சர்வதேச மகளிர் தினம் அனுசரிக்கப்படத் துவங்கி 100 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த ஆண்டு மார்ச் 8 அன்று 101வது ஆண்டாக மகளிர் தினம் உலகம் முழுவதிலும் கொண்டாடப்படவும் அனுசரிக்கப்படவும் உள்ளது. “Equal Access to Education, training and Science and Technology : Pathway to decent work for women” என்ற முழக்கம் இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தின கோஷமாக சர்வதேச ஐக்கிய நாடுகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னமும் பெண்களுக்கு பல்வேறு தளங்களில் சமவாய்ப்பு மறுக்கப்படுவதாலும். கண்ணியமான வேலைவாய்ப்புகள் பெண்களுக்கு உருவாக்கப்பட வேண்டியுள்ளதாலுமே இத்தகைய முழக்கம் முன் வைக்கப்பட்டுள்ளது.

ஆணாதிக்கச் சிந்தனை புரையோடிப் போயுள்ள இச்சமுதாயத்தில் பெண் இன்னமும் பாரபட்சத்துடனேயே நடத்தப்படுகிறாள். இச்சமூகம் பெண்ணை பாரமாகவே பார்க்கிறது, நவீன தாராளமயக் கொள்கைகள் செயல்படுத்தப்பட ஆரம்பித்த பிறகு பெண்ணை ஒரு நுகர்பொருளாக பார்க்கும் போக்கு அதிகரித்துள்ளது. உலகம் முழுவதிலும் பல நாடுகளில் இத்தகைய நிலையே நிலவுகிறது. அதனால் தான் தன்னுடைய மகள் மாலியா அணியும் உடையின் அளவிற்காக ஒபாமா கடவுளை பிரார்த்திப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகின. உலகளவில் வலிமையான தலைவராக சித்தரிக்கப்படும் அமெரிக்க அதிபர் ஒபாமா, ஒரு சராசரி தந்தையாக தனது மகளின் உடை குறித்து கவலைப்படுவதாக அச்செய்தி கூறியது. வருகின்ற ஜூலை மாதத்தில் பன்னிரண்டு வயதினை எட்டிப் பிடிக்கவுள்ள மாலியா வாலிபர்களும் கலந்து கொள்ளும் நடன விருந்திற்கு செல்லும்போது அவளது ஸ்கர்ட்டின் நீளத்தை அதிகரிக்கச் செய்யும்படி தான் கடவுளிடம் பிரார்த்திப்பதாக ஒபாமா அதில் கூறியிருந்தார்.

ஆக, பெண்ணின் மீது இழைக்கப்படும் பாலியல் குற்றங்களுக்கு அவளையே காரணம் காட்டும் போக்கு இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும் உள்ளது என்பதனையே இச்செய்தி சுட்டிக் காட்டுகிறது.இத்தகைய ஆணாதிக்கச் சிந்தனைகள் ஆண்களிடம் மட்டுமின்றி பெண்களிடமும் காணப்படுகிறது. சமீபத்தில் தனது சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த பட்டியலிலே, தற்போதைய உச்சநீதிமன்ற நீதிபதியாகிய க்யான் சுதா ஷர்மா என்பவர் திருமண வயதுடைய தனது இரு பெண்களையும் கடன் பட்டியலில் குறிப்பிட்டுள்ளார். இத்தேசத்திலே வரதட்சணைக் கொடுமைக்கு எதிரான இயக்கங்களையும், பிரச்சாரங்களையும் பல்வேறு மாதர் அமைப்புகளும், ஜனநாயக சக்திகளும் மேற்கொண்டு வருகின்றன. எனினும், நுகர்பொருள் கலாச்சாரம் புற்றீசல் போல பெருகி வரும் இன்றைய காலகட்டத்தில் ஆடம்பர திருமணத்திற்காக அதிகரித்து வரும் செலவுகள் காரணமாக பெண் பாரமாகவே அவளது பெற்றோரால் பார்க்கப்படுகிறாள்.

பொதுவான சமூகப் பிரச்சனைகளிலும், குறிப்பாக பெண்கள் தொடர்பான பிரச்சனைகளிலும் முன்னேற்றகரமான சிந்தனையுடன் இருப்பவர்களாகக் கருதப்படும் உச்சநீதிமன்றத்தின் நீதிபதி ஒருவரே பெண்களைப் பற்றிய இத்தகைய கண்ணோட்டத்துடன் இருக்கிறார் என்பது இச்சமூகத்தில் ஆழமாகப் புரையோடிப் போயுள்ள ஆணாதிக்கச் சிந்தனை வேரோடும் வேரடி மண்ணோடும் களையப்பட வேண்டியதன் அவசியத்தினையே வலியுறுத்துகிறது. எனவேதான், கல்வி, பயிற்சி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பெண்ணுக்கு சமவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதுடன் கண்ணியமான வேலைவாய்ப்பு பெண்ணுக்கு கிடைத்திட வழி செய்யப்பட வேண்டும் என்ற முழக்கம் சர்வதேச ஐக்கிய நாடுகளால் முன் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை பெண்களின் கல்வியறிவு விகிதம் என்பது 65.38 சதமாக உள்ளது. தமிழகத்தில் இது 73.42 சதமாக உள்ளது. அகில இந்திய சராசரியை விடக் கூடுதலாக உள்ளபோதும், ஒட்டுமொத்த கல்வியறிவு விகிதத்தில் கேரளா மற்றும் மகாராஷ்டிராவிற்கு அடுத்து மூன்றாவது நிலையிலேயே தமிழகம் உள்ளது. (ஆதாரம்: தமிழக மனிதவள மேம்பாட்டு அறிக்கை 2003) எனவே, கல்வி உள்ளிட்ட இதர துறைகளில் சமவாய்ப்பு பெண்களுக்கு கிடைத்திட வேண்டும் என்ற ஐ.நா முழக்கம் நமது மாநிலத்திற்கும் பொருந்துவதாகவே உள்ளது.வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரையில் இந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் பெருமளவில் புதிய வேலைவாய்ப்புகள் விவசாயம், கனிம வளம் உள்ளிட்ட முதன்மைத் துறையில் உருவாக்கப்படவில்லை.

