நிலைகள் கட்டிக் காக்கப்பட்டன. பருவ மழை பெய்யத் தவறினாலும், ஒரு போகம் நல்ல விளைச்சல் தர ஏரிகள் உதவின.
“சுதந்தரம்” என்பதன் அருமையையும் பெருமையையும் தெரியாத இந்தியர் களும்-தமிழர்களும் எந்த நல்ல கொள்கைகளையும் முன்வைத்து ஆட்சி செய்யவில்லை. வருணசாதி ஒழுக்கமும், உள்சாதிப் பிரிவினைகளும், பார்ப்பனிய வீட்டு வாழ்க்கை முறையும் இந்தியர்களின் - தமிழர்களின் வாழ்க்கையைச் சீரழித்தன.
வெள்ளைக்காரன் இந்தியாவில் விளைந்த பருத்தி, நிலக்கடலை, இரும்புக் கனிம மண் இவற்றை இங்கிலாந்துக்கு மூலப்பொருள்களாக ஏற்றிச் சென்று, துணி, இரும்புத் தண்டவாளம், எண்ணெய் வடிவில் ஆக்கி, இந்தியாவிலும், தமிழகத்திலும் கொள்ளை விலைக்கு விற்றான்; வேளாண் மக்களைச் சுரண்டினான். அன்று, அவனுக்குக் கையாள் களாக மேல்சாதிகளைச் சேர்ந்த படித்தவர்களும் அதி காரிகளும் செயல்பட்டனர்.
அதனால்தான் 1876இல்-தாது என்றழைக்கப்படும் ஆண்டில் கடும் பஞ்சம் வந்தது. அது உலகத்திலேயே மிகப் பெரிய பஞ்சம் என்று சொல்லப்பட்டது. 1876-1878இல் ஏற்பட்ட அப்பஞ்சத்தால் சென்னை, மைசூர், பம்பாய், அய்தராபாத் நகரங்களிலும் மற்ற வடஇந்திய மாகாணங்களிலும் 5 கோடியே 80 இலட்சம் மக்கள் உண்ண உணவின்றி வாடினார்கள். 55 இலட்சம் மக்கள் பட்டினியால் செத்தார்கள். இந்நேரத்தில் மழையும் பொய்த்தது; சாவுகள் தொடர்ந்து நடந்தன.
இத்தகைய கேடான நிலைமை “சுதந்தரம்” வந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகும் நீடித்துவிட்டது. வேளாண்மை வீழ்ந்துவிட்டது.
2010க்குப் பிறகு தமிழகத்தில் இந்த இழிநிலை வேகமாக வளர்ந்துவிட்டது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களும், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, கடலூர், புதுச்சேரி மாவட் டங்களின் பகுதிகளும் சம்பா நெல் விளைச்சலுக்குக் காவிரி நீரை நம்பி இருப்பவை. காவிரி நீர்வரத்துப் போதாமையால், சம்பா பயிர் சாவியாகி - மகாராட்டி ராவில் விதர்பா மாவட்டத்தில் கடந்த பத்து ஆண்டுகளாகப் பருத்தி வேளாண்மை கெட்டதால் இரண்டு இலட்சம் வேளாண் குடும்பத் தலைவர்கள் தற்கொலை செய்து கொண்டது போல-தமிழகத்தில் திருவாரூர் இரகுநாதபுரம் எஸ்.கோவிந்தராஜ் (70), ஈரோடு வெங்கமேட்டூர் முத்துசாமி (70), ஈரோடு கரட்டுப் பாளையம் பி. இராம லிங்கம் (56), தஞ்சை பொன்னவராயன் கோட்டை வி. மாசிலாமணி (49) முதலானோர் சம்பாப் பயிர் பொய்த்ததால் ஏற்பட்ட கடன் பிடுங்கல் தாளாமல் இந்த ஆண்டில் தற்கொலை செய்து கொண்டனர்.
அரசு வங்கிகளிலும், தனியார் நிதி நிறுவனங்களிலும் வாங்கிய வேளாண் கடனைத் திருப்பித் தர முடியாமல் -குண்டர்களாலும், வங்கி அதிகாரிகளாலும் தாக்குண்டு சிலர் ஏற்கெனவே செத்துவிட்டனர்.
ஏரிகள், வாய்க்கால்கள் கடந்த 60 ஆண்டுகளாகச் சரிவரத் தூர்வாரப்படாததால், பெய்யும் மழை நீரை ஏரிகளில் சேமிப்பது முடியவில்லை. 100க்கு 90 ஏரிகள் தாம்பாளம் போல் மண் மேடிட்டு, சீமைக் கருவை, நாட்டுக் கருவை மரங்கள் ஏரி உள்வாயில் அடர்த்தி யாக முளைத்துவிட்டன.
திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் தாமிரபரணி ஆறு தொடங்கி - பாலாறு, கொசஸ்தலை ஆறு வரை ஆற்று மணல் கொள்ளை எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு நடந்தது, அதனால் தமிழக ஆறுகளில் நீரோட்டமே இல்லை.
