பெண். மனித உயிர்களை உற்பத்தி செய்கிறவள். வீட்டை, குடும்பத்தை நிர்வகித்துப் பேணுகிறவள். அடிமையாக, தேவதாசி யாக, பொட்டுக்கட்டி விடப்படுபவளாக.... விற்கிற பண்டமாக... கணவன் இறந்த பின், அவன் சிதைக் குள்ளேயே வீசியெறியப்படும் ஓர் அவசிய மற்றவளாக... குரலற்றவள் என்கிற பிம்பம் ஏறக்குறையக் குறைந்து, இன்று...

ஆணுக்கு நிகராக, சமூகத் தளத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், சிந்தனை என்று இயக்கம் கொண்டவளாக பெரும் வீச்சாக மாற்றம் கொண்டுவிட்டாள் என்றவொரு மாயத்தோற்றம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அது உண்மையா?

இருநூறு விழுக்காடு இல்லை என்பதே உண்மை! ஆணாதிக்கப் பரிணாமத்தை அடி யொட்டியே இன்றைய பெண்களின் கல்வி, உடை, பணிபுரியும் நிலை என மாற்றம் பெற்றிருக்கிறது. காலமாற்றத்தின் தன்மைக்கேற்ப, மாறிவிட்ட வாழ்க்கைப் பழக்க வழக்கங்கள், வலியத் திணிக்கப்பட்டது என்பதைக்கூட அறியாது, பன்னாட்டு நிறுவனங்களின் வர்த்தக நிர்ப்பந்தத்திற்குப் பலியாக ஏற்றுக்கொண்ட நுகர்வுக் கலாச்சார முறைக்குப் பெண்ணின் உழைப்பும், வருமானமும், பங்கும் அவசியமாகிறது. அதை யொட்டித்தான் பெண்ணினத்தின் கால்களில் பூட்டியுள்ள சங்கிலியின் நீளம் கொஞ்சம் அதிகமாக விஸ்தரிக்கப் பட்டிருக்கிறது. அவ்வளவே!

அதற்கும் மேலாக, மதங்களும், அதன் அடக்கு முறைகளும் உள்ளீடாக வாழ்வோட்டத்தில் கலந்து தம்மை நவீனப்படுத்திக்கொண்டு பெண்ணடிமைத் தனத்திற்கு அடிநாதமாக இருந்து இயங்கி வருகிறது. இன்றையப் பெண்கள் ஆணைப் போன்று உடைதரித்து நாகரீக யுவதியாக நடமாட அனுமதிக்கப் பட்டாலும்.. அவள் அலங்காரத்திலும், உறுப்புகளில் நவீன மோஸ்தரில் மினுக்கும் அணிகலன்களிலும்... மதமும்,ஆணாதிக்கமும், மூடப் பழக்கத்தின் கூறுகளும் அவளுள் ஊடுருவி கள்ளச் சிரிப்போடு பெண்ணை இயக்கிக் கொண்டிருக்கிறது இன்னமும்.

மருத்துவமும், பொறியியலும், அறிவியலும் படித்து உயர்ந்தப் பதவியில் அமர்ந்த பெண்களின் அலுவலகச் சுவர்களை அலங்கரிப்பது சித்தாந்த வாதிகள், அறிவியலாளர்கள், விஞ்ஞானிகள் போன்றவர்களின் படங்கள் அல்ல; அறிவுக்குப் புறம்பான கற்பனைச் சித்தரிப்பான கடவுளர்கள் மற்றும் மதகுருமார்களின் படங்கள் தான்!

தான் எப்படி அடிமைப்படுத்தப்பட்டோம்? அங்ஙனம் சார்ந்து வாழ்கிற உரிமைகள் மறுக்கப் பட்டு அடிபணிந்து ஏவல் செய்யும் இனமாக மாற்றப்பட்டதின் வேர் எது? என்பதை அறியாமல், மதப் பண்டிகைகளிலும், சடங்கு சம்பிரதாயங்க ளிலும், முழுக்க ஒப்புக்கொடுத்து கேள்வியற்ற இனமாகப் பெண்கள் வாழ்கிறார்கள். மத, ஜாதிப் பிடிப்போடும், அது சுட்டி நீட்டும் பக்தியோடும் தன்னை ஆட்படுத்தி வாழ்வதே ஆகச் சிறந்த வாழ்வென பகுத்தறிவற்ற நபர்களாக இருக்கிறார்கள்.

பெண்களால் படைக்கப்படும் இலக்கியங்கள்

புணர்ச்சி நிலைகளை, உணர்வுகளை வெளிப்படையாகப் படைப்பில் பேசுவதும், கட்டுப்பாடற்ற புணர்ச்சிக்கான அழைப்புகளை, தேவைகளை பகிங்கிரப்படுத்துதல் ஒன்றே ஆணுக்கு நிகரான உரிமைகள் பெறத் தேவையான ஆயுதம் என்றும் - செயல்பாடென்றும், புரட்சியென்றும் இயங்குகின்றனர். அல்லது நம்புகின்றனர்.

இந்த மனோநிலை நகைப்புக்கும், மேலும் தன்னை நசுக்குகிறத் தடைகளுக்கும் வலு சேர்ப்பதாகவே அமையும். உடல் மீதான பிரக்ஞையும், திரும்பத் திரும்ப வலியுறுத்தும் பாலுணர்வுசார் படைப்புகளும், ஆக்கங்களும் ஓர் வறட்டுப் பெண்ணியப் பார்வையை மட்டுமே நிர்மாணிக்க இயலும். அன்றி, பரந்துபட்டப் பார்வையோடு பல்வேறு தளங்களில் பயணப்பட்டு அறிவுசார்ந்த, விடுதலை நோக்குள்ள ஓர் புதுவெளியை உண்டாக்கு வதற்கான முயற்சிக்கு, இது பெருந்தடையாகவே அமையும்.

தோழர் மணிமேகலை, திராவிடர் விடுதலைக் கழகம்

Pin It