நிரந்தரப் பணியிடங்கள் ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் தினக்கூலிகள் மூலம் நிரப்பப்படுவது என்பதும் வேலையிழப்புகளும், அன்றாட நிகழ்வுகளாகியுள்ளது. இதன் காரணமாக பொதுவாக தொழிலாளர்கள் பாதிப்பிற்கு ஆளாகியுள்ள போதும் பெண் தொழிலாளர்கள் கூடுதல் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். வேலைவாய்ப்புகளில் பெண்களின் பங்கேற்பு விகிதம் குறித்து தேசிய மாதிரி ஆய்வு 1999_-2000 மற்றும் 2004_-2005 ஆகிய ஆண்டுகளில் வெளியிட்ட புள்ளி விவரங்களை மேலோட்டமாக பார்த்தால் பெண்களின் பங்கேற்பு விகிதம் அதிகரித்துள்ளது போலத் தோன்றும். ஆனால், அதனைக்கூர்ந்து கவனிக்கின்றபோது இத்தகைய வேலைவாய்ப்புகள் தொழிற்சாலைகள் உள்ளிட்ட இரண்டாம் நிலைத் துறையிலும் மற்றும் நிதி, நிர்வாகம், சேவை உள்ளிட்ட மூன்றாம் நிலைத் துறையிலுமே உருவாக்கப்பட்டுள்ளன என்பதனையும், இவற்றில் பெரும்பாலானவை அணிதிரட்டப்படாத துறையிலேயே என்பதனையும் உணர முடியும்.

இன்றைக்கு அணி திரட்டப்பட்ட துறையானாலும் அணி திரட்டப்படாத துறையானாலும் கண்ணியமான வேலை என்பது தொழிலாளிகளுக்கு குறிப்பாக பெண் தொழிலாளிகளுக்கு மறுக்கப்படுகிறது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் பஞ்சாலைகளில் பெண்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வருவது குறித்து நம்மில் பலர் அறிவோம். இத்தகைய முறையை எதிர்த்த நடவடிக்கைகளை தொழிற்சங்கங்கள் மேற்கொள்கின்றபோதும், திருமாங்கல்ய திட்டம் போன்ற பல்வேறு பெயர்களில் இன்றும் இவை நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் தில்லி பல்கலைக் கழகம் மேற்கொண்ட ஆய்வின்படி 18 வயதிற்கு குறைவான பெண்கள் இங்கு வேலை செய்கின்றனர். மிகவும் மோசமான பணிச்சூழலுடன் மேற்பார்வையாளர்கள் செய்யும் தொந்தரவுகளையும் (பாலியல் கொடுமை உட்பட) இப்பெண்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எப்படியாவது இவற்றை சகித்துக் கொண்டால் ஒப்பந்த காலம் முடியும் போது ஒரு தொகை கிடைக்குமே என்ற இப்பெண்களின் எதிர்பார்ப்பும் நடப்பதில்லை. ஏதாவது சாக்குபோக்கை சொல்லியோ அல்லது திருட்டுப் பழி சுமத்தியோ இவர்களுக்கு தொகையை அளிப்பதனையும் மறுத்து வருகின்றனர்.

கண்ணியமான வேலைவாய்ப்பு என்பது பெரும்பாலான பெண்களுக்கு கிடைப்பதில்லை என்பதனையே இது வெளிப்படுத்துகிறது.பெண் சமத்துவமும் கண்ணியமான வேலைவாய்ப்பும் எட்டப்பட வேண்டுமெனில் இச்சமூகத்தில் நிலவும் அனைத்துவிதமான ஏற்றத்தாழ்வுகளும் களையப்பட வேண்டும். நமது நாட்டில் ஆட்சியாளர்கள் செயல்படுத்தி வரும் நவீன தாராளமயக் கொள்கைகளையும், தொழிலாளர் விரோத. மக்கள் விரோத கொள்கைகளையும் முறியடிப்பதன் மூலமே சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை களைந்திட முடியும். எனவே, இத்தகையதொரு சமூக மாற்றத்திற்காக செயல்படும் ஜனநாயக முற்போக்கு சக்திகள் வலுப்படுத்தப்பட்டு, ஒன்றிணைந்த இயக்கம் முன்னெடுத்துச் செல்லப்பட, இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை அனுசரித்திடும் வேளையில் உறுதி பூணுவோம். ஆண்-, பெண் சமத்துவமும் கண்ணியமான வேலைவாய்ப்பும் கானல் நீரல்ல, கைவசப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதனை பறைசாற்றுவோம்.

Pin It