கோகா கோலா, பெப்சி கோலா நிறுவனங்கள் குடிநீர் புட்டிகள், சுவை நீர் புட்டிகளில் அடைத்து, கொள்ளை விலைக்கு விற்பதற்காக-தாமிரபரணி, வைகை, காவிரி ஆறுகளின் நீரை உறிஞ்சி எடுக்க தமிழக அரசு - அதி காரிகள் - ஆளும் கட்சியினர் கூட்டுக் கொள்ளையடிக்க, நீண்டகாலக் குத்தகைக்கு விட்டதால், நிலத்தடி நீர், 600 முதல் 1000 அடி வரை கீழே போய்விட்டது.
மேலும் வேளாண்மை விளைச்சலிலும், வேளாண் பொருள்களைச் சந்தையிடலிலும் - இந்தியாவுக்கான மாநிலங்களின் வரிசைப் பட்டியலில், தமிழ்நாடு 25 ஆவது இடத்தில் இன்று இருக்கிறது. மகாராட்டிரம் முதலாவது இடத்தில் இருக்கிறது. இதன் பொருள் என்ன? வேளாண் மக்கள் இளித்தவாயர்கள் என்பதா? இல்லை.
வேளாண்மைக்குப் போதிய நீர் இல்லை என்பது முதற்காரணம். இடுபொருள்கள் வாங்கிடவும், கூலி கொடுத்திடவும் போதிய பணம் - வேளாண் கூட்டுறவு வங்கி களால் உரிய காலத்தில் போதிய அளவில் தரப்பட வில்லை என்பது இரண்டாவது காரணம். வேளாண் விளைபொருள்களை நல்ல விலைக்கு விற்றுத்தர - அல்லது அரசே வாங்கிக் கொள்ளப் போதிய ஏற்பாடு செய்யவில்லை என்பது மூன்றாவது காரணம்.
எனவே தமிழக வேளாண்மை வீழ்ச்சி அடைந்து விட்டது.
அடுத்து கலை, அறிவியல், பொறியியல், வேளாண் இயல், வணிகவியல் பட்டங்களைப் பெற்றும்-வேலையில்லாமலும் - ஏதேனும் ஒரு தொழிலைச் செய்ய முயலாமலும், 1 கோடி ஆண்களும் பெண்களும் தமிழகத்தில் உள்ளனர்.
தமிழகத்தின் தொழில் பெருக்கத்திற்காக, அயல்நாடு களிலிருந்தும் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் முதலீடுகளை இழுக்க வேண்டி, 2015 செப்டம்பரில் தமிழக அரசு பெரிய அளவில் ஒரு மாநாட்டை நடத்தி யது. தொழில்கள் தொடங்கப்பட ஏற்ற 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழக அரசினரால் போடப்பட்டன.
இப்படி இந்திய அளவிலும், 29 மாநிலங்கள் அளவிலும் தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
அவற்றின் அடிப்படையில், எந்தெந்த மாநிலத்தில் எந்த அளவு தொழில் தொடங்கும் முயற்சிகள் ஏற் பட்டுள்ளன என, 2016 சூன் வரையிலான காலத் துக்குரிய கணக்கை இந்திய மத்திய அரசும் உலக வங்கியும் இணைந்து எடுத்து ஒரு பட்டியலிட்டன.
அதில், 29 மாநிலங்களுக்கான வரிசைப் பட்டி யலில் 18ஆவது இடத்தில் தமிழ்நாடு அரசு இருக் கிறது.
ஆந்திராவும் தெலுங்கானாவும் முதலாவது இடத்தைப் பெற்றுள்ளன. இதன் பொருள் என்ன?
வெகுமக்களை இலவசங்களால் கவர்ந்துவிட்டோம் என்று இன்றையத் தமிழக ஆட்சியாளர் திமிரோடு நினைப்பதும், ஊழலிலும் கைக்கூலி பெறுவதிலும் இழுத்தடிப்பதிலும் தமிழக அரசு முதலாவது இடத்தில் இருப்பதும், தமிழ்ப் பெருமக்களும் படித்த இளைஞர் களும் அறிஞர்களும் தமிழ்நாட்டில் - கட்சி உணர்ச்சிக்கு முதலிடம் தந்துவிட்டு, ஒட்டுமொத்த மக்கள் நலம், வளர்ச்சி - முன்னேற்றம் பற்றிக் கவலையற்று வயிறு வளர்த்தால் போதும் என்று இருப்பதுமே ஆகும்.
ஆதலின், தமிழ்ப்பெருமக்களும் படித்த இளைய தலைமுறையினரும் - கட்சி, சாதி, அவரவர் ஊர் நலன் என்கிற உணர்ச்சிகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு - தமிழ்நாட்டு நலனுக்கு முன்னுரிமை தர முன்வாருங்கள் என அன்புடன் வேண்டுகிறோம்.
- வே.ஆனைமுத்து